Sunday, September 18, 2016

முன்னாள் பிரதமரும், முன்னாள் தலைமை நீதிபதிகளும் காவிரிப் பிரச்சினையில் தன் சொந்த மாநிலத்துக்காக நியாயங்களை மறந்து குரல் கொடுப்பதா?

U
இந்தியப் பிரதமராக இருந்த எச்.டி. தேவ கவுடா, வாட்டாள் நாகராஜ் போல காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்தார். காவிரி உற்பத்தி தீரத்துக்கே சென்று ஆய்வு செய்தார். கிருஷ்ணராஜ சாகருக்கு சென்று பார்வையிட்டார். அவரும் தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை என்கிறார். ஒரு முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை அனுபவித்துக்கொண்டு சமஷ்டி அமைப்புக்கு விரோதமாக அவர் நடந்துகொள்வது முறைதானா?

சற்று ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னால் இவரைப் பற்றி ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்த விரும்புகின்றேன். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக 1996ல் போட்டியிட்டு ம.தி.மு.க. சார்பில் 34,000 வாக்குகளுக்கு மேலாக பெற்றிருந்தேன். அப்பொழுது ஏறத்தா 180 இடங்களில் போட்டியிட்டு வைகோ அவர்களும், தங்கவேலு சங்கரன்கோவிலிலும், நானும் டெபாசிட்டை பெற்றோம். இருப்பினும் தோல்விக்குப் பின் கோவில்பட்டியில் கிராமம், கிராமாமாக நன்றி சொல்லிவிட்டு, என்னுடைய அம்பாசிடர் காரில் சென்னைக்கு பகலில் திரும்பும்பொழுது அகில இந்திய வானொலியில் நண்பகல் செய்தியில் திருச்சியை அடுத்து காவிரி பாலத்தை தாண்டும்பொழுது, தேவ கவுடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை காவிரி கரையிலேயே கேட்க முடிந்தது.

இதன்பின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. எப்படியென்றால் காவிரி நடுவர் மன்ற அப்போதைய தலைவர் நீதிபதி சித்தகோஷ் முகர்ஜி, தமிழ்நாட்டில் காவிரி டெல்வாவை பார்வையிட வந்தபொழுது, அவருக்கு கோவில்களில் பூரணகும்ப மரியாதையும், பொதுமக்களுடைய வரவேற்பும் போன்ற சம்பவங்களால், திரு முகர்ஜி அவர்கள் தவறாக தீர்ப்பு தரக்கூடும். எனவே அவர் பதவியில் தொடரக் கூடாது என்று ஒரு ரிட் மனுவை தேவ கவுடா பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த ரிட் மனுவில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களை எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டு தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கும்பொழுதே, எப்படி இந்தியாவின் பிரதமராக அவர் பொறுப்பேற்க முடியும்? நான்கு மாநிலங்களை எதிர்த்து வழக்குத் தொடர்த்தவர் பிரதமரா? என்ற எண்ணம் தோன்றியது.  சென்னைக்கு வந்தவுடன் தேவ கவுடா பிரதமராக இருக்க தகுதியற்றவர். இந்தியாவின் மாநிலங்களை எதிரிகளாக நினைத்து மனு செய்தவர் எப்படி கூட்டாட்சியில் பிரதமராக இருக்க முடியும்? என்று quo warranto ரிட் மனுவை நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அந்த மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக  மத்திய அரசுக்கும், தேவு கவுடாவுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், கேரள அரசுக்கும், புதுவை அரசுக்கும் அப்போதைய நீதிபதி கனகராஜ் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  உடனே இது குறித்து மத்திய புலனாய்வுத் துறையினர் என்னிடம் வேக வேகமாக என்னுடைய உயர்நீதிமன்ற சேம்பருக்கு ஓடி வந்தனர். என்ன, ஏது என்று கேட்டனர். பிரச்சினையின் தன்மையைத் தெரிந்து உடனே டெல்லிக்கு தெரியப்படுத்தி, அந்த வழக்கை பெங்களூர் உயர்நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றார் தேவ கவுடா.  இப்படிப்பட்டவர்தான் இந்தியாவின் பிரதமராக பொறுப்பில் இருந்தார். இன்றைக்கும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் போல தரம் இறங்கி, காவிரிப் பிரச்சினையில் நடந்துகொள்வது வேதனையாக இருந்தது. நான் தாக்கல் செய்த வழக்கு இறுதியாக 30.11.1996ல் விசாரணைக்கு வந்து இறுதிப்படுத்தப்பட்டது. தேவு கவுடா முன்னாள் பிரதமர் என்ற கண்ணியத்தை காக்காமல் குழப்பமான நிலையை உருவாக்குவது குறித்து இதுவரை யாரும் வினா எழுப்பவில்லை என்பது வேதனையை தருகின்றது.

