வைகோ மீதான தேசத்துரோக
ஈழ வழக்கில் நான் நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சி ஆவணம் வருமாறு.
மூன்றாவது கூடுதல்
நகர நீதிமன்றம். வழக்கு எண். 1/20010 தேதி 09-06-2016
-------------------------------------------------------------
நண்பர் ப்ரியனின்
வைகோ வழக்கு குறித்தான பதிவை இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் பதிவிட்டேன். அதன்பின்
விளக்கமாக பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த விவரமான பதிவு வருமாறு.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 21-10-2008ல் நடந்த ஈழ ஆதரவாளர் கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு தேச
விரோதமானது என்று கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு (SC No. 1/20010) உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் நகர
நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் முக்கிய சாட்சியாக நான்
இருந்தேன். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவன் என்ற முறையில் சாட்சி சொல்ல எனக்கும்
சம்மன் அனுப்பியிருந்தார்கள். கடந்த 09-06-2016 அன்று ஒரு நாள்
முழுவதும் என்னுடைய சாட்சியம் நீதிமன்றத்தில் செய்யப்பட்டது.
இந்த வழக்கில்
சாட்சி சொல்ல செல்கிறேன் என்று தலைவர் கலைஞர் அவர்களிடம் அனுமதி கேட்டபோது, அவர் உன் விருப்பம் எப்படியோ பார் என்றார். அதன்பின்
அந்த சாட்சியத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தேன். நான் வழங்கிய சாட்சி ஓரளவு வைகோ
விடுதலைக்கான சட்டரீதியாக பொருத்தமாக இருந்ததென்று பலர் கருத்து கூறினர்.
அது போலவே 30 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1989 ஆம் ஆண்டு வைகோ இலங்கைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமையை
அறியச் சென்றதை எதிர்த்து வழக்கறிஞர் கோபாலன் quo warranto வழக்கைத் (WP. No. 3269/1989) தொடுத்தார். அப்போது வைகோ மாநிலங்கள் அவை உறுப்பினர்.அதையும் சென்னை
உயர்நீதி மன்ற நீதிபதி பி.எஸ்.மிஸ்ரா அமர்வில் (4th Court)இறுதி விசாரணைக்கு வந்தபோது நான் ஆஜராகி வாதாடி
வெற்றிகரமாக, வைகோவிற்கு சாதகமான, தீர்ப்பு வழங்கியது என்பது கடந்த கால செய்திகள்.
நான் கொடுத்த சாட்சியின் நகல் வருமாறு.
நான் மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் என்ற அடிப்படையில் அதன்
பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள், அன்றைய அவைத் தலைவர்
முன்னாள் மத்திய அமைச்சர் திரு மு.கண்ணப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஈழ
ஆதரவாளர்கள் பங்கேற்று ஈழத்தில் நடப்பது என்ன? என்ற ஒரு கருத்தரங்கு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த
கூட்டத்திற்காக பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் 08-10-2008 அன்று நான் அனுமதி கேட்டேன், நிகழ்ச்சி நாள் 21-10-2008.
இதற்கான கட்டணத் தொகையான
ரூபாய். 9,021 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
லெட்டர்பேடில் நான் கையெழுத்திட்டு நான் அனுமதி கோரியிருந்தேன். அனுமதி கிடைத்தது.
என்னிடம் நீதிமன்றத்தில் காண்பிக்கப்படும் படிவத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து
தான். அந்த ஆவணம் தான் நான் அனுமதி கேட்டு கொடுத்த படிவம் (மேற்படி அவனும் ஏற்கனவே
அ.சா.ஆ.8 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது). 21-10-2008 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஈழத்தில்
தமிழர்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை காண்பிக்கிற குறும்படம்
சுமார் 45 நிமிட அளவில் போட்டு காண்பிக்கப்பட்டது.
