Friday, September 30, 2016

கேரளத்தின் சண்டித்தனம்:பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினை

பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினை குறித்து இன்றைய தினமணியில் (30.9.2016) தலையங்க பக்கத்தில்  "கேரளத்தின் சண்டித்தனம்" என்ற தலைப்பில் வந்துள்ள எனது பத்தி,

கேரளத்தின் சண்டித்தனம்


- வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

நதிநீர் ஆதாரங்களில் அண்டை மாநிலங்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டன. தினமும் ஒவ்வொரு அணையிலும், நதிநீரிலும் கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் தமிழகத்துக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. தற்போது பரம்பிக்குளம் அணைப் பிரச்சினையில் கேரளா மூக்கை நுழைத்துள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு - பாசனத் (பி.ஏ.பி.) திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள 6 ஆறுகளையும் சமவெளிகளையும் இணைத்து 9 அணைக்கட்டுகள் மூலமாக தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் நீர் ஆதாரம் பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி. யும், கேரளத்திற்கு 19.5 டி.எம்.சி. யும் நீர் பகிர்மானம் செய்துகொள்ளள ஒப்பந்தமும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கையெழுத்தானது.

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டுத் திட்டமாக 32 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல துணைத்திட்டங்களையும் கொண்டதாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் 1958 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பெரியாறு, சாலக்குடி, மற்றும் பாரதபுழா ஆறுகளின் துணை ஆறுகளை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோலையாற்றின் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரி பள்ளம், தூணக்கடவு மற்றும் நீராறு ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத்திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது. இது தவிர ஆழியாற்றில் ஒரு நீர்த்தேக்கமும் பாலாறு நதியின் திருமூர்த்தி நீர்த்தேக்கமும் கட்டப்பட்டுள்ளன. இவ்வணைகள் சுரங்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. சோலையாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு, பரம்பிக்குளம் அணை, மேல் நீராறு மற்றும் கீழ் நீராறு அணைகள், காண்டூர் கால்வாய், ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு, நவமலை மலைக்குடைவு, திருமூர்த்தி அணை, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், சேது மடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய பகுதிகள் ஆகும்.  பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் பயன்பெறுகின்றன.

இத்திட்டங்களில் உள்ள அணைகளைப் பராமரிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தமிழகம் செய்துகொள்ள வேண்டும். பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய மூன்று அணைகள் தமிழக- கேரள எல்லையில் கேரளப் பகுதிக்குள் அமைந்துள்ளன. ஒப்பந்தத்தின்படி இந்த மூன்று அணைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, நீர்மேலாண்மை போன்றவற்றை தமிழகமே செய்துவருகிறது.  அணைகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள் பயன்படுத்தும் பகுதிள் போன்றவற்றுக்கு தமிழக அரசு சார்பில் குத்தகைப் பணம் செலுத்தப்படுகிறது. மேலும் கேரளாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் உள்ள அணைகள் அனைத்திலும் ரூ. 40 கோடி செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை பி.ஏ.பி. அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.  இந்நிலையில், பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட தமிழகப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் 10.9.2016 அன்று பரம்பிக்குளம் பகுதிக்குச் சென்றனர். முதலில் பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகளைப் பார்வையிட்ட குழுவினர், பின்னர் பரம்பிக்குளம் அணையைப் பார்வையிடச் சென்றனர்.  வழியில் தமிழக அதிகாரிகள் சென்ற வாகனங்களை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  அணைகளைப் பார்வையிட தங்களிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல மணிநேரம் கேரள மாவட்ட வனஅலுவலரிடம் விளக்கமளித்த தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், செய்வது அறியாது நடுவழியில் நின்றனர்.

தமிழக அதிகாரிகள் தாங்கள் அணையைப் பார்வையிட வேண்டும் என பலமுறை தெரிவித்தும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை காத்திருக்கச் செய்து, பரம்பிக்குளத்தை விட்டு வெளியேறுமாறு கேரள வனத்துறையினர் அடாவடியாகத் தெரிவித்ததால், தமிழக அதிகாரிகள் திரும்பிவிட்டனர்.

ஏற்கெனவே பலமுறை தமிழக அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அணை பராமரிப்புப் பணிளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கும் கேரள வனத்துறையினர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். பரம்பிக்குளம் அணைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தமிழக பொதுப் பணித் துறையின் சோதனைச் சாவடியையும் கேரள வனத்துறையினர் அப்புறப்படுத்திவிட்டனர்.

ஒப்பந்தப்படி, பி.ஏ.பி. அணைகளைப் பராமரிக்கவும், பார்வையிடவும், பாதுகாக்கவும் தமிழகத்துக்கு உரிமை உள்ளது. மேலும், அணைப் பகுதி தவிர தமிழக பொதுப் பணித் துறை பயன்படுத்தி வரும் இடங்களுக்கு தமிழக அரசு குத்தகை செலுத்திவரும் நிலையிலும், கேரள வனத் துறையினர் கடந்த ஓராண்டாக அதிக இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை ஒவ்வொரு வருடமும் சிக்கலாகி, கடந்த ஓராண்டாக மேலும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை அணைப் பகுதிகளுக்கு செல்லவிடாமல் கேரள வனத்துறையினர் தடுத்து வருகின்றனர்.  முல்லைப் பெரியாறு, பம்பாறு, சிறுவாணி அடுத்து, இப்போது கேரளா பி.ஏ.பி. யிலும் பிரச்சினையில் இறங்கிவிட்டது.

இப்படி தமிழகம் நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது. உண்மையான நிலையை சற்று ஆழமாக கவனித்தால் எந்த அளவு தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரியவில்லை, மக்களின் பிரதிநிதிகளுக்கும் புரிதல் இல்லை. இப்படித் தொடர்ந்து நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டால், தமிழகத்தின் எதிர்காலம் சூன்யமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

கேரள அரசால் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி நயினாறு, உள்ளாறு, செண்பகவல்லி அணை உடைக்கப்பட்டது, அச்சன்கோவில்-பம்பை தமிழக வைப்பாறோடு இணைக்க மத்திய அரசு திட்டமிட்டும் நான் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் கேரள அரசு மதிக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை கட்டுவதும் கேரள அரசால் 50 ஆண்டுகள் தள்ளிப் போய்விட்டன. முல்லைப் பெரியாறு சிக்கல் அனைவரும் அறிந்தது. சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, இப்போது ஆழியாறு-பரம்பிக்குளம் என கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகளான கிட்டத்தட்ட 30 திட்டங்களை முடக்க நினைக்கின்றது. மத்திய அரசும் பாராமுகமாக இருப்பது வேதனையும் தருகின்றது.

கர்நாடகமும் காவிரி, ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வரவேண்டிய மழை வெள்ள நீரையும் தடுக்கின்றது. பெண்ணையாற்றில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகம் மறுக்கின்றது. ஆந்திரமும் பாலாறு, பொன்னியாறு ஆற்றுச் சிக்கல்களிலும், பழவேற்காடு நீர்நிலையிலும் தமிழகத்தை திட்டமிட்டு சட்டத்துக்குப் புறம்பாக வாட்டுகிறது. இதற்கெல்லாம் எப்போது தீர்வு?

நதி ஆதாரங்கள் என்பது இயற்கையின் அருட்கொடை. இது அனைவருக்கும் பாத்தியப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 592 டி.எம்.சி.  அண்டை மாநிலங்கள் மூலமாக வரும் கிடைக்கும் நீரின் அளவு 261 டி.எம்.சி.  மொத்தம் தமிழகத்தின் 853 டி.எம்.சி. ஆகும். தமிழ்நாட்டில் 89 பெரிய, சிறிய அணைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 238.58 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இந்த அணைகளில் தேக்க முடியும். அதாவது கிடைக்கும் தண்ணீரில் நான்கில் ஒரு பங்கு தண்ணீரை மட்டும்தான் சேமிக்கக்கூடிய வசதிகள் உள்ளன. இதனால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுவிடுகின்றது. நாடு விடுதலைப் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாசனம் பெறும் நிலங்கள் 52 சதவீதம்தான். மீதி சற்று ஏறக்குறைய சரிபாதி அளவு வானம் பார்த்த விளை பூமிகளாகும். மழைக் காலங்களை நம்பியே விவசாயம் நடக்கின்றது. தமிழ்நாடு திட்டக்குழுவில் 15வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையின் படி பாசனப் பரப்புளவு (லட்சம் ஹெக்டேரில்)

பாசன முறை          1950-51        2000-01        2010-11
கால்வாய்                    7.88                8.01             7.47
ஏரிகள்                           5.65                5.37             5.33
குழாய்க் கிணறு        4.26              14.49           16.23

மேற்சொன்ன விவரங்களின்படி மொத்த பாசன நிலப்பரப்பில் ஆறுகள், கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலத்தின் பரப்பளவு 1950-51 ஆண்டுகளில் 42.48 சதவீதமாக இருந்தது. 2010-11ல் 25.6 சதவீதமாக குறைந்துவிட்டது. மேலும் குறைந்துகொண்டே வருகின்றது.

ஏரிகள், கால்வாய்கள், குழாய்க் கிணறுகள் மூலம் விளைநிலங்களினுடைய பரப்புகளும் நீர்ப் பற்றாக்குறையால் குறைந்து வருகின்றன. ஒரு பக்கம் கடன்தொல்லையாலும் விவசாயிகள் நிலங்களை விற்றுவிடுகின்றனர். 19 லட்சத்து குழாய்க் கிணறுகள் நீர் ஆதாரமாக இருந்தும் சரியான நிலத்தடி நீர் கிடைப்பதும் இல்லை. இப்படியான நிலையில் நதிநீர் ஆதாரங்களும் தமிழக விவசாயிகளை ரணப்படுத்துகின்றது. இந்த சூழலில் விவசாயி எங்கே போவான்? நீர் ஆதாரங்களும் இல்லை. அண்டை மாநிலங்களால் நம்முடைய உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. மழைநீரை சேமிக்க நீர்நிலைகளோ, தடுப்பணைகளோ கூட திட்டமிட்டும் கட்டப்படாமல் காலம் தாழ்த்தப்படுகின்றது. தமிழ்நாட்டில் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டிய பாசனத் திட்டங்களின் மதிப்பு ரூ. 8702 கோடி. இதனால் 1.47 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் என்று கணக்கிட்டும் இவை யாவும் அறிக்கைகளாகவே உள்ளன. நடைமுறைக்கு வரவில்லை.

பிரதமர் மோடி கூட்டுறவு சமஷ்டி முறை என்ற (Co-operative Federalism) என நேற்று (10.9.2016) பேசியுள்ளார். அதற்கு பொருள் என்ன? இப்படி கேரளாவும், கர்நாடகாவும், ஆந்திரமும் தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரங்களை திட்டமிட்டு முடக்கி தடுப்பதுதான் கூட்டுறவு சமஷ்டி முறையா? ஹெல்சிங் விதிகளின்படி கடைமடை பகுதிதான் நீர் ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்தவேண்டும் என்று இருந்தும் தொடர்ந்தும் தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்கள் கபளீகரம் செய்வது நியாயம்தானா?

கேரளாவின் நொண்டியாட்டத்தை பல ஆண்டுகளாக அணைகளில் காட்டி வருகின்றது.  தமிழகத்திடமிருந்து அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு கடவுளின் தேசம் என்று சொல்லிக் கொள்ளும் கேரளம் வம்புத்தனமாக சண்டித்தனம் செய்வது முறைதானா?


காவிரி..

"இப்பூவுலகம் பொது, தனியன்று"   --கம்பன்
பூவுலகமே பொது என்றால் ஓடும் நதிகள் மட்டும் ஒரு நாட்டிற்கோ, ஒரு மாநிலத்திற்கோ எப்படிச் சொந்தமாக இருக்க முடியும்? 

இக்கருத்தை ஒட்டி இரண்டு செய்திகள் தற்போது உலா வருகின்றன. உச்ச நீதிமன்றம்,  தனது தீர்ப்பில்  தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய  காவிரி நீரின்அளவை உரிய முறையில் ஆய்ந்து, கணக்கிட்டு கர்நாடக அரசு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இரண்டு தீரப்புகளிலும், நடுவண் அரசு உடனடியாக, இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.                   

கர்நாடக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடுவண் அரசின் அமைச்சர் சதானந்த கவுடா கலந்து கொண்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவா கவுடா 
தன் தகுதிக்கு கீழ் இறங்கி கூப்பாடு போடுகிறார் 
 காங்கிரசும், பாஜக-வும் தமிழ்நாட்டிற்கு எதிராகக் கைகோத்து நிற்கின்றனர். ஆகா, தேசியம் திக்கு முக்காடி நிற்கும் அழகே அழகு! 

மோடிக்கும் சோனியாவுக்கும் தமிழ்நாடு எனும் ஒரு  மாநிலம் இந்தியாவுக்குள் ஒட்டிக் கொண்டு இருப்பதாக நினைக்கவில்லை. அவர்கள் இருவருக்கும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதே முதன்மை நோக்கமாகும். 
இந்திய ஒருமைப்பாடாவது? மண்ணாங்கட்டியாவது?

உரி தாக்குதலுக்குப் பதில் கொடுப்பதற்காக பாகிஸ்தானுடன்  1960 இல் நேரு போட்ட நதி நீர் ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்வோம் என்று பிரதமர் அச்சுறுத்துகிறார். ஆனால் தமிழ்நாடு , கர்நாடக மாநிலங்களிடையே காவிரி நதி நீர் தொடர்பாகக் காணப்படும் பதட்டநிலைக் கண்டு மோடி சிறிதும் கவலைக் கொள்ளவில்லை.  

சும்மாவா சொன்னார்கள் , கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானா என்று ...

Thursday, September 29, 2016

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி

I
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி
........................................................
தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்றழைக்கப்படும் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் புதுப்பொலிவு பெற புத்துயிர் ஊட்ட வேண்டும் என கும்பகோணம் பகுதி மக்களும், இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
1854-ல் கும்பகோணத்தில் ஒரு மாகாண பள்ளியாக நிறுவப்பட்டு, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற வில்லியம் ஆர்சர் போர்ட்டர் மற்றும் டி.கோபால்ராவ் ஆகிய கல்வியாளர்களின் முயற்சியால் 1867-ல் அரசினர் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது இக்கல்லூரி.

