Friday, November 1, 2019

*#தமிழகத்தோடு_திருநெல்வேலி #மாவட்டம்_செங்கோட்டை_இணைப்பு.



-------------------------------------
கன்னியாகுமரி, செங்கோட்டை உட்பட 9 தாலுக்காக்கள் இணைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து நான்கரை தாலுக்காக்கள் தான் அமைந்தது. 

அந்த அரை தாலுக்கா எதுவென்றால் அது திருநல்வேலி மாவட்டம் செங்கோட்டை ஆகும். செங்கோட்டை தாலுக்கா வளமான மேற்குத் தொடர்ச்சி மலையோடு இணைந்த வளமான பகுதியாகும். குற்றாலம், தென்காசி செல்வோர்கள் மாடல் பரோட்டா கடை என்று சொல்லும் செங்கோட்டை பகுதி பிரானூர் அரிகர நதியை ஒட்டிய கிழக்குப் பகுதி நவம்பர் 1, 1956ல் சென்னை மாகாணத்தில் இணைந்தது. இன்றைக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு முத்திரையை செங்கோட்டையில் பல இடங்களில் காணலாம். சிவன் கோட்டை என்பதே செங்கோட்டையா மருவியது. தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரையின் தென்பகுதி, நெடுமாங்காட்டின் கிழக்குப் பகுதி, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு என இப்படி 9 தாலுக்காக்களை முன்வைத்து சென்னை மாகாணத்தில் இணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டையில் பாதி தான் கிடைத்தது. செங்கோட்டையின் மலைப்பகுதி கிடைக்காமல் சமவெளி பகுதி தான் கிடைத்தது. 

இன்றைக்கும் செங்கோட்டைக்கும் கேரளத்தும் வர்த்தக தொடர்புகள் நீடிக்கிறது. பலராம வர்மா டெக்ஸ்டைல் மில், பி.வி.டி மில் என்ற புகழ்பெற்ற மில் செங்கோட்டையின் வரலாற்றில் மறக்க முடியாதது. செங்கோட்டை இணைப்பு போராட்டத்தை  கே. சட்டநாத கரையாளர் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர். 

இந்நிலையில் 01.08.1954ல் செங்கோட்டையில் நடந்த கூட்டத்தில் கே. சட்டநாத கரையாளர்(முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)ஏ.ஆர். கரையாளர், காந்திராமன், சங்கரலிங்கம் போன்ற பலர் செங்கோட்டையை தமிழகத்தோடு இணைக்கப் போராட்டங்களை முன்னெடுத்து சிறைக்கும் சென்றனர். 

இறுதியாக செங்கோட்டை தமிழகத்தோடு இணைந்தது. 01.11.1956ல் செங்கோட்டையில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அன்றைய சென்னை மாகாண அமைச்சர் சி. சுப்பிரமணியன் பங்கேற்றார். சட்டநாத கரையாளர் அந்த கூட்டத்தில் செங்கோட்டையின் எதிர்காலம் என்ன என்பது குறித்த விரிவான உரையை என்னுடைய தமிழ்நாடு 50 என்னும் நூலில் முழுமையாக பதிவு செய்துள்ளேன். 

செங்கோட்டையில் முக்கியமான புள்ளிகள் 

கணிதத்தில் சிவசங்கர நாராயணப் பிள்ளை

அரசியலில் கரையாளர்

ஆன்மீகத்தில் ஆவுடையக்கா

சுதந்திரப்போரில் வாஞ்சிநாதன்

சித்த வித்தையில் ஆறுமுக சுவாமிகள்

இசைத்துறையில்  கிட்டப்பா

01.11.1956 அன்று குமரி மாவட்ட இணைப்பு விழாவில் நாகர்கோவிலில் அன்றைய முதல்வர் காமராஜர், நேசமணி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர். அதற்கு இரண்டு நாட்களுக்கு பின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி, பி.எஸ்.மணி ஆகியோர் கலந்துக் கொண்ட இணைப்பு விழா கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. நவம்பர் 1, 1956ல் திருத்தணியில் நடந்த கூட்டத்தில் அன்றைய அமைச்சர் பக்தவசலம் கலந்துக் கொண்டதாக செய்தி.

*#தமிழகத்தோடு_திருநெல்வேலி
#மாவட்டம்_செங்கோட்டை_இணைப்பு.
#மொழிவாரிமாநிலங்கள்
#தமிழ்நாடு
#ksrposting
#ksradhakrishnanposting
1-11-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...