*#கழகத்_தலைவரும், #மிசாவும்…
#சில_அறியாச்_செய்திகள்.*
---------------------------------
அவசர நிலைக் காலத்தில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்களுக்கு திருமணம் நடந்த சில நாட்களிலேயே மிசா கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்து நெஞ்சுக்கு நீதியில் எழுதியுள்ளார்.
கடந்த வாரம் இதுகுறித்தான சர்ச்சை எழுந்தவுடனேயே நீதிபதி இஸ்மாயில் கமிசன் அறிக்கையையும், சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் வாசிங்டன் டி.சி.க்கு அனுப்பிய கேபிள் செய்தியையும் என்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தேன். இந்த இரண்டிலும் கழகத் தலைவர் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்த பதிவை செய்திருந்தேன்.
இன்னும் அதை குறித்தான சில செய்திகள் வருமாறு.
1. பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அன்றைக்கு இயங்கிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி,ஆனந்த மார்க் போன்ற பல அமைப்புகளில் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்தபோது, கே.கே.ஷாவை கவர்னர் பதவியிலிருந்து மாற்றி ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரா மோகன்லால் சுகாடியா தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநரின் ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், தவே ஆகிய இருவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் மிசா கைதிகள் பட்டியல் தயார் செய்தபோது, 1976 காலக்கட்டத்தில் அந்த பட்டியலில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவசர நிலைக் காலத்தில் மத்திய ராஜாங்க உள்துறை அமைச்சராக இருந்த ஓம் மேத்தாவிற்கும் இந்த பட்டியல் அனுப்பப்பட்டது.
அந்த ஆவணங்கள் இன்றைக்கும் நிச்சயமாக தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அலுவலகத்தில் இருக்கும். அந்த பட்டியலில் இருந்த பெயர்களை நானே வாசித்ததுண்டு. எப்படியெனில் ஸ்தாபனக் காங்கிரசும், ஆளும் இந்திரா காங்கிரசும் இணைந்த போது மோகன்லால் சுகாடியாவை சந்திக்க அந்த காலக்கட்டத்தில் அடிக்கடி கின்டி ராஜ்பவனுக்கு செல்வதுண்டு. அப்படி செல்லும் போது, கவர்னர் அலுவலகத்தில் தமிழகத்தில் இருந்த மிசாவில் கைது செய்யப்பட்டோரின் பட்டியல் அன்றைக்கு சென்னை மத்திய சிறை, வேலூர் மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, கோவை மத்திய சிறை, மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய சிறை, புதுச்சேரி மாநிலம் என தனித்தனியாக வரிசைப்படுத்திய பட்டியல் இருந்தது. அந்த பட்டியலில் மு.க.ஸ்டாலின் என்ற பெயர் இருந்ததை நான் பார்த்ததுண்டு. அந்த ஆவணங்கள் தலைமைச் செயலகத்தின் கோப்புகளில் இன்றைக்கும் இருக்கும்.
2. அவசர நிலைக் காலத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் சில காலம் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, சாந்தோம் பகுதிகளில் தங்கியதுண்டு. அப்போது காங்கிரஸ் இணைப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் அவரை சந்திப்பதுண்டு. தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி இருந்ததால் ஜார்ஜ் பெர்ணான்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவசர நிலை காலத்தில் சென்னையில் பாதுகாப்பாக இருந்தது. இந்த சூழ்நிலையில் ரயில் மூலம் கல்கத்தாவிற்கு பயணப்பட திட்டமிட்டார். அப்போது மத்திய உளவுத் துறை இந்த செய்தியறிந்து;அன்றைக்கு தமிழகத்தில் மத்தியஉளவுத் துறை பொறுப்பில் எம்.கே.நாராயணன் இருந்தார் (இவர் மன்மோகன்சிங் ஆட்சியில் அவரது அரசின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர். ஈழத்தில் முள்ளிவாய்காள் துயரத்தை தடுக்க தவறியவர்) ஜார்ஜ் பெர்ணான்டஸை கல்கத்தா பயணத்தின் போது பரோடா டைனமைட் போன்ற வழக்குகளில் இணைத்து கைது செய்து சிறையில் எம்.கே.நாராயணனின் ஆலோசனையின்படி
அடைத்தனர். அப்போது சென்னை மத்திய உளவுத் துறையின் பாண்டியன் (சங்கரன்கோவில்), கணபதி (முனிஞ்சிப்பட்டி), ராமர் (இராஜபாளையம்) போன்ற அதிகாரிகள் இருந்ததாக நினைவு. இந்த மூன்று பேரும் எங்களின் பகுதியை சார்ந்தவர்கள். இவர்களிடம் இருந்த அறிக்கையிலும் மிசாவில் கைது செய்யபட்ட பட்டியலில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் பெயரும் இருந்தது.
3. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் காங்கிரசோடு கூட்டணியில் அப்போது இருந்தது. கோவில்பட்டி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் சோ.அழகிரிசாமி 1976 இல் கிராமந்தோறும் மக்களை சந்தித்து பாதயாத்திரை நிகழ்ச்சிகள் நடத்தினார்.அதில் தோழமை கட்சியான ஆளும் காங்கிரசும் பங்கேற்றது. கோவில்பட்டி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் பங்கேற்றார். அந்த நிகழ்வில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி எஸ்.எஸ். தியாகராஜன், பிதப்புரம் ராமசுப்பு போன்றவர்களோடு நானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.அப்போது கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டு வரும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மகனும் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்று பேசினார் என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். அப்போது திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்படாத மாவட்டமாக இருந்தது.. மற்றொரு நாளில் ஆர்.நல்லகண்ணுவும் இந்த பாதயாத்திரையில் சோ.அழகிரிசாமி உடன் பங்கேற்றதுண்டு.
இப்படியான பல ஆதாரங்கள் உள்ளன. நான் சாமானியன் என்றாலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லையென்றாலும் 48 ஆண்டுகளில் ஸ்தாபனக் காங்கிரஸ் பணிகள், காங்கிரஸ் இணைப்பு, பழ. நெடுமாறனோடு தமிழ்நாடு காங்கிரஸ் (கா) கட்சியின் பொதுச் செயலாளர், ஈழத்தமிழர் பிரச்சனை, விவசாய சங்கப் போராட்டங்கள், மதிமுக உதயம், தலைவர் கலைஞர் கைது, டெசோ, தேர்தல் என பல களங்கள் பலவற்றையும் 1972லிருந்து கடந்து வந்துள்ளேன். பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர், வேலுப்பிள்ளை பிரபாகரன், நாராயணசாமி நாயுடு என இத்தனை ஆளுமைகளோடு என் பெயரைச் சொல்லி அழைக்கின்ற அறிமுகமும் தொடர்பும் உண்டு. ஏன் மறைந்த ஜெயலலிதா அவர்கள் கூட நல்ல அறிமுகமும் உண்டு.
இந்த தகுதியின் அடிப்படையில் இந்த கருத்துகளை பதிவு செய்கிறேன். ஒரு நீண்டகாலப் பொதுவாழ்வில் உள்ளவர்கள் நடந்தது என்ன என்பதை சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் இருப்பதால் இந்த விடயத்தை பகிர்கிறேன்.
-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
08-11-2019.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
No comments:
Post a Comment