#பழைய_நினைவுகள் - எம்.ஜி.ஆர் ஆட்சியில் #நாடுகடத்தப்பட்ட #பாலசிங்கம், #சந்திரஹாசன், #சத்தியேந்திரா; #திரும்ப_மீட்ட #வழக்கும்_போராட்டங்களும்... (1985)
________________________________________
சமீபத்தில் ஈழத்து தந்தை செல்வாவின் மருமகளும், திரு சந்திரஹாசன் அவர்களுடைய துணைவியார் நிர்மலா அவர்களைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடைய தகப்பனார் மறைந்த திரு. நாகநாதன் ஈழத் தமிழ் தலைவர்களில் ஒருவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
சட்டம் படித்து, சட்டத்துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவது எளிதான காரியம் அல்ல. நிர்மலா அவர்கள் சட்டம் படித்து, சட்டத்திலே முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது சகோதரியும் வெளிநாட்டு தூதராகப் பணியிலிருந்து, சிங்கள அரசைக் கண்டித்து தான் வகித்த பதவியிலிருந்து விலகியவர்.
நிர்மலா அவர்களைச் சந்தித்தபோது, சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய நினைவுகள் மனத்தில் ஊசலாடின. அன்றைக்கு எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த #பாலசிங்கம், மற்றும் #சந்திரஹாசன், டெலோ இயக்கத்தைச் சார்ந்த #சத்தியேந்திரா ஆகியோர்களை நாடு கடத்தியது.
அப்போது உடனே நிர்மலா சந்திரஹாசன் தொலைப்பேசியில் என்னை அழைத்து, சட்டரீதியாக என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பாலசிங்கத்தையும், சந்திரஹாசனையும், சத்தியேந்திராவையும் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவரவேண்டும் என்று மாலையே முடிவெடுத்தோம்.
அன்றையதினம் வெள்ளிக்கிழமை. மறுநாள் நீதிமன்றம் விடுமுறை. முறைப்படி உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் மறுநாள் சனிக்கிழமை முறையிட்டு, வழக்கை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டுவர முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையில் நிர்மலா சந்திரஹாசன் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தந்தி மூலமாக நாடுகடத்தப்பட்ட மூவரையும் திரும்ப அழைக்கவேண்டுமென்று அவசரமாக முறையிட்டார்.
திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இம்மூவரையும் நாடு கடத்தியது தவறு என்று உத்தரவைப் பெற்றோம். உடனே அவர்களனைவரும் தமிழகம் திரும்பவேண்டுமென்று அன்றைய எம்.ஜி.ஆர் தலைமையிலிருந்த அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்ற ஆணைகள் சென்றது. பின், இந்த மூவரும் சென்னை திரும்பினர்.
இன்றைக்கு இருக்கின்ற நவீன வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத அந்த நேரத்தில், நீதிமன்ற விடுமுறை நாளில் குருசாமி நாயக்கர் தூக்குதண்டனை வழக்குபோல, இந்த வழக்கையும் காத்துக்கிடந்து நடத்தியது ஒரு பரபரப்பான சூழ்நிலையே.
இதற்கு மத்தியில் தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், கி.வீரமணி, அய்யன அம்பலம் ஆகியோர் இணைந்து நடத்திய “டெசோ” இந்த மூவரையும் நாடு கடத்தியதைக் கண்டித்தனர். அன்றைக்கு மாலையே டெசோ சார்பில் சென்னையே குலுக்கிய மாபெரும் பேரணியும் நடந்தது. 1985 செப்டம்பரில் வெறும் ஆறு மணி நேரத்தில் இந்தப் பேரணி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியாக அமைந்தது ஒரு ஆச்சர்யமான நடவடிக்கையாகும். இந்தப் பேரணிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் பங்கேற்றது எம்.ஜி.ஆரையே அதிரவைத்தது.
இந்த நினைவுகளை எல்லாம் குறித்து சந்திப்பின்போது நிர்மலா அம்மையார் நினைவு கூர்ந்தார். என்னிடம், “இன்றைக்கும் அதே வழக்கறிஞராகத் தான் இருக்கின்றீர்கள். யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள், உங்களைப் போன்றோர்கள் எல்லாம் ஏன் வரமுடியவில்லை. 80களில் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்து அவர்களின் வழக்குகள், அவர்களின் பயிற்சி முகாம் போன்ற பல்வேறு பணிகளுக்குத் தோன்றா துணையாக இருந்தீர்களே. தமிழகம் தங்களை நினைக்கிறதோ இல்லையோ, ஈழத்தில் உள்ளவர்கள் உங்களை நினைப்பார்கள்” என்று சொன்னது நெகிழ்வாக இருந்தது.
நிர்மலா அவர்கள், 11-09-1985 தேதியில் வெளியான தேவி இதழுக்கு அளித்த பேட்டியில் இந்த நிகழ்வுகளின் முழு விபரங்களும் இடம்பெற்றன. இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
-கே.எஸ்இராதாகிருஷ்ணன்.
3-11-2019
#டெசோ
#ஈழம்
#KSR_Posts #KsRadhakrishnan #SrilankanTamilsIssue #Balasingam #Chandrahasan #sathyendraTelo
No comments:
Post a Comment