சட்ட மன்றத்தில் ஒவ்வொரு முறை படம் திறக்கப்படும்போதும் தமிழகத்தின் சிறந்த முதல்வர்களில் ஒருவராகத் திகழ்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா பெயர் விட்டுப் போவது வேதனையாக இருக்கிறது. சென்னை மாகாணத்தைக் குமாரசாமி ராஜா 1949 முதல் 1952 வரை ஆண்டார். இவரது ஆட்சியில் தமிழ் மொழி முதன்மைப் பாடம் ஆனது. தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறைக்குத் தனி அமைச்சராகக் கே.பரமேசுவரனை நியமித்தார். புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமல்படுத்தினார். அறிவியல் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்தார். விவசாயிகளுக்கு இலவச வீரிய விதைகளைக் கொடுத்தார்.
பி.எஸ். குமாரசாமி ராஜா எளிமைக்கும்,
நேர்மைக்கும், அரசியல் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கினார்.
இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில்
பங்கேற்று தன் வாழ்க்கையைப் பொது வாழ்க்கைக்கே
அர்ப்பணித்துக் கொண்டார். நாட்டு விடுதலை, கூட்டுறவு, உள்ளாட்சி ஆகிய மூன்றும் இவரது வாழ்க்கைக் குறிக்கோளாக
இருந்தன. மின்சாரத் தேவை அதிகமாகி வருவது தெரிந்ததும் மின் விநியோக நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார். இராஜபாளையத்தில் அவரது உறவினரிடம் மின் விநியோக நிறுவனம் இருந்தது. அதைத்தான் முதலில் நாட்டுடைமை ஆக்கினார்.
1952 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். எப்படியாவது
வெற்றி பெற வேண்டும் என்று சிலர் சொன்ன தவறான ஆலோசனைகளை இவர் ஏற்கவில்லை. ‘‘தேர்தல்கள் வரும், போகும். நேர்மை, நியாயம் ஆகியவை என்றும் இருப்பவை. நேர்மைக்கோ, நியாயத்துக்கோ
ஊனம் இழைத்துவிட்டால்
மனிதத் தன்மையை இழந்து விடுவோம், மனிதத் தன்மையை இழந்து வெற்றி பெறுவதைவிட மனிதத்தன்மையோடு
தோல்வி அடைவதே மேன்மையானது” என்றார். சொந்த திருவில்லிப்புத்தூர் தொகுதியிலேயே
118 வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்றுப் போனார். "குமாரசாமி ராஜாவின் உணவுக் கொள்கையும், வரிக் கொள்கையும், கல்விக் கொள்கையும், கட்டாயக் கொள்முதலும் இத்தோல்விக்கான காரணங்கள்" என்றார் சி. சுப்பிரமணியம்.
பின்னர், ஒரிசா ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் "வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது" என்ற கருத்தை முதலில் பிரகடனப்படுத்தினார். இதனால் பிரதமரின் அதிருப்திக்கு ஆளாக ஆளுநர் பதவியைத் தூக்கியெறிந்தார்.
தான் வாழ்ந்த வீட்டையும், சொத்துகளையும் தமிழக மக்களுக்காக ஒப்படைத்தவர், அவர். அவருடைய வீடு பொது நூலகமாகவும், காந்தி கலை மன்றமாகவும் இராஜபாளையத்தில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய படத்தைச் சட்டமன்றத்தில் திறக்க வேண்டும். குமாரசாமி ராஜா சார்ந்த சமூகத்திற்குப் பெரிய வாக்கு வங்கி இல்லை.
No comments:
Post a Comment