Thursday, June 20, 2019

#கதைசொல்லி33 #பா_செயப்பிரகாசம்


Image may contain: one or more people, people standing, outdoor and text


கரிசல் வட்டாரத்தில் எங்கள் ஊரில் ஓலைக் கொட்டானில் வைத்துக் கட்டிவரும் “கருப்பட்டி மிட்டாய்” போலப் பொத்திப் பாதுகாப்பாய்க் காப்பது, கொஞ்சம் கொஞ்சமாய் தித்தப்பை நாக்கில் கடத்தி, சொட்டாங்கு போட்டு சுவைத்துத் தின்பதற்காக.
‘கதை சொல்லி’ காலாண்டிதழ் தற்பொழுது கைவசம்.
கி.ரா.வின் எடுத்துரைப்பு முறை ஒரு சொக்குப்பொடி ; கணவதியம்மாளின் நிலை குறித்து எழுதுகையிலும் கைச்சொடுக்கில் வருகிறது அந்தச் சொக்கு. அம்மா, மாடிப்படியிலிருந்து இறங்குகையில், கடைசிப்படி என்று நினைத்துக் கால்வைக்க, சறுக்கி விழுந்துவிடுகிறார்; ‘சட்டடியாய்’படுத்துவிட்ட அம்மாவை நினைத்துக் கலக்கமாகி,
“இடி விழுந்தான் கூத்தை
இருந்து இருந்து பாரு
என்கிற மாதிரி ஆகிவிட்டது கதை ” - என்று தன் பேச்சிடையில் தனியாய்த் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார். இதனுடைய இன்னொரு பக்கம் - கீழே விழுந்து இரண்டாம் நாள் மாலை அம்மாவை, புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனையில் பார்த்தபோது , அம்மா சொன்னார், “அய்யா, ரொம்பப் பயந்து போய்ட்டாரு. நீங்க அவரைக் கவனமாப் பாத்துக்கோங்க.”
ஒரு பஞ்சாபிக் கவிதை பேசுகிறது.
“ஏரியின் நீரில் நதி ஓடுகிறது .
ஒவ்வொரு நதியிலும்
அமைதியான ஏரி இருக்கிறது.”
அது நீர் எனப் பார்க்கிறவர்களுக்கு ஏரி, நதி என இரண்டாகத் தென்படுகிறது. ஆனால், ஒன்றில் ஒன்று இருக்கிறது. அதுபோலத்தான் ஏரியும் நதியுமான அம்மாவும் அய்யாவும்; அவர்கள் ஓருரு.
தன்னின் முழு உருவாகிய அம்மா பற்றி கி.ரா. எழுதுகிறார்
“தோளுக்குத் தோளாக வாழ்ந்துவந்த எனது ‘அய்ராவதம்’ சாய்ந்துவிட்டது: நேரங்கெட்ட நேரத்தில் எத்தனைபேர் வந்தாலும் ருசி குறையாமல் பசி தீர்த்திடுவாள்.... காட்டிலும் மேட்டிலும் உடம்பைப் பிழிந்து உழைத்தவள். உழைத்ததுக்கெல்லாம் சேர்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள்.”
தமிழகத்து ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள், அறிவாளுமைகள் – தன் இல்லத்து ‘பெண் ஜீவன்’ பற்றி எவரும் பதிவு செய்ய முன்வராத குறையைக் கி.ரா.வின் சொற்கள் நிவர்த்தி செய்துள்ளன. ஆலத்தின் ஒற்றை விழுது இது; ஒட்டுமொத்த விருட்சம் நூலாக வெளிவரப்போகிறது.
❖ -2-
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுத்து என்றால், அது வரலாற்றைத் தொடாமல் நடக்காது என்பது ஒரு சொல்மொழி; அவருடைய விரல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரைதீர்க்கப் புரட்டிக்கொண்டிருக்கும். யதார்த்தங்களை, வரலாற்றுப் புள்ளிகளை எண்ணி அவரது சிந்திப்பும் அலுப்பத்து தேடிக் கொண்டிருக்கும்.