 இங்கிலாந்து நாட்டில் சார், கேம்பிரிட்ஜ் நகரம் கேம் நதிக்கரையில் நதிக்கரையில் எப்படி கேம்பிரிட்ஜ் அமைந்துள்ளதோ, அதேபோல கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டது.

கேம்பிரிட்ஜ் போன்று கும்பகோணம் கல்லூரியின் கட்டிட முகப்பும் வடிவமைக்கப்பட்டது. கேம் நதிக்கரையில் பாலம் உள்ளதுபோல காவிரியிலும் பாலமும், போட் கிளப்பும் அமைக்கப்பட்டது. இரு கல்லூரிகளின் கட்டுமான வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்விதமாக அமைக்கப்பட்டது. அதனால்தான் தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என இக்கல்லூரி அழைக்கப்படுகிறது.

இத்தகைய புகழ்பெற்ற கல்லூரியில் பயின்றவர்களில் வெள்ளி நாக்கு (சில்வர் டங்) என்றழைக்கப்படும் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, பி.எஸ்.சிவசாமி ஐயர், கணித மேதை சீனிவாச ராமானுஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் இக்கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் சென்னை மாநில கல்லூரி, ராணிமேரி கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, கும்பகோணம் அரசு கல்லூரி, திருநெல்வேலி இந்து கல்லூரி ஆகியவையே முதன் முதலாக அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட கல்லூரிகள்.

கும்பகோணத்தில் ஆடவ ருக்கென தொடங்கப்பட்ட இக்கல்லூரியில், கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை, பட்ட ஆராய்ச்சிப் படிப்புகளில் தற்போது 4ஆயிரம்மாணவ,மாணவிகள்
படிக்கிறனர்.
கும்பகோணம் கல்லூரியின் முகப்பு இங்கிலாந்து- இந்தியா பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் உள்ள மரத்தூண்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கட்டிடத்தின் அஸ்திவாரம் நன்றாக உள்ளது. மேல்பகுதி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனைப் பராமரித்தால் மீண்டும் புதுப்பொலிவு பெறும்.

இக்கல்லூரியில் படித்தவர்கள் பல்வேறு நாடுகளில் விஞ்ஞானியாகவும், கல்வியாளர் களாகவும் உள்ளனர். இக்கல்லூரி தமிழகத்தில் தொடக்க காலத்தில் இருந்த 5 கல்லூரிகளில் ஒன்றாகும்.

மகாமகத்தின்போது காவிரி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையடுத்து, இக்கல்லூரியின் கட்டிடங்கள் பொதுமக்கள் பார்வையில் படும் விதமாக உள்ளன. இந்த கல்லூரியின் பாரம்பரிய கட்டிடங்களைச் சீரமைக்க வேண்டும் என்பதுதான் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.

தமிழனின் பழந்தொன்மை கீழடி

தமிழனின் பழந்தொன்மை கீழடி
=============

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்கக்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாச்சார நகரம் மதுரை. இந்நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி ஆகழராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. எழுத்துக்கள் கூடிய சுடுமண் பானைகளும், இரண்டாவது கட்டமாக 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடந்த ஆய்வில் 59 குழிகளில் 3500 அரிய வகை பண்டைய காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள் கிடைத்துள்ளன. யானை தந்தத்திலான தாயக் கட்டைகள், சதுரக் கட்டைகள், பெண்கள் காதனிகள், மான் கொம்பிலான கத்தி, மேலும் எழுத்துக்கள் கொண்ட 39 சுடுமண் பானைகள் கிடைத்துள்ளன. பிராகிரிதம் என்ற பிரம்மி எழுத்துக்களிலான 71 பனை ஓடுகளும் கிடைத்துள்ளன. இரண்டு ஆண்டுகளில் 102 குழிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 50 சென்ட் தான் மொத்தப் பரப்பு கண்டறியப்பட்டுள்ளது. தனியாரிடமும் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு நடத்தப்படுகிறது.  இதைப் பற்றி அறிய நேரில் சென்று ஆய்வு செய்தபோது, கிடைத்த தரவுகள் ஏராளம். 5300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இப்பகுதி சிந்து சமவெளி நாகரிகம் போன்று நகர நாகரீகமாகும்.  எண்ணற்ற கட்டடங்களும், ரோம், ஆப்கான் போன்ற தொடர்புகளும் இந்தப் பகுதிக்கு இருந்ததாக தெரியவருகிறது. நகரித்தின் குடியிருப்புப் பகுதிகள், கால்வாய்கள், தொழிற்காலைகள் எல்லாம் அமைந்துள்ளதாக தெரிகிறது. 1964ல் பத்துப்பாட்டை ஆராய்ச்சி செய்த மா. ராசமாணிக்கனார், பழந்தமிழ் இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடற் புராணம் அடிப்படையில் தற்போதுள்ள மதுரை நகரம் சங்க கால மதுரை இல்லை என்றும் திருப்புவனத்திற்கு மேற்கிலும், திருப்பரங்குன்றத்திற்கு கிழக்கிலும் அமைந்ததுதான் பண்டைய மதுரை என்று தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார்.  அது இந்த நகரமாக இருக்கலாம் என்று நமக்குப் படுகின்றது. 

தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழ் ஆய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாலிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரி இருந்தன என்ற செய்திகள். 

வைகை நதிக்கரையில் பல நூறாண்டுகளாக மனிதர்கள் நாகரீகத்தோடு, சமூக அமைப்போடு வாழ்ந்தார்கள் என்றும் வைகை ஆற்றில் வைகை நதி தொடங்கும் வருச நாட்டை அடுத்த வெள்ளி மலையிலிருந்து வைகை நதி கடலில் கலக்கும் ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளம் ஆற்றங்கரை வரையில் சுமார் 400 கிராமங்கள் வரை வைகை நதி ஓரத்தில் இருந்துள்ளன. இந்த கிராமங்களில் கீழடியும் ஒன்று என்று தெரிய வருகிறது.  இங்கு விவசாயம் பிரதானத் தொழிலாகவும் இருந்திருக்கலாம். தற்போது இந்த மண்ணில் தென்னை மரங்கள்தான் ஏராளம். 

தோண்டி எடுக்கப்பட்ட அகழ் ஆய்வுகளில் 36:22:6, 34:21:5, 35:22:6, 32:21:5 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. கட்டடங்கள் யாவும் சதுரம், செவ்வகம், நீள் சதுர வடிவங்களில் அமைந்திருந்தன. அது போல சில கட்டடங்களில் உலைக்கலன்களும் இருந்துள்ளன. கிடைத்த மண்பாணை குவளைகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களின் பெயர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. செம்பினால் ஆன வளையல்கள், பாசிகள், மோதிரங்கள், இரும்பினால் செய்யப்பட்ட கோடாரி, இடுக்கி, ஈட்டி முனை, விலங்குகளின் கொம்புகள், அம்பு முனைகள், சில்லான் குச்சிகள், இடைகற்கள், கண்ணாடி மணிகள் என பலத் தரவுகள் வேறுபட்ட நிலையில் கிடைத்துள்ளன. காவிரிபூம்பட்டினம், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ் ஆய்வுப் பணிகளை விட இது சற்று வித்தியாசமாக இதுவரை கிடைக்காத பண்டையக் காலத்து அடையாளங்கள் கிடைத்துள்ளன. 

இந்த ஆய்வுகள் 2016 செப்டம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை மைசூரில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வருகின்றனர். இன்னும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றால் மேலை நாடுகளுக்கு அனுப்பவேண்டிய நிலை. 

தமிழகத்தில் கிடைத்த இந்த அரிய பழங்காலப்பொருட்களை மைசூருக்கு அனுப்பாமல் பழந்தமிழர் தொன்மையை விளக்கக்கூடிய அருங்காட்சியகத்தை இதே கீழடியிலேயே அமைக்கலாம். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் இந்த அரியப் பொருட்கள் மைசூருக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

இந்த அகழ்வாராய்ச்சிப் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும். சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் பழந்தமிழரின் நாகரீகத்தின் எச்சமாகும். கீழடி உட்பட பல பகுதிகளில் எடுத்த/எடுக்கிற தொல்பொருள் அகழ்வு பொருட்களை அந்தந்த மாநிலங்களிலேயே, இன்னும் சொல்லப்போனால் அந்தந்தப் பகுதிகளில் மையங்கள் அமைத்து பாதுகாப்பதும், அதன் பிரதிகளை ஆய்வு செய்ய பல்கலைக்கழகங்களோடு இணைந்த ஆய்வுமையங்கல் உருவாக்க வேண்டும். அரிதாக கிடைக்கிற வரலாற்றுத் தரவுகளை சாக்கில் கட்டி கொல்லைப்புறத்தில் எறிகிற நிலைமை மாற வேண்டும்.

இதுவரை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தொல்பொருட்களை கண்டறிந்து அவற்றை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். எதெற்கெல்லாமோ பணம் விரயம் செய்கிற தமிழக அரசு தனியாக தொல்பொருள் பராமரிப்பு மற்றும் ஆய்வுத்துறையை உருவாக்க வேண்டும்.

Chanakya



Continuing the series of extracts from the Arthashastra, this article will explain the Rajamandala theory of Chanakya and see if we can view modern geopolitics through its prism.

This is one of the most significant and enduring theoretical constructs of Chanakya. In books six and seven, the ‘world’ around the ‘king’ is visualised and the policies or gunas to engage with this world in the most successful way possible, are set down.

In the context of the vijigishu or the king, the aim is to secure an increase in his own power at the cost of his natural enemy/enemies on his way to becoming a world conqueror. He is to adopt policies guided solely by this consideration. The interest of his own state is the supreme criterion, all else subordinate to this.

There are two ways of understanding the circle of kings which makes up the ‘world’ relevant to the vijigishu, although both of them posit 12 constituents of this mandala.

In the first view, there are 12 kings, the vijigishu (would-be conqueror), the ari (enemy), mitra (ally), arimitra (enemy’s ally), mitramitra (ally’s ally), arimitramitra (ally of the enemy’s ally), parshnigraha (enemy in the rear), akranda (ally in the rear), parshnigrahasara (ally of the enemy in the rear), akrandasara (ally of the ally in the rear), madhyama (middle king between state and enemy and stronger than both), udasina (king lying outside, stronger than the vijigishu, ari and madhyama). 

In the alternative view, there are four principal kings, the vijigishu, the ari, the madhyama and the udasina. All of them have a mitra and a mitramitra. There are therefore four sets of three kings each, making 12 in all.

The number 12 is meant less as a numerical statement of the number of kings than a classification of the kind of relationships which can arise when a state tries to establish its supremacy over other states. In the modern context, we may take conquest to mean achieving the strategic foreign policy objectives of the state on the global stage.

The Arthashastra itself seems to refer more to the first conceptualisation than the second.

For the purposes of a modern reading, however, it would be instructive and interesting to fit modern geopolitics into the second framework and see how the foreign policy measures advised by Chanakya could play out in today’s world.

The classification virtually suggests itself; if India is to be the state trying to promote its interests, the vijigishu, then the ari or enemy is Pakistan, the madhyama, China and the udasina, the US.

Keeping this in mind, one can examine the methods or gunas for containing the enemy and promoting state interests set out in the Arthashastra. One can also see if India’s foreign policy has appropriately evaluated the strengths and weaknesses of itself, its enemies and allies.

One has to keep in mind the fact that this is not a question of a simplistic geographic application of the mandala theory, either in concentric circles or in a straight line, as is often done. It is more a question of interstate relations and clash or convergence of interests.

The six methods of dealing with other constituent states in the circle are sandhi (peace), vigraha (hostility), asana (remaining quiet), yana (military expedition), sanshraya (seeking shelter) and dvaidhibhava (a combination of sandhi and vigraha).

The normal rules are that sandhi is to be followed when one is weaker than the enemy. It is forced on one because of comparative weakness, but is a temporary measure to be abrogated when one has grown in strength. 

Hostility or vigraha can be simply defensive or actively offensive and is to be used if the vijigishu is stronger than the enemy. 

Asana is used when both the states are equal in power, it means waiting in the hope that the enemy becomes weaker.

If one is very strong, then yana should be resorted to – it goes hand in hand with vigraha. Sanshraya is to be used if one is much weaker than the enemy and cannot defeat it. Dvaidhibhava is recommended when, with the help of another source, one’s enemy can be fought, so sandhi with one state runs congruent to vigraha with another. This is not a separate policy but merely a combination of two policies to be used when circumstances warrant.

Read more:

http://bit.ly/2dg67ey

இந்தியாவின் நீர்வழிப் பாதைகள்

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏற்றுமதியில் துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்தில் நீர்வழிப்பாதைகளின் பங்களிப்பு மிகவும் குறைவு. இப்போது மத்திய அரசு நீர்வழிப்பாதை போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறது. வருங்காலத்தில் நீர்வழிப்போக்குவரத்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். நீர்வழிப் போக்குவரத்து குறித்த தகவல்கள் இதோ!

• தேசிய நீர்வழிப்பாதைகள் மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேறியது. கடந்த பிப்ரவரியில் மாநிலங்களவையில் நிறைவேறியது.

• 5 - ஏற்கனவே உள்ள தேசிய நீர்வழிப் பாதைகளின் எண்ணிக்கை

• 106 - புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள நீர்வழிப்பாதைகளின் எண்ணிக்கை

• 1986-ம் ஆண்டு தேசிய நீர் பாதை 1 அறிவிக்கப்பட்டது.

• கங்கை ஆற்றில் அலாகாபாத்தில் இருந்து வாரணாசி வழியாக ஹால்தியா வரை இந்த பாதை செல்கிறது.

• இந்தப் பாதையின் மொத்த நீளம் (கி.மீ.) 1,620

• 2013-ம் ஆண்டுதான் இந்த நீர்வழிப்பாதை வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் பராக்காவில் இருந்து கொல்கத்தாவுக்கு நிலக்கரி எடுத்துச்செல்லப்பட்டது.

• கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ, செலரியோ உள்ளிட்ட 200 கார்களை வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு அனுப்பியது. ஒரு காருக்கு ரூ.2,000 மீதமாகும்.

• இந்த ஆண்டு தொடக்கத்தில் கடல் வழியாக சென்னையில் இருந்து குஜராத் பிபாவவ் துறைமுகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 800.

நாடுகள் நீர்வழிப் போக்குவரத்தின் பங்கு

சீனா - 47%, ஜப்பான் - 44%, கொரியா - 40%, ஐரோப்பிய நாடுகள் - 40%

• 3.6% - மொத்த சரக்கு போக்குவரத்தில் நீர்வழிப்பாதை சரக்கு போக்குவரத்தின் பங்கு

• 7% - மத்திய அரசு 2018-ம் ஆண்டுக்குள் உயர்த்த திட்டமிட்டுள்ள அளவு


ஒரு டன் பொருளை, ஒரு கிலோமீட்டர் எடுத்துச்செல்ல எடுத்துச் செல்ல ஆகும் செலவு


• கப்பல் - 25 பைசா முதல் 50 பைசா

• ரயில் - ரூ.1.50

• தரை வழி - ரூ.2.50

• 20,000 கிலோமீட்டர் நீர்வழிப்பாதைகள் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.80,000 கோடி கப்பல் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையே ரூ.1,800 கோடிதான். பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் தொகையில் 5 சதவீதத்தை நீர்வழிப்பாதைகளை மேம்படுத்த ஒதுக்க வேண்டும் என கட்கரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

• குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிடையே 850 கிலோமீட்டர் நீர்வழிப்பாதை அமைப்பதன் மூலம் இரு மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று கட்கரி கூறியிருக்கிறார்.

• தற்போது உள்ள 5 தேசிய நீர்வழிப்பாதைகளின் நீளம் 4,434 கிலோமீட்டர்.

• இந்த நீர்வழிப்பாதை மூலமாக வருடத்திற்கு கையாளப்படும் சரக்குகள் அளவு 30 லட்சம் டன்

• இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்திற்கான லாஜிஸ்டிக்ஸ் கட்டணம் 17% முதல் 18%. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவில் லாஜிஸ்டிக்ஸ் கட்டணம் 8% முதல் 12%

• நீர் வழிப்பாதைகள் மூலம் நிலக்கரி எடுத்து செல்லும் போது ஒரு டன்னுக்கு 1,200 ரூபாய் குறையும். இதனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 75 பைசா குறையும்.

உள்நாட்டு நீர்வழிப்பாதைகளின் நீளம் (கிலோமீட்டரில்)

> சீனா - 1.40 லட்சம், அமெரிக்கா - 40 ஆயிரம்

• அதிக தூரம் நீர்வழிப்பாதைகள் உள்ள மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் உத்தர பிரதேசம். அதனை தொடர்ந்து மேற்கு வங்கம், ஆந்திரா, அஸ்ஸாம் மற்றும் கேரளா மாநிலங்களில் நீர் வழிப்பாதைகள் உள்ளன.

பயன்கள்

• மற்ற போக்குவரத்தை விட குறைந்த செலவில் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

• நீர் பாதைகள் அதிகப்படுத்தும்போது போக்குவரத்து நெரிசல் குறைந்து, கரியமில வாயு வெளியேறுவது குறையும். சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

• சாலை, தண்டவாளங்கள் போல பராமரிப்பு செலவு இல்லை.

இவ்வாறு நீர்வழிப் பாதைகள் இந்தியாவில் அமைந்தால் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும். பண்டையக் காலங்களில் நீர்வழிப் பாதைகள் வழக்கத்தில் இருந்தன. இன்று கேரளாவிலும், அஸ்ஸாம், ஒரிசா போன்ற பகுதிகளில் மட்டுமே நீர்வழிப் பாதைகள் தென்படுகின்றன. உலக அளவில் நீண்ட நதிகளில் நீர்வழிப் பாதைகள் அமைந்துள்ளன.

#நீர்வழிப்பாதைகள் #inlandwaterways #ksrposting #ksradhakrishnanposting

தமிழ்நாடு நாட்டுப்புறக் கதை.

சிரியா விவகாரம் முதல் காவிரி கலவரம் வரை அனைத்தையும் பற்றி இரண்டு நாய்கள் பேசிக் கொண்டு இருந்தன. அப்போது ஆட்டுக்கூட்டம் ஒன்று இந்த நாய்களைக் கடந்து போனது.

இந்த நாட்டில் இவ்வளவு ஆடுகள் இருக்கிறதா என்று நாய்கள் இரண்டும் அதிர்ச்சி அடைந்தது.
நாட்டில் நாய்கள் அதிகமா
ஆடுகள் அதிகமா என்ற சந்தேகம் வந்தது.
இதை யாரிடம் போய்க் கேட்பது என்று தெரியாமல் நரியிடம் போய்க் கேட்டது.

" நாட்டில் நாய்கள் தான் அதிகம். ஆனால் ஆடுகள் அதிகமாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறதே?" என்று அந்த இரண்டு நாய்களும் கோபப்பட்டது.
" நாய்கள் தான் அதிகம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டது நரி.
" நாய்களாகிய நாங்கள் ஒரே நேரத்தில் பல குட்டிகள் போடுகிறோம். ஆடு ஒரு குட்டி தானே போடுகிறது" என்றது நாய்.

இதற்கு உண்மையைப் புரிய வைக்க நினைத்த நரி.... என்னிடம் பத்து நாய்களையும் பத்து ஆடுகளையும் அழைத்து வாருங்கள் என்றது.
ஆடுகளை ஒரு அறையிலும்
நாய்களை ஒரு அறையிலும் 
பூட்டி வைத்தது நரி.

அரை மணிநேரம் கழித்து அறை திறக்கப்பட்டது.
ஆடுகள் அனைத்தும் அமைதியாக வரிசையாக அந்த அறையை விட்டு வெளியே வந்தன.
நாய்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று கடித்துக் குதறி ரத்தம் ஒழுக வெளியே வந்தன.
" இப்போது புரிந்ததா?" என்று கேட்டது நரி. நடுங்கியபடியே , " புரிந்தது" என்றது நாய்.

" உன் இனம் பெரிதுதான். ஆனால் நீ உனக்குள் அடித்துக் கொள்கிறாய். கடித்துக் கொள்கிறாய்" என்றது நரி.

நரி சொன்னது நாய்க்கு மட்டும் தான்!

_ தமிழ்நாடு  நாட்டுப்புறக் கதை

காவிரி...

காவிரி ஆறு கரூரிலிருந்து திருச்சி வரை அகன்ற காவிரி ஆறாக உள்ளது. அதனால், காவிரியின் இரு கரைகளையும் சுமார் 10லிருந்து 15அடி வரை உயர்த்தி தடுப்பணை மிக எளிதாக கட்டலாம்.

இதன் பயன்கள்:-

1. ஆற்றின் இரு கரைகளை 15அடி உயர்த்தி சாலைகள் அமைத்து, போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம்!

2. 15அடிகள் உயர்த்தி நீர் தேக்கி வைக்கும் போது தஞ்சையில் முப்போகம் தங்கு தடை இன்றி விளையும்!

3. ஒரே ஒரு முறை #காவிரி நீர் மற்றும் மழை நீர் கொண்டு தேக்கி வைத்தால், அங்குள்ள மண் மூலம் அத் தண்ணீர் கிரகிக்கப் பட்டு, அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிலத்தடி நீர் பஞ்சமே இருக்காது.

4. விவசாய நிலங்கள் விளை நிலங்களாக மாறும் போது அது சார்ந்த.இஞ்சினியரிங் படித்த மாணவர்களுக்கு ஏகப்பட்ட தொழில் வாய்ப்புக்கள் அமையும்!

6, ஆங்காங்கே இரு கரைகளுக்கு இடையே பாலங்கள் கட்டி, போக்குவரத்து தூரங்களை குறைக்கலாம். அத்துடன் இரு ஊர்களுக்கும் இடையே உள்ள பொருட்களை மிக எளிதாக பண்டம் மாற்றிக் கொள்ளலாம்!

7. இந்த நீண்ட தடுப்பணையில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் அரசு மிகப் பெரும் வருவாய் ஈட்டலாம்!

8. மிகப் பெரிய அளவில் நடக்கும் மணல் கொள்ளை தடுப்பணை கட்டி விட்டால், கனவில் கூட நடக்காது.

9. கரூர், திருச்சி, தஞ்சை ஐந்தே ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஒன்றாகி விடும்.

Wednesday, September 28, 2016

சில நினைவுகள்....

தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து மனிதநேயத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று தனது வேண்டுதலைத் தெரிவித்திருந்தார். இது ஒரு நல்ல துவக்கம். இந்த நினைவுகளோடு 1984 அக்டோபர் மாதம் நடந்த சில சம்பவங்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

அக்டோபர் 8, 1984 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.  எம்.ஜி.ஆர். சளி, காய்ச்சல், ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார்; அதற்கான சிகிச்சைதான் வழங்கப்படுகிறது என்று எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். மிகவும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டதை சில நாட்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

இலங்கைப் பிரச்னை குறித்து பேசுவதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு அவ்வப்போது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை அடியேன் சந்தித்ததுண்டு. அதிமுக கூட்டணியில் நெடுமாறன் இருந்தபோது, அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் என்னிடம் தெரிவித்தார்.  எனக்கு அது மலைப்பாக இருந்தது.  ஏனெனில் சட்டக்கல்வியை முடித்துவிட்டு ஜூனியர் வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தில் பணியில் இருக்கவேண்டிய நிலைமை.  நெடுமாறன் மூலமாக சட்டமன்றத் தேர்தலுக்கு எதிர்காலத்தில் போட்டியிடலாம் என்று சொல்லிவிட்டேன். பின் அன்றைய அமைச்சர் எச்.வி.ஹண்டே மூலம் நல்லவன் என்ற சௌந்தர்ராஜன் போட்டியிட்டார்.

நான் அச்சமயம் பழ. நெடுமாறனின் தமிழ்நாடு காங்கிரஸ்  (காமராஜர்) கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தேன். என்னோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த ’தஞ்சை ராமமூர்த்தி, க.பாரமலை, கே.எஸ்.பொன்னம்மாள், பொறையார் ஜம்பு ஆகியோர் துணைத் தலைவர்களாகவும்,  தி.சு.கிள்ளிவளவன் (இவர் 1950களில், ஆரம்பகட்டத்தில் அண்ணாவிடம் நெருக்கமாக இருந்தவர்), எம்.கே.டி.சுப்ரமணியம் (திமுகவை அண்ணா துவங்கும்போது ராபின்சன் பார்க்கில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் நடந்த மேடையில் இருந்தவர். அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழிலும் இவர் பெயர் இடம் பெற்றது. அண்ணாவுக்கும், பெரியாருக்கும் நெருக்கமானவர். கலைஞர் அவர்களை அழைத்து சென்னையில் முதல் கூட்டத்தை நடத்தியவரும் இவர்தான். இவரது பூர்வீகம் விருதுநகர்.) ஆகியோரும் என்னுடன் பொதுச்செயலாளாராக இருந்தார்கள்.  இவர்கள் எல்லாம் பெருந்தலைவர் காமராஜரோடு நெருக்கமாக அரசியல் களத்தில் பணிகளை மேற்கொண்டவர்கள் கூட.

இந்த காலகட்டத்தில் நெடுமாறன் அதிமுக கூட்டணியைவிட்டு வெளியேறி திமுக கூட்டணியில் இடம்பெற்றார்.  எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டபோது பழ.நெடுமாறனுடன் மூன்று தடவை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரைச் சந்திக்க சென்றிருக்கிறேன்.  அவருடைய அறைக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், பக்கத்து அறையில் அமர்ந்திருந்து ஜானகி அம்மாவிடம் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து விசாரிப்பது வாடிக்கை.

இந்நிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நோயுற்ற எம்.ஜி.ஆரைப் பார்க்க வருகை புரிந்தார். நெடுமாறனை  பார்த்து பழைய நினைவுகளோடு தலையை அசைத்துக் கொண்டு நெடுமாறனின் வணக்கத்தை பெற்றுக்கொண்டு சென்றார்.  எங்களோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கமும் உடனிருந்தார். அந்த அறையில் பண்ருட்டி ராமசந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ. கிருஷ்ணசாமி  போன்றவர்களும் பார்வையாளர்கள் அறையில் அமர்ந்திருந்தார்கள்.

அறையின் வெளியே ஆர்.எம்.வீரப்பனும், சற்று தொலைவில் திருநாவுக்கரசரும் தனித்தனியாக அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர்.  ஒரு ஓரத்தில் அன்றைய அதிமுக எம்.பி.யும் இன்றைய முதல்வருமான ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து அருகில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ‘நீங்க தலைவரைப் பார்த்தீர்களா?’ என்று சத்தியவாணி முத்து ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, ‘நான் இன்னும் பார்க்கவில்லை’ என்றார். இன்று அதே அறையில்தான் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் பிரச்சனை, இந்திராகாந்தி படுகொலை ஆகிய நிகழ்வுகள் என் கண்முன்னே வந்து செல்கின்றன. வெளிக்கடை சிறையிலிருந்து குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் கொடூரமாக கொல்லப்பட்டு அதிலிருந்து தப்பிவந்த நிர்மலா நித்யானந்தமும் சென்னைக்கு வந்தடைந்தார். அப்போதுதான் பணக்கொடா மகேஷ்வரன் டீ இயக்க தோழர் மீனம்பாக்கம் விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தாக்கினார் என்ற வழக்கும் நடைபெற்றது. இந்திரா காந்தியும், அக்டோபர் 31ம் தேதி காலை 9.25க்கு தன்னுடைய பாதுகாவலராலேயே சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தப் பிரச்சினைக்கு இடையில் எம்.ஜி.ஆர். 5.11.1984 அன்று அமெரிக்காவுக்கு மருத்துவத்திற்காக தனி விமானத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் உதவியால் புரூகிளீன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  ஆனால் அன்றைக்கு இந்திரா காந்தி அவர்கள் உயிரோடு இல்லை. அவரை அழைத்துச் செல்வதற்கு முதல் நாள் மத்திய அமைச்சர் நரசிம்மராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வரும்பொழுது நெடுமாறனோடு உடன் இருக்கவேண்டிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது நரசிம்மராவ் நெடுமாறனிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இந்திரா காந்தியின் கொள்கையை ராஜீவ் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள் என்று நரசிம்மராவிடம் சொல்லும்பொழுது கேட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் இந்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்தன. இந்தக் குறிப்புகளை எழுதவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அரசியலில் விமர்சனங்களும், எதிர்வினைகளும் இருந்தாலும் மனிதநேயத்தோடு ஜெயலலிதா நலம்பெற வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பம்.

அந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறித்து வார இதழ் ஒன்றில் வெளிவந்த செய்தி.....

அக்டோபர் 1984 அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் குணமடைவார் என்று நினைத்திருந்த நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமானது . அது வரை இல்லாத விதமாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவரை பார்க்க சென்னைக்கு விரைந்தார். 16/10/1984 அன்று இந்திரா காந்தி அப்போல்லோ மருத்துவமனைக்கு வருகைத் தந்தார் , அது வரை யாரையும் எம்.ஜி.ஆரை. பார்க்க அனுமதிக்கப்படவில்லை , அவர் சென்று பார்த்தார் , கண்ணாடிக் கதவு வழியே பார்க்க அனுமதிக்கப் பட்டார் , அதிர்ந்து போனார் " IS THAT MGR ? OH MY GOD , I CANT BELIEVE IT " என்று அவர் சொன்னது இன்றளவும் நினைவு கூரப் படுகிறது .

அருகில் இருந்த ஜானக்கியம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி ஆறுதல் கூறினார் , கவலை படாதீர்கள் இவர் நாட்டின் சொத்து , கண்டிப்பாக இவரை காப்பாற்றுவது இந்த தேசத்தின் கடமை , இவருக்கு உயர் சிக்கிச்சை அளிக்க வெளி நாட்டிலிருந்து மருத்துவர்களை வரவழைப்போம்,இவர் காப்பாற்றப் படப் போவது உறுதி என்று கூறினார் . வெறும் வார்த்தைகளாக மட்டும் அதை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை ,அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் .

 தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது, இந்திரா காந்தியின் யோசனையை ஏற்பது என்று முடிவானது . இந்திய பிரதமர் ஆணை பிறப்பித்தால் அதுவும் இந்திரா காந்தி ஆணை பிறப்பித்தால் நடக்காமல் இருக்குமா ? அவர்வந்து பார்த்து விட்டுப் போன மறுதினமே 17-10-1984 அன்று பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டு சென்னை அப்போலோவுக்குள் நுழைந்தனர் . அது மட்டுமா? பிரதமரின் நேரடி உத்தரவின் பெயரில் ஏர் இந்தியா போயிங் ரகவிமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரத்யேகமாக எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . எந்த நேரமும் அவருக்கு மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் அவரை வேறு நாட்டிற்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதற்கும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது . விமான குழுவினர் இதற்காகவே விமானத்திலேயே தங்க வைக்கப் பட்டிருந்தனர் .

 டாக்டர் எலி ப்ரைட்மேன் என்கிற அமெரிக்க மருத்துவர் தலைமையிலான குழு எம்.ஜி.ஆருக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தது . 10 நாட்கள் அவரை விமானத்தில் அழைத்துச் செல்ல இயலாத அளவிற்கு உடல் நிலை மோசமாக இருப்பதாக அந்தக் குழு தெரிவித்தால் , மும்பைக்கு திரும்பிச் சென்றது அந்த விமானம் .

எனினும் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது , அவரது மூளையில் டென்னிஸ் பந்து அளவிற்கு கட்டி இருப்பது தெரிய வந்தது. அக்டோபர் 19 1984 அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் சுயநினைவை இழந்தார் . நரம்பியல் நிபுணரான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கண்ணோ டோக்யியோ விலிருந்து வரவழைக்கப் பட்டார் , அவரும் அவரது உதவியாளர் டாக்டர் நகமுராவும் டோக்கியோவிலிருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்து அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பைக்கு வந்து அங்கிருந்து சென்னை அழைத்து வருவதாகத் தான் திட்டமிடப் பட்டிருந்தது . ஆனால் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக இருந்ததால் தமிழக அமைச்சரவை மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து விமானத்தை அவசரமாக சென்னையில் தரை இறக்க கேட்டுக் கொண்டது , அதுவும் ஏற்கப் பட்ட நிலையில் , இன்னொரு அதிர்ச்சி , டோக்கியோவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால் மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தை தவற விட்டுவிட்டனர் என்பது தான் .

 இப்பொழுதைப் போல எல்லாம் அப்பொழுது விமானப் போக்குவரத்துக்கள் அதிகமாக இல்லாத தருணம் , அடுத்த விமானம் சென்னை விமான தளத்திற்கு 20மனி நேரத்திற்கு பின்னர் தான் வரவிருந்தது . எல்லோருக்கும் பி பி எகிற ஆரம்பித்தது . அப்பொழுது இன்னொரு அவசர திட்டத்தை வகுத்தனர் , ஏற்கனவே எம்.ஜி.ஆருக்காக மும்பையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை சிங்கபூருக்கு அனுப்பி அங்கிருந்து அந்த மருத்துவர்களை இங்கே அழைத்து வரலாம் என்றால் , அது வரை பறக்கும் வசதி அந்த விமானத்திற்கு இல்லை , சரி என்று , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தையே பிரத்யேகமாக அந்த இரண்டு மருத்துவர்களுக்காக மட்டும் அங்கிருந்து சென்னை இயக்க வைக்கலாம் என்று முடிவானது , அதற்கு அவர்கள் கோரிய தொகை ஒரு மணி நேரத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் . 8 மணி நேர பயணத்திற்கு 10 லட்சம் ரூபாய் என்றார்கள் , அதை கொடுக்க அ தி மு க தயார் என்றாலும் நள்ளிரவில் பணத்தை செலுத்தி விமானத்தை இயக்க வைப்பது என்பது கடினமான விஷயமாகவே இருந்தது .

உடனே மத்திய அரசாங்கம் சிங்கபூருக்கான இந்திய தூதுவரை தொடர்பு கொண்டது , அதற்கும் கூட முதலில் வெளியுறவுத் துறை செயலாளரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து நள்ளிரவில் அது முடியாமல் போக , அப்பொழுதைய திட்டக் கமிஷன் தலைவர் ஜி பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சிங்கப்பூர் தொடர்பு கொள்ளப் பட்டு வெறும் 2 மருத்துவர்களுக்காக 6 பேர் விமானக் குழு கொண்ட 350 பேரை அமர்த்தும் வசதி கொண்ட போயிங் 747 ரகவிமானம் மூன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தது , டாக்டர் கன்னோவையும் அவரது உதவியாளர் நகமுராவையும் சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற அப்பொழுதைய மாநில அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களை அங்கிருந்து நேராக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் . அதன் பின்னர் இரண்டு நாட்களில் எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப் பட்டது ...

இது அனைத்திற்கும் முழு ஒத்துழைப்புகொடுத்தது இந்திரா காந்தியின் அரசாங்கம் என்பதை விட இந்திரா காந்தி அவர்களின் மனித நேயம் தான்

#MGR #எம்ஜிஆர் #ksrposting #ksradhakrishnanposting

கீழடி...

வைகை நாகரீகத் தொல்பொருட்கள் மைசூருக்குக் கொண்டு செல்லப்படும் அபாயம்!

கடந்த இரண்டாண்டு காலத்திற்கு மேலாக வைகைக் கரை #கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் அழிந்துபோன ஒரு பெரும் நகரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம்  சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையை இன்னும்  பழமையான காலத்திற்குக் கொண்டு செல்லுகின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. 

இவ்வாறு கிடைக்கப்பெற்றப் பொருட்களை பாதுகாத்து வைக்க கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.  இல்லாவிட்டால் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட இந்த தொல்பொருட்கள் மைசூருக்குக் கொண்டுச் செல்லப்பட்டுவிடும்  எனவே இதை உடனடியாகச் செய்யுமாறு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்.

சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் பழந்தமிழரின் நாகரீகத்தின் எச்சமாகும். இந்த அகழ்வாராய்ச்சிப் பணியில் மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும் .
கீழடி உட்பட பல பகுதிகளில் எடுத்த/எடுக்கிற தொல்பொருள் அகழ்வு பொருட்களை அந்தந்த மாநிலங்களிலேயே, இன்னும் சொல்லப்போனால் அந்தந்தப் பகுதிகளில் மையங்கள் அமைத்து பாதுகாப்பதும், அதன் பிரதிகளை ஆய்வு செய்ய பல்கலைக்கழகங்களோடு இணைந்த ஆய்வுமையங்கல் உருவாக்க வேண்டும். அரிதாக கிடைக்கிற வரலாற்றுத் தரவுகளை சாக்கில் கட்டி கொல்லைப்புறத்தில் எறிகிற நிலைமை மாற வேண்டும். 

இதுவரை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தொல்பொருட்களை கண்டறிந்து அவற்றை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். எதெற்கெல்லாமோ பணம் விரயம் செய்கிற தமிழக அரசு தனியாக தொல்பொருள் பராமரிப்பு மற்றும் ஆய்வுத்துறையை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தின்....

தமிழகத்தின் அறிவுலகம் என்பது யாராலானது. 

அறிவு என்பது வெறும் தரவும், ஒயில் மொழியும், கவர்ச்சியும் மொழுகிய ஒரு துய்ப்பல்ல. தொகுக்கப்பட்ட வரலாற்றுப் பட்டறிவை மக்கள் நன்றின்பால் செலுத்துவதே அறிவு.

நுனிப்புல் மேயும் மந்தை மாடுகளையும், கேளிர் நலனறியா நஞ்சுகளையும் அறிவார்ந்தோராக கண்டு வளர்கின்றது இன்றைய பெரும்பான்மை தமிழகம். இவர்கள் பதராகப் போகும் போக்கு தடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தின் அறிவுப் பெட்டகங்கள் எல்லாம் அடையாளமற்ற சுவடிகளாக பரண் மேல் கிடக்க அரைகுறைகள் எல்லாம் ஊடகங்களில் மக்களுக்கு  பாடம் எடுத்துக் கொண்டிருக்கின்றன. 

மெழுகுப் பழங்கள் காய்த்துக் குலுங்க, 
மணலற்ற ஆறுகளின் கண்ணீரும் வரண்டு போக 
ஓடாத மானும், அடையாளம் இழந்த மக்களும்.

Tuesday, September 27, 2016

காவிரி உச்சநீதி மன்ற தீர்ப்பு:

காவிரி உச்சநீதி மன்ற தீர்ப்பு:
...................................................
 காவிரிவழக்கில் இன்று (27/9/16)உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கர்நாடக அரசின் சட்ட விரோத செயல்களையும் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நடவடிக்கைகளையும்  மேலும் ஊக்கப்படுத்துவதுபோல் அமைந்ததுள்ளது.கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  உச்ச நீதிமன்றம் பதிவு செய்யும் என்று தமிழ்நாட்டின் ஏழரைக்கோடி தமிழ்மக்கள் இன்று எதிர்பார்த்தார்கள் . சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யவில்லை .அவர்மீது உரியவாறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை.மாறாக உச்ச நீதிமன்ற மாண்புக்கு மாசு ஏற்படும் வகையில் செயல்படக் கூடாது என்று சித்தராமையாவிடம்  உச்ச நீதிமன்றம் கெஞ்சியுள்ளது..
உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில் 21.09.2016 முதல் 27.09.2016 வரை ஏழு நாட்களுக்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தது.ஆனால்  ஒருசொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு திறக்கமுடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக அரசிடம் அதுபற்றி விளக்கம் கேட்காமல் வெறுமனே செப்டம்பர் 28,29,30 மூன்று நாட்களுக்கு மட்டும் தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் பம்மி,பதுங்கி கூறியிருக்கிறது .கர்நாடகத்தைக்கண்டு உச்ச நீதிமன்றம் அச்சப்படுகிறதா ? அல்லது நடுநிலைத் தவறி சட்டப் புறம்பான சாதகங்களை கர்நாடகத்திற்கு செய்கிறதா ? என்ற ஐயம் தமிழ் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது .

 நான்கு வாரங்களுக்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று 20.09.2016 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் கர்நாடக,தமிழக முதலமைச்சர்கள் இருவரையும் நடுவண் அரசு அழைத்து மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அறிவுரை வழங்கி யது.

உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் மூலம்  தங்களது அட்டூழியங்களுக்கும் ,வன்முறை வெறியாட்டங்களுக்கும் ஆதரவாக மாநில அரசும் ,மத்திய அரசும் இருப்பது போலவே உச்ச நீதி மன்றமும் ஆதரவாக இருக்கிறது என்பதை கர்நாடக விவசாயிகளும்,இனவெறியர்களும் புரிந்து கொண்டார்கள் .எனவே இப்பொழுதே அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உரிமையுடன் கலவரங்களில் இறங்கி விட்டார்கள் .

இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கும் நீதிகளும்,பாதுகாப்புகளும் தமிழ்நாட்டிற்கு இல்லையென்பதை ஏற்கனவே நடுவண் அரசு தனது நடுநிலை தவறிய செயல்கள் மூலம் தெரிவித்து வருகிறது.

 நீதியை முறியடிக்க போராடுபவர்களுக்கு நீதி வளைந்து கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டோம்.இப்பொழுது நீதியை நிமிர்த்தவும் ,தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்கவும் ,நடப்பு சம்பா சாகுபடியை காப்பாற்றவும் ,இருபது மாவட்டங்களுக்கான குடிநீரை உறுதிப்படுத்தவும் தமிழக மக்கள் தெருவில் இறங்கிப் போராடவேண்டும்.

காவிரி...

காவிரி:
---
கர்நாடக சட்டசபை தீர்மானம் உச்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது.

நாள் ஒன்றுக்கு 6000 கன அடி வீதம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

................
உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் #காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்து கட்டளையிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவித்தவாறு விநாடிக்கு 6,000 கன அடி திறந்துவிட மறுத்து கர்நாடக சட்டமன்றம் சட்ட விரோதமானத் தீர்மானம் இயற்றியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திற்கு வெளிப்படையாக அறைகூவல் விடும் அவமதிப்புக் குற்றம் இது!

 இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர், மேலாண்மை வாரியத்தின் “வழிகாட்டுதலில்” கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளும் தமிழ்நாட்டின் மேட்டூர், அமராவதி, பவானி சாகர் அணைகளும், கேரளாவின் பானசுரசாகர் அணையும் ஒருங்கிணைந்த முறையில் இயங்கும் என்பதே உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் கூற்று எனக் கூறியிருப்பது தமிழினத்திற்கு எதிரான திரிப்பு வேலையாகும்.

 2007 பிப்ரவரியில் அளிக்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின் பகுதி 8-இன் பத்தி 16, “காவிரி மேலாண்மை வாரியத்திடம் அணைகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்க வேண்டும். அந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றத்தின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை ஒழுங்காற்றுக் குழுவின் உதவியோடு இம்மேலாண்மை வாரியம் செயல்படுத்தும்” என தெளிவாகக் கூறுகிறது.இதே பகுதி 8-இன் பத்தி 15, “இந்த #காவிரிமேலாண்மைவாரியம் பக்ராபியாஸ் மேலாண்மை வாரியத்தை போன்றதாகவே அமைக்கப்பட வேண்டும்” என விளக்குகிறது.

இத்தீர்ப்பு முன்னெடுத்துக்காட்டாகக் கூறிய “பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம், பக்ராநங்கல் திட்டம், பியாஸ் - சட்லஜ் இணைப்புத் திட்டம், பியாஸ் – போங்கு அணைத் திட்டம் ஆகியவற்றின் நிர்வாகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும்” என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இந்திய அரசின் நீர்வளத்துறை உயரதிகாரி இத்தீர்ப்புக்கு எதிராக விளக்கமளித்திருப்பது இந்திய அரசு, தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு மாறாக அதிகாரமற்ற இன்னொரு மேற்பார்வைக் குழுவை அமைக்க முயல்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது அப்பட்டமான சட்ட மீறலாகும்!
தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் இந்திய அரசு அமைக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு. தீர்ப்பாயத்தில் கூறப்படாத அதிகாரமற்றப் பொறியமைவை ஏற்படுத்தினால், அது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயல் .எனவே, தமிழ்நாட்டு மக்கள் இதில் விழிப்போடு இருந்து - தொடர் அழுத்தம் தராது போனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக நழுவும் ஆபத்து உள்ளது.
.............
#காவிரிநடுவர்மன்றம் முதல் காவிரிமேலாண்மைவாரியம் வரை காவிரி கடந்து வந்த உரிமைப்போராட்டம் :

1974 - ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்த பட்ட காவிரி நீர் பெறுவது தொடர்பான ஒப்பந்தம் குடியரசு இந்தியாவில் செல்லாது என்ற கர்நாடகா வின் வாதத்தால் ஒப்பந்தம் காலாவதியானது. அப்போது திமுக ஆட்சி.

16 ஆண்டுகள் நீண்ட இடைவெளி. காவிரி தொடர்பாக எந்த முன்நகர்வுகளும் இல்லை (2 ஆண்டுகள் திமுக ஆட்சி, 1 ஆண்டு எமெர்ஜென்சி, 13 ஆண்டுகள் தொடர் அதிமுக ஆட்சி.)

24-4-1990 - திமுக ஆட்சிக் காலத்தில் நடுவர்மன்றம் தேவை என்று தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

2-6-1990 - திமுக அங்கம் வகித்த #விபிசிங் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் நடுவர் மன்றம் மத்திய அரசினால் அமைக்கப்பட்டது. ( இது குறித்து ஜெயலலிதா கருத்து, காவிரி நடுவர்மன்றம் ஒரு வெற்று ஆணையம், அதிகாரம் இல்லாத ஆணையம், பல் இல்லாத ஆணையம்... இந்த ஆணையத்தால் ஒரு பலனும் கிடைக்கபோவதில்லை.)

28-7-1990 - திமுக ஆட்சியில் நடுவர் மன்றத்தின் சார்பில் #இடைக்காலதீர்ப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்று கோரி மனு செய்யப்பட்டது.

25-6-1991 - அன்று நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை வழங்கியது. 

1998 - திமுக  ஆட்சியில் இடைகால உத்தரவை செயல்படுத்த பிரதமர் வாஜ்பாய் ஐ வலியுறுத்தி,   ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிட்டது. (இது குறித்து ஜெயலலிதா கருத்து, "வாஜ்பாய், சூழ்ச்சிக்கு ஆளாகிவிட்டார், இந்த உடன்பாட்டை நிராகரிக்கிறோம்".)

5-2-2007 : காவிரி நடுவர் மன்றம் இறுதிதீர்ப்பு வழங்கியது.

2013: காவிரி நீர் பெறுவது தொடர்பான, டெல்டா விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசையும் இணைத்து வழக்கு நடைபெற்றது. வழக்கில், உச்ச நீதி மன்றம், இறுதி தீர்ப்பை அரசிதழில் என் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பி, அரசிதழில் வெளியிட ஆணையிட்டது. 

09-2016: காவிரி இல் நீர்திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி,  அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் வாதத்தில், 2007 பெற்ற இறுதி தீர்ப்பினை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் 4 வாரத்தில் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. (நாள் : 20-09-2016)

இது தான் நாம் கடந்து வந்த உரிமை போராட்டம் . காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகம் எதிர்க்க காரணம். ஓர் ஆண்டில் காவேரி ஆறு பெரும் நீரின் மொத்த அளவு 740TMC என்று கணக்கிடப்பட்டு, அதில் 419TMC நீர் தமிழகத்திற்கு உரியது (100% இல் 57.71%) என்று தீர்ப்பு வழங்கியது. கர்நாடகத்தின் பங்கு 270TMC. 1990 - 2016, 27 ஆண்டுகால நீண்ட நெடிய உரிமை போராட்டத்தில் தமிழகம் வென்றுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதை செயல்படுத்தவும் தடை போட கர்நாடகம் தொடர்ந்து முயற்சிக்கும், முரண்டு பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் நமக்கு உண்டான உரிமையின் படி நமது போராட்டங்களும்  தொய்வின்றி தொடர வேண்டும். 

சிலப்பதிகாரம்  (புகார்க் காண்டம் – கானல் வரி) :

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.

.........,............
 காவேரியே நீ வாழ்க! 

ஆற்றினில் புதுப்புனல் கண்ட உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசையும்,மதகுதனில் நீர் நிறைந்து வடிகின்ற ஓசையும்,வரப்புக்களை உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும்,புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் மிகுதியாக இருபக்கமும் ஆர்ப்பரிக்க, 

நடந்து செல்லும் காவிரியே நீ வாழ்க!

கி.ராவுடனான சந்திப்பு - 3

டி.கே.சி.யின் கம்பர் தரும் இராமாயணம் 

இந்த சந்திப்பின்போது கம்பர் இராமாயணத்தில் இடைச்செருகல் பாட்டுக்களை எல்லாம் நீக்கிவிட்டு அசல் கம்பர் இராமாயணப் பாடல்களை கல்கியில் தொடராக எழுதினார். அதனுடைய விளக்கங்களையும் நயம்பட அனைவருக்கும் அறிகின்ற வகையில் எழுதியிருந்தார். இந்த பாடல்களை மூன்று தொகுதிகளாக பொதிகை மலைப் பதிப்பு, திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து முதல் பாகத்தை 1953ல் டி.கே.சி. வெளியிட்டார். இந்த மூன்று தொகுப்புகளும், திருநெல்வேலி ஹிலால் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டது. இதற்கு முன்னுரை மூதறிஞர் இராஜாஜி வழங்கியிருந்தார். மூன்றாவது பாகம் 1955ல் வெளியிடப்பட்டது. இந்த நூலின் மூன்று தொகுதிகளையும் கி.ரா.விடம் இருந்து பெற்றுக்கொண்டேன். கி.ரா. சொன்னார் "எனக்கு டி.கே.சி. கையொப்பமிட்டு 16.2.1954ல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அன்போடு உபசரித்துக்கொடுத்தார் ரசிகமணி" என்று பெருமையோடு கூறினார். ரசிகமணி கையெழுத்திட்டதோ 8.11.54 என்று உள்ளது. கி.ரா. மேலும் குறிப்பிடுகையில் பல விமர்சனங்களைத் தாண்டி கம்பர் இராமாயணத்தில் உள்ள இடைச்செருகல் பாடல்களை எடுத்துவிடவேண்டும் என்று கறாராக டி.கே.சி. இருந்தார் என்றும், இதற்காக ரசிகமணி எதிர்கொண்ட விமர்சனங்கள் ஏராளம்.  கம்பர் இராமாயணத்தில் ஓலைச் சுவடிகளில் இருந்துதான் பலப் பாடல்கள் எழுதுபவர்களின் விருப்பத்துக்கேற்றவாறு ஏடுகளில் ஏறிவிட்டன. கம்பர் இயற்றியப் பாடல்கள் என்று தனியாக அடையாளம் காண வேண்டிய நிலையில்தான் இந்தப் பணியை செய்தேன் என டி.கே.சி. கி.ரா.விடம் குறிப்பிட்டதாக கூறினார். முத்தொள்ளாயிரத்தை அற்புதமாக பொருள் பிரித்து பாடிக் காட்டும்போது டி.கே.சி.யினுடைய தமிழை ரசனையோடு ரசிக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். வட்டத்தொட்டியிலும் இம்மாதிரி தமிழ் இலக்கிய விவாதங்கள் சுவாரசியமாக டி.கே.சி.யிடமிருந்து வரும். அவர் தமிழே தனி. பண்பாடு என்ற வார்த்தையை புழக்கத்திற்குக் கொண்டு வந்ததே ரசிகமணிதான். இப்படித் தமிழ் பல வார்த்தைகளை பழக்கத்திற்கு கொண்டுவந்தார் டி.கே.சி. என குறிப்பிட்டார்.  கம்பர் இராமாயணத்தை எளிதாக புரியக் கூடிய வகையில் அச்சிற்கு கொண்டுவந்து தமிழக மக்களுக்கு அர்ப்பணித்த பணியில் மிகவும் சிரமங்கள் எடுத்துக்கொண்டார். அப்போதெல்லாம் கணிணி கிடையாது. தட்டச்சு செய்து திருநெல்வேலி டவுனில் இருந்த ஹிலால் பிரஸ்ஸில் அச்சிட்டு வெளிவந்தபோது பிரசவ வேதனையில் துடித்தத் தாய் தன் பிள்ளையைப் பார்ப்பதுப் போல முதன்முதலாக அச்சிட்டு வந்த இராமாயண நூலை கண்கலங்க ஆனந்தத்தோடு பார்த்தார் ரசிகமணி. முறையான பதிப்போடு முதன்முதலாக வந்தது ரசிகமணியின் இராமாயணமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் எனவும் கி.ரா. கூறினார்.

இந்த பிரச்சினையில் இராஜாஜியும், கல்கியும் ரசிகமணிக்கு ஆதரவாக இருந்தனர். பல தமிழ் ஆர்வலர்களும் ரசிகமணி ஆய்வு செய்து அசல் கம்பர் இராமாயணப் பாடல்களை அச்சில் கொண்டு வருவதை விரும்பினர். இன்னொரு செய்தியும் உண்டு. நீதிக் கட்சி மேலவை உறுப்பினராக இருந்த ரசிகமணி டி.கே.சி. பாரதியாரின் பாடல்களை ஆங்கிலேயே அரசு தடை செய்ததை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கடுமையாக கண்டித்துப் பேசினார் எனப் பல செய்திகளோடு, கம்பர் இராமாயண காவியச் சிறப்பையும் கி.ரா. விரிவாக எடுத்துச் சொன்னார்.




பாலஸ்தீனப் பிரச்சினை

இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை இல்லை என்று பல சுற்றுகள் நடந்துவிட்டன. உலக நாடுகள் அனைத்தும் இதில் அக்கறை காட்டிவிட்டன.  2015ல் பாரீசில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் ஏதோ ஒப்புக்கு பேச்சுவார்த்தை நடந்தது. உருப்படியாக 2010க்கு பிறகு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா கோரியதால் இஸ்ரேல் மேற்குக்கரைப் பகுதியில் குடியிருப்புகள் உருவாக்குவதை 10 மாத காலம் வரை நிறுத்தி வைத்தது. இப்படியான நிலையில் ஒரு தீர்வு எட்டாத உலகப் பிரச்சினையாக விளங்குகின்ற நிலையில் ரஷ்ய அதிபர் புதின், இந்த இரண்டு நாடுகளையும் பிரச்சினைகளை பேச முயற்சி எடுத்துக்கொண்டு வருகின்றார். ஒரு காலத்தில் இட்சாக் ராபீனும், யாசர் அராபத்தும் கை குலுக்கினார்கள். 2008ல் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை ஒரு தீர்வுக்கு வரும் என்று எதிர்பார்த்தும், எந்த தீர்வும் எட்டாமல் போய்விட்டது. மேற்குக்கரையிலிருந்தும் கிழக்கு இஸ்ரேல் அரபுப் பகுதியிலிருந்தும் திரும்பப்பெற்று பழைய நகரை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் வைக்க இஸ்ரேல் ஒத்துக்கொண்டது. அப்போது பாலஸ்தீனம் சற்று அமைதி காத்தது. இப்படியான நிலையில் சிந்துபாத் கதையைப் போல இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுடன் பாலஸ்தீன அப்பாஸ் பேச ரஷ்ய அதிபர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எந்த அளவுக்கு கைகூடும் என்பது போகபோகத்தான் தெரியும்.

ஆனால் மேற்குக் கரையில் உள்ள யூதர்களை பாலஸ்தீனியர்கள் அழிக்கப்பார்க்கிறார்கள் என்று நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.  1948ல் நக்பா நிகழ்வின்போது கட்டாயம் வெளியேற்றப்பட்டவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பிரச்சினைகள் கிளப்பப்பட்டது.  பாலஸ்தீனியர்களுடைய பூர்வீக பூமியில் வசிக்க உரிமை உண்டு உலக நாடுகள் சொன்னபோதும் இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.  15 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமைகள் இஸ்ரேலால் பறிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் ஒரு பக்கம் எழுந்தவண்ணம் உள்ளது.

