Monday, September 19, 2016

தெளிவான பார்வை தேவை!சிறுவாணி...

கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளது தொடர்பாக இன்றைய தினமணி (19.6.2016) நாளிதழில் தலையங்கப் பக்கத்தில் "தெளிவான பார்வை தேவை!" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது பத்தி.

தெளிவான பார்வை தேவை!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

கொங்கு மண்டலத்திற்கு இயற்கை வழங்கிய அருட்கொடைதான் சிறுவாணி. இந்த சிறுவாணிக்கும் இப்போது பிரச்சினை. கொங்கு மண்டலமே கொதிக்கின்றது. ஏற்கனவே இவ்வட்டாரத்தில் பம்பாறு, பாண்டியாறு - புன்னம்புழா, ஆழியாறு - பரம்பிக்குளம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், அமராவதி நீர் சிக்கல், கௌசிகா நதி பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இதை தீர்க்கக் கூடிய அளவில் தொலைநோக்கு பார்வையிலான திட்டங்கள் இல்லை. பிரச்சினைகள் எழும்போது மட்டுமே நாம் கவலைப்படுகின்றோம். இதை திட்டமிட்டு தீர்க்கக்கூடிய அளவில் தொலைநோக்குப் பார்வைகள் நம்மிடையே இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். உச்சநீதிமன்றத்தில் நதிகள் தேசியமயமாக்கப்படவேண்டும் என்றும், கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாறோடு இணைக்கவேண்டும் என்றும், கேரள நதிப்படுகைகளான அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கவேண்டும் என்றும் 30 ஆண்டுகாலம் போராடி கடந்த 2012 பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் என்னுடைய வழக்கில் தீர்ப்பைப் பெற்றேன். அப்போது வழக்குகள் வரும்போதெல்லாம் மத்திய அரசு வழக்கறிஞர்கள் நதிநீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு சரியான தொலைநோக்குப் பார்வை இல்லை என்று சொல்லும்போதெல்லாம் அதற்கு பொருத்தமான பதிலையும் என் மனுக்கள் மூலம் பதிவு செய்திருந்தேன். நீதிபதிகள் கூட சில சமயங்களில் நதிநீர் சிக்கலில் தமிழகம் சற்று அறிவியல் ரீதியாக அணுகலாம் என்று கூட சொல்லியது உண்டு. 

இன்றைக்கு சிறுவாணி பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சிக்கலை சில காலம் பேசிவிட்டு மறந்துவிடக் கூடாது. சிக்கல்களை தீர்க்கக்கூடிய தொடர் நடவடிக்கைகள் எந்த நதிநீர் பிரச்சினைகளிலும் நம்மிடம் இல்லாதது வேதனையைத் தருகிறது. சிறுவாணி பிரச்சினை என்ன? 

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் உற்பதி திட்டத்திற்கான மதிப்பீட்டு நிபுணர் குழு, தொழில்நுட்ப இசைவு அளித்துள்ளது.

அங்கு அணை கட்டும் பணிகளையும் கேரள அரசு துவக்கிவிட்டது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து, கேரள மாநில அரசின் நீர் வளத்துறை, தமிழக அரசுக்கு மே 4 ஆம் தேதி கடிதம் எழுதியதாகவும், தமிழக அரசின் பதில் கிடைக்காததால் ஆகஸ்ட் 11 மற்றும் 12 தேதிகளில் நடந்த நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் உற்பத்தி திட்ட மதிப்பீட்டு நிபுணர் குழு கூட்டத்தில் இத்திட்டத்தைத் செயலாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் கட்டுமானத்திற்கு அனுமதி அளித்தது. 

