தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் கொடூரமாக நாகரிகமற்ற முறையில் அன்றைய ஆளும் அராஜக அரசு கைது செய்து இன்றோடு 18 வருடங்கள் ஆகிறது. முதுபெரும் தமிழினத் தலைவரை கைது செய்யப்பட்டதை அறிந்த உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கைது சம்பவத்தினை ஒளிப்பதிவு செய்த ஒளிநாடாவை அந்த நேரத்தில் காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி அறிவாலயத்துக்கு கொண்டுவந்த நிகழ்வை பத்திரிக்கையாளர் சுரேஷ் அவருடைய புத்தகத்தில் கூறியுள்ளார். அது குறித்தான பத்தி..
சமீபத்தில் சன் டி.வி. செய்தியாளர் கே.கே.சுரேஷ்குமார் எழுதிய "நள்ளிரவில் கலைஞர் கைது" - ஒரு நிருபரின் நேரடி சாட்சியம் என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில செய்திகளும், பதிவுகளும் 18 ஆண்டுகளுக்கு பின் இன்றைக்கு நினைத்து பார்க்கும்பொழுது மனித உரிமைகள் ஜெயலலிதா ஆண்ட காட்டாட்சியில் எவ்வாறு மீறப்பட்டன என்பதெல்லாம் சாட்சியங்களாக உள்ளன.
நள்ளிரவில் உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில் தலைவர் கலைஞர் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்யப்பட்டதை அனைத்து தரப்பினரும் கடுமையான கண்டனக் குரலை தெரிவித்தனர். பாரதியின் வாக்கின்படி பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது அன்றைக்கு நிரூபணமானது.
அந்நூலில் திரு. கே.கே. சுரேஷ்குமார், தலைவர் கலைஞர் கைது குறித்த சி.டி.யை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் அன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் காவல்துறையினரின் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளிந்து சேர்த்தக் காட்சியை அந்த நூலில் 65வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
கலைஞர் கைது கேசட் அலுவலகம் சேர்ந்த கதை
கேசட்டை எடுத்து ஓடிவந்த கே.எஸ். ராதாகிருஷ்ணனின் "சாகசம்"
கலைஞர் கைதை வெளி உலகிற்கு காட்ட உயிர் நாடியாக இருந்த அந்த விலைமதிப்பற்ற வீடியோ கேசட்டை, கேமராவில் இருந்து எடுத்து, எங்கள் எம்.டி. கலாநிதி மாறனிடம் கொடுத்தோம் என்றேன் அல்லவா! அப்போது அதை கவனித்த காவல்துறை துணை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், கேசட்டை பறிக்க வேண்டும் என்று பரபரப்படைந்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, அந்த கேசட்டை எங்கள் எம்.டி. அருகில் இருந்த தி.மு.க. வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனுக்கு கண்ணை காட்டி, கேசட்டை அவர் கையில் சொருகினார்.
இதையடுத்து, கேசட்டை தனது இடுப்பில் சொருகிக்கொண்ட இராதாகிருஷ்ணன், போலீசார் சந்தேகப்படாத வகையில் அங்கிருந்து மெல்ல நகர்கின்றார். போலீசார் கண்கள் கலாநிதி மாறன் அவர்களையே வட்டமடித்தபடி இருக்க இதை இராதாகிருஷ்ணன் பயன்படுத்திக் கொண்டார். வெளிச்சமான பகுதியை விடுத்து, இருட்டான பகுதிக்குள் அவர் ஓடி மறைகிறார்.
அண்ணா அறிவாலயத்திற்கு நேர் வழியில் செல்லாமல், வீடுகள் சூழ்ந்த குறுக்கு சாலைகளின் வழியே இராதாகிருஷ்ணன் முன்னேறிச் செல்கிறார். இதற்கிடையே, எங்கள் எம்.டி. கலாநிதிமாறன் கையில் கேசட் இல்லாதது கண்டு, வெகுண்டெழுந்த கிறிஸ்டோபர் நெல்சன், அந்தப் பகுதியில் இருந்து சென்ற, அனைவரையும் பிடித்து சோதனையிடுமாறு போலீசாரை விரட்டுகிறார். இரண்டு போலீசார் இராதாகிருஷ்ணன் சென்ற பாதையில் பின்தொடர்கின்றனர்.
ஆனால் ஒரு கையால் இடுப்பில் இருந்த கேசட்டை பதற்றத்துடன் பற்றியபடியே, ஓட்டமும் நடையுமாக அவர் அண்ணா அறிவாலயத்தின் பின்பக்க கேட்டை அடைகிறார். (இந்த தகவலை என்னிடம் கூறிய இராதாகிருஷ்ணன், நெல்லையில் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் படித்தபோது விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டபோது கூட முதலில் வரவேண்டும் என்று இப்படி மூச்சு வாங்க ஓடியதில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.)
