Saturday, June 15, 2019

The pending #RailwayprojectsofTamilnadu . நிலுவையில்யுள்ள #தமிழகரயில்வேதிட்டங்கள்


————————————————
தமிழகத்தில் நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும், தமிழக ரயில்வே திட்டங்கள் புத்துயிர் பெறுமா?

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது..’ என மாநிலத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களை, மற்ற மாநிலகங்ளோடு ஒப்பிடும் பொழுது இன்றளவும், இந்த கூற்று உயிரோட்டமாக உள்ளது போல் தான் தோன்றுகிறது.

வார இறுதி மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செய்யும் பயணம் நாளுக்குநாள் சிரமம் நிறைந்ததாகவே தெரிகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சுமார் 7 லட்சம் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டதாக தெரிகிறது. சாலை போக்குவரத்து கால விரயத்துடன், ஆபத்து நிறைந்ததும் கூட. கடந்த 2018 ல் சுமார் 58000 பேர் தமிழகத்தில் , சாலை விபத்துகளில் இறந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சாலை போக்குவரத்தை தவிர, மக்கள் பெரும்பாலும் விரும்புவது ரயில் பயணங்களையே, கட்டணமும் குறைவு, பாதுகாப்பு நிறைந்தது. ஆனால் சமயத்திற்கு ரயில் டிக்கெட் கிடப்பிப்பதில்லை. கோடை விடுமுறைக்கான முன்பதிவுகள் இப்போதே தீர்ந்து விட்டது.குறைவான ரயில்களும்,குறைந்த கட்டமைப்பு வசதிகளுமே இதற்கு காரணம்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிந்தபாடில்லை.

உதாரணமாக தமிழகத்தில் சென்னை - கன்னி யாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின்படி, இருபது ஆண்டுகளுக்குபின் 2018 ல் நிறைவடைந்தது, தற்போது மதுரை வரையில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மதுரை - கன்னி யாகுமரி வரையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. 490 கிலோ மீட்டருக்கு 20 ஆண்டுகள் எடுத்த நிலையில், மீதமுள்ள 250 கிலோ மீட்டர் தூரத்தை முடிக்க, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, தெரியவில்லை.

கடந்த 4 ஆண்டுகளாக இரட்டை மற்றும் அகலப்பாதைகளுக்கும் மின்வழித்தடம் அமைக்கும் திட்டங் களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக் கீடு செய்து வருகிறது. ஆனால், புதிய ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் அவை பல ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்டுள் ளன. சமீபத்திய தகவல்களின்படி, திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்காதபடியினால், திட்ட மதிப்பீடு 141% அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் சில திட்டங்களைக் கைவிட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக, உடனடியா நிறைவேற்றபடவேண்டிய திட்டம் மற்றும் கோரிக்கைகள்:

நீட்டிக்கப்படவேண்டிய சேவைகள்

1. திருவனந்தபுரம்- நாகர்கோவில் பயணிகள் ரயிலை, திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும்
2. திருவனந்தபுரம்- மங்களூர் பயணிகள் ரயிலை, கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட வேண்டும்
3. சேலம்- சென்னை எழும்பூர் ரயிலை, கரூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும்
4. சேலம்- கரூர் பயணிகள் ரயிலை, திருச்சி வரை நீட்டிக்கப்பட வேண்டும்
5. சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை தென்மாவட்டங்களுக்கு( மதுரை, திருச்சி, கன்னியாகுமபரி, ராமேஸ்வரம், காரைக்கால், கோவை, செங்கோட்டை) நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
6. மதுரை – சென்னை “தேஜஸ்” குளிர்சாதன ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்
7. திருச்சி - ஹவுரா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்