கேரள அரசு கடிதம் எழுதியும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால்தான், மத்திய அரசு சிறுவாணியின் குறுக்கே அணைகட்ட ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2002 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி எனுமிடத்தில் அணை கட்டக் கேரளம் முயற்சித்தபோது, தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் பவானி படுகையில் கேரள அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 6 டி.எம்.சி. நீரில் இத்திட்டத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கேரள மாநிலம் கூறுகிறது. எனினும் கேரள அரசு உத்தேசித்திருந்த இத்திட்டத்தின் மொத்த நீர் உபயோகம் 4.5 டி.எம்.சி. என்பதற்குப் பதிலாக 2.87 டி.எம்.சி. எனக் குறைத்து காவிரி நடுவர் மன்றம் இத்திட்டத்திற்கு நீர் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம் என்று கேரள அரசு - பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வட்டம் அகழி சித்தூர் எனும் இடத்தில் சிறுவாணியின் குறுக்கே 450 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட அணையைக் கட்டத் திட்டமிட்டது. இதனால், 2.29 டி.எம்.சி. நீரை 4900 ஹெக்டேர் பாசனத்திற்கும் 3 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.  கேரளா தனக்கு 2.87 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க உரிமை இருப்பதாகவும், இதனால் 12,000 ஏக்கர் பகுதி பாசன வசதிப் பெறும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதே சித்தூரில் 1970, 2012லும் அணையை கட்ட கேரள அரசு முயற்சிகள் மேற்கொண்டது.  சிறுவாணி சித்தூரில் அணை கட்டப்பட்டால் அங்கிருந்து சிறுவாணி சென்று பவானியில் கலக்கும் கூட்டப்பட்டி வரை 28 கிலோ மீட்டர் தொலைவுக்கு  சம்பார்கோடு, அகழி, பூதிவழி, வண்ணார்துறை, கல்லுமுக்கியூர், காரையூர், கோட்டத்துறை, மக்காடு, வத்தலக்கி, தாசனூர் என 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்.

இந்த அணை கட்டப்பட்டு 6 டி.எம்.சி. நீரை கேரளா எடுத்துக்கொண்டால் விவசாயம், குடிநீர், மின் உற்பத்தி என்ற பல பாதிப்புகள் தமிழகத்திற்கு ஏற்படும். இரண்டு புதிய அணை விவகாரங்களே தமிழகத்தில் பிரச்சினைகளாக கடந்த காலங்களில் வெடித்துள்ளன. அதில் ஒன்று முக்காலி பவானி அணை, மற்றொன்று சித்தூர் சிறுவாணி அணை. 

5.2.2007 இல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆணையை எதிர்த்து கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல் முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன. தமிழக அரசும் சில சிக்கல்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்து இருக்கின்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் காவிரி நடுவர் மன்றத்தின் முன் விளக்கங்கள் கோரும் மனுக்களை 1956 ஆம் ஆண்டு நதிநீர்த் தாவா சட்டப் பிரிவு 5(3)இன் கீழ் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் இன்னமும் நிலுவையில் உள்ளன.  காவிரிப் படுகை மற்றும் அதைச் சார்ந்த துணை நதிநீர்ப் படுகைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆணைக்குப் புறம்பானது.

இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிநீர்ப் பிரச்சினையில் தமிழக அரசின் கருத்தைப் பெறாமலேயே, கேரள அரசு தீர்ப்புகளை மீறி கட்டுவது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு அனுமதி வழங்கியதும் சட்டத்திற்கு புறம்பானது. 

அட்டப்பாடியில் கேரள அரசு கட்ட இருக்கும் அணை 1976ல் திட்டமிடப்பட்டு 1982 கட்டத்தில் மத்திய அரசும் இதற்கு அனுமதி மறுத்தது உண்டு. அதன்பின் முக்காலியில் 2002ல் கட்ட திட்டமிட்டபோதும் மத்திய அரசு அனுமதி தரவில்லை.  இந்த திட்டமே 60 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து மாநிலங்கள் மறுசீரமைப்பில் அன்றைய சென்னை மாகாணத்தின் பாலக்காட்டுப் பகுதியில் தமிழ்பேசும் மக்களின் சில பகுதிகள் கேரளாவோடு இணைந்ததால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாகாணத்திற்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் 1924ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கேரளா சம்பந்தப்படவே இல்லை. காவிரி பிரச்சினையில் கூட நாம் பாலக்காடு பகுதிகளை இழந்ததால்தான் கேரளா உரிமை கொண்டாடுகின்றது. 

