Tuesday, June 25, 2019

தண்ணீர் பற்றாக்குறை, எதிர்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையா?



தண்ணீர் பற்றாக்குறை, எதிர்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையா?
--------‐-----------------
தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 10, 15 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது. நானும் தினமணி மற்றும் எனது சமூக வலைதளத்திலும் குடிநீர் பஞ்சம் வரும் என்று பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். தற்போது இன்னொரு சிக்கல் என்னவென்றால் நாம் சுவாசிக்கும் பிராண வாயுவும் (oxygen) தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தொழிற்சாலைகள், நகரமயமாக்கல், பெருகிவிட்ட வாகனங்களின் எண்ணிக்கை, வீட்டுக்கு மூன்று, நான்கு கார்கள் வைத்துக் கொள்வது போன்றவற்றால் உண்டாகும் கரியமில வாயுவால் ஓசோன் படலமே அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவும் சர்வதேச அளவில் விவாத பொருளாக இருக்கிறது. நாம் நமது சுவாசத்திற்காக போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதிலாவது விழித்து கொள்வோமா??
****
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் 28 இடங்களில் காற்று மாதிரி சேகரிப்பான் கருவி மூலம் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் காற்று மாசுபட்டுவருவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இதனை கண்டுபிடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் அதி கொள்ளளவு காற்று மாதிரி சேகரிப்பான் கருவி கொண்டு காற்றின் தரத்தை கண்காணித்து வருகிறது.
சென்னையில் கத்திவாக்கம், மணலி, திருவொற்றியூர், கீழ்ப்பாகக்ம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அண்ணநகர், அடையாறு ஆகிய இடங்களில் கண்காணிக்கப்படுகிறது. கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொன்னையாராஜபுரம், சிட்கோ கட்டிடம், மதுரையில் நெடுஞ்சாலைத்துறை கட்டிடம், மதுரை மாநகராட்சி அலுவலகம் (தெற்கு), சேலம் சௌடேஸ்வரி கல்லூரி, திருச்சி காந்தி சந்தை, மெயின் கார்டு கேட், பிஷப் ஹீபர் கல்லூரி, பொன்மலை, மத்திய பேருந்து நிலையம், தூத்துக்குடி ராஜா ஏஜென்சீஸ் அருகில், சிப்காட், ஏ.வி.எம் கட்டிடம் அருகில், மேட்டூரில் ராமன் நகர், சிட்கோ, கடலூரில் ஈச்சங்காடு கிராமம் குடியிருப்பு பகுதி, இம்பீரியல் கல்லூரி, சிப்காட் என 28 பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
Image may contain: sky, cloud and outdoor
இதில் சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்களின் அளவு தூத்துக்குடியில் சற்று கூடுதலாக உள்ளது. அதை கட்டுப்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இவ்விடங்களில் வாரம் இருமுறை 24 மணி நேரமும் கண்காணிப்பு நடத்தி, மாதிரிகள் எடுக்கப்பட்டு சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய 10 மற்றும் 2.5 மைக்ரான் அளவுக்குட்பட்ட மிதக்கும் நுண்துகள்கள், சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகிய வாயுக் கழிவுகளின் அளவுகள் கண்டறியப்படுகிறது. 2018-2019 ஆண்டுக்கான சல்பர்-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடுகளின் சராசரி அளவுகள், கண்காணிப்பு நடத்திய அனைத்து இடங்களிலும், நிர்ணயிக்கப்பட்ட காற்றுத்தர அளவுகளுக்குட்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்களின் அளவு 10 மைக்ரானுக்குட்பட்டவை சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு சராசரி அளவான 60 மைக்ரோகிராம்/கனமீட்டர் அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நுண்துகள்கள் அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் வாகன போக்குவரத்தாகும். சாலையில் உள்ள மண் மற்றும் தூசுக்கள் வாகனங்கள் செல்லும்போது மேலெழுவதால் தான் காற்றில் கலந்துள்ள துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட தூத்துக்குடியில் சற்று கூடுதலாக உள்ளது. 9 இடங்களில் தானியங்கி தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைத்துள்ளது.
இந்நிலையங்கள் மூலம் காற்றில் கலந்துள்ள 10 மைக்ரான் அளவுக்குட்பட்ட நுண்துகள்கள், 2.5 மைக்ரான் அளவிற்குட்பட்ட நுண்துகள்கள், சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓசோன், கார்பன் மோனாக்ஸைடு மற்றும் பென்சீன் ஆகிய வாயு காரணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் காற்று தரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வண்ணம் ஒரு நடமாடும் தொடர் சுற்றுச் புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தினை மார்ச் 2016ல் அறிமுகப்படுத்தியுள்ளது. 25 தானியங்கி தொடர் சுற்றுச் புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களை நிறுவதற்கு நடவடிக்கைளை எடுத்துவருகிறது.
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒரு காற்று தர கண்காணிப்பு மையத்தினை வாரியம் அமைத்துள்ளது. சிகப்பு மற்றும் 17 வகையான அதிக மாசு படுத்தும் தொழிற்சாலைகள் இம்மையத்துடன் இணைக்கப்பட்டு வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மே 31, 2019 வரை 340 தொழிற்சாலைகள் இம்மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிட்ட தர அளவினை மீறும் தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டு அந்த தொழிற்சாலைகள் இயங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-06-2019

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...