முன்னாள் பிரதமரைப் போலவே, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளான இ.எஸ். வெங்கட்ராமைய்யா (19.6.1989 - 17.12.1989) காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவான மனுவில் கையெழுத்திட்டார்.  எம்.என். வெங்கடாசலைய்யாவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக (12.2.1993 - 24.10.1994) இருந்தவர். இருவரும் மைசூரைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் உச்சப்பதவியில் இருந்த கர்நாடகத்தினர் இப்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எதிராகவே நடந்துகொள்வது முறைதானா?

இவ்வாறு கர்நாடக அரசும் காவிரி நீர்ப் பிரச்சினையில் தவறான புள்ளி விவரங்களை காட்டி திசைதிருப்புகின்றது. அது குறித்தான விவரங்கள்:


(1) தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற நோக்கில், 5- நீர்த் தேக்கங்களை காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் கட்டி 70- டி.எம்.சி தண்ணீரைப் பதுக்கி வைத்துள்ளது. தனது பாசனப் பரப்பளவையும் அதிகரித்துள்ளது.

(2) கபினி அணைக்கு தண்ணீர் வழங்கும் நாகு மற்றும் சாகர தொட்டகரே நீர்த் தேக்கங்களில் இருந்து 2000- ஹெச். பி. சக்தி கொண்ட 60- ராட்சத நீர் இறைப்பு இயந்திரங்கள் மூலம் 28- டி.எம். சி. தண்ணீரை வேறு ஆற்றுப்படுகைகளுக்கு திருப்பி விடுகிறது.

(3) ஹேமாவதி அணையிலிருந்து 14- நீரேற்றும் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, காவிரியில் இருந்து கூடுதலான நீரை எடுத்து 45,756- ஏக்கருக்கு பாசன வசதி செய்துள்ளனர்.

(4) மேலும் ஹேரங்கி அணையிலிருந்து வரவேண்டிய நீரைக் கொண்டு சுமார் 1.70- லட்சம் ஏக்கருக்கு பாசனவசதி செய்து தரப்பட்டுள்ளது.

(5) மைசூர் பாசனப் பகுதியில் காவிரியின் வழித்தடத்திலுள்ள 25000 ஏரிகள் கண்மாய்களுக்கு தேவையான தண்ணீரையும் காவிரியிலிருந்தே எடுக்கின்றனர்.

இத்தகைய மறைமுகத் திட்டங்கள் மூலம், கபினி அணைக்கும், கிருஷ்ணசாகர் அணைக்கும் வரவேண்டிய தண்ணீரைத் தடுத்துவிட்டு, தமிழகம் கேட்டால் போதிய தண்ணீர் இருப்பு இல்லை எனக் கர்நாடக அரசு கபட நாடகமாடுகிறது !