பவானிப்படுகையில் 2.5 டி.எம்.சி. தண்ணீரை கேரளா எடுத்துக்கொள்ளலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது.  10.5.1969 அன்று திருவனந்தபுரத்தில் தமிழக-கேரள அரசுகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் சிறுவாணி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

1969 கேரளா தமிழ்நாடு ஒப்பந்தப்படி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் கேரள அரசு இடைமலை ஆற்றில் அணை கட்டியபின்பு தமிழகம் ஆணைமலையாற்றில் அணை கட்டி 2.5 டி.எம்.சி. நீரை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

1969ல் இருந்து கேரளாவோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா அத்தோடு இணைந்த சிறுவாணி, பம்பாறு பிரச்சினைகள் எல்லாம் இன்றைக்கு வரைக்கும் சிக்கல்களாகவே உள்ளன. ஆழியாறு-பரம்பிக்குளம் திட்டமும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டமும் மறுபடியும் தமிழகமும், கேரளமும் அமர்ந்து பேசி முறைப்படுத்தவேண்டும் என்ற நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் உள்ளன. ஆனால் அது இதுவரை ஈடேறவில்லை. இதுவும் காவிரிப் பிரச்சினைப் போல் புதுப்பிக்கவில்லை என திடீரென்று கேரள அரசு எதிர்காலத்தில் கூப்பாடு கூட போடலாம். இதையெல்லாம் தொலைநோக்கு சிந்தனையோடு கவனிக்க தவறிவிட்டோம். 

1970ல் கேரளா சிறுவாணி குறுக்கே சித்தூரில் அணை கட்ட தொடங்கியது. அணைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, 6.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாயும் வெட்டப்பட்டது. இதெல்லாம் கடந்தகால நிகழ்வுகள்.  

இப்பிரச்சினைகளில் தொடர்ந்து அக்கறை செலுத்தி கேரளாவோடு பேச்சுவார்த்தையில் இறங்கி பேச்சுவார்த்தை சரி இல்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் இதய சுத்தியோடு வழக்கை நடத்தியிருந்தால் கொங்கு மண்டலத்தில் உள்ள நீர் ஆதாரப் பிரச்சினைகளுக்கு இப்படி அடிக்கடி சிக்கல்கள் வரவேண்டியது இல்லை. 

ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு போன்று பாண்டியாறு-புன்னம்புழாவிலும் கேரள அரசு மூக்கை நுழைக்கின்றது. அதிலும் சிக்கல்.  

நீலகிரி, கோவை மாவட்டங்கள் உட்பட்ட, பவானி, சிறுவாணி நீரை நம்பியுள்ள, 4 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலமும், பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.  கேரளாவின் இந்த முயற்சியை தடுக்கும் வகையில், நீலகிரியில் உற்பத்தியாகி, பாண்டியாறு வழியாக, கேரளாவுக்கு செல்லும், 16 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க, 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டத்துக்கு, தமிழக அரசு, உடனடியாக செயல் வடிவம் வழங்கவேண்டும். 

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உள்ள பாண்டியாற்றின் நீர் முழுவதும் கேரளாவுக்கு சென்று, புன்னம்புழா ஆற்றில் கலந்து, கடலில் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்கு பயன்படுத்தும் வகையிலும், மின் உற்பத்தி செய்யவும், பாண்டியாறு - புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

இத்திட்டத்தின்படி, கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் பாயும், 10க்கு மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, மின் உற்பத்திக்கான அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டத்துக்கு, கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு காரணம், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து, அடியோடு நின்றுவிடும்.  இந்நிலையில் பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவேண்டும். இப்படி வம்பு செய்யும் கேரளாவுக்கு நம்முடைய நியாயங்களை வெளிப்படுத்தும் வகையில் பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தின் மூலம் கேரளாவுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த முடியும். ஆனால் நம்முடைய மென்மையான போக்கு இது குறித்து சிந்திக்கவே இல்லை. 

கோவையின் சுவையே சிறுவாணித் தண்ணீரும் மரியாதையான உரையாடலும்தான். சிறுவாணி தண்ணீரின் சுவை முதல்தரமானது. 

