#மணாவின்_கலைஞர்_என்னும்_மனிதர்
.———————————————————
மணா மணா
நண்பர் மூத்த ஊடகவியலாளர் மணாவின் கலைஞர் என்னும் மனிதர் ; அவர் எழுத்து மொழியிலேயே செதுக்கிகிய அரிய தொகுப்பு. இந்நூலில் கலைஞரைக் காணலாம். பாராட்டுக்கள்…….
அதில் எனதுபதிவுகள்…….
2001, ஜூன் 30ஆம் தேதி ஜெயலலிதா ஆட்சியின்போது, தி.மு.க தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி, நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு 19 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் அன்றைய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறும். சம்பந்தமில்லாமல் இவரென்ன இதைப் பற்றி பேசுகின்றார் என சிலர் நினைக்கலாம். நான் செயற்பாட்டாளன், அன்றைய தினத்தில் களத்தில் இருந்தவன்.
அந்த கைதுக் காட்சியின் ஒலி நாடாவோடு சன் டி.வியின் கதவை மட்டுமல்ல, தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தின் கதவையும் தட்டியவன் அடியேன். ஜூனியர் விகடன் (17.06.2020 தேதியிட்ட) இதழில் ஓய்வுப் பெற்ற சிறைத் துறை டி.ஐ.ஜி ராமச்சந்திரனுடைய தொடரில் கலைஞர் சென்னை மத்திய சிறையில் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் சொல்லியுள்ளார். கடந்த 30.06.2001 அன்று நள்ளிரவுக்குப் பிறகு 1.15 மணிக்கு சட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு மனித உரிமைகளை எல்லம் மீறி கலைஞர் கைதுசெய்யப்பட்டார்.
ஜூலை 1, 2, 3, 4 ஆம் தேதி வரை சென்னை சிறையில் இருந்தார். அன்றைக்கு தினசரி கலைஞர் அவர்களைச் சந்திக்கச் செல்வது வாடிக்கை. அவர் கேட்கும் புத்தகங்கள் வார இதழ்கள் எடுத்துச் செல்வது என்னுடைய பொறுப்பு. சிறையில் இருந்தபோது பிரதமர் வாஜ்பாய் இது குறித்து என்ன சொன்னார், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் சென்னை மத்திய சிறையில் கலைஞரைச் சந்தித்தது, மாநில மனித உரிமை கமிஷன் தலைவரைச் சந்தித்தது, அந்தக் காலகட்டத்தில், தமிழக சிறைகளுக்குச் சென்று, சிறையில் இருந்த கழகத் தோழர்களைச் சந்தித்து விசாரித்து, அன்றைய ஜெயலலிதா அரசைக் கலைக்க 356ஐப் பயன்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கும் பிரதமர் வாஜ்பாய்க்கும் அனுப்ப வேண்டும் என்று பேராசிரியர் க.அன்பழகன் என்னிடம் எழுதச் சொன்ன கடிதங்களை ஃபேக்சில் அனுப்பிவிட்டு, சிறையில் இருந்த கலைஞரையும் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த முரசொலி மாறனையும் சந்தித்து, இதைச் சொன்னபோது அவருடைய நிலை எப்படி இருந்தது என்பதெல்லாம் இதுவரை அறியப்படாத செய்திகளே.
மகிழ்ந்து பாராட்டிய கலைஞர்
நள்ளிரவில் தலைவர் கைதுசெய்யப்பட்டபோது உலகமே கண்ணீர் வடித்தது. அந்த நேரத்தில் கொல்றாங்க, கொல்றாங்க என்ற ஒலிப்பேழையை எடுத்துக்கொண்டு சன் டிவிக்குச் சென்று அதிகாலையில் மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்றது குறித்து, ஏற்கனவே முன்பதிவுகளில் விளக்கமாக சொல்லியிருந்தேன். சன்டிவி நிருபர் சுரேஷ் இது குறித்து விரிவாக எழுதியிருந்தார். அன்று நடந்த சம்பவங்கள் பற்றி முன்பதிவுகளில் சொல்லியிருக்கின்றேன். திரும்பவும், கூறியது கூறல் வேண்டாம்.
