————————————————
7.11.1929-ல் பிறந்த திருவையாறு சோ.வேணுகோபாலன், சென்னை லயோலாவில் பி.எஸ்சி., ராஜஸ்தானிலுள்ள பிலானில் மெக்கானிக்கல் என்ஜினீரிங்கில் பி.இ. படித்தவர். கர்நாடகாவில் உள்ள மணிப்பால் நகரில் பொறியியல் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியாகப் பணியாற்றியவர். 1959-ல் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ என்ற முதல் இலக்கியச் சிறுபத்திரிகையில், முதன்முதலில் ஒரு புதுக்கவிதையை எழுதிய (எழுத்து தலைமுறையின் முதல் கவிஞர்) தி.சோ.வே. தமது இறுதிக்காலத்தில் தமது மகளது குடும்பப் பராமரிப்பில் திருச்சியிலும் பின்பு பெங்களூருவுக்கும் சென்று வசித்து வந்தார். இது 15 ஆண்டுகளுக்கு முந்தி. இப்போது அவர் பற்றிய தகவல் தெரியவில்லை.
அன்று மிக முக்கியமான கவிஞராக புதுக்கவிதைக்கு உந்துசக்தியைத் தந்தவர் என்றாலும் பின்பு அவர் சி.மணியை விட அதிகம் மறக்கப்பட்டவரானார். வெளிவந்த கவிதைத் தொகுதிகள் ‘கோடை வயல்’ (எழுத்து பிரசுரம், 1965), ‘மீட்சி விண்ணப்பம்’ (க்ரியா).
1
கவி வேதனை
சின்னஞ் சிறிய திரி,
எண்ணெய் முழுகியது.
சூடு நெருப்பாச்சு,
காணும் ஒளியாச்சு.
கண்ணில் பிடிபடலாம்,
கையில் பிடிபடுமா?
தத்துவமா? தெரியாது!
போகட்டும்.
சின்னஞ் சிறு விட்டில்,
சன்னச் சிறகாலே
புயலைச் சூல்கொண்ட
காற்றைக் கிழித்தது.
எப்படி? தெரியாது!
போகட்டும்.
ஒளிமோகம் கொண்டது
களிகொண்ட விட்டில்.
காற்றைச் சிறகின்மேல்
ஏற்றிச் சுழன்றது
வட்டங் குறுகியது.
சொட்டாமல்த்
திரி நுனியில்
நிற்கும் ஒளித்திவலை
மெய் தீண்டும் காட்சி
‘சொய்’ என்னும் விசும்பல்.
ஒளியின் குரலா?
எரியாமல் திரியில்
கருகியது சிறகு.
என்னடா இதிலும்
தத்துவ மயக்கா?
தெரியாது!
போகட்டும்.
மீண்டும் ஒரு விட்டில்,
தூண்டாத் திரியின்மேல்
பாய்ந்து விழுந்தது.
‘சொய்' என்னும் விசும்பல்
தேய்ந்து கருகியது,
‘மை’யாச்சு சிறகு.
வெட்ட வெளிவட்டம்
முட்டிச் சிதறி விழும்
சுடர்த்தலை அழுந்திக்
கபந்தனாய் விட்டதா?
ஒளியெங்கே?
இருளில் ‘மை’ச்சிறகில் கூடி
வட்டம் பெரிதாக்கிக்
கருகியது ஒளியும்.
இருள் கூட ஒளியா?
கண்ணில் பிடிபடலாம்
கையில் பிடிபடுமா?
வெற்றியா? தோல்வியா?
அதுவும் யாருக்கு?
ஐயையோ இதிலும்
தத்துவப் பொருளா?
தெரியாது!
போகட்டும்.
..................
தத்துவத் திரையை
ஒதுக்கிப் பார்த்தேன்.
புரிந்தது கொஞ்சம்.
கொஞ்சமும் புரிந்ததா?
தெரியாது!
போகட்டும்.
எழுத்தாளன் எங்கே ?
கேட்கப் போனேன்.
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்தபின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக் கடையில்
கவிஞனைக் கண்டேன்.
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது;
பதில் ஒரு குழறல்.
இருட்குகை ஒன்றில்
இலக்கியப் பொருளில்
சோதனை நடந்ததாம்.
தட்டித் தடவினான்.
