........................................................
தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்றழைக்கப்படும் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் புதுப்பொலிவு பெற புத்துயிர் ஊட்ட வேண்டும் என கும்பகோணம் பகுதி மக்களும், இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
1854-ல் கும்பகோணத்தில் ஒரு மாகாண பள்ளியாக நிறுவப்பட்டு, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற வில்லியம் ஆர்சர் போர்ட்டர் மற்றும் டி.கோபால்ராவ் ஆகிய கல்வியாளர்களின் முயற்சியால் 1867-ல் அரசினர் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது இக்கல்லூரி.
இங்கிலாந்து நாட்டில் சார், கேம்பிரிட்ஜ் நகரம் கேம் நதிக்கரையில் நதிக்கரையில் எப்படி கேம்பிரிட்ஜ் அமைந்துள்ளதோ, அதேபோல கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் போன்று கும்பகோணம் கல்லூரியின் கட்டிட முகப்பும் வடிவமைக்கப்பட்டது. கேம் நதிக்கரையில் பாலம் உள்ளதுபோல காவிரியிலும் பாலமும், போட் கிளப்பும் அமைக்கப்பட்டது. இரு கல்லூரிகளின் கட்டுமான வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்விதமாக அமைக்கப்பட்டது. அதனால்தான் தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என இக்கல்லூரி அழைக்கப்படுகிறது.
இத்தகைய புகழ்பெற்ற கல்லூரியில் பயின்றவர்களில் வெள்ளி நாக்கு (சில்வர் டங்) என்றழைக்கப்படும் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, பி.எஸ்.சிவசாமி ஐயர், கணித மேதை சீனிவாச ராமானுஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் இக்கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் சென்னை மாநில கல்லூரி, ராணிமேரி கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, கும்பகோணம் அரசு கல்லூரி, திருநெல்வேலி இந்து கல்லூரி ஆகியவையே முதன் முதலாக அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட கல்லூரிகள்.
கும்பகோணத்தில் ஆடவ ருக்கென தொடங்கப்பட்ட இக்கல்லூரியில், கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை, பட்ட ஆராய்ச்சிப் படிப்புகளில் தற்போது 4ஆயிரம்மாணவ,மாணவிகள்
படிக்கிறனர்.
கும்பகோணம் கல்லூரியின் முகப்பு இங்கிலாந்து- இந்தியா பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் உள்ள மரத்தூண்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கட்டிடத்தின் அஸ்திவாரம் நன்றாக உள்ளது. மேல்பகுதி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனைப் பராமரித்தால் மீண்டும் புதுப்பொலிவு பெறும்.
இக்கல்லூரியில் படித்தவர்கள் பல்வேறு நாடுகளில் விஞ்ஞானியாகவும், கல்வியாளர் களாகவும் உள்ளனர். இக்கல்லூரி தமிழகத்தில் தொடக்க காலத்தில் இருந்த 5 கல்லூரிகளில் ஒன்றாகும்.
மகாமகத்தின்போது காவிரி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையடுத்து, இக்கல்லூரியின் கட்டிடங்கள் பொதுமக்கள் பார்வையில் படும் விதமாக உள்ளன. இந்த கல்லூரியின் பாரம்பரிய கட்டிடங்களைச் சீரமைக்க வேண்டும் என்பதுதான் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment