Friday, September 23, 2016

அறிஞரும் ! கவிஞரும் !

தேராட்டம் காரினிலே திமிரோடு போரவரே எங்கள்-ஏரோட்டம் நின்னு போனால் உங்க  காரோட்டம் என்னவாகும் ? என்ற வரிகள், மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் எனத் தொடங்கும் திரைப்பாடலில் இடம் பெற்றதாகும். மக்களால் மிகவும் விரும்பப்பட்டப் பாடலாகும். 

1967 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்ற சில மாதங்களில், மூர்மார்கெட் வணிகர் சங்க சார்பில்---தற்போது  சென்டரல் புற நகர் தொடர்வண்டி நிலையம் உள்ளது---நடந்த விழாவில் இந்தத் திரைப்பாடலை அரசுத் தடை செய்ய வேண்டும்  என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது -"-ஊர் கெட்டுப் போனதற்கு மூர்மார்கெட் அடையாளம்"---" நாடு  கெட்டுப்போனதற்கு மெட்ராஸ் நாகரிகம் அடையாளம் "- என்ற வரிகளும் இப்பாடலில் இடம்பெற்றதே காரணமாகும். 

பேரறிஞர் அண்ணா , கவிஞர் கண்ணதாசன் சிறந்த கவிஞர் . தற்போது என்னை காங்கிரசிலிருந்து கடுமையாகத் தாக்கி வருகிறார். இருப்பினும் அந்தக் கவிதை வரிகளில் பல நல்லக் கருத்துக்கள் உள்ளன. தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஏற்க விரும்பாதக் கருத்துகளை ஒதுக்கிவிடலாம் . ஜனநாயகத்தில் கவிதைகளின் தன்மைகளை, பண்புகளை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். காலம்தான் இதற்குப் பதில் கூற வேண்டும் என்றார். 

சில மாதங்களாக சென்னையில் இரவில் கொழுத்த பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகளும் பெண்களும் அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு ஆடும் ஆட்டங்கள் பொது நெறிகளையும்,  அரசு விதிகளையும் காலில் போட்டு மிதிப்பதாக அமைந்து வருகின்றன . 

மது ஆலை முதலாளியி்ன் மகன், பெரும் வணிகரின் மகள், பணக்கார வழக்கறிஞரின் மகன் ஆகியோர் மதுவில் விளையாடி, பல லட்சம், கோடி ரூபாய் மதிப்புள்ள மகிழுந்துகளை ஏழைகள் மீது ஏற்றி உயிர் இழக்க செய்து வரும் போக்குப் பெருகி வருகிறது. பணம்  படைத்தவர்களின் அளவிறந்த கொட்டங்கள் பிரான்சு நாட்டின் லூயி மன்னன் ஆட்சியில் ஏழைகள் எதிர் கொண்ட இன்னல்களை நினைவூட்டுகின்றன. 

இந்தியாவில் கார்கள் வைத்திருப்போரின்,  எண்ணிக்கை 10 விழுக்காடு, இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 விழுக்காடு எனப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. 66 விழுக்காடு ஏழை, நடுத்தர மக்கள்,  மற்ற வாகனங்களில் பயணம் செய்கிறார்கள்.

 பெருநகரங்களில் சாலை , மேம்பால விரிவாக்கம் 34 விழக்காடு மக்களின் நன்மைக்கே செய்யப்படுகிறது. சிங்காரச் சென்னையில் நடைமேடையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவல நிலை தொடர்கிறது. 

நீதீ சட்ட அறிஞர் கிருஷ்ண ஐயர் 1990இல் இத்தகைய போக்கினைச் சுட்டிக்காட்டி,-"Flying over dead bodies of poor"-fly over என்றார். பெரும்பான்மையான மக்களின் அடிப்படை தேவைகளைப் புறக்கணித்து மேம்பாலப் பணிகளுக்கு முன்உரிமை அளிப்பதை விமர்சனம் செய்தார்

அவர் குறிப்பட்டது போல , சாலை ஓரத்தில் உறங்கும் மக்கள், தொழிலாளர்கள், தானி ஒட்டிகள் -auto drivers -ஆகியோர் இந்தப் பணச் செருக்குப் படைத்தவர்களால் நாளும் சிதைக்கப்படுகிறார்கள். 

இன்றைய அரசியலில் பங்கு பெறும் நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, வட்டச் செயலாளர்கள் வரை தேராட்டம் கார்களிலே திமிரோடு வலம் வருகிறார்கள். வழிக்காட்ட வேண்டிய தலைவர்களோ , அன்றைய மன்னர்கள் யானையில் ஊர்வலம் வந்தது போல , யானைப்போன்ற பெரிய கார்கள் புடை சூழ வருகிறார்கள்.

 இதை அறிந்துதானோ பேரறிஞர் அண்ணா கவிஞர் கண்ணதாசன் திரைப் பாடலுக்கு ஆதரவு நல்கினாரோ! காலத்தை வென்று ஒளிறுகிறார்கள் அறிஞரும் ! கவிஞரும் !

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...