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
வீசினான் வெளியில்
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்.
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?
............................
எனக்குத் தெரியவே
தெரியாது!
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.
எழுத்து, பிப்ரவரி 1959.
(புதுக்கவிதை முன்னோடிகளுக்குப் பின்
எழுத்து‘வில் தோன்றிய முதல் புதுக்கவிதை)
2
நான் கவியானேன்
முகக் கண்ணாடியில்
முனைந்து பார்த்தேன்.
கண்களில் கவனமாய்
கவிஞனைத் தேடினேன்.
புருவ மத்தியில்
புலப்படவில்லை
சிந்தனைக் கொக்கி
சுருங்கிடும் நெற்றியில்
கோடுகட் கிடையில்
தேடினேன்: கண்டிலன்.
நாசியின் நீளம்
சிந்தனைக் கறிகுறி
என்றனர்: அளந்தேன்.
அளவிலும் தோல்வியே!
என்ன தெரிந்தது?
நானும் மக்களின்
தொகுதியில் ஒருவனாய்
பேதம் தவிர்த்துக்
கலந்து நிற்பதே!
கவிதை பின் எப்படிக்
கனன்றுயிர்க் கின்றது?
காகிதம் எடுத்து
வேண்டுமென் றெழுத
விரும்பினாலும் வராத
வித்தையை எங்ஙனம்
விளைவித்தேன் நான்?
என்னுளே ஏதோ
குமுறிச் சிரித்தது:
பித்தோ ? வெறியோ?
எழுத்திலே வேகம்
ஏறித் துடித்தது:
நான் எதற்கெழுதினேன்?
என்செயல் இதிலே
எதுவும் இல்லை.
ஏனெனில் எனக்கே
புரிந்திட வில்லை!
ஒருக்கால் மாந்தர்
ஒவ்வொருவருமிக்
கர்ப்ப வேதனை
கொண்டவர் தாமோ?
ஏதோ சொல்ல
எழுதுகோல் எடுத்திங்கு
எழுதிய பின்னர்
ஏமாறிப் போய்
புரியாப் புதிராய்
உலவிட விட்டுக்
காகிதம் கிறுக்கிக்
'கவி-யானேனே!'
(எழுத்து)
3
வெள்ளம்
வழியாடிக்
கரைசாடி
விம்மிப் புடைத்துறுமி
வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறுந்துயரா?
தாளம் தவறியதா?
கோளின் கதிபிசகா?
தாளம் தவறியதால்
கோளில் கதிபிசகால்
மேலே பனிமுடியில்
காலும் நொடித்ததனால்
கட்டுச் சடைபிரிய
கங்கை விடுதலையாய்
கொட்டி முழக்கிடுமோர்
கோரச் சிரிப்பொலியா?
வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறும்துயரா?
குடிசை பொடியாக்கிக்
குழைத்து நிறம்சிவந்த
வெள்ளம் சினன்நடமா?
இல்லை பயங்கரமா?
மீன் துள்ளுமேனி:
மாட்டுச் சுமையுண்டு
சுற்றிச் சடலங்கள்
சூழ்ந்து வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை சிவன்மதமா?
(எழுத்து)
4
சிறை
தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.
தத்துவத்தைத் தாண்டிவந்தோம்;
தத்துவத்துள் தடைப்பட்டோம்
ஆம், நமது சிந்தை,
சொற்கள், செயல், வாழ்க்கை
எல்லாம் தான்!
(எழுத்து)
5
கவலை
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்:
ஆனால்?
விதிதேய்து விட்டெறிந்த
கிழிந்த பழஞ்செருப்பில்,
காலுதறி விட்ட
புழுதித் தடத்தில்
நெஞ்சைப் புரட்டுகிறோம்
அல்லது
அறிவால், இதயத்தால்
உருவமைக்க முடியாத ஊர்ப்புறத்தை நாடி
அடியளந்து அடியெல்லாம்
அஞ்சும் அடிச்சுவடாய்
அடைத்த கதவுக்குள்
அகப்பட்ட பழங்காற்றாய்
புழுங்கும் புதிராய்,
கற்பித்த கற்பனையும்
கண்ணாடிச் சில்லுகளாய்க் கண்டு
குமைகின்றோம்
இன்றிங்கிருக்கும் இயல்பை, சத்தியத்தை
இன்பத்தை, துன்பத்தை, வினாடித்துடிப்புகளை
தொட்டும் பார்த்தறியோம்
ஆனால்?
