#வெள்ளந்திவிவசாயிகள்
நேற்று கூடி வாழ்ந்தால் கோடி நன்மை# எனும் தலைப்பில் விவசாயிகள் குழுக்களாக பிரிந்து கிடப்பதையும் தங்களுக்குள் ஒன்றிணைவதன் அவசியம் பற்றியும் ஒரு பதிவிட்டிருந்தேன்.
அதைப் படித்த மதுரையிலிருக்கும் என் உறவினர் நாச்சியார் பட்டி தனசேகரன் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து அனுப்பி பதிவிடக் கோரினார்.
இதோ....
‘’பருத்தி,வத்தல் மகசூல் வரஆரம்பிச்சிவுடனே ஊருக்குள்ள யேவாரிக நடமாட்டம் ஆரம்பிச்சிடும்.
யேவாரி வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையோட தோரணையா வர பரிவாரங்க தராசு விட்டம்,படிக்கல்லு தூக்குத்துணி, காலித்தாட்டுகளோடு பின்னாலயே வீடு வீடா நொழைவாக.
ஆமா ஏற்கனவே சம்சாரிக நூத்துக்கு பாதி பேரு இந்த யேவாரிகளுக்கு கடன் பட்டுருப்பாக.ஆமா வெதைகள்ல இருந்து மருந்து,உரம்,வேலையாட்க கூலி,வீட்டுப்பாடு செலவுக, நல்லது கெட்டதுக போய் வர காசு, கண்ணினு இவங்ககிட்ட தான் கடன் வாங்கி வச்சுருப்பாக.
பேங்குல போய் ரெண்டு கல்யாணத்துக்கு செய்முறை இருக்கு,மருந்து வாங்கனும்,உரம் வாங்கனும்,வேலையாட்க கூலி கொடுக்கனும்னா வாங்கிக்கன்னா கொடுப்பான்.அவன் பயிர்க்கடன் என்ன பயித்துக்கு எவ்வளவுன்னு ஒரு வரை முறை இருக்கும்.
அத ஒரு வரியில கொடுத்துருவான். சம்சாரிக மொத்தக்காச வாங்கி எங்க பத்திரப்படுத்த அது அல்லும்,சில்லுமா காலியாகி கரைஞ்சி போயிரும்.
அப்புறம் யேவாரிகள நம்பித் தான் வெள்ளாமையே. யேவாரிகள்ல நல்லவங்களும் உண்டு.அடாதடி கொள்ளைக்காரங்களும் உண்டு. வெவரமான சம்சாரிகளும் உண்டு.அப்புரானி,சப்புரானிகளும் உண்டு.அப்புரானிக கிட்ட யேவாரி வச்சது தான் வரிசை, வெவரமானவங்கிட்ட யேவாரிக.
நேக்கு,போக்கா போய் வசூல பிடிக்கனும்னு பாப்பாக.அடுத்த தடவை இவன் கூட மல்லுக்கட்ட முடியாதுன்னு நீ வேற யேவாரிய பாத்துக்கன்னு சொல்லி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கழட்டி விட்டுருவாக.
யேவாரிக கைவசம் நிறுத்து போடுறதுக்குன்னு ஒரு ஆள வச்சிருப்பாக.இந்த ஆளு பதினோரு கிலோ பருத்திய பத்து கிலோன்னு நிறுக்குற தெறமைசாலிய தான் கையில வச்சிருப்பாக. மேஜிக் தான் அது ஒரு கிலோ சேர்ந்தே எடையில போகும்.சமயத்துல கொஞ்சம் அசந்தா லாபம்,ரெண்டு, மூனுன்னு எடைய சொல்றப்ப திரும்ப மூனுன்னு சொல்லி விடுகிற தெறமை இவங்களுக்கு உண்டு.இந்த மாதிரி ஆளுகளும் இருந்தாங்க.ஆனா எல்லாரும் அப்படி இல்ல.இது ஒரு வகையான யேவாரம்.
