Saturday, June 29, 2019

வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல விடுதலைப் புலிகள்...!

வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல விடுதலைப் புலிகள்...!
மார்ச் மாதம் 1ம் திகதி 1983ம் ஆண்டு சிங்கள தேசத்தின் மேல் நீதிமன்ற குற்றவாளி கூண்டுக்குள் நின்றபடியே தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் ஆற்றிய நீண்ட உரையின் ஒரு வசனம்தான் “வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல” என்பது.
Image may contain: one or more people and people standingதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் சிங்கள தேசத்தின் செவிட்டில் அறைந்தது போலவும் பிடரிபிடித்து உலுக்கியது போலவும் சிங்களதேச தலைநகரின் மேல் நீதிமன்றத்தில் ஆற்றிய உரையின் முப்பத்திஓராவது வருடம் இது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிங்களதேசத்தின் கடுமையான சட்டங்களால் நசுக்கி எறிந்துவிடலாம் என்ற கனவுடன் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கான முதலாவது ஆயுள்தண்டனையை சிங்களதேசத்தின் மேல்நீதிமன்றம் 24ம்திகதி பெப்ரவரி 1983ல் விதித்திருந்தபோது அதனை தகர்த்து எழுந்தது தங்கத்துரை அவர்களின் நீதிமன்ற பிரகடனம்.
1960 களின் இறுதியில் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்ட கருவை உருவாக்கியவர்களில் ஒருவரான தங்கத்துரை அந்நேரத்தில் சிங்களபடைகளால் மிகவும் வலைவிரிக்கப்பட்டு மும்முரமாக தேடப்பட்டவர்களில் ஒருவர்.
அவர் கைது செய்யப்பட்டு சிங்களதேசத்தின் தலைநகரில் மேல்நீதிமன்றில் அவருக்கும் தோழர்களுக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்போதே இந்த நீதிமன்ற பிரகடனத்தை அவர் உரையாற்றினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலை என்பன சம்பந்தமாக இதுவரை வெளிவந்த பிரகடனங்களில் இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று-அந்த நேரத்தில் இந்த உரையானது தமிழீழ விடுதலை எழுச்சியை மேலும் உக்கிரமடைச் செய்தது.
பயங்கரவாதி என்றும் வன்முறையாளன் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தின் கறை துடைக்கும் உரையாகவே அது இருந்தது.
அவரது அந்த உரையில் அதுநாள்வரைக்கும் சிங்களம் செய்துவந்த அனைத்து பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பதில் இருந்தது. அத்துடன் சாதாரண சிங்களமக்களின் மனதில் இயல்பாகவே தோன்றும் கேள்விகளுக்கும் சரியான விளக்கம் இருந்தது.
நீதிமன்றம் முடிந்ததும் மீண்டும் சிங்கள ஆயுதபடைகளின் சிறைக்குதான் செல்லவேண்டும் அல்லது மீண்டும் பனாகொட இராணுவ முகாமுக்கும் கொண்டு போவார்கள்.அங்கு சித்திரவதையும் மரணமும் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டும் மிகவும் உறுதியுடனும் துணிவுடனும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் சம்பந்தமான நியாயங்களை அழுத்தமாக கூறிய தங்கத்துரை அவர்கள் தனது உரையை ஆரம்பிக்கும் போதே…
கனம் நீதிபதி அவர்களே,
“சிறீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் தமிழீழ தேசத்தவர்களாகிய எம்மை விசாரிப்பதற்கு அதிகாரம் கிடையாது”
என கூறி சிங்களதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தபடியே தனது உரையை ஆரம்பிக்கிறார்.
சில இடங்களில் மகாவம்ச கனவில் மிதக்கும் சிங்களத்தின் மனச்சாட்சியை உலுப்பியபடியே அவரின் கேள்வி இருந்தது
“பிரிவினை கேட்கிறோம்…நாட்டை துண்டாட முயற்சிக்கிறோம் எனச் சொல்கிறீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?” என்ற கேள்வியின் மூலம் சிங்களதேசத்துடன் தமது விருப்பத்துக்கு மாறாகவே பலவந்தமாகவே தமிழீழதேசம் இணைக்கப்பட்டுள்ளது என்ற வரலாற்றை ஆணித்தரமாக சொன்னார்.
தமிழீழதேசத்தின இறைமை யாரிடமும் தாரைவார்க்கப்படவோ அடகுவைக்கப்படவோ இல்லை என்பதை தங்கத்துரை அவர்கள் தனது உரையின் தொடர்ச்சியில்,
“ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கடவே இல்லை, அதனை இணைப்பு என்ற பெயரில் நாம் யாரிடமும் தாரை வார்க்கவும் இல்லை” என்று தமிழீழ தேச இறைமையை நிலைநாட்டுகிறார்.
தமிழீழ விடுதலை பெறப்படுதல் எந்தவகையில் சிங்கள இனத்துக்கும் சுபீட்சம் தரும் என்பதை தங்கண்ணா எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.