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்
பார்த்து
விடுவானேன் பெருமூச்சு?
(எழுத்து)
6
கிணற்றில் விழுந்த நிலவு
1.ஒட்டு
நீட்டிய கையை மடக்கு!
நனயாதே!
வீட்டுக்குள் வேண்டுமென்றால்
விடு கண்ணீர்!
காலம் கருத்துக்குள்
கட்டுப் படுமுன்பே
கற்பரசி வான்மதியாள்
ஞாலம் வலம்வருவாள்.
ஆணழகன் ஆதவனை
அணுகும் பொழுதெல்லாம்
நாணி முகம்மெதுவே
மறைக்கின்றாள் தினந்தோறும்!
கூடி முயங்குற
குறிப்பிட்ட நாளன்று
மூடுகிறாள் இருட்போர்வை
முகம் முழுதும்!
கற்பரசி அன்னவளின்
கையைப் பிடிக்காதே!
தற்கொலைதான் செய்துகொள்ளத்
துணிந்துவிட்டாள் விட்டுவிடு.
.................................
சாகட்டும் சந்திரிகை;
செத்த பிறகேனும்,
காதல் களியாட்டக்
கிறுக்குப் பெண்ணென்று இங்கு
ஏதோ பிறந்தாலும்
போதும் முகத்துக்கும்
ஏகத் துக்கவளை
இழுத்துக்
கற்பனையின்(?!) போகப் பொருளாக்கிப்
பொலிவுத் துகில் கிழித்துத்
தேகம் கிழக்கூடாய்த்
தேயும் வரை முயங்கிப்
பாட்டெழுதும் கவிராயர்.....
(சாகட்டும் சந்திரிகை;
செத்த பிறகேனும்(
பேச்சற்றுப் போகட்டும்!
பேணு மடங்கட்டும்!
ஓச்சல் ஒழிவின்றி
ஊறும் கிழக்கவிதை
மூச்சடங்கிப் போகட்டும்!
மூங்கில் சுமையாக!
வானத்து அகலிகையின்,
வையத்துக் கவீந்திரர்,
மானம் அழித்துவிட்டார்!
மறக்கக் கிணறடைந்தாள்!
............................................
துறுதுறுக்கும் கையிரண்டும்
வெட்டி யெறிந்துவிடு!
வேண்டு மென்றால்
விடு கண்ணீர்!
தொட்டால் உருக்குலைவாள்!
தொடர்ந்துவரும் பெண் சாபம்.
2
வெட்டு
‘இரவரசி’ என்கின்றார்;
இத்தனை நாள் பார்த்ததில்லை!
இன்றுணர்ந்தேன்.
கரிசனையோ டுன் வீட்டுக்
கிணற்றுக்குள் வீழ்ந்தவளை
கைநீட்டிக் காப்பாற்றக்
கூப்பிட்டாய்,
அன்று.
இன்றிரவு என் தோட்டத்து இறைகிணற்றில்
ஐயையோ!
ஆடை நழுவ அங்கம் நெளிந்துக் கண்
ஜாடை அழைப்பில்......
சேச்சேச்சே!
.....................................
நீட்டிய கையை மடக்கு
திரும்பிப் போ!
இல்லை... நில்!
எடு ஒரு கல்,
ஏசு வருமுன்
வீசி எறி.
மதிமுகத்துச் சதித் தளுக்கை
அலைக்கைக் குலைக்கட்டும்.
............................................
தொட்டுத் தூக்கிவிடத் தான் நீண்ட கைகளையே
வெட்டி எறிந்துவிடு வேட்கைத் தொழுநோய் வந்து
ஒட்டி உருக்குலைக்கும்!
..................................
நாணமிலாப் பரத்தை
காணடா நிலவு!
(எழுத்து, டிசம்பர் 1961)
(எஸ்.வைதீஸ்வரனின் ‘கிணற்றில் விழுந்த நிலவு’ (எழுத்து, அக்-நவ. 1961) கவிதைக்கு ஒட்டியும் வெட்டியும் எழுதியது)
8
குருவி
சீ! போ!
சனியனே!
என்ன குதிப்பு! என்ன கொம்மாளம்!
