Sunday, September 25, 2016

தனுஷ்கோடி ராமசாமி

தனுஷ்கோடி ராமசாமி:
----------------------

''தனுஷ்கோடி ராமசாமியோடு பதினேழு ஆண்டுகள் ‘எல்லாமுமாக’ சாத்தூரில் வாழ்ந்த வாழ்வுக்கான எளிய நன்றியறிதல் இச்சிறு நூல்” என்ற தம்பி இரா. காமராசுவின் எளிய வார்த்தைகளை, இலக்கிய சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதமி சமீபத்தில் வெளியிட்டுள்ள, தனுஷ்கோடி குறித்த நூலின் முகப்பில், கண்டபோது என் கண்கள் பனித்தன.

        நேர்மறையும் எதிர்மறையுமான சகல இயக்கங்களுக்கும் நிரந்தர சாட்சியாய் நிற்கும் காலத்தின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத நிகழ்ச்சிப்போக்கில் வாடிக்கையாக  நிகழ்ந்துபோகிற  ஒருசில இழப்புக்கள் மனதின் அடி  ஆழங்களில் மிக அழுத்தமாகப் பதிந்து நாம் மாய்வது வரையிலும் ஆறாத வடுக்களாகவே இருந்துவிடும்.  அத்தகைய ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக தோழமை நெஞ்சங்களைப் பதம் பார்த்த ஒரு அதிர்ச்சியான மரணம் நம் நெஞ்சங்களில் இன்றும் வாழும் இனிய தோழர் தனுஷ்கோடியின் மரணம்.

        கலிங்கல் மேட்டுப்பட்டி என்றால் எங்கிருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒரு சிற்றூரில் பிறந்து வாழ்ந்து அவ்வூருக்கு ஒரு மணிமகுடம் என்று சொல்லுமளவுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்துவிட்டு அகாலமாய் அவனி விட்டுப் பிரிந்தபோது தனுஷ்கோடியின் வயது 61 தான்.  வயது வரம்பில் அந்த வயது வயோதிகம் என்று சொல்லக்கூடும்.  ஆனால் ஒரு நாற்பத்தைந்து வயது இளைஞனைப் போல அவர் நம்மிடையே உற்சாகமாக வலம்வரும் காட்சிகளை கண்களில் தேக்கும்போது, மாகவிஞன் பாரதியையும் எழுத்துச்சித்தன் ஜெயகாந்தனையும் ஒருசேர நம் கண்களில் நிறைத்துப்போகும் அந்தக் கறுப்புத் ்தங்கத்தை இப்படி அநியாயமாக காலம் கொள்ளை கொண்டு போகும் என்று நம்மில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது நிதர்சனம்.  அப்படியொரு கம்பீரம் அவருடையது.  பேசும்போதும், நடக்கும்போதும், கண்களை உருட்டித்திரட்டி அவர் நம்மை உற்றுப் பார்க்கும்போதும், பாரதியின் ஒளிபடைத்தக் கண்ணன் நம் முன்னே எதிர்ப்படுவான். 

      படித்துப் பள்ளியாசிரியாராகிய சமூக உணர்வுமிக்க தனுஷ்கோடி இளமையில் ஊற்றெடுத்த இலக்கிய உணர்வை இறுதி மூச்சு வரையிலும் கண்ணும் கருத்துமாக பேணி வளர்த்தவர். ‘சிம்ம சொப்பனம்’ சிறுகதைகள் மூலம் தமிழ் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தவருக்கு ‘நாரணம்மா’ சிறுகதைகள் பரவலான அங்கீகாரத்தைக் கொண்டு வந்தது. தோழர்களுக்குத் தோழனாக வாழ்ந்த தனுஷ்கோடி தமிழுக்குக் கொடுத்த ஒரே நாவல் ‘தோழர்’. ஒன்றே எனினும் அது உருவாக்கிய விவாதங்களும், விமர்சனங்களும், சர்ச்சைகளும் நாவல் உலகில் அவருக்கென ஒரு தனியிடத்தை வழங்கிற்று.  சிறந்த மேடைப்பேச்சுக்கள் மூலம் கேட்போர் நெஞ்சங்களை ஆகர்ஷிக்கும் அவரின் கரிசனமும், காத்திரமுமிக்க இலக்கிய மனம் இன்னும் இன்னும் பூக்களை மலர்விக்கும் என்றிருந்த காலையில், எங்கிருந்து வந்தானோ அந்தக் காலன், அவர் வாழ்வை இடைபாதியில் முறித்துப்  போட்டுவிட்டு அவன் பாட்டுக்குப் போய்விட்டான்.  