தலைவர் கலைஞர் கைது குறித்து, மனித உரிமை ஆணையத்தின் கதவுகளைத் தட்டியது நான். 24மணி நேரத்தில் தலைவரை விடுதலைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் விரிவாக முன்பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதா ஊழல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கலைஞரும், முரசொலி மாறனும் விரும்பியபோது பேராசிரியர் மூலம் வழக்குத் தொடுக்க டெல்லி சம்பத்தும், நானும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மோகனிடம் ஆரம்பத்தில் யாரும் இதைச் சட்டப்பூர்வமாகக் கவனிக்காத நேரத்தில், டெல்லியில் அந்தப் பணிகளைச் செய்தோம். அதற்குச் சாட்சி, அன்றைய மத்திய ராஜாங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆ.ராசாவும் அவருடைய செயலாளர் அகிலன் ராமநாதனும் இன்றைக்கும் இருக்கின்றனர்.
2003-ல் வேளச்சேரியில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டில் போலீசார் நள்ளிரவில் அத்துமீறிய சம்பவம் நடந்தது. அப்போது நான், கடுமையாக காவல் துறையுடன் போராடியதற்காக தளபதி மு.க.ஸ்டாலின், நான் உள்பட 15 பேர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது. (வழக்கு எண்: SC No 234/2005). இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் கிடைத்தது. வேளச்சேரி J7 என்ற காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் இரண்டு வாரம் கையெழுத்திட்டு வந்தேன். இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆண்டிபட்டி, சைதாப்பேட்டை இடைத்தேர்தலில், ஆண்டிபட்டியில் ஜெயலலிதா போட்டியிட்டார் என்பது அநேகருக்கும் தெரியும். இரண்டு தேர்தலிலும் நான் ஆற்றிய பணிகளை கலைஞரும், பத்திரிகைகளும் பாராட்டியதுண்டு. அந்த நேரத்தில் கலைஞர் என்னிடம் உங்கள் ஊர் கோவில்பட்டியில் கழகக் கட்சிக்காரர்களுக்கு உணர்ச்சியூட்டும் வகையில் 26, 27 ஆகஸ்டு 1950-ல் நான் உரையாற்றிய பேச்சை அச்சிட்டு வெளியிடுப்பா. எல்லாரும் ஜெயலலிதாவைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள் என்று கூறினார். கலைஞர் பேச்சை 14 பக்கத்துக்கு நல்ல கட்டமைப்போடு, இளைஞர் குரல் அன்றுபோல் என்றும் ஒலித்திட என்ற தலைப்பில் தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையோடு, அன்று வெளியிடப்பட்டது. மேலும் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கலைஞரின் அறிவுறுத்தலின்படி வழங்கப்பட்டது.
கலைஞர் கைது குறித்து The Midnight Arrest என்ற புத்தகம், ஆங்கிலப் பத்திரிக்கை செய்திகளைத் திரட்டி என்சுய முயற்சியில் தயாரிக்கப்பட்டது. அதைத் தலைவர் கலைஞரிடம் சொன்னபோது, தலைமைக் கழக வெளியீடாக அதை வெளியிட சொன்னார். குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், ஆகில இந்தியத் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த பத்திரிக்கை ஆசிரியர்கள் எனப் பலருக்கும் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டது. சுமார் ஆயிரம் பிரதிகள் அனுப்பப்பட்டு, பெற்றவர்கள் எல்லாம் சாரை சாரையாகப் பதில் மடல்களை எழுதியது குறித்து, கலைஞர் மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது, நீ செய்த காரியம் நல்ல விதப் பயனை அளித்துள்ளது என கலைஞர் என்னிடம் சொன்னார்.