புதிய ரயில் சேவை

1. கொச்சுவெலி – நாகர்கோவில்- திருநெல்வேலி-காரைகுடி-புதுக்கோட்டை-திருச்சி- தஞ்சாவூர்-திருவாரூர் மற்றும் நாகபட்டினம் வேளாங்கண்ணி தடத்தில் தினசரி ரயில்
2. கன்னியாகுமரி-திருநெல்வேலி-மதுரை-திண்டுக்கல்-பழநி-பொள்ளாச்சி, கோவை-மேட்டுபாளையத்துக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும்.
3. 2000-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட , கன்னியாகுமரி-திருநெல்வேலி-மதுரை-திருச்சி-விருத்தாச்சலம்-விழுப்புரம்-திருவண்ணாமலை வழியாக, திருப்பதி தினசரி இரவு நேர ரயில்
4. ஈரோடு-சேலம் -நாமக்கல் -கரூர்-திருச்சி திண்டுக்கல் வழி தடத்தில் புதிய பகல் நேர சேவை
5. கரூர்- சேலம்- சென்னை வழி தடத்தில் புதிய பகல் நேர சேவை
6. தஞ்சாவூர்-சென்னை புதிய பகல் நேர சேவை
7. தாம்பரம்-விழுப்புரம்-விருதாச்சலம்-சேலம் மார்க்கத்தில் நீடிக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை
8. தாம்பரம்- திருவண்ணாமலை மார்க்கத்தில் புதிய பயணிகள் ரயில் சேவை
9. திருவண்ணாமலை - சென்னை இடையே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்ட ரயில் சேவை
10. தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர்-பெங்களூர் வழி தடத்தில் புதிய ரயில் சேவை
11. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தோத்யா புதிய ரயில் சேவை
12. பெங்களுர் - கோவை தினசரி இரவு நேர ரயில்
13. பெங்களுர் - ராமேஸ்வரம் தினசரி இரவு நேர ரயில்

சேவைகள் அதிகரித்து இயக்குதல்:-

1. கன்னியாகுமரி – நிசாமுதீன் 12641/12642 திருக்குறள் வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றி இயக்குதல்
2. கன்னியாகுமரி – புதுச்சேரி 16861/16862 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
3. கன்னியாகுமரி - ஹவுரா 12665/12666 வாராந்திர ரயில் வாரத்துக்கு மூன்று நாள் ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்
4. நாகர்கோவில் - சென்னை எழும்பூர் 12667/12668 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
5. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் 12689/12690 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
6. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் 22622/22621 வாரத்துக்கு மூன்றுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
7. தாம்பரம்-நாகர்கோவில் 22657/22658 வாரத்துக்கு மூன்றுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
8. நாகர்கோவில் - மும்பை 16339/1640 நான்குநாள் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும்
9. சென்னை- காரைகுடிஅருப்புக்கோட்டை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கம்
10. கன்னியாகுமரி - காரைகுடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம்-சிதம்பரம்- கடலூர்-பண்டுருட்டி புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்கம்
11. ராமேஸ்வரம்- திருச்சி- ஈரோடு-திருப்பூர் கோவை 16617/16618 வாராந்திர விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கம்
12. 1 மணி நேர இடைவெளியில், 213 கி.மீ நீளமுள்ள, அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்று வட்ட பாதையில், அதிக ரயில்கள் இயக்கப்பட வேண்டும்
13. மதுரை- திண்டுக்கல்- பழநி பொள்ளாச்சி – போத்தனூர் -கோவை வழி தடத்தில் புதிய ரயில் சேவை
14. ராமேஸ்வரம்-மதுரை- விழுப்புரம்-திருப்பதி 16779 வாரத்துக்கு மூன்றுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றம்


தரம் உயர்த்தி கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியவை

1. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் , 24 பெட்டிகளிலில் ஏறுவதற்கு ஏதுவாக இல்லாத ரயில் நிலையங்களை கண்டறிந்து, நடை மேடையின் நீளம் மற்றும் உயரத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும்
2. ரயில் பெட்டி பராமரிப்பு மற்றும் பெட்டிகளை நிறுத்துவதற்கு கூடுதல் தடத்துடன், ரயில்வே முனையமாக தரம் உயர்த்தப்பட வேண்டியவை
a. உப்பு கிட்டங்கி(சென்னை)
b. ராயபுரம்(சென்னை)
c. நாகர்கோவில்
d. கன்னியாகுமரி
e. மதுரை திருமங்கலம்
f. மதுரை கூடல் நகர்
g. வாஞ்சிமணியாச்சி
h. போடி
i. திருப்பூர்
j. ஈரோடு
k. கோவை துடியலூர் மற்றும் போத்தனூர், Madukkarai railway station also in the list of railway stations to be upgraded with the facility to stop trains with 24 coaches