காரணம் அது உதித்து வரும் பகுதியில் இருக்கும் மரங்களின் கனிகளும், குறிப்பாக மலைநெல்லி போல சுவையான கனிகளும் அந்நீரில் விழுந்து ஊறியே அந்நீருக்கு அச்சுவை வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

கோவை நகரை நிர்மாணிக்க காரணமாக இருந்த நரசிம்மலு நாயுடு, சிறுவாணியில் இருந்து கோவை நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வரலாம் என்று கடந்த நூற்றாண்டிலேயே திட்டமிட்டார். முல்லைப் பெரியாறு போல சிறுவாணி அமைய வேண்டும் என்று 1900 கட்டங்களில் நரசிம்மலு நாயுடு விரும்பியதுண்டு.  

ஆனால் அவர் சொல்லி 30 ஆண்டு கழித்துதான் ஆங்கிலேயர்கள் 1930ல் அந்த நீரை கோவைக்கு குடிநீராக வழங்கினார்கள்.  அதுவரை 25 மைல் தேடிசென்றுதான் குடிநீரை எடுக்கவேண்டும். பின்னாளில் சூலூர் ராணுவ முகாமிற்கும் அதுவே குடிநீராயிற்று. வடக்கத்திய ராணுவ வீரர்கள் அந்த தண்ணீருக்காகவே அங்கு விரும்பிவந்த காலங்களும் உண்டு. 

சிறுவாணியின்றி அமையாது கோவை என்பதற்கேற்ப சிறுவாணி கோவையின் அங்கம். அதற்கு பங்கம் இல்லாமல் காக்கவேண்டியது தமிழகத்தின் கடமை.   

வருடத்தில் மாதங்களுக்கு திருவிழாக்கள் வருவது போல ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நதிநீர் பிரச்சினை சிக்கலாக ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மேட்டூர் அணை திறக்காமல் காவிரி நீர் டெல்டா பகுதிகளுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறில் இன்னும் சிக்கல். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2007ல் மூடப்பட்ட நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. 30,000 ஏக்கர் பாசனம் அங்கு நடைபெறவில்லை. நெல்லை மாவட்டத்தில் அடவி நயனார், உள்ளாறு பிரச்சினைகள். செண்பகவல்லி அணையை கேரளா உடைத்துவிட்டது.கேரளா அச்சன்கோவில்-பம்பை ஆற்றை தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பதிலும் கேரளா பிடிவாதமாக மறுக்கின்றது. விருதுநகர் மாவட்டத்தில் 1969ல் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணையை கட்ட கேரள அரசின் தடையில்லா சான்று தர மறுக்கின்றது. முல்லைப் பெரியாறு அறிந்த விஷயம். கொங்கு மண்டலத்தில் சொல்லப்பட்ட ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு என பல நதிநீர் சிக்கலில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீர் ஆதாரப் பிரச்சினைகளில் தமிழகத்திற்கு நியாயம் இருந்தாலும் கேரளா சண்டித்தனம் செய்கின்றது. ஒரு சொட்டுத் தண்ணீர் அண்டை மாநிலத்திற்கு தரக்கூடாது என்று ஒரு விநோத சட்டத்தையும் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. கர்நாடகமும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கின்றது. ஒகேனக்கல் பிரச்சினை. தென்பெண்ணையாறு பிரச்சினை. ஆந்திராவோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு நீர்நிலைப் பிரச்சினை என தமிழகத்தில் கிட்டத்தட்ட 75 நதி ஆதார சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

