Sunday, June 16, 2019

தாகம் எடுக்கிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை. என்ன செய்ய?


தாகம் எடுக்கிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை. என்ன செய்ய? தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதே நிலை. இப்படியானதொரு கொடூர சூழ்நிலை வரும் என்று என்னுடைய சமூக வலைத்தளங்களின் பதிவுகளி மூலம் 2017லிருந்து எச்சரித்து வந்திருக்கிறேன். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் ரேசனில் தண்ணீர் வழங்குவதையும், அங்குள்ள மக்களின் பாடுகளையும் சொன்னபோது, ஒரு மெத்தப் படித்தவர், மக்களின் பிரதிநிதியாக நீண்டகாலம் இருந்தவர். அரசியல் களத்திலும் பிரதானமாக இருப்பவர். என்னுடைய பதிவுகளை பார்த்து ஏகடியமாக, “இப்படியெல்லாம் தமிழ்நாட்டுக்கு வராதுங்க. சும்மா பயமுறுத்தாதீங்கஎன்றார். அப்படி வரக்கூடாத கவலையான தண்ணீர் பஞ்சம் தமிழகத்திற்கு வந்துவிட்டது.

ஏனெனில், நம்மிடம் தொலைநோக்கு பார்வையில்லை. அவ்வப்போது, பிரச்சனை என்றால் மண்டை வலிக்கு அனாசின் மாத்திரை போடுவதுபோல, காவிரிக்கு, முல்லைபெரியாறுக்கு பேசிவிட்டு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சிந்திக்காத, புரிதலில்லாத நெஞ்சங்களும் அதற்கான செயல்பாடுகளும் இல்லையென்றால் இப்படித்தான் தீர்க்க முடியாத தண்ணீர் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும். இப்போது நிலைமை என்ன?
தென்னமெரிக்காவில் கேப் டவுன் நகரில் கடந்த 4, 5 ஆண்டுகளாக ரேசனில் தண்ணீர் கொடுக்கும் நிலையைப் போன்ற நிலைமைகள் வந்துவிடக்கூடாது என்று போர்க்கால நடவடிக்கைகளிலாவது அனைவரும் ஒருங்கிணைந்து கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். தண்ணீர்த் தேவைக்கு அதிக விலை கொடுத்தாலும், உரிய நேரத்தில் தேவையான அளவு கிடைத்திராத பரிதாப நிலை. தண்ணீர் பஞ்சத்தினால் சட்ட ஒழுங்கும், வெட்டுக் குத்து கூட நடந்துவிடுமோ? என்ற அச்சங்கள் எழுகின்றன.
கடந்த மூன்றாண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற எனது பதிவுகள் வருமாறு. இதே தான் சில நாட்களுக்கு முன் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் வந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ரேசனில் தண்ணீர் விநியோகம்.
------------------------------
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு விளையாடச் சென்றபோது, அவர்களை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தங்குமிடத்தில் குளிக்கக் கூடாது என்று நிர்பந்தப்படுத்தப்பட்டனர்.
கேப் டவுன் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்று. ஒரு காலத்தில் நாற்பது லட்சம் மக்கள் வாழ்கின்ற பசுமையான நகரமாக விளங்கியது. அந்த நகரில் இன்றைக்கு கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. இந்த பிரச்சனை பூதாகரமாக எழுமென்று 2006 காலக்கட்டங்களில் மக்களிடம் ஏற்படுத்தியும், அங்குள்ள மக்கள் இந்த எச்சரிக்கையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. எனவே இந்த வேதனையான நிலை அங்கு ஏற்பட்டுவிட்டது.
தற்போது, அங்கு மிகவும் குறைந்தளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு வந்துவிட்டது. அதற்கு மேல் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கின்றனர். இப்போது விடியற்காலையில் ரேசன் கடையில் கேன்களை வைத்துக்கொண்டு அத்தியாவசியப் பொருள்களைப் போல தண்ணீரை வாங்க வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இந்தியாவிற்கு வந்துவிடக்கூடாது என்பது தான் நம்முடைய ஆதங்கம். தமிழகத்தினைப் பொறுத்தவரையில் நீரில்லாமல் எதிர்காலத்தில் கடுமையாக தவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று ஐ.நா. ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் சில கடமைகள் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தண்ணீர்தண்ணீர்
-----------------------
தண்ணீர் தட்டுப்பாடும், பஞ்சமும் உலகளவில் ஆரம்பித்துவிட்டது. தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை வரிசையில் வழங்குவதைப் போல தண்ணீரையும் ரேசனில் விநியோகம் செய்யும் அளவுக்கு பிரச்சனை தலைதூக்கிவிட்டது. இந்த டே ஜீரோவை (தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலை) எதிர்நோக்கி இந்தியாவின் பெங்களூரு, சீனாவின் பீஜிங், துருக்கியின் இஸ்தான்புல் போன்ற நகரங்கள் மட்டுமல்லாமல் சென்னை நகரும் தண்ணீரின்றி விரைவில் வற்றிவிடுமென்ற அச்சம் எழுகிறது. இந்த செய்தியை ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் நதிநீர் சிக்கல்கள் என்ற தலைப்பிலும் பேசினேன். தண்ணீர் தானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நீர் என்பது திரவத் தங்கம். அதை சரியாகவும், அளவாகவும் பயன்படுத்துவது மட்டுமின்றி நீர் மேலாண்மை  வேண்டும். ஐ.நா. மன்றத்தின் அறிக்கையும், தமிழகம் எதிர்காலத்தில் பாலைவனம் ஆகிவிடும் என்று பலமுறை எச்சரித்து கூறியுள்ளது.
இது தொடர்பாக டவுன் டு எர்த் (Down To Earth) என்ற மாதாந்திர இதழ் உலகளவில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளவும். குறிப்பாக இளைய சமூகத்தினர் அனைவரும் அறிந்து செயல்பட வேண்டிய செய்திகளாகும். இப்படிப்பட்ட தகவல்களை வருங்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.
இப்படியான நிலையில் தமிழக உரிமைகள் யாவும் காவு தான் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் பிரச்சனைகளை எல்லாம் நாடாளுமன்றத்தில் புரிதலுடன் சொல்லக்கூடியவர்கள் அந்த அவையில் இல்லை. தகுதியே தடை என்ற நிலையில் தரமானவர்கள், தகுதியானவர்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் செல்ல வழியில்லை.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...