மேற்படி குறும்படத்தில் காண்பிக்கப்பட்ட கொடூர நிகழ்வுகள் 2009 ஆம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த
சம்பவத்திற்கு முற்பட்டவை ஆகும். குறும்படத்தை தொடர்ந்து அப்போதைய சட்டமன்ற
உறுப்பினரான திரு மு.கண்ணப்பன் அவர்கள் பேசினார் .அதன் பிறகு திரு.வைகோ அவர்கள்
பேசினார். நான் தொடர்ந்து ஈழத்தை ஆதரிப்பவன். அங்குள்ள தமிழ் மக்களுக்கு
நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும். தந்தை செல்வா காலத்திலேயே சாத்வீக
போராட்டத்தின் மூலம் போராடி எந்த பலனும் கிடைக்காமல் 1976 ல் ஈழத்திலுள்ள வட்டுக்கோட்டையில் சிங்களரோடு சக வாழ்வு வாழ முடியாது
இனிமேல் தமிழர்களுக்கு தனி வாழ்வு தான் என்று முடிவு எடுத்ததால் ஈழம் இனி தனி நாடு
தான் என்று தீர்மானமும் முன்மொழியப்பட்டு அதன் பிறகு எவ்வளவோ சாத்வீக போராட்டங்கள்
நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி இந்திய
விடுதலைக்காக ஐ.என்.ஏவை நிர்வாகம் செய்தாரோ அதுபோல ஈழத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் போராட்டக் குழுக்களை அமைத்தார்கள். அதன்
விளைவுதான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க அமைப்பு அதன் தலைவர் பிரபாகரன்
தலைமையில் அமைக்கப்பட்டது. இன்றைக்கும் தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தால்
சாகடிக்கப்படுகின்றனர். அங்குள்ள தமிழர்களின் நிலங்கள் மற்றும் வீடுகள் அனைத்தும்
சிங்கள ராணுவம் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. மரபு ரீதியாக தன்னுடைய பூர்விக சொந்த
நிலமான ஈழத்திலேயே அங்குள்ள தமிழ்மக்கள் அகதிகளாகவும் கொடிய கொடுமைகளுக்கும்
ஆளாகியும், சித்திரவதைக்குட்பட்டும் வருகின்றனர் என்று
திரு.வைகோ அவர்கள் தொடர்ந்து பேசினார். இந்திய அரசாங்கம் பாராமுகமாக உள்ளது.
இலங்கையில் இராஜபக்ஷே அரசு சீனாவற்கு சாதகமாக இருப்பதால் என்றைக்கும் இந்தியாவின்
பாதுகாப்பிற்கு இராஜபக்ஷேயும், இலங்கையும் சவாலாக
இருப்பார்கள். இந்துமகா சமுத்திரம் இந்தியர் கையிலிருந்து ஆதிக்க சக்திகளின்
கைகளுக்குப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது என்றும் திரு வைகோ பேசினார்.
தென்கிழக்கு ஆசியாவின் புவிஅரசியல், ஈழத்தின் மனித உரிமை
மீறல்கள், இந்திய நாட்டின் பாதுகாப்பு, இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இந்திய அரசு தலையிட வேண்டும் என்று
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்று திரு.வைகோ தொடர்ந்து பேசினார். இலங்கை
படுகொலையில் இராஜபக்ஷேவிற்கு இந்திய அரசாங்கம் ஏன் உதவி செய்கிறது என்ற
கேள்வியையும் திரு.வைகோ அவர்கள் கூட்டத்தில் கேட்டார். இலங்கை பிரச்சனை சம்பந்தமாக
திரு.வைகோ அவர்கள் அப்போதைய பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு
தொடர்ந்து அவர் கடிதம் எழுதிவந்ததையும் குறிப்பிட்டார். இந்த கடிதங்கள் ஒரு
நூலாகவும் வெளிவந்துள்ளன. அதேபோல் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும்
இலங்கைக்கு இராணுவதளவாடங்கள் கொடுக்கக்கூடாது என்று முயற்சி எடுத்து அதன்படி
பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் உத்தரவிட்டதையும் திரு. வைகோ அவர்கள் அவர்
பேச்சில் சுட்டிக் காண்பித்தார். இந்திய ஒருமைப்பாட்டில் நான் மிகவும் நம்பிக்கை
உடையவன். ஒரு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட காலம் இருந்தவன் என்ற
அடிப்படையில் இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடாதீர்கள் என்று மத்திய அரசாங்கத்தை
பார்த்து சொன்னார். இலங்கையில் தமிழர்கள் மற்றும் அவர்களுடைய கலாச்சார அடையாளங்கள்
அழிக்கப்படுகின்றன. நாங்கள் பலமுறை சொல்லியும் நீங்கள் தடுக்கவில்லை. இந்த
நிலையில் இந்திய இறையாண்மை என்பது கேள்விக்குறியாக ஆகிவிடுமோ என்பது தான் என்னுடைய
வினா என்று திரு.வைகோ பேசினார். பங்களாதேஷிலும் பாலஸ்தீனத்திலும் குரல்
கொடுத்தீர்களே, ஏன் அதேபோல் இலங்கை பிரச்சனையிலும் குரல்
கொடுத்து தடுக்கவில்லையே நீங்கள், என்றும் திரு.வைகோ
அவர்கள் பேசினார். அக்கூட்டத்தில் திரு.வைகோ அவர்கள் பேசிய பேச்சு விடுதலை
புலிகளின் கூட்டத்தை ஆதரித்தும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிப்பதாகும்
இருந்தது. மேலும் திரு.வைகோ அவர்கள் அவர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கில்
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக
பேசுவது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது அல்ல என்று சொல்லி உள்ளதையும்
திரு.வைகோ அவர்கள் அந்த கூட்டத்தில் பேசினார்.
+++++++++++
குறுக்கு விசாரணை
இவ்வழக்கில்
முதல் தகவல் அறிக்கை யார் யார் மீது போடப்பட்டது என்று எனக்கு தெரியுமா என்றால்
தெரியும். திரு.வைகோ மற்றும் திரு.மு.கண்ணப்பன் அவர்கள் மீது போடப்பட்டது.
அதன்பெயரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்களா என்றால் ஆமாம்.
திரு.கண்ணப்பன் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு
திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார் என்றால் சரி. அவர் எப்போது அந்த
கட்சியில் சேர்ந்தார் என்றால் 2009 ஆம் வருடத்தில்
துவக்கம் என்று நான் நினைக்கிறேன். அக்கூட்டத்தில் திரு.மு.கண்ணப்பன் அவர்களின்
பேச்சை நான் கேட்டேனா என்றால் கேட்டேன். திரு.மு.கண்ணப்பன் அவர்கள் கூட்டத்தில் 35 ஆண்டுகள் அமைதியாக போராடிப் பார்த்தார்கள். சாத்வீகமாக
போராடி பார்த்தார்கள். தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருப்பதையும் தமிழ் மக்கள்
எல்லா வகையிலும் இரண்டாம் தரக்குடிமக்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலைமையில்
தான் தமிழ் மக்கள் கையில் ஆயுதம் ஏந்தி போராட வேண்டியிருந்தது, தமிழ் தனி தாயகமாக வேண்டும், தமிழ்ஈழம் மலரவேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்கள். பயங்கரவாதிகள் என்று
சொல்லுபவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் என்று பேசினாரா என்றால் சரி. மேலும்
திரு.மு.கண்ணப்பன் அவர்கள் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை நாங்கள் காக்கிறோம், முதலில் உங்களுக்கு உங்கள் நாட்டை காப்பாற்றிக்
கொள்ளுங்கள், தமிழ்நாடு தனி நாடு என்று சொல்லக்கூடிய காலம்
வெகுசீக்கிரத்தில் வந்து சேரும், தமிழிலும் மட்டும் அல்ல
தனித்தமிழ் நாடே மலரும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் என்று பேசினாரா
என்றால் அப்படி பேசியதாகத்தான் நினைக்கிறேன். மேலும் திரு.கண்ணப்பன் ஒரு இனத்தை
அடியோடு அழிப்பதற்கு நாம் கொடுக்கின்ற வரிப்பணத்திலிருந்தே, இங்கிருக்கின்ற தமிழர்கள் கொடுக்கின்ற வரிப்பணத்திலிருந்தே நம்முடைய இனத்தை
அழிப்பதற்கு நம்முடைய சகோதர சகோதரிகளை கொள்வதற்கு, பெற்ற தாய் தந்தையரை கொள்வதற்கு நம்முடைய பணத்தையே வடக்கே இருக்கக்கூடிய
இந்திவெறியர்கள் முடிவு செய்து ராணுவ தளவானங்களை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு
இங்கேயே பயிற்சி கொடுக்கிறார்கள். இதுதான் இந்தியாவின் இறையாண்மையா, இவன்தான் இறையாண்மையை காப்பாற்றுகிறவனா, நூறு கோடி மக்களுக்கு தலைமையை தாங்கி நடத்துகின்ற
திரு.மன்மோகன் சிங் இந்திய இறையாண்மையை காப்பாற்றுவார் என்று நீங்கள்
நினைக்கிறீர்களா, துணைபோகிற திரு.கலைஞர் கருணாநிதி காப்பாற்றுவார்
என்று நீங்கள் நினைக்கிறீர்களா என பேசினாரா என்றால் அது எனக்கு நினைவில் இல்லை.
