Thursday, September 8, 2016

காவிரி

உச்ச நீதி மன்ற ஆணைப்படி கர்நாடகாவில் உள்ள இரு அணைகளிலிந்து நேற்று முன் தினம் இரவு 15ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்று காலை வரை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டுலுவிற்கு தண்ணீர் வரவில்லை. நேற்றைய நிலவரப்படி 3.500 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் இன்று காலை  3ஆயிரமாக குறைந்துள்ளது. கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட்டது  உண்மையா ?

உண்மை 1: 
இந்த ஆண்டும்   குறுவைச் சாகுபடிக்குத் திறக்க மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இப்படி ஜூன் 12-ம் தேதி அணை திறப்பது தள்ளிப்போவது மேட்டூர் அணையின் வரலாற்றில் இது  53-வது ஆண்டு. தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கிப்போவார்கள். 

உண்மை 2: 
காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், அதைவைத்து 2,000 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடி செய்துவருவது தமிழக விவசாயிகள்தான். நதி நீர் உரிமையைப் பொறுத்த அளவில், அது உற்பத்தியாகும் இடத்தைவைத்துத் தீர்மானிக்கப்படுவது இல்லை. பாரம்பரிய மாக அதைப் பயன்படுத்தி வருவோருக்கே முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை.

உண்மை 3: 
தமிழகத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை, அதற்குப் பின் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்ட மேலணை, கீழணை நீங்கலாக, காவிரியில் 1924 வரை அணைகள் எதுவும் கிடையாது. இங்கு மேட்டூர் அணையைக் கட்டும்போது, இன்றைய கர்நாடகத்தின் முதல் அணையான கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டிக்கொள்ள மைசூர் மன்னருக்கு ஆங்கிலேய அரசு அனுமதி அளித்தது. கர்நாடகம் நெல் சாகுபடியை ஆரம்பித்ததும் காவிரி அரசியலை ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான். கிருஷ்ணராஜசாகர் அணை நீங்கலாக கர்நாடகம் காவிரியில் கட்டிய அனைத்து அணைகளும் சட்டத்துக்குப் புறம்பானவை. அதாவது, மத்திய அரசின் அனுமதி பெறாதவை. ஒரு மாநில அரசு இப்படி முறைகேடாக நடந்துகொண்டால், அந்த அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. கர்நாடகத்தின் இந்த முறைகேடு அரசியலை முதலில் தொடக்கிவைத்தது காங்கிரஸ் அரசு.

உண்மை 4: 
1901-ல் அன்றைய மைசூர் மாகாணத்தின் சாகுபடிப் பரப்பு - 1.11 லட்சம் ஏக்கர். 1970-ல் கர்நாடகத்தின் சாகுபடிப் பரப்பு - 6.83 லட்சம் ஏக்கர். 1991-ல் நடுவர் மன்றத்தில் தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர் என்று சொன்னது கர்நாடக அரசு. இதற்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும் என்று கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதித்தது நடுவர் மன்றம். ஆனால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு அதே நடுவர் மன்றம் 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கியது. இப்போது தன்னுடைய பாசனப் பரப்பை 23.85 லட்சம் ஏக்கராக விரிவாக்கியுள்ளது கர்நாடகம். மேட்டூர் அணை பயன்பாட்டுக்கு வந்த 1934-ல் தொடங்கி 1970 வரை ஆண்டு தோறும் அணைக்கு வந்த சராசரி நீரின் அளவு 378 டி.எம்.சி. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு இதை 205 டி.எம்.சி. ஆக்கியது; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கியது.