புதிய அகல ரயில் பாதை

1. தாம்பரம்-செங்கல்பட்டு 3வது மற்றும் 4வது அகல ரயில் பாதை(30 கி.மீ)
2. திருவள்ளூர்-அரக்கோணம் 4வது அகல ரயில் பாதை(27 கி.மீ)
3. சென்னை –கொருக்குப்பேட்டை-அத்திப்பட்டு 3வது மற்றும் 4வது அகல ரயில் பாதை(22 கி.மீ)
4. சென்னை - மகாபலி புரம் - கடலூர் (179 கி.மீ)
5. திண்டி வனம் - செஞ்சி – திருவண்ணாமலை-செங்கம்-ஜோலார்பேட்டை (70 கி.மீ)
6. திண்டிவனம் – ஆரணி-வாலஜா நகரி (179 கி.மீ)
7. திண் டுக்கல்-குமுளி(lower camp 134 கி.மீ)
8. மதுரை-குமுளி
9. அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ)
10. ஈரோடு –தாராபுரம்-காங்கயம்-பழநி (91 கி.மீ)
11. 2011 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட , மதுரை – அருப்புக்கோட்டை-தூத்துக்குடி (143 கி.மீ)
12. ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக் கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ)
13. அரியலூர்-தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் (315 கி.மீ)
14. அரியலூர்- பெரம்பலூர்- துறையூர் -நாமக்கல் (108 கி.மீ )
15. திருத்துறைப்பூண்டி- திருக்குவளை-வேளாங்கண்ணி
16. ராமேசுவரம் – தனுஷ்கோடி(17 கி.மீ)
17. மொரப்பூர் - தருமபுரி (36 கி.மீ)
18. சேலம்-ஓமலூர்-மேட்டூர்(37 கி.மீ)
19. சின்னசேலம் கள்ளக்குறிச்சி(16 கி.மீ)
20. ஓசூர் - கிருஷ்ணகிரி -ஜோலார்பேட்டை( 101 கி.மீ)
21. கடலூர்- விருத்தாசலம் - சேலம் அகலப்பாதை
22. மன்னார்குடி – பட்டுகோட்டை(39 கி.மீ)
23. தஞ்சாவூர் - பட்டுகோட்டை(48 கி.மீ)
24. தஞ்சாவூர் – கந்தர்வகோட்டை-புதுக்கோட்டை (65 கி.மீ)
25. ஈரோடு-திண்டுக்கல் இரட்டை சுற்று வட்ட பாதை (139 கி.மீ)
26. 2008 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட , மதுரை-மேலூர்-திருப்பத்தூர்-காரைக்குடிக்கு புதிய ரயில் பாதை(91 கி.மீ)
27. கோவை-வெள்ளலூர்-சிங்காநல்லூர் சுற்று வட்ட பாதை
28. 2011-12 ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, மதுரை- வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி(160 கி.மீ) 2வது அகல ரயில் பாதை
29. 2011-12 ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, வாஞ்சிமணியாச்சி- நாகர்கோயில்(102 கி.மீ) 2வது அகல ரயில் பாதை 
30. 2011-12 ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, திருவனந்தபுரம் கன்னியாகுமரி(87 கி.மீ) 2வது அகல ரயில் பாதை

ரயில் பாதை அகலப்படுத்துதல்

1. 2010-ம் ஆண்டு தொடங்கிய, மதுரை-தேனி -போடி அகல ரெயில்பாதை( 90 கி.மீ)
2. காரைக்கால் - திருநள்ளார் – பேரளம்(22 கி.மீ)


இருவழிபாதை

எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு, உடனடியாக இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட வேண்டிய பாதைகள்


1. தஞ்சாவூர் – விழுப்புரம்
2. திண்டுக்கல்-ஈரோடு
3. திருச்சி – ஈரோடு
4. மதுரை-ராமேஸ்வரம்

மூன்றாவது இருப்புபாதை, நான்காவது பாதை அமைக்க சர்வேக்கள்


1. மதுரை – திண்டுக்கல்-விழுப்புரம்- சென்னை; மூன்றாவது மற்றும் நான்காவது பாதை
2. கோயம்பத்தூர் - சென்னை; மூன்றாவது மற்றும் நான்காவது பாதை


தேவை தானியங்கி தகவல் பதிவு(Data Loggers) கருவிகள்

நாடு முழுவதும் சுமார் 1150 ரயில்கள் அதி விரைவு கட்டணத்தில் இயங்குகின்றன. ஆனால் பெரும்பாலானவை குறிப்பிட்ட நேரத்தில் நிலையங்களை சென்றடைவதில்லை. இதனால் புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. தானியங்கி தகவல் பதிவு கருவிகளை , அனைத்து நிலையங்களிலும் நிறுவதன் மூலம் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரத்தை, துல்லியமாக அளவிட முடியும்

தானியங்கி சிக்னல்

தமிழகத்தில் தற்போது சென்னை எழும்பூரிலிருந்து செங்கல்பட்டுவரையிலும், சென்னை சென்ட்ரலிருந்து ஜோலார்ப்பேட்டை வரையிலும் தானியங்கி சிக்னல் வசதி உள்ளது. மற்ற அனைத்து இடங்களிலும் நிலையஅதிகாரிகளால் இயக்கப்படும் சிக்னல் வசதியே உள்ளது. இதனால் ரயில்களின் பயணநேரம் அதிகரிக்கின்றுத மற்றுமின்றி புதிய ரயில்களும் இயக்க முடியாதநிலை உள்ளது. ஆகவே செங்கல்பட்டிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், விழுப்புத்திலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் மற்றும் பல வழித்தடங்களில் உள்ள அனைத்து சிக்னல்களை மாற்றி தானியங்கி சிக்னல் முறையை கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்வதால் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் பயணநேரம் கணிசமான அளவில் குறைவது மட்டுமின்றி புதிய ரயில்களும் இயக்க முடியும். 