#பாலஸ்தீனம் #இஸ்ரேல்பிரச்சினை #ksrposting #ksradhakrishnanposting

Story of Uniform Civil Code


பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!

பிரவீண் சக்ரவர்த்தி
விவேக் தேஹேஜியா


 உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில்தான் இருக்கிறது” என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் வலியுறுத்தியுள்ளார். அவர் இங்கே குறிப்பாக உணர்த்தியது ‘பொது சரக்கு, சேவை வரிகள் (ஜி.எஸ்.டி.) மசோதா’பற்றித்தான். இம்மசோதாவை அவரும் அவருடைய அதிமுக கட்சியும் ஆதரிக்கவில்லை. மாநிலங்களின் நிதி நிர்வாகச் சுதந்திரத்தில் இம்மசோதா குறுக்கிடுகிறது என்று அவருடைய கட்சி மட்டுமே நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்கும் முன்னதாக அவர், மாநில அரசுகளுக்கு அதிகச் செயல்பாட்டுச் சுதந்திரம் வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். “இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடமிருந்து விலகிச் செல்லும் போக்காகவோ, கட்டுப்படுத்தப்பட வேண்டிய பிளவு மனப்பான்மையாகவோ கருதக் கூடாது, பல்வேறு மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நாடாக இந்தியா பக்குவப்பட்டு வருவதன் பின்னணியில் பார்க்க வேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார்.



தமிழ்நாடும் அதன் முதலமைச்சரும் தங்களுடைய இறையாண்மையுள்ள உரிமைகள் குறித்தும், டெல்லியிலிருந்து திணிக்கப்படும் கொள்கைகள் குறித்தும் என்ன நினைக்கின்றனர் என்பதை இந்தப் பேச்சு தெளிவாக உணர்த்துகிறது. அரசியல்ரீதியாகத் தனக்கு ஆதாயம் ஏற்படுவதற்காக ஜெயலலிதா இப்படிப் பேசியிருக்கிறார் என்று இதைத் தள்ளிவிடவே தோன்றும். இந்தியாவின் பொருளாதாரப் பன்முகத் தன்மையைப் பொறுத்தவரை ஜெயலலிதா சரியாகவே சொல்லியிருக்கிறார். இந்தியாவின் 12 பெரிய மாநிலங்களின் நபர்வாரி நிகர உற்பத்தி மதிப்புத் தரவுகளை 1960 முதல் 2014 வரையிலான காலத்துக்குத் திரட்டி, ஒப்பு நோக்கியபோது இது நிரூபணமானது. இந்த 12 பெரிய மாநிலங்களில்தான் இந்தியாவின் 85% மக்கள் வசிக்கின்றனர். உலகின் வேறு எந்தக் கூட்டாட்சி நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே மாநிலங்களுக்கிடையில் பொருளாதார அந்தஸ்தில் மிக மிக அதிகமான வேறுபாடு காணப்படுகிறது. பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும் என்று ஜெயலலிதா கோருவது நியாயமே என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மாநிலங்களின் தர வரிசை

1960-ல் மேற்கு வங்கத்தில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.390 ஆக இருந்தது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.330. 2014-ல் ஒரு சாமானிய மேற்கு வங்கக் குடிமகனின் ஆண்டு வருவாய் ரூ.80,000. தமிழ்நாட்டிலோ அது ரூ.1,36,000. 1960-ல் ஏழை மாநிலங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. தென் மாநிலங்களில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவை ஏழ்மை நிலையிலிருந்து பணக்கார நிலைக்கு வெகுவேகமாக முன்னேறின. அதே வேளையில், மேற்கு வங்கமும் ராஜஸ்தானும் பணக்கார மாநிலங்கள் பட்டியலிலிருந்து வெகு வேகமாகக் கீழே சரிந்தன. இந்த 12 மாநிலங்களில் பெருவாரியான மாநிலங்கள் 1960-ல் கிட்டத்தட்ட ஒரே இடத்தில்தான் இருந்தன. அதற்குப் பிந்தைய 50 ஆண்டுகளில் இம்மாநிலங்களில் சில தீவிரமான முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டதால், தர வரிசைப் பட்டியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

அதில் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால், மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளின் நிலையும், போக்கும்தான். 1960-ல் பணக்கார மாநிலங்கள் பட்டியலிலிருந்த முதல் 3 மாநிலங்கள், பட்டியலின் கீழ் வரிசையில் இருந்த கடைசி 3 மாநிலங்களைவிடச் சராசரியாக 1.7 மடங்கு செல்வ வளம் மிக்கதாக இருந்தன. 2014-ல் இந்த இடைவெளி கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. முதல் 3 இடங்களில் இருந்த மாநிலங்கள், பட்டியலின் கடைசியில் இருந்த 3 மாநிலங்களைவிட மூன்று மடங்கு செல்வ வளத்துடன் இருந்தன.

1960-ல் பணக்கார மாநிலமான மகாராஷ்டிரம், ஏழை மாநிலமான பிஹாரை விட இரண்டு மடங்கு செல்வ வளம் கொண்டிருந்தது. 2014-ல் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளம், பிஹாரைவிட 4 மடங்கு செல்வ வளம் கொண்டிருந்தது. ஏழை மாநிலத்தைவிட பணக்கார மாநிலம் 4 மடங்காக இருப்பது உலகத்திலேயே அதிக அளவாகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனம் ஆகியவற்றில் அந்த மாநிலங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு 2 மடங்கு அல்லது 3 மடங்குதான் அதிகமாக இருந்தது. இந்தியாவில் இந்த ஏற்றத்தாழ்வு வளர்ந்துகொண்டே போவதைத்தான் எமது ஆய்வுகள் உணர்த்தின. நாட்டின் வளம் பெருகப் பெருக மாநிலங்களுக்கு இடையிலான செல்வ வேறுபாடுகள் குறைந்துவிடும் என்ற கருத்துக்கு மாறான நிகழ்வுகளே இந்தியாவில் இடம்பெற்று வருகின்றன.

மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டு

பணக்கார மாநிலங்களுக்கும் ஏழை மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளியில், அமைப்புரீதியாகவே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு 1990 என்பது குறிப்பிடத்தக்கது. 1960 முதல் 1990 வரையிலான 30 ஆண்டுக் காலத்தில் செல்வ வளத்தில் பட்டியலின் முதல் 3 இடங்களில் இருந்த மாநிலங்கள், கடைசியாக இருந்த 3 மாநிலங்களைவிட இரண்டு மடங்கு பணக்கார நாடுகளாகத் தொடர்ந்து நீடித்தன. அதற்குப் பிறகு, 1990 முதல் 2015 வரையிலான காலத்தில் பணக்கார மாநிலங்களுக்கும் பட்டியலில் கடைசியாக இருந்த 3 மாநிலங்களுக்கும் இடையிலான செல்வ வளத்தின் வேறுபாடு இரட்டிப்பாகிவிட்டது. ‘1990-க்கு முன்னால்’, ‘1990-க் குப் பின்னால்’ என்று அடையாளப்படுத்தும் வகையில், இந்தியாவின் பொருளாதாரப் பன்முகத்தன்மை வரலாற்றில் இரு வேறு சகாப்தங்கள் ஏற்பட்டுவிட்டன. உலகம் முழுவதுமே வழக்கம் என்னவென்றால், ஏழை மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி கண்டு பணக்கார மாநிலங்களுக்கு இணையாக வந்துவிடுவதுதான். இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் பணக்கார மாநிலங்களுக்கும் வறிய மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு குறைவதற்குப் பதிலாக வலுவாக, நிரந்தரமாக அதிகமாகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால், பணக்கார மாநிலங்கள் மேலும் பணக்கார மாநிலங்களாகத்தான் ஆகும் என்று தெரிகிறது. மகாராஷ்டிரத்தில் இப்போது பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவானாகும்போது, பிஹாரில் இப்போது பிறக்கும் குழந்தையைவிட 4 மடங்கு பணக்காரனாகியிருக்கும்.

காரணங்கள் பல

பணக்கார மாநிலங்களின் செல்வ வளத்துக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த மாநிலங்களில் நிலவும் அரசியல் முதிர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் போன்றவை அவற்றில் சில. இவ்வாறு சில காரணங்களை நம்மால் கூற முடிந்தாலும், இவைதான் காரணம் என்று நிரூபிக்க இயலாது. அரசியல், மாநிலத்தின் தலைமை, கொள்கைகள், தொழிலாளர்களின் தொழில் திறன், அதிர்ஷ்டம் என்ற பல்வேறு அம்சங்களின் கூட்டுக் கலவையினால்தான் இப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், பணக்கார மாநிலங்களின் முன்னுரிமை, ஏழை மாநிலங்களின் முன்னுரிமையைவிட வித்தியாசமானதாகத்தான் இருக்கும். இந்தியாவின் கலாச்சார பன்மைத்தன்மையும் அரசியல் பன்மைத்தன்மையும்கூட நன்றாக நிலைபெற்றுவிட்ட உண்மையான காரணிகள். இதைப் போன்றதுதான் பொருளாதாரப் பன்மைத்தன்மையும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது.



கலாச்சாரப் பன்மைத்தன்மைதான் சில மாநிலங்களை வளர முடியாமல் பின்னுக்கு இழுக்கும் காரணமாக இருக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குத் தொழிலாளர்கள் குடிபெயர முடியாமல் தடுப்பதும் இதுதான். இந்தி மட்டுமே பேசத் தெரிந்த, மூன்று வேளையும் கோதுமைச் சப்பாத்தியை முக்கிய உணவாகக் கொண்டிருக்கும் பிஹார்வாசியால் தமிழ் மட்டுமே அதிகம் பேசிக்கொண்டிருக்கும், அரிசிச் சோறு சாப்பிடும் தமிழ்நாட்டுக்கு வேலை தேடிச் செல்வது கலாச்சாரரீதியாகக் கடினமான முயற்சி. மாநிலங்களின் பொருளாதாரத் தேவைகளும் வித்தியாசமானவை, முன்னுரிமைகளும் வெவ்வேறானவை; இந்த நிலையில் டெல்லியிலிருந்து நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான நிதிக் கொள்கை, தொழில் கொள்கை என்று திணிப்பது காலத்துக்கு ஒவ்வாத செயலாகிவிடும். பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும் என்று தான் கோருவது பிரிவினைப் போக்கு அல்ல என்று ஜெயலலிதா தன் உரையில் குறிப்பிட்டிருந்தாலும், வெவ்வேறு விதமான பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளை ஒரே சந்தையில் வைத்துச் சமாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து சில பாடங்களை நாமும் படிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தைவிட இந்திய மாநிலங்களின் பின்னணியும் பன்மைத் தன்மையும் ஆழமானவை, அகலமானவை, நிச்சயம் வெவ்வேறானவை.

(பிரவீண் சக்ரவர்த்தி, விவேக் தேஹேஜியா இருவரும் மும்பையில் உள்ள அரசியல், பொருளாதாரக் கல்வி அமைப்பைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள்.)

தமிழில்: சாரி,

நன்றி: ‘தி இந்து’ ஆங்கிலம், Hindustan Times

காவிரி

1924ல் சென்னை மைசூர் இடையே காவிரி  நதி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர்576,68டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை. 

இந்திரா ஆட்சியின் போது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் 389டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை. 

காவிரி ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தரச் சொன்னது 205டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை.

 அதன் இறுதி அறிக்கை சொன்னது 192டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை. 

இறுதியாக தமிழக முதல்வர் செயலலிதா கோரியது 50டிஎம்சி. உச்ச நீதிமன்றத்தின் ஆணைபடி கிடைத்ததோ 15டிஎம்சி தண்ணீர்.

. இபபடி வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தைப் பற்றி பிரகாஷ்காரத் கூறுகிறார் "ஆற்றுப்படுகையின் கீழ் உள்ள மாநிலமான தமிழகம்  கடந்த காலத்தில் வரலாற்று ரீதியாக தனக்கு கிடைத்த தண்ணீர் அளவு சிறிதும் குறையாமல் இப்பொழுதும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்துவது பிரச்சனையை தீர்க்க உதவாது" தீக்கதிர்(25,9,2016)   

எத்தனை அயோக்கியத்தனம். முல்லை பெரியாறு ஆணை நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அடாவடி செய்த போதும் முல்லை பெரியாறு அணை உடைவது போல் அச்சுதானந்தன் கிராபிக்ஸ் படம் காட்டிய போதும் மௌனவிரதம் இருந்து விட்டு கேரளாவுக்கு தமிழ் நாட்டிலிருந்து போகும் பொருட்களை தடை செய்கிறார்கள் என்றவுடன் குலை பதறி ஓடி வந்தனர்

Monday, September 26, 2016

சிந்துநதிநீர்ஒப்பந்தம்.

"WATER AS  WEAPON AGAINST PAKISTAN".... இந்திய பாகிஸ்தான் #சிந்துநதிநீர்ஒப்பந்தத்தை இன்று  பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.1960 ஒப்பந்தப்படி ஆறு நதிகளின் நீரில்  80% நேரு பாகிஸ்தானுக்கு திறந்து விட்டார். ஆப்சன்  1 நியாயமான நடவடிக்கையாக :- * இந்த ஒப்பந்தம் படி  36 லட்ச ஏக்கர் உயரத்திற்கு இந்தியா நீரை சேமிக்க முடியும் .ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் செய்யவில்லை. இப்போது செய்ய வேண்டும்... *7 லட்ச  ஏக்கரில் இந்தியா விவசாயம் வழிவகை உள்ளது. இதையும் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை. இப்போது செய்ய வேண்டும்... *மின் உற்பத்தி செய்ய வழி  உள்ளது. எனவே இந்தியா  அணை கட்டி மின் உற்பத்தி செய்ய வேண்டும். ..  ஆப்சன்  2 பதிலடி... இந்த ஒப்பந்தம் ஒருதலை பட்சமானது. இந்திய நலன்களுக்கு எதிராக  உள்ளது என அறிவிக்க வேண்டும். * நதிகளின் குறுக்கே அணை கட்ட வேண்டும். .. சீனா பிரம்மபுத்திரா நதியில்  இந்திய  ஒப்புதல் இல்லாமல் அணை கட்டியுள்ளனர். .. பாகிஸ்தான் சர்வதேச தீர்ப்பாயம் செல்லும். கவலையில்லை. தெற்கு பசிபிக் கடலில் சீனாவுக்கு எந்த  உரிமையும் இல்லை என்று சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  இதை சீனா ஏற்கவில்லை. .. தீவிரவாதிகள இந்தியாவிற்கு  அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். எனவே பாகிஸ்தான் குரல்வளையை நெறிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு செல்லும்  ஆறு நதிகளின் நீரை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் பாலைவனமாக மாறும்... நல்ல முடிவை நாட்டு மக்கள் அனைவருக்கும்  எதிர்பார்த்து  இருக்கின்றனர்.