      பத்து பதினாறு வயதிலேயே இளைஞர் இலக்கிய மன்றத்தை ஊரில் உருவாக்கிய தனுஷ்கோடியின் வாழ்வில் இடதுசாரி இயக்கமும், குறிப்பாக கலை இலக்கியப் பெருமன்றமும், மிகப்பெரும் பங்கு பாத்திரம் வகித்தன.  தான் மட்டும் அல்ல, தன் இனிய மனைவி சரஸ்வதியையும், அன்பு மகன் அறத்தையும், பெருமன்ற சார்பாளர்களாகவே வளர்த்து விட்டிருக்கிறார்  என்பதும், இன்று சாத்தூரில் பிரபல மருத்துவராக திகழும் தனுஷ்கோடியின் அறம், பெருமன்றத்தின் அற்புதமான பண்பாட்டு செயற்பாட்டாளன் என்பதும்  பெருமிதமான ஒன்று.  முப்பது வயது பருவத்தில் கலை இலக்கியப் பெருமன்றத்தில் பிரவேசித்த தனுஷ்கோடி, பெருமன்றத்தைத் தன் வாழ்வியல் தளமாகவே மாற்றினார். ஜீவாவின் பெருமன்றத்தை ஒரு பண்பாட்டு இயக்கமாக வார்த்தெடுத்த பொன்னீலன் அண்ணாச்சி பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து தலைவராக பொறுப்பேற்றபோது, நம் தோழர் தனுஷ்கோடி மன்றத்தின் பொதுச்செயலாளராக 2004  டிசம்பரில் பொறுப்பேற்றார். பெருமன்றத்தின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கத் துவங்கினார்.  பிரகாசமான எதிர்காலம் அவருக்கு ஒரு ராஜபாட்டையை விரித்து வைத்தது.  ஆனால், ஓராண்டு போலும் முடியவில்லை – தனுஷ்கோடி என்றென்றைக்குமாக நம்மைத் தவிக்க விட்டுவிட்டு காற்றில் கலந்துவிட்டார்.

           ஒருசில மணித்துளிகளே பரிச்சயம் என்றாலும், பார்த்த தோழமையின் நெஞ்சில் பவித்திரமாய் குடி புகுந்துவிடும் அற்புதமான ஆற்றல் படைத்த தனுஷ்கோடி மறைந்து பதினோரு ஆண்டுகள் கடந்துவிட்டன.  ஆனாலும், நம் நெஞ்சங்களில் நிரந்தரமாக உயிர்வாழும், அந்த அழகிய ஆளுமை இப்போதும் மனங்களில் அதிர்வுகளை உருவாக்கி, கண்களின் ஓரங்களில் பனி துளிர்க்கச் செய்கிறார்.  அதனால்தான், தஞ்சைத்  தமிழ்ப் பல்கலைக்கழகம் தனுஷ்கோடியின் வாழ்வையும் பணிகளையும் விரிவான  சீரிய ஆய்வுக்கு உட்படுத்திய அன்புத்தங்கை அகிலா கிருஷ்ணமூர்த்திக்கு முனைவர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர் வேறு யாருமில்லை – சாகித்திய அகாதமி வெளிட்டுள்ள இந்த நூலின் கர்த்தாவான தம்பி இரா. காமராசுதான்.

          ஒரு கவிஞனாய், சிறுகதையாசிரியனாய், இலக்கியத் திறனாய்வாளனாய், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பண்பாட்டுச் செயல்பாட்டாளானாய், முழுநேரமும் முழுவீச்சுடன் செயல்படும் தம்பி இரா. காமராசு இன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர்; தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர்.  பள்ளிப்பருவம் தொட்டு படிப்போடு படைப்பு வாழ்வையும், இயக்க வாழ்வையும் இணைத்தே வாழ்ந்துவரும் இந்தத் தம்பி,  ஒருகாலத்தில் பெருமன்ற மாநில நிகழ்வுகளின் போது எங்கிருக்கிறான் என்று தேடினால், தனுஷ்கோடி ராமசாமி, ரவீந்திரபாரதி என்னும் மத்திம பருவங்களுக்கு மத்தியில் பால்வடியும் பிள்ளைமுகத்தில் புன்னகை தவழ, இளம் பருவம் இவன் இடம் பிடித்திருப்பான். அந்த அற்புதமான உறவும் உணர்வும் காமராசு வரைந்து தந்திருக்கும் எழுத்துச்சித்திரத்தில் ஊடும் பாவுமாக இழையோடுவதைப் பார்க்கிறேன்.  இப்படியொரு சித்திரத்தை காமராசுவால் மட்டுமே தர இயலும். அழகாகவே தந்தும் இருக்கிறான்.  சாகித்திய அகாதமி அழகாக பதிப்பித்தும் இருக்கிறது.

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...