என்னுடைய ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ நூலில் ‘லிங்கம்பட்டி கிட்ணம்மா’ பற்றி 1998-இல் எழுதியிருக்கிறேன். கே.எஸ்.ஆர். குறிப்பிடுவதெல்லாம் அச்சு அசலாக உண்மை; எட்டயபுரம் அரசர் அழைத்துச் சிறப்புச் செய்தது, “என்ன வேண்டுமோ கேள்” என அரசர் கேட்க, “அன்னதான அணையா அடுப்பெரிய தங்களுக்குப் பாத்தியப்பட்ட நிலங்களில் உள்ள காய்ந்த விறகுகளை வெட்டிக்கொள்ள அனுமதி வேண்டும்” என்று லிங்கம்மா கேட்டது அனைத்தும் உண்மை.
கிட்ணம்மாள் ராமேஸ்வரம் போனபோது ‘இது விங்கம்பட்டி கிட்ணம்மா புண்ணியம் புண்ணியம்’ என ஒரு அந்தணர் குரல் ஒலித்ததாக ஓரிடத்தில் பதிவாகியிருக்கிறது. இதே சம்பவம் வேறொரு வகையாக எனக்குத் தரப்பட்டிருந்தது. “கிட்ணம்மாள் தன் போக்கில் வந்தவர்கள், போனவர்க்கெல்லாம், அன்னமிட்டும் கைப்பொருள் கொடுத்தும் உதவி வந்தார். இது கணவருக்குப் பிடிக்கவில்லை. குடும்பத்தைவிட்டுப் பரதேசியாக வெளியேறிவிட்டார். பல காலம் ஊர், நாடெல்லாம் சுற்றித்திரிந்தார். கடைசியாக ராமேஸ்வரம் போனார். அங்கே கடலில் நீராடும்போது ‘லிங்கம்பட்டி கிட்ணம்மாளுக்கு அரோகரா, அரோகரா’ என்று சாமியார்கள், பரதேசிகள், ஆண்டிகள் குரல் எழுப்பியபடி கோயில் நோக்கிச் செல்வதைக் கண்டார். இவ்வளவு கீர்த்தி பெற்ற ஒருத்திக்கு அவப்பெயரை உண்டாக்கிவிட்டோமே என மனம் வெதும்பி, லிங்கம்பட்டிக்குத் திரும்பிவந்து மனைவியின் அறச்செயல்களுக்கு உடனிருந்து வாழ்நாள் முழுதும் உதவினார்” - வேறொரு சித்திரமாய் என் எழுத்தில் பதிவாகியிருக்கும்.
நம் கால்களுக்குள் இருப்பவைதாம், கைகளில் வரப்போகின்றன. அவை ஒருவரிடத்துப் புனைவாக, மற்றொரு எழுத்தில் அபுனைவாக, இன்னொரு கையில் வரலாற்று விவரிப்பாகப் பதிவாகும். அடைக்க எல்லாம் ஒரே வடிவில் வெளிவரவேண்டியதில்லை. கோவில்பட்டி விவசாயப்பண்ணை – ஒரு காலத்தின் வேளாண் உன்னதம்: இக்காலத்தில் அஃதொரு பரிதாபம்: ஒரு காலத்துப் பசுமை: இன்று இறுதி மூச்சுவிட்டவாறு நிலைகுத்தி நிற்கின்றன அதன் விழிகள்.
அந்தப் பசுமைப் பூமிக்கு, 1950-கள் கடைசியில் என ஞாபகம். பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றிருக்கிறோம். காலச்சுவடு ,மே 2016- இதழில் “ குடிபெயர்வு” என்னும் எனது சிறுகதையில் கோவில்பட்டி பண்ணை பதிவாகியிருக்கும்.
