Wednesday, September 28, 2016

கீழடி...

வைகை நாகரீகத் தொல்பொருட்கள் மைசூருக்குக் கொண்டு செல்லப்படும் அபாயம்!

கடந்த இரண்டாண்டு காலத்திற்கு மேலாக வைகைக் கரை #கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் அழிந்துபோன ஒரு பெரும் நகரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம்  சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையை இன்னும்  பழமையான காலத்திற்குக் கொண்டு செல்லுகின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. 

இவ்வாறு கிடைக்கப்பெற்றப் பொருட்களை பாதுகாத்து வைக்க கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.  இல்லாவிட்டால் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட இந்த தொல்பொருட்கள் மைசூருக்குக் கொண்டுச் செல்லப்பட்டுவிடும்  எனவே இதை உடனடியாகச் செய்யுமாறு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்.

சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் பழந்தமிழரின் நாகரீகத்தின் எச்சமாகும். இந்த அகழ்வாராய்ச்சிப் பணியில் மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும் .
கீழடி உட்பட பல பகுதிகளில் எடுத்த/எடுக்கிற தொல்பொருள் அகழ்வு பொருட்களை அந்தந்த மாநிலங்களிலேயே, இன்னும் சொல்லப்போனால் அந்தந்தப் பகுதிகளில் மையங்கள் அமைத்து பாதுகாப்பதும், அதன் பிரதிகளை ஆய்வு செய்ய பல்கலைக்கழகங்களோடு இணைந்த ஆய்வுமையங்கல் உருவாக்க வேண்டும். அரிதாக கிடைக்கிற வரலாற்றுத் தரவுகளை சாக்கில் கட்டி கொல்லைப்புறத்தில் எறிகிற நிலைமை மாற வேண்டும். 

இதுவரை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தொல்பொருட்களை கண்டறிந்து அவற்றை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். எதெற்கெல்லாமோ பணம் விரயம் செய்கிற தமிழக அரசு தனியாக தொல்பொருள் பராமரிப்பு மற்றும் ஆய்வுத்துறையை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...