மணல் குவாரியில் விதிகள் மீறல்

மணல்  குவாரியில் விதிகள் மீறல்:
-----------------------------------
மணல்  குவாரியில் விதிகள் மீறப்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது . மணல் குவாரியில்  அரசு பொதுப்பணிதுறை  நடத்துவதாக பெயர் பலகையில் (BOARD) உள்ளதே தவிர,  மணல் குவாரியில் அரசு அதிகாரிகள் யாரும்  இருப்பதும் இல்லை. விதி 1 - காலை 7 முதல் மாலை 5 மணி  வரைதான் 
மணல் எடுக்க வேண்டும்.

விதிமீறல் :  ஆற்றில் 24 மணி நேரமும் (இரவு -பகல்) மணல் அள்ளப்பட்டுக் கொண்டு உள்ளது. மக்கள் போராட்டத்தால் இது நிறுத்தப்படுவதும்,  சில வாரங்களில் மீண்டும் தொடர்வதும் என்ற   நிலையே  உள்ளது.

விதி 2 -நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

விதிமீறல் :  சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டாலும் கூட மணல்குவாரி இயங்கும் பகுதியில் எவ்வித வெளிப்படையான நிர்வாக  தன்மையும் இருப்பது இல்லை.

விதி 3 - ஆற்றுப் படுகையில் மூன்று அடி ஆழம்(ஒரு மீட்டர்) வரை மட்டுமே தோண்டி   மணலை அள்ள வேண்டும்;

விதிமீறல் :  ஆறு முழுக்கவே  10 அடி முதல் 20 அடி ஆழம் வரை(களிமண் மற்றும் பாறை தெரியும்வரை) மணல் சுரண்டி எடுக்கப்பட்டு உள்ளது.

விதி 4 -மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற  அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது.

விதிமீறல் :  ஆறு முழுக்க  நிரந்தரமான  15 க்கும் மேற்பட்ட சாலைகள்,    மணலை எடுத்துச் செல்வதற்காக குறுக்கு வெட்டாக அமைக்கப்பட்டு உள்ளது.

விதி 5 - ஆற்றுக்குள் அமைக்கப்படும்  சாலை,  மக்கி போகும் பொருட்களைக் கொண்டு மட்டும் ஏற்படுத்த வேண்டும்..

விதிமீறல் :  ஆற்றுக்குள் அமைக்கப்படும்  சாலையில்  பெரிய, பெரிய பாறை கற்களை போட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

விதி 6- மணலை அள்ளுவதற்கு மனித சக்தியைத் தவிர,  வேறு இயந்திரங்களைப்  பயன்படுத்தக்  கூடாது.  தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்தவேண்டும். அதுவும் 2 பொக்கலைன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விதிமீறல் :  மணல்குவாரி பகுதியில் ஆற்றில் 8 முதல் 12 வரை  ஜே.சி.பி & பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுதான்  இந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டுக் கொண்டு உள்ளது.

விதி 7 -ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி  தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும்  நட்டு,   எல்லையை வரையறுத்து பிரித்துக் காட்ட வேண்டும். அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு  இருக்க வேண்டும்.

விதிமீறல் :  ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும் நட்டு (800 மீ * 300 மீ) எல்லையை வரையறுத்து எங்கும்  பிரித்துக் காட்டவில்லை. மணல்குவாரி ஒரு ஊரில் அமைகிறது என்றாலே  அதன் கிழக்கு மற்றும் மேற்கில் ஆறு முழுக்கவே  அடுத்தகுவாரி அமையும்  ஊர் வரை  மணல் அள்ளுவது என்பதுதான்  நடைமுறையாக  உள்ளது.

விதி 8 -மணலை அள்ளும்பொழுது, ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளுக்கு  எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது.

விதிமீறல் :  மணலை அள்ளும்பொழுது கரையாவது, மேடாவது என  மணல் இருக்கும் பகுதி எங்கும் நீக்கமற அள்ளி, கரைகளுக்கும்    பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விதி 9 - வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று மணல்குவாரி இயங்க கூடாது . அரசு விடுமுறை நாட்களில் இயங்கக் கூடாது

விதிமீறல் :  ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும்   மணல்குவாரி இயங்குகிறது. மக்களின்   தொடர்ந்த போராட்டத்தால் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சில வாரங்கள்  நிறுத்துவது, மீண்டும் தொடங்குவது என்ற நிலையே உள்ளது.

விதி 10 - ஆற்றின் குறுக்கே பைப்புகள் போட்டு பாலம் போல் எதுவும் அமைக்க கூடாது!

விதிமீறல் :  ஆற்றில் குறுக்கே  12 பைப்  வரை  எல்லாம் போட்டு, நிரந்தர  பாலம் அமைத்து மணல்குவாரி இயங்கி வருகிறது.

விதி 11 - ஆற்றின் இருபுறமும், கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது.   ஆற்றின் கரைக்கு அருகில்தான் மணல் அள்ள வேண்டும்.

விதிமீறல் :  கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது.   ஆற்றின் கரைக்கு அருகில்தான் மணல் அள்ள வேண்டும் என்பது  எல்லாம் எழுத்தில் மட்டும்தான் . இக்கரை முதல் அக்கரை வரை ஆற்றில் 2 கிலோ மீட்டர் நீளம்- 2 கிலோ மீட்டர் அகலத்தில் ஆற்றில் மணல் முழுக்கவே அள்ளப்பட்டு உள்ளது.  ஆற்றில்  எங்குமே மணல் சிறிதளவு கூட இல்லை.

விதி 12 - மணல்குவாரியால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

விதிமீறல் :  மணல்குவாரி அமைந்துள்ள அனைத்து பகுதியிலும்  நிலத்தடி நீர் குறைந்து மரங்கள் கூட காய்ந்து வருகிறது. மணல் லாரிகளில் அதிக பாரம்(3 யூனிட்க்கு பதில் 7யூனிட் வரை )   ஏற்றி வருவதால்  கிராம  சாலைகள்  அனைத்தும்  விரைவில் பழுதடைதல், விவசாயம் அழிவது என்பது இங்கு இயல்பானதாகவே உள்ளது.

விதி 13 -குவாரி மணல் கொட்டி வைக்கப்படும் இடத்திற்க்கு,  ஊராட்சி மன்றத்திற்கு வரி செழுத்த வேண்டும்.

விதிமீறல் :  இது எல்லாம் வெறும் பெயரளவில் மட்டுமே. 100 இல்  ஒரு பங்கு மட்டுமே வரியாக ஊராட்சிக்கு  கிடைக்கும். மணல் குவாரி இயங்கும் இடம் - மணல் கொட்டி வைக்கப்படும் இடம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பாலும்  மணல்கொள்ளையர்களின் அறிவிக்கப்படாத பங்குதாரராகவே உள்ளனர். இங்கு விதிவிலக்காக கூட  ஊராட்சி தலைவர் ஒருவர் கூட மணல்குவாரியின் முறைகேட்டை எதிர்பவர்களாக இல்லை.

விதி 14 -குவாரி மணல், கொட்டி வைக்கப்பட்டு எடுக்கப்படுவதால் அதற்க்கு வருமானவரி   துறையிடம் செகண்ட் சேல் (second sals) வரி செழுத்த வேண்டும்.

விதிமீறல் :  இதுவும்   வெறும் பெயரளவில் மட்டுமே. எங்கு கொட்டி எடுக்கப்படும் மணலுக்கு முறையான கணக்கு கட்டப்படாததால் 100 இல்  ஒரு பங்கு மட்டுமே செகண்ட் சேல் (second sals)  வரியாக அரசுக்கு  கிடைக்கும். 99 பங்கு அதிகாரிகள் உட்பட பலராலும் முறைகேடாக அபகரிக்கப்படுகிறது.

விதி 15 -  குடிநீர் வடிகால் வாரியத்திடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.

விதிமீறல் :  சான்று எல்லாம்  குடிநீர் வடிகால் வாரியத்திடம் தடையில்லா  சான்று  வாங்கப்பட்டு இருக்கும். ஆனால்  குடிநீர் வடிகால் வாரியத்தால் மணல் முறைகேடாக அள்ளும் பகுதியில் எவ்வித  புகாரும் இருக்காது.

விதி 16 - குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறுப்பில் கூட்டுக குடிநீர் திட்டத்திற்காக.   ஆறுகளில் உள்ள  நீர் உறிஞ்சும்  கிணறுகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மணல் எடுக்க கூடாது.

விதிமீறல் :  இது எல்லாம் காகிதத்திற்கு மட்டுமே. ஆறுகளில் உள்ள  நீர் உறிஞ்சும்  கிணறுகளில்  அருகேயே மணல் அள்ளியதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் இங்கு உள்ளது.

விதி 17 -     ஆற்றின்  இரு கரையோரம் தான் மணல் அள்ள  வேண்டும்,. ஆற்றின் நடுவில் அள்ளக்கூடாது.  ஆற்றின் நீரோட்டப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.

விதிமீறல் :  இதுவும்  காகிதத்திற்கு மட்டுமே இருக்கும் விதி ஆகும் . நடைமுறையில் ஆற்றின் நடுவிலும் - ஆறு முழுக்க   அள்ளுவதும், ஆற்றின் நீரோட்டப் பகுதியில் அள்ளுவதும் என்பதே உண்மை.

விதி 18 -  மணலை அள்ளும்பொழுது நீர் ஊறினால்,  அந்தப் பகுதியில் மணல்  அள்ளக் கூடாது.

விதிமீறல் :  சட்டத்திற்கு புறம்பாக  மணலை அள்ளும்பொழுது நீர் ஊறும் பகுதியில்(நீரோட்டப் பகுதியில்) மணல் அள்ளப்பட்டு கொண்டுதான்   உள்ளது.

விதி 19 - மணல் அள்ளும் போக்கில், ஆற்றுக்குள் குளம் போன்ற பள்ளங்களை  ஏற்படுத்தக் கூடாது

விதிமீறல் :  மணல் அள்ளும் போக்கில், ஆறு முழுக்கவே   குளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

விதி 20 -- ஆற்றின்  இரு  கரைகளிலும்,  கரைகளை ஒட்டியுள்ள    பகுதிகளிலும்    காணப்படும்   நீர்தாவரங்களைச்    சேதப்படுத்தக்    கூடாது.

விதிமீறல் :  ஆற்றின் இரு கரைகளிலும், கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் காணப்படும் நீர்தாவரங்களைச் அழித்தே விட்டனர், மணல்குவாரி இயங்கும் பகுதியில்  ஆற்றின் கரைகளில் எங்கும் எந்த நீர் தாவரங்களும் இல்லை. களிமண் தெரியும் வரை அள்ளப்பட்டு வருவதால் ஆறு முழுக்கவே  மணல் அள்ளப்பட்டதால்    சீமை கருவேலமரம்(வேலிக்கருவை) மரமாகவே உள்ளது.

விதி 21 --  கழிவுமணலை  ஆற்றில்  கொட்டக் கூடாது.

விதிமீறல் :  ஆற்றில் கழிவுமணலை கொட்டுவது என்பதுதான் நடைமுறையாக உள்ளது.  மேலும் ஆற்றில்   மணலை தடுத்து வைக்கும் கல்லரைகளை கூட விட்டு வைக்காமல் அள்ளி சென்று உள்ளனர்.

விதி 22 --  மணல் அள்ளுவதற்க்காகவே ஆற்றின் போக்கை திசை திருப்பி விடக் கூடாது

விதிமீறல் :   சட்டப் புறம்பாக   மணல்குவாரி இயங்க ஆற்றின் நீரோட்டப் பாதையில்  ஆறு மறிக்கப்பட்டு, திசை திருப்பி விடப்பட்டு மணல் அள்ளப்பட்டு உள்ளது.

விதி 23 --  சுற்று சூழல் ஆணைய விதிப்படி,  மணல் குவாரி நடத்த   பொதுமக்களிடம்  கருத்து கேட்புக் கூட்டம்  நடத்த வேண்டும்

விதிமீறல் :  பொதுமக்களிடம்  கருத்து கேட்புக் கூட்டம் கூட  நடத்தாமலேயேதான்,  நஞ்சை  புகழூர் - தவுட்டுப்பாளையம், நஞ்சை  தோட்டக்குறிச்சி,  நஞ்சை கடமங்குறிச்சி,   கோம்புபாளையம்- நடையனுர்   புதிய மணல் குவாரிக்கான  அனுமதி சட்ட விரோதமாக     கொடுக்கப்பட்டுள்ளது.

விதி 24 :சுற்றுசூழல் அனைய விதிப்படி  மணல் குவாரி முறைகேடு பற்றி புகார்களை  உதவி பொறியாளர் பொ.ப.து(நீ.ஆ.து, ஆ.பா.பிரிவு,கரூர்)  அவர்களின் தொலைபேசி எண்,  மண்மங்கலம் வட்டாட்ச்சியர்  தொலைபேசி எண்க்களுக்கு  புகார் அளிக்கலாம் என அவர்களது தொலைபேசி எண்களை   மணல்குவாரி  அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்த வேண்டும்.