“சுற்று வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மையைக் கற்றுத்தருகிற நவீன விவசாயப்பண்ணை கோவில்பட்டியில் அரசாங்க முயற்சியில் அமைக்கப்பட்டது. விவசாயப் பண்ணையில் மத்தியம் கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டுவிட்டு, மரநிழல்களில் இளைப்பாறினார்கள் பள்ளிப் பிள்ளைகள். இந்தப் பிள்ளைகள் என்ன பேசி, என்ன சொல்லி, என்ன சிரித்து, என்ன பாட்டுப் பாடி குலுங்கிக் கொள்கிறார்கள் என்று விரிந்து கவிந்த குடைகளாய் மரங்கள் கவனித்துக்கொண்டிருந்தன. குளுகுளு புங்கைமரம் நிறைய பெண்பிள்ளைகளாய்த் தன்கீழ் சேர்த்து வைத்துக் கொண்டு கர்வம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தது.வெள்ளி முத்துக்களை விசிறியடிப்பது போல் அடிக்கடி பூக்களைச் சிதறிச் சிப்பாணிக் கூத்து ஆடியது. இரு கைகள் சேர்த்து சிறுசுகள் கொட்டிய ’தத்தாங்கியால்’, புங்கைமரம் ஒரு சுத்துப் பெருத்து விட்டது போல் தோன்றியது.
”வீட்டுக்குள் கிட்டாத உல்லாசக் களிப்பு சுற்றுலாத் தலத்தில் கோவில்பட்டி விவசாயப் பண்ணையில் வசப்பட்டிருந்தது.வீட்டுக்கு வெளியில் எந்தப் பெண் பிள்ளையும் உம்மணா மூஞ்சி இல்லை என்பதை விவசாயப் பண்ணை தத்ரூபமாக்கியது.நாலுகால் பாய்ச்சலில் பறிகிற பெண்பிள்ளைகளைப் பார்த்து கூட்டிப் போன ஆசிரியமார் ஆச்சரியமாய்ச் சத்தம் கொடுக்க வேண்டியதாயிற்று . வீட்டில், வீதியில் அசைந்தசைந்து நடக்கிற நடையை ஏறக்கட்டி விட்டவர்கள் போல் நெட்டோட்டமாய் ஓடினார்கள். அன்னநடை என்று சொல்வார்களே அதை அன்றைக்கு மறந்து போனவர்கள் பெண்பிள்ளைகள் ”. 
ஒரு அனுபவம் புனைவாய் வெளிப்பட சில மாயமந்திரம் உண்டு. அது 5 நாட்களில் வெளிப்படலாம். 50 ஆண்டுகளுக்கு மேலாகக்கூட ஆழ்மனதில் படுத்துறங்கியிருக்கலாம். 1957- இல் ‘பொடிவட்டு வயதில்’ பதிவான நிகழ்வு, மே 2017, காலச்சுவடு இதழில் ‘குடிபெயர்வு’ என்ற புனைவாக வெளிப்பட்டிருந்தது.
போஷித்துக் காக்கப்படுதற்குப் பதில், ஷீணித்துப் போய்க்கொண்டிருக்கிற விவசாயப் பண்ணைக்கான ‘இரங்கற்பா’ என்பதாக கே.எஸ்.ஆரின் பதிவு தோன்றுகிறது. ஒரு இதழ் ஆசிரியர் என்று பொறுப்பை மிகச் சரியாக நிறைவேற்றியிருக்கிறார் நண்பர் கே.எஸ்.ஆர். 
❖ 😚
மூர்க்கமாய்ப் பாயும் இயற்கையின் பேயாட்டத்தை எதிர்த்து தன் வீட்டைக்காக்க அங்கேயே நிற்கும் ஒற்றை மனிதரின் மூர்க்கம் சாந்தாதத் மொழியாக்கம் செய்த தெலுங்குக் கதை. வெள்ளப்பெருக்கில் கைவிட்டு ஓடிய வீடுகளில், “வேலிகளைத் தாண்டும் சாகச வீரர்களின் செயல்கள் எது கண்டும் பின்வாங்காதென்பதும் புரிந்தது; வெகு லெகுவாய் கொள்ளை அரங்கேறிவிட்டிருந்தது. சிறு துரும்பையும் விட்டுவைக்கவில்லை களவாளிகள்...”
