Friday, November 27, 2020

 

#சில_வரலாற்றுச்_சக்கரத்தில்_தவிர்க்க #முடியாதவையே.#இதுவும்_சதுரங்க #விளையாட்டுதான்.
————————————————







ஒரு நிமிடத்தில் நிலைமைகள் மாறலாம். எதுவும் நடக்கலாம். நான் கவனித்த வரையில் சில நிகழ்வுகள் மட்டும் பதிவு செய்கின்றேன்.

1. பிரதமர் நரசிம்மராவு ராஜீவ் காந்தி காலத்தில் ஆங்கிலத்தில் insider என தனது வாழ்க்கையைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், டெல்லியிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாதிற்கு திரும்பி எஞ்சிய காலங்களில் வாழலாம் என்று தன்னுடைய உடமைகளை எல்லாம் ஆந்திரத்திற்கு அனுப்பும் போது பிரதமர் பதவி அவரை நாடி வந்தது. ராஜீவ் காலத்தில் பிரணாப் முகர்ஜி அரசியிலில்
அப்புறமாக இருந்தவர், இந்திரா காந்தியை எதிர்த்து வங்கத்தில் பங்களா
காங்கிரஸ் ஆரம்பித்தவர்தான். அப்போது சென்னையில் கலைஞர் 70களில் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொண்டு இந்திராவின் கொள்கைகளை விமர்த்தவர் பிற்காலத்தில் மத்திய ஆட்சியில் முக்கிய துறைகள் இவரிடதான் இருந்தது, காங்கிரஸ் கட்சிதான் இவரை குடியரசு தலைவர் ஆக்கியது. ஏன்.நேருவின் முதல்
அமைச்சர் அவையில் இருந்த; சியாமா பிரசாத் முகர்ஜிதான் ஜனசங்கத்தை (இன்றைய பாஜக) துவக்கினார்.

2. கடந்த 1976 காலக்கட்டங்களில் காமராஜர் மறைவுக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ் இந்திரா தலைமையிலுள்ள ஆளும் காங்கிரஸ் தமிழகத்தில் இணைந்த போது திடீரென ஜி.கருப்பையா மூப்பனார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தியால் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார். பெரும்பான்மையானவர் இதனை எதிர்பார்க்கவில்லை. கவிஞர் கண்ணதாசன் கூட அந்த மேடைக்கு அருகே அமர்ந்த போது wrong choice என்று சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த மூப்பனாருக்கு அன்றிலிருந்து அரசியலில் ஏறுமுகம்.

3. 1980களின் தொடக்கத்தில் தமிழ்நாடு காங்கிரசில் பலரும் எதிர்பார்த்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி முன்னாள் முதல்வர் பக்தவசலத்தின் பேத்தியும், சென்னை தூர்தர்சன் நிலையத்தின் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த வழக்கறிஞர் ஜெயந்தி நடராஜனுக்கு கிடைத்தது . அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் யாரும் இதை இப்படி எதிர்பார்க்கவில்லை.

இப்படி பல முதலமைச்சர்கள்,
அமைச்சர்கள், பதவிகள், பொறுப்புகள் என்று இன்றைக்கு வரை பல நிகழ்வுகள் நடந்ததைச் சொல்லலாம். அரசியலில் பெரும் களப்பணி நேர்மையான உழைப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும் வாய்ப்புகள் என்பது திடீரென்று அதிர்ஷ்டமாக கிடைத்த பல நிகழ்வுகளைச் சொன்னால் நீண்ட பட்டியலாகிவிடும்.

ஏன் திரைத்துறையில் கூட தமிழகம்
புறக்கணித்த ஹேமமாலினி, வித்யா பாலன் போன்றோர் பாலிவுட்டில் பிரபல நடிகைகளானார்கள்.

எனவே ஆங்கிலத்தில் சொல்வது போல ‘வெடிமருந்தை உலர்த்தி வை எப்போது வேண்டுமானாலும் உனக்கு தேவைப்படும்” என்பதை மனதில் வைத்துக் கொண்டு தான் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். சிலர் படிப்படியாக வளர்ச்சியில்லாமல் உச்சத்திற்கு செல்வார்கள். அவர்கள் அந்த பதவியில் இருக்கும் காலம்வரை தான். ‘’அரிச்சுவடி படித்து படிப்படியாக எந்த பின் புலம் இல்லாமல் உச்சத்திற்கு செல்பவர்கள் வரலாற்றில் நிற்பார்கள்’’“ஒரு எளிய நேர்மையான மனிதன் இந்திய பிரதமாரானார்” என லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றி ஜெயபிரகாஷ் நாராயணன் சொல்லிய கருத்துத் தான் இன்றைய நினைவுக்கு வருகின்றது.

பலர் வருவார் சிலர் கண்ணியமிக்க வரலாற்றில் இருப்பார்கள். இது வரலாற்றுச் சக்கரத்தில் தவிர்க்க முடியாதவையே.இதுவும் சதுரங்க விளையாட்டுதான்.

ஆனாலும் ஒன்றை மறக்கக்கூடாது, எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என சுயத்தை இழந்து வாழ்வதை விட, நாம் நாமகவே வாழ்வதே நல்லது.

எனவே,இன்றைய நிலை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்
காலமும் நிலைமைகளும்மாறக்கூடியது.!

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.06.2020

No comments:

Post a Comment

2023-2024