“நாம் விடுதலை பெறுவதன்மூலம் எமது இலட்சியம் மட்டுமல்ல நிறைவேறுவது..சிங்களமக்களுக்கும் பெரும் நன்மையை செய்தவர்கள் ஆவோம்.காரணம், அதன் பின் இனப்பிரச்சனையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்களமக்கள் மத்தியில் எடுபடாது.இதனால் சிங்களமக்கள் தமக்கு உண்டான பொருளாதார சமூக தளைகளில் இருந்து தம்மை விடுவித்து கொள்ள முன்வருவர்” என்று கூறினார்.
உண்மையில் சேனநாயக்க குடும்பம், ரத்வத்தை குடும்பம் முதல் மகிந்த குடும்பம் வரைக்கும் இனப்பிரச்சினை என்ற பூச்சாண்டியை காட்டியே சிங்களமக்களை கனவுகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இதனை முப்பத்திஒரு வருடத்துக்கு முன்னரே தங்கத்துரை அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லும்போது “அரசியல் பிழைப்பு” என்ற வார்த்தையையும் பாவித்திருப்பதை கவனிக்கலாம்.அற்புதமான வார்த்தை தேர்வு அது.
அமெரிக்காவின் இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின்னான உலக ஒழுங்கு என்பது நியாயமான போராட்டங்களையும், தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்றே முத்திரை குத்தி ஒடுக்கும் போக்காக இருந்து வருகிறது. இதற்கான ஒரு விடையாக முப்பத்தி ஒரு வருடத்துக்கு முன்னரே தங்கத்துரை அவர்கள் சிங்களநீதி மன்றத்தில் உரக்ககூறியதை பாருங்கள்.
“எந்தவொரு தேசியஇனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகம் என்றோ பயங்கரவாதம் என்றோ உலகின் எந்த சாசனமும் கூறவில்லை” என்று கூறுகிறார்.
நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்று சிங்களதேச பிரதி சட்டமா அதிபர் குறுக்கிட்டபோது “உண்மைக்கு மேடையோ அன்றி வெளிச்சமோ போட்டு காட்டவேண்டிய தேவை இல்லை. அது மிகவும் மகத்துவம் மிக்கவை.அது வெளிவருவதை எந்த சக்தியாலும் நிரந்தரமாக தடுத்துவிட முடியாது” என்று சொல்லும்போது நிரந்தரமாக தடுத்துவிடமுடியாது என்று கூறியது இன்றைக்கும் பொருந்தும் ஒரு வார்த்தை பிரயோகம் ஆகும்.
தமிழீழ விடுதலை என்பது மானுட விடுதலையின் ஒரு அங்கமே என்பதை அறைகூவலாக நீதிமன்றத்தில் “எமது நோக்கு மிக விசாலமானது.ஆபிரிக்கண்டம் என்றால் என்ன..லத்தீன் அமெரிக்கநாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகவும் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது..அப்படி இருக்கையில் எமது அயல் தேசத்தவராகிய சிங்களமக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படி போகும்” என்று தங்கத்துரை கூறுகிறார்.
சிங்களதேசம் கொடுமையான சட்டங்களை உருவாக்குவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்காகவே என்று சிங்களமக்களுக்கு சொன்னாலும் ஒரு நாள் அதே சட்டங்கள் சிங்கள மக்களுக்கும் எதிராக திரும்பும் என்ற தீர்க்க தரிசனத்தை தங்கத்துரை அவர்கள் “நாம் விடுதலை அடையப்போவது நிதர்சனம்.அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டபுத்தகங்களில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட எந்த சட்டமும் எம்மை அணுக முடியாது.அப்படியாயின் அச் சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுக்கும் கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா” என்று கேட்கிறார்.
இறுதியாக தனது உரையை முடிப்பதற்கு முன்னர்,
“எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் களிக்கவோ,வேண்டுமாயின் மரணத்தைக்கூட தழுவவோ நாம் தயங்கவில்லை. ஒரு இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிக சர்வ சாதாரணமான சம்பவங்களே. இதனை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக தனது போராட்ட பாதையின்மீதான தனது உறுதியை காட்டுகிறார்.
முப்பத்தொரு வருடங்களுக்கு முன்னர் சிங்களத்தின் தலைநகரில் விடுக்கப்பட்ட இந்த நீதிமன்ற பிரகடனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கச்சிதமான தெரிவாகவும் ஆழமான ராஜதந்திர பிரயோகமாகவும் இருப்பதை இன்றும் ஆச்சர்யத்துடன் அவதானிக்க முடிகிறது..
மீண்டும் அவரது வார்த்தையிலேயே சொல்வதானால் “நாம் வெறுமனே ஆயுதங்கள் மீது காதல் கொண்டு போராட வந்தவர்களோ, வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளோ அல்ல.. எமது இறைமையை பெறவே போராடுகின்றோம்”
உண்மையான ஒரு போராளியாக, விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான தங்கத்துரை அவர்களின் நீதிமன்ற உரையானது சிங்களத்தின் கனவை என்றாவது கலைத்தே தீரும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...