Monday, June 24, 2019

#இந்திரஜித்குப்தா100



சத்தமில்லாமல் கடந்து சென்றுள்ளது இந்திரஜித் குப்தாவின் நூற்றாண்டு நாள். இந்தியாவின் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகளில் ஒருவரான இந்திரஜித் குப்தா 1919 மார்ச் 18ல் பிறந்து 2001 பிப்ரவரி 20 இல் மறைந்தவர். எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு நூற்றாண்டுகள் கடந்துள்ளது என்றாலும் இந்திரஜித் குப்தாவினை பற்றிய செய்திகள் சற்று சுவாரசியமானது.
Image may contain: 1 person, smiling, close-up
அரசியலில் நேர்மையும், எளிமையும் மறைந்து பகட்டும் பந்தாவும் பெருகிவிட்ட இந்திய அரசியலில் நேர்மைக்கு பெயர் பெற்றவர் இந்திரஜித் குப்தா. 2001 பிப்ரவரி 20இல் அவர் மறைந்தபோது அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் காந்தியைப் போல் எளிமையான மனிதர் என்று குறிப்பிட்டது மிகவும் உண்மை.
பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் கம்யூனிச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இந்திரஜித் குப்தா, தனது வாழ்நாள் எல்லாம் தொழிலாளர்கள் பற்றிய சிந்தனையாளராக இருந்தார்.
இந்திரஜித் குப்தா 1919 மார்ச் 18ல் கல்கத்தாவில் பிறந்தார். அவரது துடிப்பான செயல்பாடுகளும், பல முக்கிய நிகழ்வுகளும் கொண்ட பெருவாழ்வு, இந்திய ஜனநாயகத்தில் குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆழமான தாக்கத்தை பதித்து சென்றுள்ளது.
குப்தாவின் தந்தை இந்திய அக்கவுன்டன்ட் ஜெனரல். மூத்த சகோதரர் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர். இந்திரஜித் குப்தா பள்ளிப்படிப்பு சிம்லாவில் தொடங்கியது. அவரது தந்தை அங்கேதான் பணியாற்றினார். டெல்லியில் 1937ல் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவருடைய பெற்றோர் மேற்படிப்பிற்காக அவரை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் அனுப்பி வைத்தனர். இந்திரஜித்திற்கு அரசியல் ஆர்வம் ஆரம்பத்தில் இல்லை. துடிப்பான மாணவர் அரசியல் இயக்கச் செயல்பாடுகளில் கூட ஈடுபட்டதில்லை. ஆனால் நிகழ்வுகள் வேறு பாதையில் திரும்பியது.
அந்த காலம் பாசிசம் தலை கொடுத்த நேரம். ஸ்பெயினின் குடியரசில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் இளைஞர்களை ஆழமாக பாதித்தது. அந்த போருக்கு ஆதரவாக தார்மீக போராட்டங்கள் இன்டர்நேஷனல் பிரைகேட் முதலிய அமைப்புகளின் வடிவங்களில் பெருகின. இந்திரஜித் குப்தாவின் ஒன்றுவிட்ட சகோதரி ரேணு சக்கரவர்த்தி அவரை இந்தியன் மஜ்லிஸ், ஐரோப்பியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு முதலிய மார்க்சியம் கற்கும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவைகளிலிருந்த ஆளுமைகள்தான் புகழ்மிக்க நிகில் சக்கரவர்த்தி, பூபேஷ் குப்தா, ரேணு சக்கரவர்த்தி, என்.கிருஷ்ணன், ரமேஷ் சந்திரா மோகன் குமாரமங்கலம், முதலானோர் ஆவர். பொதுவுடைமைத் தத்துவம் கம்யூனிச பிரசுரங்கள் சஞ்சிகைகள் முதலியவற்றில் இந்திரஜித் குப்தாவிற்கு பெரும் ஆர்வமும் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் உண்டாயிற்று.
இரண்டாவது உலக யுத்தம் 1939இல் வெடித்தபோது இந்திரஜித் குப்தா லிவர்பூலில் இருந்து புறப்பட்டு, சூயஸ் கால்வாய் மூடப்பட்டதால் ஐந்து வார கால கப்பல் பயணத்திற்கு பிறகு பம்பாய் வந்தார். திரும்பியவுடன் வேகமாக இயங்கியவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் தொடர்பு கொண்டு முழு நேர கட்சிப் பணிக்கு தன்னை அர்ப்பணித்தார்.
சிலகாலம் காத்திருப்பில் இருந்த அவர் உள்ளிருந்து தலைமறைவாக செயல்பட அறிவுறுத்தப்பட்டார். அவருடைய பணி தனக்கான இடத்தை ஏற்பாடு செய்து கொண்டு, செய்தியை சுமந்து செல்லும் தபால்காரராக வண்டி வண்டியாய் அறிக்கைகளையும் ஆவணங்களையும் செய்திகளையும் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது.