கேட்டுக்கு உள்ளே இருந்த கூர்க்காவை அவர் மெல்லிய குரலில் அழைக்க, கூர்க்காவோ, "ஆகேவாலே கேட் சே ஜாவோ" (முன்வாசலுக்கு போ) என இந்தியில் சத்தமாக கூற, கடுப்படைந்த இராதாகிருஷ்ணன், நேரம் காலம் புரியாமல் கடமை உணர்ச்சியை காட்டுகிறானே என நொந்துபோய், தனது முகத்தை நல்ல வெளிச்சத்தில் கூர்க்காவிடம் காட்டுகிறார். பதற்றமடைந்த கூர்க்கா அதன் பிறகே கேட்டை திறந்துள்ளார். உள்ளே தலைதெறிக்க ஓடிய இராதாகிருஷ்ணன், அண்ணா அறிவாலயத்தில் மூன்றாவது தளத்தில் இருக்கும் சன் டி.வி.யை அடைந்து அந்த கேசட்டை சன் தொலைக்காட்சி செய்திப்பிரிவில் அப்போது பணியில் இருந்த ஏழுமலை வெங்கடேசனிடம் ஒப்படைத்த பிறகே, தான் பெரும் நிம்மதி அடைந்தேன் என்று கேசட்டை எடுத்து வந்து மயிர்க்கூச்செரியும் நிகழ்வை என்னிடம் விவரித்தார்.
அதே நேரம், கலாநிதி மாறன் அவர்களிடம் இருந்து கேசட் அனுப்பிவைக்கப்பட்டது குறித்த தகவல் வர, செய்தி தயாரிக்கும் பணி மின்னல் வேகத்தில் தொடங்கியது. கலைஞர் கைது தகவல் கிடைத்து அதிகாலை 4 மணிக்கே செய்தி ஆசிரியர் ராஜா, அலுவலகம் வந்து சேர, சூரியன் உதிக்கும் முன்பே சன் செய்தியாளர்கள் கருப்பசாமி, பால்முருகன், சிவராமன், வேலாயுதம், ரமேஷ், இந்துஜா, காயத்ரி மற்றும் கேமராமேன்கள் மணி, மாரி, மோகன், வெங்கட், லோகநாதன், பாபு, இந்திரசேனா, சேகர் உள்ளிட்ட அனைவரும் அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர். செய்தியாளர்களும், கேமராமேன்களும் துரிதமாக களப்பணியில் இறங்குகின்றனர். காலை 5 மணிக்கெல்லாம், சன் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பு தொடங்கியது.
கலைஞர் கைது செய்தி அறிந்து சன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு மூத்த துணை ஆசிரியர்கள் துரைக்கண்ணு, மாடக்கண்ணு, ரசூல், ஜார்ஜ், சிவகங்கை மணிமாறன், விஜயரங்கம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் (இவர்களுக்கு பிற்பகலில்தான் பணி) சன் டி.வி. அலுவலகத்திற்கு காலை ஆறரை மணிக்கே பதற்றத்துடன் விரைந்து வந்தனர். பின்னர் இவர்கள் கைவண்ணத்தில் செய்தியை மேலும் மெருகேற்றும் பணி தொடங்கியது. சொக்கலிங்க ரவி, ஞானேஸ்வரி, ஈவெரா ஆகியோரின் கணீர் "டப்பிங்" குரலுடன் செய்தி தயாரிப்பாளர்கள் பாலகுமார், முரளி, ஜெகஜீவன் ராம் ஆகியோரின் "காட்சி எண்ணத்தில்" கலைஞர் கைது நிகழ்வு பின்னர் விரிவாக ஒளிபரப்பாக தொடங்கியது. சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் கலைஞர் கைது செய்திகள் விடியற்காலை முதலே ஒளிபரப்பாக தொடங்கியது.
மேலும் பக்கம் 92ல், பெர்னாண்டஸ் அண்ணா அறிவாலயம் நோக்கி பயணப்பட்டனர். அந்த நிகழ்வை 'லைவ்' வாக தருகிறார் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
ஜார்ஜ் பெர்ணான்டஸ் இப்போது பேசுகிறார்;
"மிஸ்டர் இராதாகிருஷ்ணன்.... எமர்ஜென்சி காலத்தில் நான் அனுபவித்த அவஸ்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது 1975 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் போலீசார், உளவுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் - என்னை கைது செய்ய வேட்டையை தொடங்கி இருந்தனர். வட மாநிலங்களில் - மாறுவேடம் பூண்டு நான் தலைமறைவாக திரிந்தேன். எனது இருப்பிடங்கள் தெரிந்து என்னை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வந்து கொண்டே இருந்தனர். இங்கிருந்தால் என்னை எப்படியும் பிடித்துக்கொள்வார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்தேன்.
அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், அப்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.
நம்பிக்கை பொய்க்கவில்லை. சென்னையில் சாந்தோம் பகுதியில் கலைஞர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தேன். சென்னையில் தங்கியிருந்த நாட்களில் உறைவிடம், உணவு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் தனது நேரடி கண்காணிப்பில் பார்த்துக்கொண்டார் கலைஞர். பின்னர் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டேன். மாறு வேடத்தில் ரயிலில் நான் செல்லும் தகவலை மத்திய உளவுப்பிரிவின் தலைவர் எம்.கே. நாராயணன் எப்படியோ மோப்பம் பிடித்திருந்தார். அவர் கொடுத்த தகவலின்படி நான் ஆந்திர மாநிலத்தில் ரயில் செல்லும்போது கைது செய்யப்பட்டேன்.
இது ஜார்ஜ் பெர்ணான்டஸின் மலரும் நினைவுகள். எமர்ஜென்சி கொடுமையின் சில பக்கங்களை புரிந்துகொள்ள முடிந்தது"
இவ்வாறு கே.எஸ். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நூலில் 145 வது பக்கத்தில், நள்ளிரவில் கலைஞர் அவர்களை கொடுமையாக கைது செய்யப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு உரிய புகார் மனுவை நான் தயார் செய்து ராயப்பேட்டையில் இருந்த மாநில மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து செல்லும்போது உடன் ஆலடி அருணாவும், ஆ. ராசாவும் வந்தனர். தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பேக்ஸ் மூலமாக டெல்லிக்கு அனுப்பியும் வைத்தேன். அது குறித்தும் சுரேஷ்குமார் எழுதியுள்ளார்;
மாநில மனித உரிமை ஆணைய விசாரணை
கலைஞர் முரசொலி மாறன், டி.ஆர். பாலு மற்றும் தி.மு.க. தொண்டர்கள் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தி.மு.க. புகார் கொடுத்தது. பேராசிரியர் க. அன்பழகன் தயார் செய்த புகார் மனுவை, ராயப்பேட்டையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ராஜா, தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சாமித்துரையிடம் நேரடியாக கொடுத்தனர்.
இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சாமித்துரை, ஞானசம்பந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் ஜூலை 3ம் தேதி சென்னை மத்திய சிறை சென்ற நீதிபதிகள் கலைஞரிடம் 29ம் தேதி நள்ளிரவு நடந்தவை குறித்து விசாரணை நடத்தினர்.
மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு வேலூருக்கும், மற்றொரு குழு கடலூருக்கும் சென்றன. வேலூர் சென்ற குழு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.ஆர். பாலுவிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்களிடமும் மாநில மனித உரிமைகள் குழு விசாரணை நடத்தியது. கடலூர் சிறைக்கு சென்ற மற்றொரு குழு அங்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. வினரிடம் விசாரணை நடத்தியது. உண்மை நிலவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அனைரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நள்ளிரவில் கலைஞர் கைது என்ற நூலில் ஜூன் 29 நள்ளிரவு, ஜூன் 30, 2001ம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை விரிவாகவும், உரிய தரவுகளோடும் பத்திரிகையாளர் திரு. கே.கே. சுரேஷ்குமார் பதிவு செய்துள்ளார்.
விழுப்புரம் உணவுப்பொருள் கிடங்கில் பொன்முடி அவர்கள் சோதனை செய்து, காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து ஆலிவர் சாலையில் காவல்துறையினர் அத்துமீறி நள்ளிரவில் வீட்டை சின்னாபின்னம் செய்து தலைவர் கலைஞரை கைது செய்ததும், சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு சென்றதும், கலைஞரின் முதுகுத் தண்டை பதம் பார்த்ததும், அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களை பந்தாடியதும், நீதிபதி அசோக்குமார் இதை கண்டித்ததும், மத்திய சிறையில் கட்டாந்தரையில் தலைவர் கலைஞர் அமர்ந்திருந்ததும், கலைஞரின் கைதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் பிரதமர் உட்பட உலகமே கண்டனக் குரலை எழுப்பியது. இது தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் களம், நீதித் துறை, மக்கள் என சகலரும் இந்த கொடுமையை சகிக்காமல் முகம் சுளித்தனர். இந்த அற்புதமான பதிவை கே.கே. சுரேஷ்குமார் சிரமம் எடுத்து முறையாக பதிவு செய்தததை பாராட்ட வேண்டும்.
அரசியல் களத்தில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூலாகும்.