அக்கூட்டம் நடந்த போது தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி தான் இருந்தார்
என்றால் சரி. திரு.கண்ணப்பன் பேசும் போது இன்றைக்கு என்ன ஸ்டேட்மென்ட்
கொடுக்கிறார், மத்திய சர்க்காரின் நடவடிக்கைகள் எனக்கு ரொம்ப
திருப்தி, திரு.மன்மோகன் சிங் ஹலோ என்று பேசிவிட்டாராம், இரத்தவெறி பிடித்த இராஜபக்ஷேவிடம் பேசிவிட்டாராம், இலங்கையில் யுத்தத்தை நிறுத்து என்று சொல்லக்கூடிய
யோக்கியதை இல்லை, அதை கேளுங்கள் என்று சொல்லக்கூடிய யோக்கியதையும்
எவனுக்கும் கிடையாது. டெலிபோனில் பேசியாச்சு எனக்கு ரொம்ப திருப்தி அளிக்கிறது, இன்றைக்கு இந்த நிமிடம் வரைக்கும் அங்கே தமிழர்களை
சாகடித்து கொண்டிருக்கிறார்கள். 28 ஆம் தேதி கெடு முடிகிறது. 29 காலையிலேயே முரசொலியில் கடிதம் வரும் நாமெல்லாம் படிக்கலாம், உடன்பிறப்பே நீ எண்ணியவாறு நான் இன்றைக்கு செய்து
கொடுத்துவிட்டேன். நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் பேசிவிட்டார், தம்பி இராஜபக்ஷே அதை ஒப்புக் கொண்டார். வெகுவிரைவில்
சமாதானம் ஏற்படும், நம்முடைய தமிழ் இனம் காப்பாற்றப்படும், கண்ணீர் துடைக்கப்படும், இரத்தத்திற்கு மருந்து போடப்படும் என்று சொல்லி வசனங்கள் எழுதி எனவே
மீண்டும் மன்மோகன் சிங் ஆட்சி வந்தால் தான் ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள், தமிழக மீனவர்கள் காப்பாற்றப்படுவார்கள், அப்படி தொடர வேண்டும் என்றால் எம்.பிக்கள் ராஜினாமா
செய்யதேவையில்லை, வேண்டுமானால் பின்னால் உபயோகபடுத்தி கொள்வேன், என்று பேசினாரா என்றால் எனக்கு நினைவு இல்லை.
அக்கூட்டத்தில் திரு.வைகோ அவர்களின் பேச்சு மத்திய அரசு அதனுடைய நிலைப்பாட்டை
மாற்றி கொள்ள வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற
நிலையில் இருந்தது என்றால் சரி. திரு.கண்ணப்பனும், திரு.வைகோ அவர்கள் பேசியது போலவே பேசினார். இருவருமே இந்திய அரசாங்கம்
அங்குள்ள நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறது என்று பேசினார்கள். நான்
தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருக்கிறேன். திரு.கண்ணப்பன்
திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்ததால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அதுபற்றி எனக்கு தெரியாது.
மறுவிசாரணை இல்லை.
என்னுடைய கையொப்பம். 09-06-2016
கோர்ட் சீல். நீதிபதி
கையொப்பம்.
#ஈழம்
#இலங்கைபிரச்சனை
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-06-2019
No comments:
Post a Comment