விதிமீறல் :   தற்போது மணல் அள்ளும் இடம் [நஞ்சை தோட்டக்குறிச்சி புல எண்:சர்வே எண் 915(பகுதி) படி]  அரசின்  அனுமதி பெற்ற இடமா எனக் கூட யாருக்கும் தெரியவில்லை. இது பற்றி விபரம் கேட்க  மணல்குவாரி  அறிவிப்பு பலகையில் உள்ள  உதவி பொறியாளர் பொ.ப.து(நீ.ஆ.து, ஆ.பா.பிரிவு,கரூர்  )  அவர்களின் தொலைபேசி எண்-  234713, மண்மங்கலம் வட்டாட்ச்சியர்  தொலைபேசி எண்-  288334 ஆகியோருக்கு நாங்கள்  கடந்த  பல நாட்களாக தொலைபேசி செய்தும்,  ரிங்க் அடிக்கின்றதே ஒழிய  யாரும் எடுத்து கூட எதுவும் பேசவில்லை. அதிகாரிகள் செயல்பாடு இப்படித்தான் உள்ளது.

உண்மையாக புகார்களை பெற்று மணல்குவாரி முறைகேடுகளை    தடுக்க வேண்டுமானால், பல உயர் நீதிமன்ற நீதிபதிகளால்  முறைகேடு நடக்கிறது என குற்றம் சாட்டப்பட்ட மணல் குவாரிகளுக்கு, பொறுப்பான  அரசு அதிகாரிகளிடம் உள்ள   அலைபேசி எண்களை  மக்களுக்கு தெரியப்படுத்தி  வெளிப்படையாக இயங்கி இருக்க வேண்டும்.

விதி 25 : மணல் முறைகேடாக அள்ளுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

விதிமீறல் :  கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு  மணல் முறைகேடாக அள்ளபபட்டுக் கொண்டு உள்ளது. ஆனாலும் மணல் கொள்ளை நடத்துபவர்கள் யாரின் மீதும்  இதுவரை  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்து கைது  செய்யவில்லை என்பது  மட்டும் அல்ல.   அவர்களுக்கு காவல்துறையும், பெரும்பாலான   அனைத்துதுறை  அதிகாரிகளும் துணை நின்று வருகின்றனர்.  மணல்கொள்ளை நடத்துபவர்களை கண்டு நேர்மையான  அதிகாரிகளும் பயந்துள்ளனர்  என்பதே எதார்த்தம்.

விதி 26 : மணல் எடுத்து செல்லும் லாரிகள் அனைத்தும் தார்பாய் போட்டு, மணல் எதுவும் பறந்து செல்லாமல்   மூடி மட்டுமே எடுத்து   செல்ல வேண்டும்

விதிமீறல் :  மணல்குவாரியில் இருந்து ஸ்டாக் யார்டுக்கு மணல்  எடுத்து செல்லும் லாரிகள்  பெரும் பாலும்  தார்பாய் போட்டு  மூடி செல்வதில்லை.

விதி 27 -    மேலும், மணல் அள்ளிய விபரங்கள் அடங்கிய பதிவேடு, புகார் பதிவேடு,  தாசில்தார் அடங்கிய ஆய்வுக்குழு வாரம் ஒரு முறை ஆய்வு செய்த  விபரப்  பதிவேடு  அனைத்தும் மணல் அள்ளும் ஆற்றின்  கரையில்  வைத்திருக்க  வேண்டும்

விதிமீறல் :  இது எங்கும் நடைமுறையில் இல்லை

விதி 28  - மணல் குவாரி கண்காணிப்பதற்காக 2006 -இல் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி,   அரசாணை எண் 135-ன் படி  மாவட்டம் மற்றும் வட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் வட்ட அளவில் சிறப்புக் குழு எனஅமைத்து இயங்க வேண்டும் எனவும், மாதம் ஒருமுறை இக்குழு  கூடி கனிமவள முறைகேடு பற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும், எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது.

விதிமீறல் :  இது எங்கும் இதுவரை  உண்மையாக நடக்காமலேயே உள்ளது .  போலியாக -பொய்யாக 
கணக்கு காட்டுவதற்காக மட்டும் இருக்கிறது.

Sunday, September 25, 2016

திருநெல்வேலி சதி வழக்கு;

கி.ராவுடனான சந்திப்பு - 2
--------------------------
திருநெல்வேலி சதி வழக்கு;
.........................................
நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக கி.ரா அவர்கள் நெல்லை சதி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதில் கோவில்பட்டி சதி வழக்கு, #நெல்லைசதிவழக்கு என இரண்டு வழக்குகளாக இருந்ததை நெல்லை சதி வழக்கு என்று ஒரே வழக்காக அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் மாற்றியது. அந்த சமயத்தில் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாராசாமி இராஜா கி.ரா வைப் பற்றி நன்கு அறிந்தவர். கம்யூனிஸ்டாக இருந்தாலும் இரசிகமணி தோழராக இருந்த கி.ரா வை சம்பந்தமில்லாமல் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளார்களே என தன்னுடைய அதிகாரிகளிடம் சொல்லி நீக்கி விட்டார். முதல்வர் குமாரசாமி ராஜா,  இடைசெவல் ராஜ நாராயணனை எனக்கு நன்றாக தெரியும் அவரை ஏன் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்தீர்கள் என போலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இந்த பழைய செய்திகளோடு கி.ரா #திருநெல்வேலிசதிவழக்கை பற்றி நினைவு கூர்ந்தது வருமாறு;
1949ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது நெல்லை சதி வழக்கில் ஆர். நல்லக்கண்ணு, ப. மாணிக்கம், மாயாண்டி பாரதி, ஏ. நல்லசிவன், பொண்ணு, கிருஷ்ண கோனார், சேவியர் சண்முகவேல், செல்லையா நாடார், ஞானி ஒளிவு, பீர் இஸ்மாயில், ஏ. ராமச்சந்திரன், ஜேக்கப், சுப்பையா ரெட்டி, அழகிரி தேவர், அய்சக், சுடலைமுத்து, எஸ்.எஸ். மாணிக்கம், டி.பி. ராமலிங்கம், டி.ஜி. சுப்ரமணியன், வேலுசாமி தேவர், ஆர்.வி. அனந்த கிருஷ்ணன், சப்பாணி முத்து, ஷேக் சுலைமான், பாஸ்கரன், கே.பி.எஸ். மணி, சொர்ணம், பலவேசம், டோனாவூர் பெருமாள், வி.ஆர்.சுப்பையா முதலியார், வேலாயுதம் பண்டிதர், கொன்ன சிவனார், புலவர் ராமையா ஆகியோர் மீது மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியும் விதத்தில் ரயில்வே பாலங்கள், தண்டவாளங்கள், தந்திக் கம்பிகளைத் தீ வைத்துத் தகர்த்து, பொதுச் சொத்துகளைச் சீர்குலைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படச் சதி செய்த்தாக அன்றைய காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தொடக்கத்தில் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் கி.ரா., நாலாட்டின்புத்தூர் என். ஆர். சீனிவாசன் போன்றோர் பெயர்களும் பழிவாங்கும் நோக்கத்துடன் சேர்க்கப்பட்டன. இதை அறிந்த டி.கே.சி அவர்கள் தன்னுடைய உதவியாளரிடம், “இடைசெவல் நாயக்கரை எதுக்குய்யா சேர்த்தாங்க?” என்று கேட்டுள்ளார். விவரங்களை அறிந்தவுடன் அன்றைய முதல்வர் குமாராசாமி ராஜாவைத் தொடர்பு கொண்டு “அரசாங்கம் எழுத்தாளர்களையும், சமூக சிந்தனையாளர்களையும் ஏன் திட்டமிட்டுச் சதி வழக்கு என்று போட்டுள்ளது?” என்று டி.கே.சி கடுமையான குரலில் பேச, குமாரசாமி ராஜா தன்னுடைய உதவியாளர் சுப்புராஜாவை அழைத்து, கி. ரா. பெயரை சதி வழக்கிலிருந்து நீக்கினார்.
மொத்தம் 97 பேரில் கைதாகாத பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், பயில்வான் அருணாச்சலம் ஆகிய மூவர் மீது தனியாக 1953ல் விசாரணை நடத்தி பாலதண்டாயுதம் மற்றும் மீனாட்சிநாதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் என்.டி. வானமாமலை, பாளை சண்முகம் ஆகியோர் வாதாடினார்கள். 92 பேர் மீது ஒரு வருடம் விசாரணை நடத்தி 78 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 14 பேர் தண்டிக்கப்பட்டனர். ப. மாணிக்கம், ஆர். நல்லக்கண்ணு, வேலுசாமி தேவர், வேலாயுதம், கே.பி.எஸ். மணி, வி. அழகுமுத்து, ஐ. மாயாண்டி பாரதி, ஆர். கிருஷ்ண கோனார், எம். பொண்ணு ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு 5 ஆண்டுத் தண்டனையும், ஒருவருக்கு ஓராண்டுத் தண்டனையும் வழங்கப்பட்டன.  நெல்லை சதி வழக்கில் குற்றவாளிகளைத் தேடி நெல்லை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, கோவில்பட்டி, எட்டயபுரம், போன்ற பகுதிகளுக்குச் சென்ற காவல்துறையினரால் வதைக்கப்பட்டதை கி.ரா பெருமூச்சுடன் நினைவு கூறினார்.
(பதிவுகள் தொடரும்)#ksradhakrishnanposting

ராஜாஜி ஹால்

ராஜாஜி ஹால்

பல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட ராஜாஜிஹாலின் கதையும் அதே அளவிற்கு பிரம்மாண்டமானதுதான். இந்த ஹால் ஒரு மாபெரும் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆம், திப்பு சுல்தானுக்கு எதிராக நான்காவது மைசூர் யுத்தத்தில் கிழக்கிந்திய படைகள் பெற்ற வெற்றியின் சின்னம்தான் இது.

1800இல் தொடங்கி 1802இல் கட்டி முடிக்கப்பட்டபோது, இதற்கு பான்குவிடிங் ஹால் (Banqueting Hall) எனப் பெயரிடப்பட்டது. காரணம், பொதுநிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு அரங்கமாகத் தான் இது கட்டப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளரும் வானியல் நிபுணருமான ஜான் கோல்டிங்ஹாம் என்பவர்தான் இந்த பிரம்மாண்ட ஹாலை வடிவமைத்தார். இவர் வானியல் நிபுணர் என்பதாலோ என்னவோ, வான சாஸ்திரத்தில் அதிக ஆர்வம் காட்டிய புராதன கிரேக்கர்களின் கன்னித் தெய்வமான ஏத்தெனாவின் பார்த்தினான் கோவில் சாயலில் இதனை வடிவமைத்தார். இப்போதும் ஏத்தென்ஸ் நகரில் சிதிலமடைந்து கிடக்கும் பார்த்தினான் கோவிலைப் பார்த்தால், உங்களுக்கு இதை ஏற்கனவே எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும்.  

சரி, விஷயத்திற்கு வருவோம். புதிய தலைமைச் செயலக கட்டடம் அமைந்திருக்கும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் பரந்தவெளி முழுவதும் ஒரு காலத்தில் ஆண்டானியா தி மதிரோஸ் (Antonia de Madeiros) குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது. அன்றைய சென்னைப்பட்டினத்தின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த இந்த குடும்பத்தினால்தான் சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயரே வந்தது என்று ஒரு கருத்தும் உள்ளது. இந்த குடும்பத்திடம் இருந்து, அந்த பரந்து விரிந்த மைதானத்தை 1753இல் விலைக்கு வாங்கிய கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் ஆளுநர்கள் தங்குவதற்காக அங்கு ஒரு பெரிய பங்களாவைக் கட்டியது. அதுதான் அரசினர் இல்லம்

சரித்திரப் புகழ்மிக்க பல நிகழ்வுகளுக்கு சாட்சியமாய் இருக்கும் ராஜாஜி ஹால்
ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் கிளைவ் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1800களில் இந்த கட்டடம் சற்றே புனரமைக்கப்பட்டது. அப்போதுதான் அருகில் பான்குவிடிங் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் வடிவமைப்பாளர் ஜான் கோல்டிங்ஹாம் இதற்காக உருவாக்கிய வரைபடங்கள் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஹால், 1802 அக்டோபர் 7ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை மாநகரின் எத்தனையோ முக்கியமான விழாக்கள் இந்த கட்டடத்தில் நடைபெற்றன. மக்கள் இதைப் பெருமளவு பயன்படுத்தியதால், 1875இல் தொடங்கி இந்த ஹால் அடிக்கடி புனரமைக்கப்பட்டும், விஸ்தரிக்கப்பட்டும் வந்தது. 1857இல் இருந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் இந்த பிரம்மாண்ட ஹாலில்தான் நடைபெற்றது. 1879இல் செனட் இல்லம் கட்டப்படும் வரை மெட்ராஸ் பட்டதாரிகள் இங்குதான் தங்களின் பட்டங்களை பெற்றுச் சென்றனர்.

1938 ஜனவரி 27 - 1939 அக்டோபர் 26 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானியின் சட்டப்பேரவை இங்குதான் செயல்பட்டது. பின்னர் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததும், முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலச்சாரியின் நினைவாக, இந்த கட்டடம் 1948இல் ராஜாஜி ஹால் எனப் பெயர் மாற்றப்பட்டது.

120 அடி நீளமும், 65 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்ட இந்த விசாலமான கட்டடம், வெறும் கூட்டங்கள் மட்டுமின்றி சரித்திரப் புகழ்மிக்க பல நிகழ்வுகளுக்கு சாட்சியமாய் இருந்திருக்கிறது. 1961ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது பிறந்தநாள் கேக்கை இந்த ஹாலில்தான் வெட்டினார். அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே காமராஜர் இறந்தபோது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இதே ராஜாஜி ஹாலில்தான் அவரின் உடல் வைக்கப்பட்டது. இவரைத் தவிர பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற முன்னாள் முதலமைச்சர்களின் உடல்களுக்கு தமிழகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதையும் இந்த ஹால் கனத்த இதயத்தோடு பார்த்திருக்கிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஒரு காலத்தில் அழகிய வனம்  போல இருந்தது. கொளுத்தும வெயிலிலும் குளிர்ச்சியான நிழல் பரப்பும் நிறைய ஆலமரங்கள் இங்கிருந்தன. ஆனால் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இதில் பல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அரசினர் இல்லம், காந்தி இல்லம் உட்பட இங்கிருந்த சில பழைய கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. ஆனால் இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்து, 200 ஆண்டுகளைக் கடந்து நின்று கொண்டிருக்கிறது ராஜாஜி ஹால்.

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...