அன்றைக்கு ஆலிவர் சாலை, அண்ணா அறிவாலயம், சிபிசிஐடி அலுவலகம், மத்திய சிறைச்சாலை என இரவெல்லாம் அலைந்துவிட்டு அன்றைய மத்திய அமைச்சர் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்தார். ஒரு சில பணிகளை ஒப்படைத்து செய்யுங்கள் என்று சொன்னதும், பேராசிரியர் அவர்களும் காலை 7 மணிக்கெல்லாம் அறிவாலயம் வந்து விட்டார்கள். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வமும், நானும் இது குறித்து மனுவை தயார் செய்து பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தமிழகத்தில் அசாதாரண நிலைமை உள்ளது. எனவே 356ஐ பிரயோகப்படுத்தவேண்டும் என்ற மனுவை தயார் செய்துகொண்டிருக்கும்போது, அன்றைய சென்னை மாநகர் காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் சன் டி.வி. யில் கலைஞர் கைது காட்சிகளை நிறுத்தவேண்டும் என்று அறிவாலயம் வந்தபோது, அவரை எதிர்கொண்டு வாக்குவாதம் செய்து தகராறு செய்தததெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன. சைலேந்திரபாபு தலைமையில் வந்த காவல்துறையினர் தொண்டர்படையை அடித்து அறிவாலயத்தில் முன்னாள் இருந்த கழிப்பறைகளையெல்லாம் உடைத்தார்கள். அப்போது சைலேந்திர பாபுவுடன் தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தலைவர் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஆகஸ்ட் 12ம் தேதி பேரணியில் நடந்த சம்பவங்களிலும் முன்னிருந்து எதிர்கொண்டதும், தலைவர் கலைஞரோடு இது குறித்து புகார் மனு கொடுக்க ராஜ் பவன் சென்றதெல்லாம் விரிவான பதிவுகள் செய்யவேண்டும் என்று நினைத்துள்ளேன். தலைவர் கலைஞருடைய கைது தமிழக அரசியலில் ஒரு கரும்புள்ளி ஆகும்.
இந்த சம்பவங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சிக்கலான நேரங்களில் ஆற்றியப் பணிகள் எல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன. 1992ல் தலைவர் கலைஞர் அவர்கள் திரு. என். கணபதியிடமும், என்.வி.என். சோமுவிடமும் ஒரு பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் தீர்வு காண சொல்லும்போது தாமதமாகிவிட்டது. அந்த வழக்கை முறையாக நடத்தி வழக்கு மன்றத்தில் 28 ஜூன் 1992 அன்று தீர்ப்பை பெற்றதும் இன்றைக்கு ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை (Tr Pet (Crim) No. 77-78. 2003) பெங்களூருக்கு மாற்றியதில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தீர்ப்பைப் பெற்றதும் அடியேன்தான் என்று பலருக்கு தெரியாது. இதற்கு சாட்சியாக இருந்த அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறனோ, டெல்லி சம்பத்தோ இல்லை. ஆனால் ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது அவரது நேர்முக செயலாளர் அகிலன் ராமநாதன் இன்றைக்கும் இருக்கின்றார். தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த காவல்துறையினரின் அத்துமீறலையும், அவரது கைது குறித்து அவரது துணைவியார் தொடுத்த வழக்கிலும் (SHRC No. 3132/2001) அடியேன் ஆஜராகி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
இதையெல்லாம் முறையாக, கவனமாக செய்ததற்குத்தான் முரசொலி மாறன் அவர்கள் பொதுக்குழுவிலேயே என்னை பாராட்டி பேசியது தினமலர் இதழில் வெளிவந்தது.
அதன்பின் 2012ல் ஈழப் பிரச்சினையில் டெஸோ திரும்ப அமைத்து தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை லண்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த ஈழத் தமிழர் மாநாட்டில் அழைத்து பேச வைத்ததும், அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த தா. பாண்டியன், டி. ராஜா, திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி என அனைத்து தலைவர்களும் கலந்துகொள்ள அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தளபதி மு.க. ஸ்டாலின் நிறைவுரை ஆற்றியதெல்லாம் அடியேனது முயற்சிகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பதவியில் முன்னாளோ, இந்நாளோ, இல்லாமல் களப்பணியினால் இந்த அளவு நினைவுகூறப்படுகிறோம் என்கிற அங்கீகாரம் மட்டும் போதும்.
தகுதியே தடை என்ற நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் பணி செய்துகொண்டிருப்பது கடமை. பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம் நடத்திய மாநாட்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தி.மு.க. மீது வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சரியான பதிலைச் சொன்னேன். அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் லண்டனில் கலந்துகொண்டார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் அத்தனைப் பேருக்கு முன்னால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரத்த குரலில் பதில் சொன்னது இன்றைக்கும் நினைவில் உள்ளது. இது நடந்தது 2012ல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2019
No comments:
Post a Comment