* கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் பாசனத்துக்காக காவிரி நீர் திறக்கப்படவில்லை சம்பாவிற்காக திறக்கப்படுமா மேட்டூர் அணை?*
-------------------------- ------
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு ஏற்றவகையில், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மொத்தம் 330 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் பருவமழை பொய்த்துப்போனது உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த 2012 முதல் கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் பாசனத்துக்காக நீர் திறக்கப்படவில்லை. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரை பயன்படுத்தி 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கடந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஜூலை 17ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டு கோடைகாலத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
நடப்பு ஆண்டில் நேற்றைய தினம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 45.59 அடியாகவும், நீர் இருப்பு 15.14 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் போதிய நீர் இருப்பும், வரத்தும் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து இன்று (12-06-2019) குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நடப்பு நீர் பாசன ஆண்டில் தொடர்ந்து 8வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போகிறது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடைசியாக 2011ம் ஆண்டு 90 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 12ல் தண்ணீர் திறக்கும் நிலை ஏற்படவில்லை. காவிரியில் தண்ணீரை திறந்து விட கர்நாடகமும் மறுத்ததால் போதிய தண்ணீர் கிடைக்காமல் குறுவை மட்டுமின்றி சம்பா, தாளடியும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-06-2019
No comments:
Post a Comment