உண்மை 5: 
காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாக் காலங்களிலும் சேர்ந்தே செயல்படுகின்றன. மாநில நலனே அங்கு பிரதானம். தமிழகத்திலோ நேர் எதிர்நிலை. 
உண்மை 6: 
இதற்கிடையே 1983-ல் காவிரி விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடித்து, 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தபோது, மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறி தன்னையும் அந்த வழக்கில் இணைத்துக்கொண்டது தமிழகம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி, 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பின் இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் மன்றம். காவிரியின் ஒட்டுமொத்த நீரோட்டத்தை 740 டி.எம்.சி. எனக் கணக் கிட்டு அதில், தமிழகம் 562 டி.எம்.சி., கர்நாடகம் 465 டி.எம்.சி., கேரளம் 92.9 டி.எம்.சி., புதுவை 9.24 டி.எம்.சி. கேட்டன. இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. என ஒதுக்கீடு செய்தது நடுவர் மன்றம். தமிழகத்துக்கு இது சேதம் தரும் தீர்ப்பு. எனினும், இரு தரப்பு விவசாயிகளின் நலன்களையும் ஒப்பிட்டு, அரை மனதோடு ஏற்க வேண்டிய நிலை. ஆனால், இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போனது கர்நாடகம். வேறு வழி இல்லாமல் தமிழகமும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. இந்த முறையீடுகள் ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.

உண்மை 7: 
காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள்  இருந்தன. ஊருக்கு ஊர் கோட்டகம் எனப்படும் நீர்ப்பிடிப்புப் பகுதி இருந்தது. குடிமராமத்து முறை வழக்கொழிந்த பின், படிப்படியாக இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தன. அரசு ஆழ் குழாய் விவசாயத்தை ஆதரித்தது. இதனால், நாலைந்து அடிக்குள் பிள்ளைக்கேணி தோண்டி விவசாயம் செய்த இடங்களில், இன்றைக்கு நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழே போய்விட்டது. இந்த நீர்நிலைகளை மீட்டுருவாக்குவதுடன் காவிரி நீர்ப் பாதையைப் புனரமைத்துக் கட்டுக்கோப்பாக்கி, மழைக் காலங்களில் உபரியாகக் கிடைக்கும் நீரைத் தேக்கிவைக்க கதவணைகள் கட்டினால், சுமார் 50 டி.எம்.சி. வரை நீராதாரத்தை உருவாக்க முடியும். 1980-களில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 1,000 கோடி ஆகலாம் என்று சொன்னது உலக வங்கி. இன்றைக்கு ரூ. 10,000 கோடி ஆகலாம். ஆனால், தமிழக அரசு அதை இன்றுவரை பொருட்படுத்தவே இல்லை.

உண்மை 8: 
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆணையத்தின் வழிமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு... இப்படி எதையும் கர்நாடகம் இதுவரை மதித்தது இல்லை. தமிழகத் துக்குத் தண்ணீர் தர முடியாது என்று கூறாத கர்நாடக முதல்வர்களே வரலாற் றில் இல்லை. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளம் ஆகிய தேசியக் கட்சிகளே கர்நாடகத்தையும் ஆண்டன; ஆள்கின்றன.

உண்மை 9: 
உலகில் எத்தனையோ நாடுகள் நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கின்றன. தண்ணீருக்கு அலையும் சூழலில் உள்ள பரம்பரை வைரிகளான இஸ்ரேலும் பாலஸ்தீனமும்கூட நியாயமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்திய அரசால் பாகிஸ்தானுடன் சுமுகமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்நாட்டுக்குள் பகிர்ந்தளிக்க முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகள் பல முறை வறட்சியிலும் பஞ்சத்திலும் அடிபட்டனர். நாட்டுக்கே உணவு கொடுத்தவர்கள் கஞ்சித் தொட்டியில் கஞ்சி வாங்கிக் குடிக்கும் நிலைக்கும் வயல்களில் எலிகளைப் பிடித்துத் தின்னும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டனர். ஆனால், மத்திய அரசு துளியும் அலட்டிக்கொள்ள வில்லை. உண்மை 10: 
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு... துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்!
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு. 
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது. அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது. அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது. 
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
புவியியல் வல்லுநர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது. கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.
அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.
கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான். ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி நீரை காவிரி, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் நான்காக பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.
காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும். 
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும். உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.
நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...