#கோணங்கி, #அயோனிஜவுடன்_சில_பெண்கள்
———————————————————
முடிவில்லாத கேன்வாஸில் புழுக்கள் கூடுகட்டும் வேளையில், நிமிடத்திற்கொருமுறை மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் சிறகு முளைத்த பூச்சியாக மாறி, உடனே அந்த நெடிய இருண்ட இரவில் நீளமான செங்கூத்தர் தெருவுக்குள் பறந்து சென்று, திருட்டுத்தனமாக அம்மாவின் ஜன்னலை எட்டிப்பார்த்தது பூச்சி. கர்ப்பவதியான அம்மா தறிக்குழியில் பதுங்கி, பட்டுநூலின் அறுந்த முனைகளை எச்சில் தொட்டு இழைமுடிந்துக்கொண்டிருந்தாள். கர்ப்பத்தில் சுருண்ட பூச்சி கண்மூடிகளைத் திறந்து பார்த்தது. லட்சம்நூலினால் பின்னப்பட்ட தாய் வயிற்றில் தன் பிஞ்சு விரல்களால் மெதுவான சல்லாவை நெய்கிறாள் சிறகு முளைத்த குழந்தை மாயா. ஜன்னல் வழி நீட்டிய பூச்சியின் பட்டு இழைகள் கர்ப்பத்தில் படர்கிறது.
குருதியும் வியர்வையும் கலந்த சிவப்புநூல்பாதைகளில் வளைந்து பரவும் பஞ்சின் நெருப்பு வந்து வந்து கேட்கிறது. தீக்குள் யார்யாரோ நகர்ந்துபோகிறார்கள். எரியும் நூல்பாதையில் எல்லோரும் தணியாத தாகத்தால் விலங்குகளுடன் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். விலங்குகள் குலுங்கும் கப்பலுக்கு மேல் வெண்பஞ்சு மிதந்து மிதந்து தவிக்கிறது. காய்ந்த பருத்தி வெடித்து உள்ளிருந்த நெசவாளர் கூட்டமாய் வருகிறார்கள். தீப்பந்தங்களுடன். செங்கூந்தர் தெருவுக்குள் துணுக்குற வைக்கும் இரும்புத் தொப்பிகள் அசையும். கோலியப் பெண்கள் கருவில் வளரும் சிசுக்களுக்கு தறியின் பாடலைப் பாடுகிறார்கள். முரட்டுக் காடாநூல் நெறுநெறுவென்று நெரிந்து கோபத்தில் உறுமும். தக்களிகள் சுழன்று சுழன்று சுழிக்காற்று எங்கும் பரவும். நெசவாளர் தெருப் புழுதியில் கேட்கும் தறியின் ஓசை. அலைவுறும் பஞ்சின் தவிப்பிலிருந்தே மணல்பூச்சி உயிரையே அர்ப்பணம் செய்து உருகிக் கரைந்து நூலாகியிருக்க வேண்டும். பஞ்சின் இழைகள் அதிர்ந்து அசைக்கும் நுண்ணிய இடைவெளிகளில் பிரபஞ்சத்தின் அலைகள் வருகின்றன. கைச்சிட்டமே பாணமென சுற்றிச் சுற்றி நெசவாளர் உயிர்சுழற்சி பெறுகிறது. கொஞ்சம்
கொஞ்சமாக மெல்லிய லேஸ் வலையைக் கட்டிவரும் மணல்பூச்சி. வலையின் ஒவ்வொரு துளையில் தோன்றும் கிழிசல்கள். கந்து கந்தலாய் ஆகிவரும் அந்த எளிய நேசத்திலான வலையை வெகு நிதானமாக அந்த நெசவாளி சரிசெய்துகொண்டிருக்கிறார். பகைமுகங்கள் எட்டிப் பார்க்கும். அதன் கிழிசலில் படமறுத்த பிடிக்க முடியாத விண்மீன். அதன் ஒளி, வலைமீது வந்து பரவி நெசவாளியின் விரலை நனைக்கிறது. அவர் விரல்வழி கசியும் உதிரத்தில் எரிகிறது பஞ்சின் மென்மை. முடிந்தவரை மெலிந்துபோன தோற்றத்துடன் விசித்திரமான கச்சை அணிந்திருக்கிறார். அவர் சுடர்விடும் கண்கள் நூல்பாதையில் அசையும். கைத்தடி தரையில் தட்டும். திறக்கப்படாத கதவுகளில் தட்டுகிறது. எல்லாக் கதவுகளும் இறுக மூடியிருக்கும்.
அவர் கண்பட்ட இடமெல்லாம் பாதைகள் நிறம் மாறின. நூல் பாதையில் நகர்ந்து செல்லும் கூட்டத்துடன் கைத்தடியின் சப்தம். அவர் ஓவியத்தை தீட்டத் தொடங்கிய சிறுமிகள் கண்களில் வரையும் பென்சில் கலர் திரவ அசைவில் மயங்கும்.
- #கோணங்கி, அயோனிஜவுடன் சில பெண்கள் சிறுகதை தொகுப்பில் வரும் தறிவீடு சிறுகதையில் முதல் நான்கு வரிகள்.
(இந்தப் தொகுப்பில் பெண்கள் குறித்து அவர் எழுதிய 22 கதைகள். தொட்ட இடமெல்லாம் கலையின் ஷாக்…)
வெளியிடும்: #அடையாளம் #சாதிக்.
#ksrpost
5-7-2021.
No comments:
Post a Comment