Sunday, September 25, 2016

திருநெல்வேலி சதி வழக்கு;

கி.ராவுடனான சந்திப்பு - 2
--------------------------
திருநெல்வேலி சதி வழக்கு;
.........................................
நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக கி.ரா அவர்கள் நெல்லை சதி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதில் கோவில்பட்டி சதி வழக்கு, #நெல்லைசதிவழக்கு என இரண்டு வழக்குகளாக இருந்ததை நெல்லை சதி வழக்கு என்று ஒரே வழக்காக அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் மாற்றியது. அந்த சமயத்தில் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாராசாமி இராஜா கி.ரா வைப் பற்றி நன்கு அறிந்தவர். கம்யூனிஸ்டாக இருந்தாலும் இரசிகமணி தோழராக இருந்த கி.ரா வை சம்பந்தமில்லாமல் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளார்களே என தன்னுடைய அதிகாரிகளிடம் சொல்லி நீக்கி விட்டார். முதல்வர் குமாரசாமி ராஜா,  இடைசெவல் ராஜ நாராயணனை எனக்கு நன்றாக தெரியும் அவரை ஏன் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்தீர்கள் என போலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இந்த பழைய செய்திகளோடு கி.ரா #திருநெல்வேலிசதிவழக்கை பற்றி நினைவு கூர்ந்தது வருமாறு;
1949ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது நெல்லை சதி வழக்கில் ஆர். நல்லக்கண்ணு, ப. மாணிக்கம், மாயாண்டி பாரதி, ஏ. நல்லசிவன், பொண்ணு, கிருஷ்ண கோனார், சேவியர் சண்முகவேல், செல்லையா நாடார், ஞானி ஒளிவு, பீர் இஸ்மாயில், ஏ. ராமச்சந்திரன், ஜேக்கப், சுப்பையா ரெட்டி, அழகிரி தேவர், அய்சக், சுடலைமுத்து, எஸ்.எஸ். மாணிக்கம், டி.பி. ராமலிங்கம், டி.ஜி. சுப்ரமணியன், வேலுசாமி தேவர், ஆர்.வி. அனந்த கிருஷ்ணன், சப்பாணி முத்து, ஷேக் சுலைமான், பாஸ்கரன், கே.பி.எஸ். மணி, சொர்ணம், பலவேசம், டோனாவூர் பெருமாள், வி.ஆர்.சுப்பையா முதலியார், வேலாயுதம் பண்டிதர், கொன்ன சிவனார், புலவர் ராமையா ஆகியோர் மீது மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியும் விதத்தில் ரயில்வே பாலங்கள், தண்டவாளங்கள், தந்திக் கம்பிகளைத் தீ வைத்துத் தகர்த்து, பொதுச் சொத்துகளைச் சீர்குலைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படச் சதி செய்த்தாக அன்றைய காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தொடக்கத்தில் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் கி.ரா., நாலாட்டின்புத்தூர் என். ஆர். சீனிவாசன் போன்றோர் பெயர்களும் பழிவாங்கும் நோக்கத்துடன் சேர்க்கப்பட்டன. இதை அறிந்த டி.கே.சி அவர்கள் தன்னுடைய உதவியாளரிடம், “இடைசெவல் நாயக்கரை எதுக்குய்யா சேர்த்தாங்க?” என்று கேட்டுள்ளார். விவரங்களை அறிந்தவுடன் அன்றைய முதல்வர் குமாராசாமி ராஜாவைத் தொடர்பு கொண்டு “அரசாங்கம் எழுத்தாளர்களையும், சமூக சிந்தனையாளர்களையும் ஏன் திட்டமிட்டுச் சதி வழக்கு என்று போட்டுள்ளது?” என்று டி.கே.சி கடுமையான குரலில் பேச, குமாரசாமி ராஜா தன்னுடைய உதவியாளர் சுப்புராஜாவை அழைத்து, கி. ரா. பெயரை சதி வழக்கிலிருந்து நீக்கினார்.
மொத்தம் 97 பேரில் கைதாகாத பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், பயில்வான் அருணாச்சலம் ஆகிய மூவர் மீது தனியாக 1953ல் விசாரணை நடத்தி பாலதண்டாயுதம் மற்றும் மீனாட்சிநாதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் என்.டி. வானமாமலை, பாளை சண்முகம் ஆகியோர் வாதாடினார்கள். 92 பேர் மீது ஒரு வருடம் விசாரணை நடத்தி 78 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 14 பேர் தண்டிக்கப்பட்டனர். ப. மாணிக்கம், ஆர். நல்லக்கண்ணு, வேலுசாமி தேவர், வேலாயுதம், கே.பி.எஸ். மணி, வி. அழகுமுத்து, ஐ. மாயாண்டி பாரதி, ஆர். கிருஷ்ண கோனார், எம். பொண்ணு ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு 5 ஆண்டுத் தண்டனையும், ஒருவருக்கு ஓராண்டுத் தண்டனையும் வழங்கப்பட்டன.  நெல்லை சதி வழக்கில் குற்றவாளிகளைத் தேடி நெல்லை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, கோவில்பட்டி, எட்டயபுரம், போன்ற பகுதிகளுக்குச் சென்ற காவல்துறையினரால் வதைக்கப்பட்டதை கி.ரா பெருமூச்சுடன் நினைவு கூறினார்.
(பதிவுகள் தொடரும்)#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி -

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...