அப்புறம் இராஜபாளையம் கமிசன் கடைகள்ல நேரடியா கடன் வாங்குறவகளும் உண்டு. அவங்க கடைகள்ல இருந்து காலித்தாட்டுக வரும்.அதுல அடைஞ்சி விலாசம் போட்டு வண்டியில போகும். தாட்டோட எடை, தீருகிற வெலை. தாட்டுக சதுரமா மேல் பகுதி ஓப்பனா இருக்கும் உள்ள பருத்தியோ,வத்தலோ போட்டு மிதிச்சி அமுக்கி அடைவாக. அப்புறம் மேல இழுத்துப்பிடிச்சி தச்சி விலாசம் போட்டு வைப்பாக.
பிறகு மாட்டுவண்டிக்காரக வண்டியில நீளமா வாரிக்கம்பு கட்டி தாட்டுகள வண்டி பக்கம் உருட்டி வந்தோ, வேற வண்டி வச்சி ஊருக்குள்ள இருந்து ஒன்னு ரெண்டா எடுத்துட்டு வந்து இந்த வண்டியில ஏத்துவாக.
தாட்டுக சம்பாரத்தை விட்டு பின்னால, முன்னால வாரிக்கம்பு பலத்துல நிக்கும்.மேலே கீழே ரெண்டு வரிசை ஏத்தி கயித்த வச்சி இறுக்கி கட்டிருவாக. அசையாது தாட்டு கயித்த அவுக்குற வரைக்கும்.
பதிமூனு தாட்டுக வரை ஏத்துவாக. ஒரு பத்து வண்டிக்கு தெனம் ஏத்தி போகும் ஒன்னுக்கு பின்னால ஒன்னுன்னு வண்டிக வரிசையா போகும் இராஜபாளையத்துக்கு.
ஒரு தடவை எடை போட்டு அனுப்புறதுல பாதி கடன கழிக்கச் சொல்லி மீதி பணமா கேட்பாக.
சம்சாரிக.
சம்சாரிகளுக்கு மகசூல் பாதிச்சதுன்னா யேவாரிகளுக்கும் பாதிப்பு தான்.கொடுத்த கடனுக்கு வட்டி தான்னாலும். அடுத்த வெள்ளாமைக்கும் கடன கொடுத்து சேர்த்து தான் வசூலிக்கனும். சம்சாரிக நெலமை வெள்ளாமை வைக்க ஒருபாடுன்னா மகசூல் வந்த பின்ன ஒருபாடு.யேவாரிக்கு கடன கட்டனும்.
காலமெல்லாம் அவன் கூட சம்பளம் இல்லாம காட்டுல கெடக்குற பொண்டாட்டி ,பிள்ளைகளுக்கு நகை நட்டு செஞ்சி கொடுக்கனும். இல்ல பேங்ல வச்ச நகையாவது திருப்பித்தரணும்.படிக்குற பிள்ளைக்கு அப்பத்தான் துணிமணி,பீஸ் எல்லா பஞ்சாயத்து வரும். காலமெல்லாம் கண்ணு முழி பிதுங்கி தான் திரிவான்.
இதுலயும் சின்ன சின்ன சந்தோஷங்கள் சம்சாரிக்கு இருக்கு. பிள்ளை குட்டிகளோட நாலு கோவிலுக்கு போயி வர்றது, சினிமாவுக்கு போயி வர்றது.அந்த வீட்ல இருக்குறவங்களுக்கு ரெண்டு புரோட்டா, அல்வா பாக்கெட்டு வாங்கி வந்து தர்றது.
ஊர்த்திருவிழா,நேத்திக்கடன் பேர்ல ரெண்டு கெடா வெட்டி சொந்த பந்தங்கள கூப்பிட்டு விருந்து வைக்குறது இது தான் அவன் அனுபவிக்குற சந்தோஷமே. வேறென்ன இருக்கு.’’
No comments:
Post a Comment