அரசியல் வரலாற்றில் ஒரு பிழை
தலைவர் கலைஞர் அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேட்டிக் கொடுக்கும்பொழுது அவரது இருபுறமும் பேராசிரியரும் முரசொலிமாறனும் அமர்ந்திருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் கலைஞர் நெகிழ்ந்து கண்ணீர் விட்டபோது பேராசிரியர் ஆசுவாசப்படுத்தினார். ஜூலை 4 ஆம் தேதியன்று கலைஞரை வெளியே விட முடியுமா? முடியாதா? என்று மிரட்டல் பாணியில் டெல்லியில் இருந்து உத்தரவுகள் வர கொஞ்சம் இறங்கி வந்தார் ஜெயலலிதா. அன்று மதியம் 3 மணியளவில் கலைஞரை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் உள்துறைச் செயலாளர் மூலமாக கோர்ட்டிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து உத்தரவு வாங்கப்பட்டு சென்னை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது. வீல் சேரில் உட்கார வைக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்தார் தலைவர் கலைஞர். நேராக தனது வீட்டிற்குச் சென்ற கலைஞர் குளித்துவிட்டு, ஒரு மணி நேரத்திலேயே அறிவாலயம் வந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொஞ்சம் சந்தோஷம், சோகம், பரிவு, இரக்கம், உருக்கம் என்று எல்லாமுமாக சேர்ந்து இருந்தது அந்த நேரடி நிகழ்வு. அப்படியென்ன உங்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் பகை? என்று ஒரு நிருபர் கேட்டபோது, என்ன பகை? நானென்ன அவருக்கு வளர்ப்பு மகனா? என்று அவருக்கே உரித்தான பாணியில் திருப்பியடித்தார் கலைஞர். அதேபோல் தன்னை இழுத்துச் சென்றதைச் சொன்னபோது மட்டும் ஒரு இடத்தில் தொண்டை இழுத்துகொண்டு அழுகையாக மாறும் சூழல் வந்தபோது, அருகில் இருந்த பேராசிரியர் அவரது கையைப் பிடித்து ஆறுதல்படுத்த அரங்கத்தில் இருந்த பத்திரிக்கையாளர்களையே உணர்ச்சிவசப்பட வைத்தது அந்த காட்சி.
கண் கலங்கிய கலைஞர்!
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் டிசம்பர் 10, 2009-ல் தி.மு.க வெற்றி பெற்றது. இதற்கிடையே நடக்கயிருக்கின்ற 2011 சட்டமன்ற பொதுதேர்தல் பணிகள் தீவிரமடைந்ததால், திரும்பவும் டெசோ, ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மேலும் தாமதமானது.
2011 பொதுத்தேர்தலில் ஆட்சியிலிருந்த தி.மு.க தோல்விக்குப் பின், எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது. இப்படியான சூழலில் டெசோவைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க கலைஞர் முடிவெடுத்தார். அதற்குமுன் முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களை வெளிப்படுத்தும் சி.டி.க்களை கலைஞரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அதைப் பார்த்த கலைஞர், பார்த்தாலே வேதனையாக இருக்கிறது. நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. இதுகுறித்து என்னிடம் டெல்லிக்காரங்க தவறாகச் சொல்லிவிட்டார்கள். எவ்வளவு அகோரமாக இருக்கிறது. ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.
உடனே டெசோ ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மேல் நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டும் என்றார். தலைவர் கலைஞரைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பும்போது கொஞ்சம் இருய்யா, டெசோ முன்னெடுப்பையொட்டி தம்பி ராதாகிருஷ்ணன் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்று ஒரு பேப்பரில் எழுதிக் கையெழுத்திட்டு 15.12.2011 அன்று என்னிடம் கொடுத்தார். அதை, அப்படியே வாங்கி மடித்து சட்டைப்பையில் வைத்தேன். என்னப்பா, இந்த தாள் முக்கியமானது. உனக்கான அடையாளம், உன் வரலாற்றுப் பொறுப்பைச் சொல்லும் என்று கலைஞர் சொன்னார். அப்போது, என்னை அறியாமலேயே நெகிழ்ந்து போய்விட்டேன். இன்றைக்குத் தலைவர் இல்லை, அவர் எழுதிக் கையொப்பமிட்டுத் தந்த ஆவணம் இன்றும் என்னை அடையாளப்படுத்துகிறது. இதெல்லாம் சாதாரண விடயமல்ல. இதைச் சிலர் துச்சமாகவும், இழிவாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது தொடர்பான செயல்பாடுகளும், பணியாற்றிக் கடந்துவந்த பாதைகளும் சரித்திரத்தில் இருக்கும். அது புரிந்தவர்களுக்கு புரியும்.
