Tuesday, August 3, 2021

#மேலவை_குறிப்புகள்_4

#மேலவை_குறிப்புகள்_4
———————————————————-
தமிழக மேலவை உருவாக்கப்பட்ட 1919-ல் சென்னை ராஜதானியாக இருந்தது. பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் இராஜதானிகளாகவும், ஏனைய பகுதிகள் அந்தந்த சமஸ்தான ஆட்சிப் பகுதிகளாகவும் இருந்தன.
சென்னை ராஜதானியில் இன்றைய தமிழகம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா மாநிலத்தின் தெற்கு மாவட்டங்கள், மலபார் மற்றும் தெற்கு கர்நாடகம் ஆகியவை அடங்கியிருந்தன. இந்த ஒட்டுமொத்த பகுதிகளில் மக்கள் தொகை, அன்று நான்கு கோடியாக இருந்தது. 




மேலவை அங்கத்தினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலில் இடம் பெற, ஒருவர் தனக்கென சொத்து, ஒரு வீடு அல்லது ஒரு மனை வைத்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிபந்தனையால் நான்கு கோடி மக்களில் வெறும் 12,48,156 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றனர். நம்முடைய மேலவைக்காண முதல் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது 12.5 லட்சம் பேர் வாக்காளர்களாக இருந்தும் வெறும் 3,03,558 வாக்குகள் (25℅) மட்டுமே பதிவாயின. விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து அன்றைய காங்கிரஸ் கட்சி மேலவைகாண தேர்தலைப் புறக்கணித்தது. தேர்தலில் காங்கிரஸ் இல்லாத நிலையில் நீதி கட்சி ஆட்சி அமைத்தது.
1920 நவம்பரில் நடைபெற்ற மேலவை தேர்தலில், 93 தொகுதிகளில் 63 தொகுதிகளில், நீதி கட்சி வெற்றி பெற்றது. சென்னை ராஜதானியில் ஆளுநராக இருந்த வெல்லிங்டன், ஆட்சி அமைக்கும்படி நீதி கட்சியின் தலைவராக இருக்க சர் பிட்டி தியாகராய செட்டியைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் அதனை ஏற்க மறுத்து தனக்கு பதிலாக சுப்புராயலு ரெட்டியை முதலமைச்சராக ஆனார்.

மேலவை, சர்.பி.ராஜகோபாலச்சாரி (ராஜாஜி அல்ல) தலைமையில் (சேர்மன்) 12.1.1921 அன்று கூடியது. அந்த அவையில் பெண்கள் இடம் பெறவில்லை என்பதால், 1.4.1921 அன்று மீண்டும் மேலவை கூடி மேலவையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பின் இந்தியாவின்  முதல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற பெண டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி 1926-ல் மேலவை உறுப்பினர் ஆனார். 1919 இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த மேலவை மீண்டும் நான்கு முறையும் நீதி கட்சி ( 1923,1926,1930,1934) தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கிடையில் விடுதலை போராட்டம் என்ற நிலையில்,மக்களுக்கு, அதிக ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டிய அவசியம் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக 1935-ல் இந்திய அரசின் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக எல்லா ராஜதானிகளிலும் 1937-ல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு சட்டமன்ற பேரவை (லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி) அமைந்தது. 

பின்,ராஜாஜி சென்னை ராஜதானியின்  முதலமைச்சரானார். அப்போதும் ராஜாஜி மேலவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 ஆம் ஆண்டில் தமிழகம் தனிமாநிலமானதற்கு பின் 63 உறுப்பினர்களை கொண்டதாக ஆனது. தமிழக சட்டமேலவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 21 புது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முறையும் வந்தது.இந்த உறுப்பினர்களின் இரண்டு இடங்கள் பட்டதாரி தொகுதியின் மூலமாகவும், இரண்டு இடங்கள் ஆசிரியர் தொகுதியின் மூலமாகவும், சட்டமன்றப் பேரவையின் மூலமாகவும், உள்ளாட்சி உறுப்பினர்கள் மூலமாகவும், தலா ஏழு உறுப்பினர்களும் மூன்று உறுப்பினர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமாகவும் இடம்பெற்றனர்.

1962-ல் மெட்ராஸ் ஆசிரியர் தொகுதியிலிருந்து பேராசிரியர் (திமுக)மற்றும் 1964,1978,1984 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை டாக்டர் எச்.வி.ஹண்டே, மேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழக மேலவை உறுப்பினர்களாக தற்போது எச்.வி.ஹண்டே ஆர்.எம். வீரப்பனும்தான் இப்போது  நம்மிடம் இருக்கின்றனர்.