அந்த சாகச பணியில் இந்திரஜித் சிலிர்த்துப் போனார். பின்னர் அவர் கட்சியின் தலைமை இடமான பம்பாய்க்கு கட்சியின் பொது செயலாளர் பி.சி.ஜோஷி அவர்களின் நேரடி பார்வைக்கு மாற்றப்பட்டார். அங்கு கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ஜோசி சோமநாத், லாகிரி பவானி முதலானோரின் ரகசிய இயக்க நடவடிக்கைகளில் பங்கு பெற்றார்.
இந்திரஜித் குப்தாவிற்கு 1942-ல் சங்கத்தில் பணியாற்றுவதற்கு ஆயத்தமானார். பின்னர் துறைமுக தொழிலாளர்கள் சங்கம், ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்திலும் பணியாற்றினார். அகில இந்திய துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வரலாற்றின் கடினமான இடர்பாடுகள் மிகுந்த காலமான 1948, 49களில் இந்திரஜித் சிறையில் அடைக்கப்பட்டார். புகழ்மிக்க முக்கியமான தொழிற்சங்கத் தலைவராக ஏற்றம் பெற்றார். 1980இல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் ஏஐடியூசி அமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்வத்துடன் செயலாற்றினார். தலைவராக 1998ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மிகுந்த உழைப்பும் ஆழமான ஆய்வு மேற்கொண்டு அவர் எழுதிய புகழ்மிக்க புத்தகமே சணல் தொழிலில் முதலாளிகளின் முதலீடும், தொழிலாளர் உழைப்பும் என்ற நூல் அந்த துறை பிரிவில் உள்ள சட்ட புத்தகம்
1960 இல் நடைபெற்ற ஒரு இடைத் தேர்தலில் முதன் முதலில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 11 தேர்தல்களில் மிக அனாயசமாக வென்றே மக்களவையை அலங்கரித்தவர். 1977 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஒன்று தான் அவர் தோல்வி அடைந்த தேர்தல். அந்த தோல்விக்கு காரணம் நெருக்கடிநிலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்ததுதான் என்று அப்போது பேசப்பட்டது.
அந்த தேர்தல் தவிர்த்து போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று தான் மறையும் வரை மக்களவை உறுப்பினராக இருந்து வரலாறு படைத்தவர். எப்போதும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பழக்கப்பட்ட கட்சிக்கு ஐக்கிய முன்னணி ஆட்சி செய்த 1996 ஜூன் முதல் 1998 மார்ச் வரையிலான காலகட்டம் வித்தியாசமானது.
ஐக்கிய முன்னணி ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கக் கூடாது என்பதுதான் இந்திரஜித் குப்தா முடிவாக இருந்தபோதும், ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற நிலையை கட்சி எடுத்த பிறகு அதனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். கட்சியும் அதன்பின் அவரை உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விரும்பியது.
எந்த பதவி அடைவதற்கு பொதுவாக அரசியல்வாதிகள் ஏங்கி கிடைக்கின்றனரோ, அந்த பதவியை மிகுந்த தயக்கத்தோடு ஏற்றுக் கொண்டவர். பெரும்பாலான அமைச்சர்களுக்கு மதிய உணவுக்கு வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள்.
அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிடும் அமைச்சர்கள் எங்கேயாவது ஒரு சிலர் இருக்கலாம். இந்திரஜித் குப்தா தனது அலுவலகத்திலேயே மதிய உணவு சாப்பிட்டது பெரிய விஷயமல்ல. உள்துறை அமைச்சரின் தலைமையில் அமைந்துள்ள வடக்கு கட்டட வளாகத்தில் (North Block) ஊழியர்களுக்காக நடத்தப்படும் உணவகத்தில் கடைநிலை ஊழியர்கள் சாப்பிடும் 5 ரூபாய்க்கு மதிய உணவை தான் விரும்பி சாப்பிடுவார்.
சாப்பிட்டுவிட்டு உடனடியாக ஐந்து ரூபாயை உணவு கொண்டு வருபவரிடம் கொடுத்து விடுவார். தனக்காக அரசாங்கம் எந்த செலவும் செய்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதி காட்டுவார். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட தலைநிமிர்ந்து நடப்பதே அவரது பழக்கம். கஞ்சி போட்ட சட்டைக்காரர்கள் மத்தியில், மிகச் சாதாரண ஆடைகள் தான் அவரது தனி அடையாளமாக இருந்தது.
தனக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் வருகிறதா என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதே கிடையாது. காரணம் அவர் விரும்பாத போதிலும் உள்துறை அமைச்சர் என்ற காரணத்திற்காக அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சமீப காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக என்ற இருபெரும் கட்சிகள் பங்குபெறாத ஆட்சி என்றால் அது ஐக்கிய முன்னணி ஆட்சி ஒன்றுதான்.
ஐக்கிய முன்னணி ஆட்சியை காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரித்தது. கூட்டணி ஆட்சி என்றால் ஆட்சி நிலைக்காது என்று கருத்து ஒரு புறம் இருந்தபோதிலும், ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழட்டு சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சுர்ஜித் சிங் ஆட்சிக்கு வெளியிலும், இந்திரஜித் குப்தா அமைச்சரவை உள்ளேயும் கண்காணிப்பு இயந்திரங்களாக செயல்பட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாத உண்மை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-06-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...