தமிழகத்தில் உற்பத்தியாகி கடலில் கலக்கும் நமக்கு இருக்கின்ற ஒரே நதி தாமிரபரணிதான். மற்ற நீர் ஆதாரங்கள் அனைத்தும் அண்டை மாநிலத்தை சார்ந்துதான் இருக்கவேண்டி இருக்கின்றது. ஆப்பிரிக்காவில் நைல் நதி பல நாடுகளுக்கு செழிப்பை தருகின்றது. ஐரோப்பிலும், ருமேனியா, பல்கேரியா, பெல்ஜியம் போன்ற நாடுகள் நதிநீர்ளை மனப்பூர்வமாக தங்கள் பங்குக்கு எடுத்துக்கொள்கின்றன. ஏன்? சிந்து நதியும், கங்கையும் இமயப் பர்வதங்களில் உற்பத்தியாகி அதை பாகிஸ்தானும், பங்களாதேஷும் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லையா?   சமஷ்டி அமைப்பில் ஒரு மாநிலத்திற்கு இன்னொரு மாநிலம் வீணாக செல்லும் நீரை வழங்குவதில் சிக்கலை உருவாக்குவது ஒரு நாட்டிற்கு நல்லதா? கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை எல்லாம் சகோதர பாசத்தோடு நாம் அனுப்பவில்லையா? இப்படியெல்லாம் நியாயங்கள் இருந்தும் நதிநீர் சிக்கல்களில் போராட வேண்டியுள்ளது. இதற்கு காரணம் என்ன? தமிழகம் குடகுப் பகுதியை இழந்ததால் காவிரி பிரச்சினையில் சிரமப்படுகின்றோம்.  நந்தி மலையை இழந்ததால் பாலாறு, பெண்ணையாறு சிக்கல் உருவாகின.  சித்தூர், நெல்லூர் ஆந்திரத்தில் இணைந்ததால் பாலாறு, பழவேற்காடு, பொன்னியாறு சிக்கல். தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கு தாரை வார்த்ததால் முல்லைப்பெரியாறு பிரச்சினை. தென்முனையில் நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் குமரியை வளம் சேர்ந்த நெய்யாறு அணையை இழந்தோம். பாலக்காடு பகுதியை இழந்ததால் கொங்கு மண்டல நதிநீர் ஆதாரங்களில் பிரச்சினை.

உலக நாடுகள், நதிநீர் தாவா தீர்வுக்காக ஏற்றுக்கொண்ட ஹெல்சிங் கோட்பாடு படி நதிமூலப் பகுதியைவிட நதிகள் பாயும் கடைமடைப் பகுதிதான் முழுமையாக பயனடையவேண்டும் என்று விதிகள் இருந்தும் நமது அண்டை மாநிலங்கள் இதை புறம் தள்ளுகின்றன. நாம் செய்த தவறுகளில் பெரும் தவறு, நீர் ஆதாரப் பிரச்சினைகளில் நாம் தனி அமைச்சகம் அமைத்து உரிய முறையில் கவனத்தோடு நடவடிக்கை எடுக்க கடந்த காலத்தில் தவறிவிட்டோம்.  40,000 ஏரிகளும், குளங்களும் 1944 காலகட்டங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தன. படிப்படியாக இப்போது இதன் எண்ணிக்கை குறைந்து தற்போது இதன் எண்ணிக்கை என்ன என்று பார்த்தால் வேதனையாக இருக்கின்றது. ஏரிகளின் எண்ணிக்கை இன்றைக்கு 18,789, கிளைக் வாய்க்கால்கள் 29,484, ஆறுகள் 86, அணைகள் 200, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து 1.10 கோடி விவசாய நிலங்கள் வறட்சியாகிவிட்டன. மீதி நீர்நிலைகள் எல்லாம் எங்கே சென்றுவிட்டன. யார் அபகரித்தனர்.

அது மட்டுமல்லாமல் புதிய நீர்திட்டங்கள், நீர்நிலைகளைக் கூட நாம் ஏற்படுத்தவில்லை. இருக்கின்ற ஏரிகள் கூட சரியான பராமரிப்பு இல்லாமல் கருவேல மரங்கள் வளர்ந்து, படர்ந்து மழை பெய்தால் கூட நீரை தேக்கக் கூட வசதியில்லாத நிலைமை.  இப்படியான நமது நதிநீர் கொள்கைகளில் தெளிவான பார்வை இல்லையென்றால் அண்டை மாநிலங்கள் நமது முதுகில் ஏறி சவாரிதான் செய்யும். சிறுவாணி மட்டுமா? தமிழகத்தில் குமரி முனையிலிருந்து வடமேற்கே தொட்டபெட்டா, பின் தொட்டபெட்டாவிலிருந்து சென்னையை ஒட்டிய பழவேற்காடு வரை உள்ள நீர் ஆதாரப் பிரச்சினைகளில் சிக்கல்கள். எப்படி தீர்க்கப் போகின்றோம்.....?

காற்றும் நீரும் வானும் கடலும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சு கெடக்குது.

என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...