தமிழக மேலவையில் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, முதல்வர் கலைஞர், ஓ.பி.இராமசாமி ரெட்டியார், மூதறிஞர் இராஜாஜி, எம்.ஜி.ஆர்., டி.பிரகாசம், பக்தவத்சலம், ஈழத்து ஆதரவாளர் இரா.ஜனார்த்தனம், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, டாக்டர் ஏ. எல். முதலியார், டாக்டர் வி. கே. ஜான், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார், சர்.பி.டி. தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர்.சி.பி.இராமசாமி அய்யர், தீரர் சத்யமூர்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன், அறிஞர் பெருமக்கள் சர்.ஏ.இராமசாமி முதலியார், இலட்சுமணசாமி முதலியார், நீதிபதி டாக்டர் பி.வி.ராஜமன்னார், மற்றும் பி.டி.ராஜன், குன்றக்குடி அடிகளார், ம.பொ.சி., ஆ.சிதம்பரநாத செட்டியார், ஜி.ஆர்.தாமோதரன் டாக்டர் ஏ.சி.செட்டியார், அண்ணாமலை அரசர், நீதிபதி நாராயணசாமி முதலியார், நடிப்பிசை புலவர் கே.ஆர்.இராமசாமி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார், சி.பி.சிற்றரசு, சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மேரி கிளப்வாலா, டி.கே.சண்முகம், அவ்வை சண்முகம், ஏ.ஆர்.தாமோதிரன், கே.பி.சுந்திராம்பாள், வேண்பாக்கம் சடகோபாச்சார்யலு, காசலு லட்சுமி நரசு செட்டி, மேலவையின் அவைக் குறிப்பில் தமிழை ஏற்றிய பி.கேசவப் பிள்ளை, கே.சிதம்பர முதலியார், சட்ட மேலவையில் தமிழில் பேசிய சேலம் பி.வி.நரசிம்ம அய்யர், சீனிவாச சாஸ்திரியார், முன்னாள் முதல்வர் பனகல் அரசர், தணிகாசலம் செட்டியார், ஆதி திராவிடத் தலைவர் எம்.சி.ராசா, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், இரட்டைமலை சீனிவாசன், டாக்டர் பி.சுப்பராயன், பொப்பிலி அரசர், அவினாசிலிங்கம் செட்டியார், டாக்டர் சிவானந்தம் போன்றோர் ஆவர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த இராம.வீரப்பன், புலவர் புலமைப்பித்தன், நாகூர் அனிபா, பேராசிரியர் சங்கரலிங்கம் மற்றும் வி.ஈசுவரமூர்த்தி, வி.வி.வி.ஆனந்தன், டி.எம்.காளியண்ணன், எச்.வி.ஹண்டே, சிவசங்கர மேத்தா போன்ற பலரும் இந்த மேலவையில் பங்காற்றியுள்ளனர். ரசிகமணி டி.கே.சி. மேலவையில் பாரதியின் பாடல்களுக்கு தடைகூடாது என வாதிட்டார்.

ராமாராவ், ராமகிருஷ்ணராஜு, பி.வி.செரியன், மாணிக்கவேலர், சி.பி.சிற்றரசு, ம.பொ.சி. போன்றோர் மேலவைத் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். மேலவைக்கு சாமானிய மக்களும் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர். சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கோலப்பன் என்பவரும், ஆதிஆந்திர  சமுதாயத்தைச் சேர்ந்த எலமந்தாவும் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ப.மாணிக்கம் மேலவை உறுப்பினராக இருந்தார். அவரது இயக்கம் மேலவையைக் கொள்கை ரீதியாக எதிர்த்தபொழுதும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மேலவையை ஒழித்தபொழுது, அதனை எதிர்த்து ப.மாணிக்கம் குரல் கொடுத்தார். படித்த பட்டதாரிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் போன்ற பல தரப்பினரின் அறிவு இந்த மேலவைக்குத் தேவை. அப்படிப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய மேலவை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையில் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
1.11.1986 அன்று தமிழக மேலவை கலைக்கப்பட்டது. இந்த ஆண்டு நம்முடைய மேலவைத் தொடங்கப்பட்டு நூறு ஆண்டு நிறைவடைகிறது. 

#KSRpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
3-08-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...