Tuesday, September 27, 2016

கி.ராவுடனான சந்திப்பு - 3

டி.கே.சி.யின் கம்பர் தரும் இராமாயணம் 

இந்த சந்திப்பின்போது கம்பர் இராமாயணத்தில் இடைச்செருகல் பாட்டுக்களை எல்லாம் நீக்கிவிட்டு அசல் கம்பர் இராமாயணப் பாடல்களை கல்கியில் தொடராக எழுதினார். அதனுடைய விளக்கங்களையும் நயம்பட அனைவருக்கும் அறிகின்ற வகையில் எழுதியிருந்தார். இந்த பாடல்களை மூன்று தொகுதிகளாக பொதிகை மலைப் பதிப்பு, திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து முதல் பாகத்தை 1953ல் டி.கே.சி. வெளியிட்டார். இந்த மூன்று தொகுப்புகளும், திருநெல்வேலி ஹிலால் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டது. இதற்கு முன்னுரை மூதறிஞர் இராஜாஜி வழங்கியிருந்தார். மூன்றாவது பாகம் 1955ல் வெளியிடப்பட்டது. இந்த நூலின் மூன்று தொகுதிகளையும் கி.ரா.விடம் இருந்து பெற்றுக்கொண்டேன். கி.ரா. சொன்னார் "எனக்கு டி.கே.சி. கையொப்பமிட்டு 16.2.1954ல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அன்போடு உபசரித்துக்கொடுத்தார் ரசிகமணி" என்று பெருமையோடு கூறினார். ரசிகமணி கையெழுத்திட்டதோ 8.11.54 என்று உள்ளது. கி.ரா. மேலும் குறிப்பிடுகையில் பல விமர்சனங்களைத் தாண்டி கம்பர் இராமாயணத்தில் உள்ள இடைச்செருகல் பாடல்களை எடுத்துவிடவேண்டும் என்று கறாராக டி.கே.சி. இருந்தார் என்றும், இதற்காக ரசிகமணி எதிர்கொண்ட விமர்சனங்கள் ஏராளம்.  கம்பர் இராமாயணத்தில் ஓலைச் சுவடிகளில் இருந்துதான் பலப் பாடல்கள் எழுதுபவர்களின் விருப்பத்துக்கேற்றவாறு ஏடுகளில் ஏறிவிட்டன. கம்பர் இயற்றியப் பாடல்கள் என்று தனியாக அடையாளம் காண வேண்டிய நிலையில்தான் இந்தப் பணியை செய்தேன் என டி.கே.சி. கி.ரா.விடம் குறிப்பிட்டதாக கூறினார். முத்தொள்ளாயிரத்தை அற்புதமாக பொருள் பிரித்து பாடிக் காட்டும்போது டி.கே.சி.யினுடைய தமிழை ரசனையோடு ரசிக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். வட்டத்தொட்டியிலும் இம்மாதிரி தமிழ் இலக்கிய விவாதங்கள் சுவாரசியமாக டி.கே.சி.யிடமிருந்து வரும். அவர் தமிழே தனி. பண்பாடு என்ற வார்த்தையை புழக்கத்திற்குக் கொண்டு வந்ததே ரசிகமணிதான். இப்படித் தமிழ் பல வார்த்தைகளை பழக்கத்திற்கு கொண்டுவந்தார் டி.கே.சி. என குறிப்பிட்டார்.  கம்பர் இராமாயணத்தை எளிதாக புரியக் கூடிய வகையில் அச்சிற்கு கொண்டுவந்து தமிழக மக்களுக்கு அர்ப்பணித்த பணியில் மிகவும் சிரமங்கள் எடுத்துக்கொண்டார். அப்போதெல்லாம் கணிணி கிடையாது. தட்டச்சு செய்து திருநெல்வேலி டவுனில் இருந்த ஹிலால் பிரஸ்ஸில் அச்சிட்டு வெளிவந்தபோது பிரசவ வேதனையில் துடித்தத் தாய் தன் பிள்ளையைப் பார்ப்பதுப் போல முதன்முதலாக அச்சிட்டு வந்த இராமாயண நூலை கண்கலங்க ஆனந்தத்தோடு பார்த்தார் ரசிகமணி. முறையான பதிப்போடு முதன்முதலாக வந்தது ரசிகமணியின் இராமாயணமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் எனவும் கி.ரா. கூறினார்.

இந்த பிரச்சினையில் இராஜாஜியும், கல்கியும் ரசிகமணிக்கு ஆதரவாக இருந்தனர். பல தமிழ் ஆர்வலர்களும் ரசிகமணி ஆய்வு செய்து அசல் கம்பர் இராமாயணப் பாடல்களை அச்சில் கொண்டு வருவதை விரும்பினர். இன்னொரு செய்தியும் உண்டு. நீதிக் கட்சி மேலவை உறுப்பினராக இருந்த ரசிகமணி டி.கே.சி. பாரதியாரின் பாடல்களை ஆங்கிலேயே அரசு தடை செய்ததை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கடுமையாக கண்டித்துப் பேசினார் எனப் பல செய்திகளோடு, கம்பர் இராமாயண காவியச் சிறப்பையும் கி.ரா. விரிவாக எடுத்துச் சொன்னார்.




No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...