இதற்கிடையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகள் வந்துவிட்டன. அந்தத் தேர்தலில் மு.க.அழகிரி, ஆவுடையப்பன், கருப்பசாமி பாண்டியன், ச.தங்கவேலு ஆகியோருடன் அடியேனும் பொறுப்பாளராக இருந்து பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். தேர்தல் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே, 30 ஆண்டுகளாக நான் போராடி வருகிற நதிநீர் இணைப்பு வழக்கில் 2012, பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பு வழங்கும் நாளன்று டெல்லிக்குச் சென்று வருகிறேன் என்று தலைவர் கலைஞரிடம் தொலைபேசியில் சொன்னதற்கு, அங்கு சென்றால் 2, 3 நாட்கள் ஆகிவிடுமே. இங்கு நீங்கள் இல்லையென்றால், பணிகள் சரியாக நடக்காது என்று டெல்லி செல்வதற்கு அனுமதி அளிக்கமறுத்துவிட்டனர். அந்த வழக்கில் தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தோடு மகிழ்ச்சியான தீர்ப்பு வந்தது. சங்கரன்கோவில் தேர்தல் பணியில் இருக்கும்போது, அதை கலைஞரிடம் கைபேசியில் சொன்னபோது, மகிழ்ச்சியா, வாழ்த்துக்கள்யா என்றார்.
•••••••••••
2) முல்லைப் பெரியாறும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும்
முல்லைப் பெரியாறு பிரச்சினை, 2011 காலகட்டங்களில் கலைஞர் ஆட்சியில் இருந்தபோதும், 2011 தேர்தலுக்குப் பிறகும் கடுமையான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தவண்ணம் இருந்தன. மத்தியில் இருந்த மன்மோகன்சிங் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், புது அணை கட்ட, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தலாம் என்று கேரள அரசுக்கு அனுமதி வழங்கினார். இதனால் தமிழகத்தில் மன்மோகன்சிங்மீது கடுமையன எதிர்வினைகள் எழுந்தன.
அப்போது தலைவர் கலைஞர் அதைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது மட்டுமில்லாமல், அதை எதிர்த்து மதுரையிலேயே மாபெரும் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டை அன்றைய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கவனித்தார். அந்த நிகழ்வில் என்னை எழுதச் சொன்ன முல்லைப் பெரியாறு நூலையும் வெளியிட, கலைஞர் திட்டமிட்டிருந்தார். ஒருநாள் கலைஞர் என்னை அழைத்து, நதிநீர் பிரச்சனைகளை நன்கு அறிந்தவன் நீ, அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்று போராடி வருகிறவன். அதனால், முல்லைப் பெரியாறு குறித்து தமிழ்நாட்டின் நியாயங்களையும், தி.மு.க எடுத்த நடவடிக்கைகளையும் குறித்து உடனே எழுதி நூலாக வெளியிட வேண்டும் என்று கூறினார்.
அதற்கு தளபதியிடம் இருந்து அணிந்துரை வாங்கிச் சேர்த்துக்கொள் என்றார். முல்லைப் பெரியாறு பற்றி எனக்கு நன்றாகத் தெரிந்ததால் 3, 4 நாட்களிலேயே எழுதினேன். கலைஞரும் முல்லைப் பெரியாறு என்ற அந்த நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. முதல் நூலை தலைவரிடம் ஒப்படைக்கும்போது, எள் என்றால் எண்ணெய்யாக கொண்டு வந்து நீட்டுகிறாய், சரியான உழைப்பாளித்தான்பா நீ என்று பல அன்பு வார்த்தைகளைக் கூறிப் பாராட்டியது இன்றும் மனதில் இருக்கிறது.
இந்த சமயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலைவர் கலைஞரை அழைத்து, முல்லைப் பெரியாறு பிரச்சனையைக் கவனிக்கிறேன், அவசரப்பட வேண்டாம். முல்லைப் பெரியாறு விஷயம் தமிழகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துள்ளேன். தமிழகத்துக்குப் பாதகமில்லாமல் கவனிக்கிறேன் என்று பேசினார். அதன்பின், மதுரை கண்டனக் கூட்டத்தை, கலைஞர் ரத்து செய்தார்.
No comments:
Post a Comment