Thursday, May 28, 2026

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான தமிழக அரசு,

 தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான தமிழக அரசு, புதன்கிழமை (மே 13, 2026) அன்று திரு. விஜய் நாராயணனை தனது தலைமை வழக்கறிஞராக நியமித்தது பெருத்த ஏமாற்றமே...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில், ஆகஸ்ட் 2017 முதல் மே 2021 வரை முதன்முறையாக மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராக ஏற்கனவே பணியாற்றிய திரு.விஜய் நாராயணன் காலத்தில் பல சம்பவங்கள் நடந்தது. நாட்டின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான கே.கே. வேணுகோபாலின் மருமகனும், நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பிற்காகப் புகழப்பட்ட பழம்பெரும் வழக்கறிஞரான எம்.கே. நம்பியாரின் பேரனுமான இவர் இரண்டாவது முறை இந்த பொறுப்புக்கு எப்படி வந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவரது தாய் வழி தாத்தாவான திரு. கே எம் பணிக்கர், நீதி அரசர் பசல் அலி தலைமையிலான மொழிவழிப் பிரிவினை குழுவின் உறுப்பினராக இருந்து தமிழகத்தை துண்டாடியவராவார். இந்த சர்தார் கே.எம். பணிக்கர், சீனா, பிரான்ஸ் மற்றும் எகிப்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியதோடு,மாவோவின் உற்ற நண்பராகவும் இருந்தார் என்பது என்கிறது கேரளச் சரித்திரம். தேவிகுளம்- பீர்மேடு- உடுமஞ்சோலை- நெடுமங்காடு- நெய்யாற்றின்கரை- காட்டாக்கடை- பாலக்காடு- சித்தூர்- சுல்தான்பத்தேரி- கல்பெற்றா- மானந்தவாடி-நிலம்பூரின் ஒரு பகுதி-கண்ணூர் ஜில்லாவில் பெரும்பாலான பகுதிகள், காசர்கோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் என அன்றைக்கு தமிழகத்தோடு இருந்த 1400 சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவோடு இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர் நம்முடைய தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனின் தாய் வழி தாத்தாவான திரு.கே.எம்.பணிக்கர். ஈ வே ராஅவர்களின் உற்ற நண்பரான இந்த கே எம் பணிக்கர், அன்றைக்கு திருச்சியில் இருந்த ரத்தினவேல் தேவர் மாளிகைக்கு நேரடியாகவே வந்து ,திரு. ஈ வே ரா அவர்களை சந்தித்து, தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு இல்லை என்று சொன்னால்,கேரளா தலையில்லாத முண்டமாகிவிடும் தலைவரே, எப்படியாவது தமிழக முதல்வர் காமராஜரிடம் சொல்லி தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே, மேற்கண்ட பகுதிகள் கேரளாவிற்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது. பழைய சென்னை ராஜதானியில் ஒரு அங்கமாக இருந்த காசர்கோட்டை பூர்வீகமாக கொண்ட இந்த விஜய் நாராயணன், தமிழகத்திற்கும்- கேரளாவிற்குமிடையே நீண்ட காலமாக நீடித்துக் கொண்டிருக்கும்,,, 1-முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை 2-நெய்யாற்றின் கரை இடது கரை கால்வாய் பிரச்சனை 3-செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை 4-பாறசாலை முதல் தாளூர் வரை இருக்கும் 822 கிலோமீட்டர் தொலைவிலான, தமிழக கேரள எல்லையில்,எல்லை தொடர்பாக நீடிக்கும் சர்ச்சைகள்... 5-நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள தாளூர் கேரள அரசு பேருந்து நிலையம் தொடர்பாக வெடித்திருக்கும் இனப்பிரச்சனை... 6-கேரள மாநில அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி முடித்திருக்கும், எல்லையோரங்களில் உள்ள டிஜிட்டல் ரீ சர்வே பிரச்சனை... 7-பரம்பிக்குளம்-பெருவாரிப்பள்ளம்- தூணக்கடவு ஆகிய மூன்று அணைகளில் நீடித்துவரும் கேரளத்தின் ஆதிக்கம்... 8-காவிரி நடுவர் என்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் கேரளாவிற்கு கொடுக்க வேண்டிய 30 டிஎம்சி தண்ணீரை பங்கு பிரிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாவா... 9-கனிம வளங்களை தமிழகத்திலிருந்து பல லட்சம் மெட்ரிக் டன் எடையில் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படும் பிரச்சினை... 10-தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகள்- கோழி கழிவுகளை கேரளம் கொட்டுவதில் இடையறாது நடக்கும் பிரச்சனை... 11-மோயாறு பிரச்சினை 12-பாண்டியாறு புன்னம்புழா திட்டத்திற்கு கேரளா போடும் தொடர் முட்டுக்கட்டை... என பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் நிலை….

No comments:

Post a Comment

MSY 15