Monday, November 30, 2020

 


"#தமிழ்நாடு " அழைக்கப்பட்டநாள்.
———————————————



விடுதலைக்கு முன்புவரை மெட்ராஸ் பிரசிடென்சி என்றும், 1950 வரை மெட்ராஸ் பிராவின்ஸ் என்றும், 1969 வரை மெட்ராஸ் ஸ்டேட் என்றும் அழைக்கப்பட்டு "தமிழ்நாடு " அழைக்கப்பட்ட நாள் இன்று.

சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உண்ணாவிரதம் 1956ல் விருதுநகர் தேச பந்த் மைதானத்தில் மேற்கொண்டார். திமுக 1957 ல் திமுக சட்டமன்றத்தில் நுழைந்ததும் தீர்மானம் கொண்டு வந்தது ; முதல் தீர்மானமே ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது. 1961ல் சோஷலிஸ்ட் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்தை ஒரு மாத காலம் தள்ளி வைக்க காமராஜர் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சிகள் ஏற்காமல் மூன்று நாள்களும் வெளிநடப்பு செய்தன. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதா கொண்டு வந்தார். அண்ணா எம்.பியாக இருந்தார். பரிபாடல், மணிமேகலை, சிலப்பதிகாரம், கம்பன், சேக்கிழார் என்று எங்கெங்கெல்லாம் "தமிழ்நாடு - தமிழகம் " என்ற சொல் பயன்படுத்தப்பட்டதோ அதை எல்லாம் எடுத்துக்காட்டி அண்ணா வாதாடினார். ஏன் மாற்ற வேண்டும்? என்ற உறுப்பினர்களுக்கு "பார்லிமென்டை ஏன் லோக்சபா என்று மாற்றினீர்கள்? என்று எதிர் கேள்வி வைத்தார் அண்ணா. அங்கும் மசோதா தோற்றது.

1963ல் பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது மீண்டும் சட்டசபையில் திமுக தீர்மானம் கொண்டு வந்தது. மெட்ராஸ் என்றால் சர்வதேச அரங்கில் பெருமையாக இருக்கும்;பெயர் மாற்றினால் சிக்கல் வரும் என்று காங்கிரஸ் கூறியது. கோல்ட் கோஸ்ட் என்ற நாடு "கானா" என்று மாற்றப்பட்டதே என்ன சிக்கல் வந்தது? என்று திமுகவினர் கேட்டனர். இப்போதும் தோல்வியே கிட்டியது.

1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. ஜூலை 18 அன்று எல்லோருடைய ஆதரவிலும் "தமிழ்நாடு " பெயர் மாற்றத் தீர்மானம் வெற்றி பெற்றது. அண்ணா அறிவித்துப் பேசும்போது, இதற்காகப் போராடி உயிர் நீத்த சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்தார். மபொசியின் பங்களிப்பு முக்கியமானது.
இந்தப்பெருமை எங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று இதைச் செய்யாமல் விட்டுவைத்த காங்கிரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேரறிஞர் அண்ணா அவர் பாணியில் சொன்னார். நாம் மகிழ்ந்தோம்.

(இன்று தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நாள்.
18 .7.1967) 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...