தேவை சுற்று வட்டப்பாதை ரயில்களே

அந்தந்த இடங்களில் உள்ள தொழில்களுக்கேற்ப, ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொழில்பேட்டைகள் அமைக்கப்பட்டன. 4 முதல் 6 வரையிலான தொலைப்பேட்டைகளை இணைத்து, சுற்று வட்டப்பாதையில் ரயில் விடுவதன்மூலம், எல்லா மாவட்டமும் பரவலான வளர்ச்சியை எட்டுவதோடு இட நெருக்கடி, நீண்ட தூர பயண நேரம் போன்றவற்றை வெகுவாக குறைக்கலாம் 

மத்திய-மாநில கூட்டு நிறுவனம் 

பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல் படுத்த ஒரு கூட்டு நிறுவனம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இது போன்ற ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளுடன் இணைந்து ஐம்பது சதவிகித நிதியையும் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமா ரயில்வேதுறைக்கு கொடுத்தால் இந்த திட்டங்கள் விரைவாக நிடைபெறும். கேரளா, ஆந்திரா மாநிலங்களில், ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற, அம்மாநில அரசுகளுடன் சேர்ந்து, ரயில்வே, சமீபத்தில் கூட்டு நிறுவனங்களை துவக்கியது. ஒடிசா, மஹாராஷ்டிரா மாநிலங்களும், கூட்டு நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. தமிழத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யில் தமிழகத்தில் அமைக்க வில்லை. இதற்கான ஒப்பந்தத்தை யும் போடவில்லை. எனவே கூட்டு ஒப்பந்தம் மூலம் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை விரைந்து நிறை வேற்றிட, மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிப்படையான தகவல்கள் மாற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளம்

கைபேசி, இணையம் வழியாக தகவல் பரிமாற்றம் நடைபெறும் காலத்தில், இன்னமும் ரயில்வே திட்டங்களின் துல்லியமான , தற்போதைய நிலை அவற்றின் இணையத்தில் கிடைப்பதில்லை. பொது மக்களும், அதிகாரிகளும் , மக்கள் பிரதிநிதிகளும் அறிந்து கொள்ளும் வண்ணம் இணையத்தில் பதிவிட்டால் நன்றாக இருக்கும்

முதலமைச்சர் தலைமையிலான ஆய்வு

மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்த மாதம்தோறும்,துறை செயலர்களை உள்ளடக்கி "பிரகதி" என்ற பெயரில் ஆய்வு நடைபெறுகிறது. அதுபோல முதலமைச்சர், மாவட்ட அமைச்சர், பாராளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளடக்கிய ஆய்வுகள் மாதம்தோறும் நடந்தால், மாநில அளவினளான தடைகளை களைந்து , திட்டங்கள் விரைவாக முடிக்க வாய்ப்புள்ளது 

மண்டல கருத்தரங்கம்

ரயில்வே திட்டங்களை, ஆய்வு செய்யும் மண்டல அளவினளான, கூட்டங்களில் அண்டை மாநில மக்கள் பிரதிநிநிதிகள் தவறாமல் கலந்துகொண்டு விரைவுபடுத்திக்கிறார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் குறைவான பிரதிநிதிகளே கலந்து கொள்கிறார்கள் என்பதை கடந்த கால ஆய்வுக்கூட்டங்கள் உணர்த்துகின்றன. கூட்டங்களில் கலந்து கொள்வதன்மூலம், புதிய திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு தேவையான அழுத்தங்களை தர முடியும்.