கீச்சுக் கீச்சென்று காது கிழிபட!
ஊர் நிலவரம் உனக்கெங்கே தெரியும்?
வாராவாரம் விரதம் இருந்து
வயிற்றுத் தீ அவிக்க
வயிறெரிந்து
வாங்கிவரும் ‘பலசரக்’கில்
அரிசி மணி பொறுக்கி
அரைக் குருடாய்ப் போயாச்சு!
‘‘காக்கை குருவி எங்கள் ஜாதி” ?!
அவனுக்கென்ன ?
பாடினான்!
அகத்துக்காரி
அடுத்த வீட்டிலிருந்து யாரும் அறியாமல்
கூனிக்
குறுகி
கடன் வாங்கி வந்த
அரிசியை
முற்றத்தில் இறைத்து உங்கள்
மாநாடு கூட்டி
மகிழ்ந்து கரம் கொட்டி
பாடினான்!
அவன் பட்டினி கிடந்தான்;
ஆனாலும் ஊரெல்லாம்
அன்னதானம் நடந்தது;
அந்தக்காலம்!
‘படி' அரிசிப் பேச்சால்
பதவி பறிபோகும்;
இந்தக் காலம்!
அன்றவன் அடிமை!
ஆனந்தப் பட்டான்;
இன்று நான் சுதந்திரன்!
சோகப் படுகிறேன்!
சீ! போ!
(எழுத்து)
9
இலக்கிய அனுபவம்
சொல்வ திரண்டு வகை;
சிந்தை இல்லையாதல்!
கரகம் அல்லது
கன்கட்டு;
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்!
கண்டவன் கலைஞன்!
முழிப்பவன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!
எழுத்து, மார்ச் 1961.
10
விசாரணை
தத்துவந்தானே? வெங்காயம்!
கோடா! போ!
மூடியதை மூடிப்
பின்மூடி...? முடிவா?
உரித்தால்? மேலும் உரித்தால்?
கண்ணீர் கொட்டும்
முடிட்டாளுக்கு உருக்கம்;
மூலை மோதினால்
தலைக்குத் தேங்காய்!
உனக்கும் எனக்கும்
முடிந்தால்
இதயத்துக்கு மருந்து;
அனேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!
வெட்டித்தனமாய்
வேடிக்கையாய்
அட! வீம்புக்குத்தான்
வைத்தாலும்
தோலுரிக்கும் தொல்லையன்றி
வேறென்ன கண்ட பயன்?
முட்டி மோதி முடிகிதமட்டும்
பார்த்து
முக்கித் திணறி முடிவில்
சிக்காத சிக்கல் என்று
கடையைக் கட்டும்
வேலை!
எழுத்து, பிப்ரவரி 1961.
11
பழம்பெருமை
குழம்பு மாங்கொட்டை
குலப்பெருமை பேசிற்று
நட்டுவைத்துக்
காத்திருந்தேன்
நெடுமரமும் மரக்கனியும்
நிழலாச்சு
யெளிந்தது
புழு.
(எழுத்து, செப்டம்பர் 1962)
12
ஞானம்
சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும்.
தெருப்புழுதி வந்தொட்டும்.
கரையான் மண் வீடு கட்டும.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக் கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை,
கந்தைத்துணி, கட்டைத் தூரிகை;
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை!
(எழுத்து)
13
மதிப்பு-3
சிகிச்சை
பல பெற்ற
கிழச் செருப்பு :
'எறி' என்றேன்.
‘மொட்டைத் தூண்கள்
மூளிச் சிலைகள்
இருட்டடி பட்ட
குகை ஓவியங்கள்
இவை கண்டு
ரஸிக்க
பல்லாயிரம் பேர்!
ஓட்டைச் செருப்பு
உதவாமல் போகிறதோ?
அழகெதற்கு?
என்றான்!
'உடைந்த தூணும்
உருக்குலைந்த சிலையும்
காலத்தின்
குருட்டுத் தூரிகை
பட்டு மறையும்
ஓவியமும்
இதயத்தை இழுக்கவில்லை!
மண்தின்ற கரங்களுக்கு
மனமார்ந்த தொழுகை
இம்
மனித எண்ணங்கள்!'
(எழுத்து, ஜூலை 1965)
No comments:
Post a Comment