*புதுப்புத்தக வாசனை*
-------------------
இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாசாலை ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடையில் பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் சிபிஎஸ்இ புத்தகங்கள் என்ற நினைக்கிறேன். ஒரு கத்தையாக வாங்கிக் கொண்ட அந்த புத்தகங்கள் அடங்கிய கட்டை தன் தாயிடம் கொடுத்துவிட்டு ஒரு புதுப் புத்தகத்தை மட்டும் எடுத்து பக்கங்களை முகத்தில் வைத்து நுகர்ந்து பார்த்துக் கொண்டு வந்தார். புதுப்புத்தகங்களில் அச்சடித்த மையா, தாளா என்று தெரியவில்லை. ஒரு வித்தியாசமான வாசனையுண்டு. அதை முகர்ந்து பார்ப்பதுண்டு. நான் பள்ளியில் படிக்கும்போது புத்தகங்களுக்கு பணம் கட்டிவிட்டால் தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், வரலாறு, புவியியல் என தனித்தனியாக பாடப்புத்தகங்கள் தருவார்கள். ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்கியபின்னும் அட்டையை பார்த்துவிட்டு, உள்ளே புரட்டி உள்பக்க வாசனையை முகர்ந்தால் தான் புதுப்புத்தகம் வாங்கிய திருப்தி ஏற்படும்.
என்னுடைய பள்ளி வகுப்பாசிரியர் சேவகப் பெருமாள் செட்டியார் இப்படி முகர்ந்து பார்த்தால் புத்தகப் பிரியர்களாக இருப்பார்கள் என்று அப்போதே குறிப்பிட்டார். ஒரு சமயம் வயதானவர் சென்னைக்கு என்னை காண வந்தபோது என் வீட்டிலுள்ள நூலகத்தை பார்த்து, “ஞாபகம் இருக்கா உனக்கு. நீ புதுப் பாடப்புத்தகம் பள்ளியில் நான் கொடுக்கும்போது, நீ அதை முகர்ந்து பார்ப்பாய். அதை பார்த்து நீ ஒரு புத்தகப் பிரியனாக இருப்பாய் என்று நான் சொன்னது சரியாக இருக்கிறதா?” என்றார். அந்த பழைய நினைவு வந்தது.
அந்த சிறுவனை அழைத்து எதற்கு முகர்ந்தாய் என்று கேட்டேன். எனக்கு பிடித்துள்ளது என்றான். என் கையிலுள்ள கதைசொல்லியை கொடுத்தபோது அதையும் முகர்ந்து பார்த்துவிட்டு என்னிடம் இந்த புத்தகத்தை படித்துவிட்டு உங்களை செல்பேசியில் அழைக்கிறேன் என்று கூறிய அந்த மாணவர் அகிலேஷ் கார்த்திகேயன் இன்று காலையில் என்னுடைய எண்ணிற்கு அழைத்து, அங்கிள் உங்கள் கதைசொல்லியை படித்தேன். நான் கிராமத்தினை பார்த்ததில்லை. கிராமத்தினை பற்றிய அதிகமான செய்திகள் இருந்தன. கிராமத்து வாசனையோடு பக்கங்கள் மணக்கின்றன. நன்றி அங்கிள் என்று சொன்னது திருப்தியாக இருந்தது.
#புத்தகங்கள்
#பள்ளிகால_நினைவுகள்
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-06-2019
No comments:
Post a Comment