மேற்கண்ட குற்றச்சாட்டுகளிலிருந்து ஒரு அரிய உண்மை வெளிப்படுகிறது ! கர்நாடக அரசியல்வாதிகள் தங்களது மாநிலத்தில் விவசாயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

புதிய அணைகளை கர்நாடகா தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே கட்டுவது சட்டத்துக்கு புறம்பானது.

1960- லில் இருந்தே கர்நாடக அரசு தங்களது விவசாயத்துக்கு தேவையான பாசன வசதியை விரிவு படுத்தியுள்ளது.

கர்நாடகா காவிரி பிரச்சினையில் இவ்வளவு கேடுகளை செய்தும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை கூட்டாட்சியில் எடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏனோ?
................................................................
தலைக்காவிரியில் பிறந்து.. தாய் வீட்டோடு தடுக்கப்படும் காவிரி.. தவித்து மருகும் தமிழகம்!
..

காவிரி நீர் பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக கர்நாடகாவிலும், தமிழகத்திலும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கன்னட அமைப்புகள் வன்முறை போராட்டங்கள் நடத்தின. இதனால் இருமாநில போக்குவரத்தும் தொடர்ந்து சீரற்றுக் காணப்படுகிறது.
இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணமான காவிரி ஆற்றின் பிறப்பிடம் மற்றும் கிளை ஆறுகள் என அதன் வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாமா...
காவிரி ஆறு என்பது இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் உற்பத்தி ஆகிறது.
    
காவிரி படுகை.....
காவிரி படுகையின் நீளம் 81,155ச.கிமீ ஆகும். அதாவது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் இது 2.7 சதவீதம் ஆகும். இதில் கர்நாடகாவில் 34,273 ச.கிமீ-ம் , தமிழகத்தில் 43856 ச.கிமீ-ம், கேரளாவில் 2866 ச.கிமீ-ம், புதுச்சேரியில் 160 ச.கிமீ-ம் என நான்கு மாநிலங்களிலும் பிரிந்து காணப்படுகிறது.
    
பாயும் பகுதிகள்...
கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வரும் காவிரி ஆறு, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
    
பயணம் செய்யும் தூரம்...
காவிரி ஆறு தலைக்காவிரியில் உற்பத்தியாகி, கடலில் கலப்பதற்கு இடைப்பட்ட தூரத்தில் சுமார் 800 கிமீ பயணம் செய்கிறது. இதில், 320 கிமீ கர்நாடகத்திலும், 416 கிமீ தமிழகத்திலும், 64 கிமீ கேரளத்திலும் உள்ளது. காவிரிப் படுகை கர்நாடகத்தில் மின்விசிறி போன்ற தோற்றத்திலும், தமிழகத்தில் இலை போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது. இந்த வடிவமைப்பின் காரணமாக காவிரி நீரானது அதிக வெள்ளப்பெருக்கு அல்லது சீக்கிரம் வற்றி விடும் சூழல் போன்றவற்றை உருவாக்குவது இல்லை.
   .
நீர் பெறும் காலம்...
இந்த படுகையானது கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் போது அதிக நீரையும், வடகிழக்கு பருவமழையின் போது ஒரு பகுதி நீரையும் பெற்று வருகிறது. இதேபோல் தமிழக படுகையானது வடகிழக்கு பருவமழையின் போது அதிக நீரைப் பெறுகிறது.
    
இரு ஆறுகளாக பிரிகிறது...
தமிழகத்தில் திருச்சியை கடக்கும் போது காவிரி ஆறு இரண்டு பாகங்களாகப் பிரிகிறது. அதில் வடக்கு கிளை கொள்ளிடம் என்றும், தெற்கு கிளை காவிரி என்ற பெயரிலும் பாய்கிறது. ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் 16 கிமீ பயணம் செய்து மீண்டும் ஸ்ரீரங்கத்தில் இணைகிறது.
    
துணை ஆறுகள்...
கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும். இதேபோல் பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.
#cauvery  #காவிரி #devekowda #ksrposting #ksradhakrishnanposting #karnataka

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...