மாநிலங்களில் ஆட்சிகள் வரலாம், போகலாம். இன்றைய எதிர்கட்சி நாளைய ஆளுங்கட்சி ஆகலாம்.
ஆனால் ஆந்திரத்தில் மக்களின் வரிப்பணத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கடந்த ஆட்சியில் சந்திரபாபு நாயுடு கட்டிய பிரஜா வேதிகா (Praja Vedhika) கட்டிடம் இன்றைக்கு அமைந்துள்ள ஜெகன்மோகன் அரசு தரைமட்டமாக்கியுள்ளது. இது தேவைதானா? இது யார் பணம். மக்களின் பணம் தானே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை வேறு அரசு பணிக்கு பயன்படுத்தியிருக்கலாமே? இந்த வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது. இந்த வழக்கில் இந்த கட்டிடத்தை இடித்து அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை யாரிடம் இருந்து பெறுவது என்பதை பின் முடிவு செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பல கோடிகள் செலவிட்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் வீண் தானே. தற்போதைய ஆந்திர அரசு நடந்து கொண்ட முறை சரிதானா?
அதேபோல, தமிழகத்தில் கலைஞர் அமைத்த பூம்புகார், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவை எல்லாம் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டதை நம் கண் முன்னாலே பார்த்தோம். ஆளவந்தார்கள் என்றும் நிரந்தரமல்ல. ஆனால் அமைப்பியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட நல்ல செயல்பாடுகளை யார் செய்தார்கள் என்று பார்க்காமல் வன்மமில்லாமல் அதை பாதுகாப்பது தான் கண்ணியம் என்பதை பொது தளத்தில் உள்ள அனைவரும் உணர வேண்டும்.
No comments:
Post a Comment