‘இது நடக்கக்கூடாது என்றுதானே, இறுதி வரை வெள்ளத்தில் போராடினீர்கள் ராமமூர்த்தி ஐயா’ என்று கேட்கத் தோன்றுகிறது. இந்த ’சாந்தா தத்தை’ நான் சந்தித்திருப்பேனோ? அல்லது எழுத்துப் பக்கங்களில் மட்டும் சந்திப்பு நிகழ்ந்துகொண்டு போகிறதோ!
வட்டார மொழியில் ‘இளவரசுப் பட்டம்’ சூடிக்கொண்டு வருகிறார்கள் இருவர்: கி.ரா.பிரபி ஒரு தினுசு என்றால் உக்கிரபாண்டி ஒரு தினசு. பேச்சுமொழியில் வட்டார வாழ்க்கை இவர்களுக்கு லகுவாய்ப் பிடிபடுகிறது. வட்டார வாழ்வியலைப் பேசுவதில் இரண்டுபேரும் ‘ரேக்ளா’ வண்டிப் பந்தயம் போகிறார்கள் – சொல் நுட்பத்தில்!
ஆரண்யா அல்லியின் ‘அதீத நுகர்வுப் பண்பாடும் தற்சார்பு வாழ்வியலும்’ பற்றிச் சொல்லாமல் விடமுடியாது. தற்சார்பு என்னும் சுயமரியாதை இல்லாமல் நம் வாழ்க்கை நுகர்வுப் பண்பாட்டினால் சுருட்டப்படுகிறது என்று உணங்கிப் போதல் மட்டுமன்றி, “காற்று வாங்கப்போய் கவிதை வாங்கி வந்தால் சிறப்பு. ஆனால் நாம் கழிசடைகளையல்லவா வாங்கி வருகிறோம்” என ஆவேச எதிர்ப்பாய் வெளிப்படுத்தல்- என்ன தீர்க்கத் தரிசன வரையறுப்பு.
குழந்தைகளின் கவி குளோரியா – சமயவேலின் கட்டுரையில் கவர்ந்தது குளோரியாவின் குழந்தைகளுக்கான அர்ப்பணிப்பு. தூண்டில் போட்டு, மேலே தூக்கின அந்த இரண்டு வரிகள்:
“புலிகளிடம் நகங்கள் இருக்கக்கூடாது.
நாடுகளிடம் யுத்தங்கள் இருக்கக்கூடாது.”
புத்தேரி தாணப்பன் என்பதான விசமி. அறுபத்து நான்கு வயதிலும் விஷமத்தனங்களின் குவியல். ஒரு சிலருக்கு ஒரு சில விசயங்கள் இருக்கக்கூடும். ஆனால், சமூகத்துக்கு விரோதமான அத்தனை செயல்களையும் கோர்வைப் படுத்துவதற்கு தாணப்பன் என்ற இந்த ஒற்றைப் பாத்திரத்தை மாதிரியாய்க் கொள்கிறார் - ‘பல்சான்றீரே’ ராஜா சிவக்குமார். அது கனகு என்ற இளம்பெண்ணால் அவருக்குள் இருந்த நஞ்சுகள் சுத்திகரிப்பாகின்றன. ‘கனகுவின்’ தற்கொலை யாரோ நெஞ்சுக்குள் ஆட்டுரலைப் போட்டு வேகமாக ஆட்டுவதாகப்பட்டது தாணப்பனுக்கு. கூடவே இந்த 64, இந்த 17இன் அகால மரணத்துக்குப் பின்புலமாகியிருக்கிறது என்ற மர்மமான உண்மை துலக்கமாகிறது.