தேசிய திட்டம் (National Project status)

அதி முக்கியமான திட்டங்கள், தேசிய திட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறான திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பு 90% ஆகும். முக்கியமான திட்டங்களை, இவ்வகையான திட்டங்களில் சேர்ப்பதின் மூலம், தேவையான பணத்தினை உடனடியாக பெற்று, திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியும்

மாவட்ட அளவினாலான ஆய்வுகள்

60கும் மேற்பட்ட மாவட்ட அளவினாலான, துறைகளை ஒருகிணைத்து நடைபெறும் ஆய்வுகளில் பெரும்பாலும், துல்லியமான தகவல்கள், முடிவுகள் கிடைப்பதில்லை . இதை தவிர்க்க குறிப்பிட்ட ஒன்றிரண்டு துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வுகள் நடத்தி, திட்டங்கள் விரைவாக முடிக்க வாய்ப்புள்ளது.

சட்ட சிக்கல்கள்

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான, சட்ட சிக்கல்களை மாவட்ட அளவில் தீர்த்து முறையான இழப்பீடு நிதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்

போதிய நிதி ஒதுக்கீடு

நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட வட மாநில கட்சிகள் திட்டங்களை, போராடி பெரும்பொது ; நாற்பது உறுப்பினர்களை கொண்ட நாம் தேவையான நிதியை பட்ஜெட் ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுக்கொள்வதோடு , ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த வருடங்களில் முழுமையாக செலவழிப்பதை உறுதி செய்ய வேண்டும். 13000 கொடிக்குமேல் திட்டங்கள் இருக்கும்நிலையில், இந்த ஆண்டு வெறும் 2898 கோடியே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டினை காட்டிலும் 32 கோடி குறைவான தொகையாகும்

கால விரயம் மற்றும் மதிப்பீடு அதிகரிப்பை தடுக்க,

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு மையத்தினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவி திட்டங்களுக்கு தேவையான நிலத்தினை வருவாய் துறையின் மூலம், குறிப்பிட்ட காலத்திற்குள் கையகப்படுத்தி ரயில்வே நிர்வாகத்திடம் அளிக்கலாம். தேசிய சாலை போக்குவரத்து ஆணையத்தை போல திட்டங்களுக்கு தேவையான 100% நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்பே திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் கால விரயம் மாற்றும் திட்ட மதிப்பீடு அதிகரிப்பை தடுக்கலாம். கால விரயத்தினால், ஒவ்வொரு ஆண்டும், 10% முதல் 15% வரை, திட்ட மதிப்பீடு அதிகரிப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன

தேவை நெல்லை கோட்டம்

“கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலுமான ரயில்வே வழித்தடங்களும், நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி வழித்தடங்களும்(161 கி.மீ ) திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளன. குமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இவைகளின் வருவாய் ரயில்வே துறைக்கு பொன்முட்டையிடும் வாத்து. இந்த வருவாயை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம், தமிழக ஆளுகையில் உள்ள ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சிக்கல்கள் தீர, ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியது போல, திருநெல்வேலியை மையமாகக் கொண்டு கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலியை உள்ளடக்கிய “நெல்லை கோட்டம்” உருவாக வேண்டும். அல்லது 161 கிலோ மீட்டர் நீளமுள்ள, குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்

ரயில்வே வாரியத்துடன் பணியாற்ற மாநில அளவிலான குழு

நிதி ஒதுக்குதல், புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துதல், பயன்பாட்டின் அடிப்படையில் திட்டங்களை வரிசைப்படுத்துதல், புதிய திட்டங்களை தொடங்கிவைத்தல் போன்ற செயல்களில் ரயில்வே வாரியமே இறுதி முடிவை எடுப்பதால், அதனோடு இணைந்து பணியாற்றி விரைவு படுத்த, மாநில அளவிலான குழுவை ஏற்படுத்த வேண்டும்.

முழுமைபெறாத திட்ட அறிக்கை

சில திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை உருவாக்குவதற்கே ஓன்று அல்லது இறந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்ள படுகிறது. திட்ட அறிக்கை உருவாக்கப்படும்பொழுது, விட்டுப்போன செயல்களாலும் , கால தாமதத்திற்கு காரணமாகிறது.

இவை தவிர குறிப்பாக வனத்துறை அனுமதி, குவாரிகளில் கல்எடுக்கும் அனுமதி, ரயில்வேக்கு என கல்குவாரிகள் ஒதுக்குதல், ரயில்வே பணிக்கு தேவையான மண் எடுத்து கொண்டு செல்லுதல், ரயில்வேக்கு என தனியாக மணல் குவாரிகள் ஓதுக்குதல் என பல காரணங்களால் தடைபெற்று பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

"Being the richest man in the cemetery doesn’t matter to me …
Going to bed at night saying we’ve done something wonderful…
that’s what matters to me" --Steve Jobs 


தகவல்கள்; நன்றி -Varathan Ananthappan.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-6-2019.

Image may contain: train, sky and outdoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...