அலட்டிக்கொள்ளாமல் ஒரு ஒற்றைப் பாத்திரத்தின் குணச்சித்திரத்தைச் சித்திரிக்கும் ‘லாவகம்’ ராஜா சிவக்குமாராக்குச் சிலாக்கியமாய் வருகிறது. சமூக இண்டு இடுக்குகளில்போய் நுகரும் சுவாசிப்பும், அவற்றை எளிமை, அதே நேரத்தில் செழுமை நிறைந்த சொல்முறையால் உணர்த்தும் இவரது பேனா - தமிழ்ச் சிறுகதைப் புனத்தில், “ஆலேலோ, ஹேய்ய் ஆலேலோ” பாடிவரும் ஒரு தினைப்புன வள்ளி; வேலன், வேடன், விருத்தன் என மூன்று வேடங்களில் கும்மாளமிட்டுவரும் ‘சிறுகதை’ என்ற முருகனை, ராஜா சிவக்குமார் நிச்சயம் வசப்படுத்துவார் என்று படுகிறது.
வளைவு இல்லாத நிமிர்ந்த உறுமிக்குச்சியைப் பாக்க முடியுமா? லேசாகக் குனிந்து பவ்யமாக நின்று சமஸ்தானத்துக்கு இல்லாத தர்மமா? “ஒங்க முந்திய தலைமுற சாமிக போட்ட தர்மம்தான் அது” என்று கையெடுத்துக் கும்பிடுகிறான் உறுமிக்காரன். அவனது நிலம் கையகப்படுத்தப்பட்டதில் இனிமையான மகா மகிழ்ச்சி ஊர் முதலாளிக்கு. ஒரு நூறு ஆண்டுகளாக இயற்கை மானவாரி விவசாயிகளைப் போட்டுப்பார்த்தாகிவிட்டது. உலகமயத்தின் அடியாட்களாக இயங்கும் மத்திய, மாநில அரசுகளும் விவசாயத்தின் இறுதி மூச்சைப் பறிக்க ‘ஆலாய்ப்’ பறந்துகொண்டிருக்கின்றனர். உலகமயத்தின் வஞ்சிப்பைப் பயன்படுத்தி ஊர் முதலாளியின் நில அபகரிப்புக்கு நிலத்தைப் பறிகொடுத்து, உறுமிக்காரன் ஊரை விட்டு வெளியேறிய சோகத்தை ‘உறுமிக்காரன் புஞ்சையில்’ தனக்கேயான யதார்த்தமான முறையில் எழுதிச் செல்கிறார் மூத்த எழுத்தாளர் சூரங்குடி அ.முத்தானந்தம். யதார்த்தம் என்றாலே, நவீன இலக்கியவாதிகளுக்கு, பேதிக்குக் கொடுத்ததுபோல் கலக்கிவிடும். யதார்த்த இலக்கியம், இடதுசாரி இலக்கியம் இவற்றோடு முறிவுப்பத்திரம் எழுதுவதுதான், இப்போது ‘மோஸ்தராகி’யிருக்கிறது நவீன இலக்கியவாதிகளுக்கு .
கதைசொல்லி 33- ஐப் பற்றி இன்னும் சொல்லப்பட வேண்டிய பக்கங்கள் நிறைய. 
ஒரு ஆலோசனையையும் சொல்லிவைக்கலாம். ஒவ்வொரு படைப்பு, அல்லது பதிவின் இறுதியில் எழுத்தாளரின் மின்னஞ்சல் தருவது இன்று இதழியல் முறையாகிவிட்டது. படைப்பு அலசப்படுவது இலக்கியச் செழுமையாக்கத்தின் முக்கியப் பணியாகப்படுகிறது. படைப்பின் கோணல் மானல்களை, நெளிவு சுளிவுகளை, புரிதலற்ற படைப்புகளை இனங்காண இத்தளம் வாய்ப்பளிக்கிறது. இதை ‘கதை சொல்லியும்’ அடுத்த இதழிலிருந்து தொடங்கலாம்; இன்னும் கூடுதலாய் எழுதியவரின் அலைபேசி எண்ணும் குறிப்பிடலாம். பாராட்ட, விமரிசிக்கப்பயன்படும். சிலநேரத்தில் கோபத்தில் நாலு வார்த்தை சொல்லவும் கைகூடும்.
#நன்றி -பா.செயப்பிரகாசம்

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...