Sunday, September 25, 2016

ராஜாஜி ஹால்

ராஜாஜி ஹால்

பல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட ராஜாஜிஹாலின் கதையும் அதே அளவிற்கு பிரம்மாண்டமானதுதான். இந்த ஹால் ஒரு மாபெரும் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆம், திப்பு சுல்தானுக்கு எதிராக நான்காவது மைசூர் யுத்தத்தில் கிழக்கிந்திய படைகள் பெற்ற வெற்றியின் சின்னம்தான் இது.

1800இல் தொடங்கி 1802இல் கட்டி முடிக்கப்பட்டபோது, இதற்கு பான்குவிடிங் ஹால் (Banqueting Hall) எனப் பெயரிடப்பட்டது. காரணம், பொதுநிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு அரங்கமாகத் தான் இது கட்டப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளரும் வானியல் நிபுணருமான ஜான் கோல்டிங்ஹாம் என்பவர்தான் இந்த பிரம்மாண்ட ஹாலை வடிவமைத்தார். இவர் வானியல் நிபுணர் என்பதாலோ என்னவோ, வான சாஸ்திரத்தில் அதிக ஆர்வம் காட்டிய புராதன கிரேக்கர்களின் கன்னித் தெய்வமான ஏத்தெனாவின் பார்த்தினான் கோவில் சாயலில் இதனை வடிவமைத்தார். இப்போதும் ஏத்தென்ஸ் நகரில் சிதிலமடைந்து கிடக்கும் பார்த்தினான் கோவிலைப் பார்த்தால், உங்களுக்கு இதை ஏற்கனவே எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும்.  

சரி, விஷயத்திற்கு வருவோம். புதிய தலைமைச் செயலக கட்டடம் அமைந்திருக்கும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் பரந்தவெளி முழுவதும் ஒரு காலத்தில் ஆண்டானியா தி மதிரோஸ் (Antonia de Madeiros) குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது. அன்றைய சென்னைப்பட்டினத்தின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த இந்த குடும்பத்தினால்தான் சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயரே வந்தது என்று ஒரு கருத்தும் உள்ளது. இந்த குடும்பத்திடம் இருந்து, அந்த பரந்து விரிந்த மைதானத்தை 1753இல் விலைக்கு வாங்கிய கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் ஆளுநர்கள் தங்குவதற்காக அங்கு ஒரு பெரிய பங்களாவைக் கட்டியது. அதுதான் அரசினர் இல்லம்

சரித்திரப் புகழ்மிக்க பல நிகழ்வுகளுக்கு சாட்சியமாய் இருக்கும் ராஜாஜி ஹால்
ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் கிளைவ் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1800களில் இந்த கட்டடம் சற்றே புனரமைக்கப்பட்டது. அப்போதுதான் அருகில் பான்குவிடிங் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் வடிவமைப்பாளர் ஜான் கோல்டிங்ஹாம் இதற்காக உருவாக்கிய வரைபடங்கள் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஹால், 1802 அக்டோபர் 7ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை மாநகரின் எத்தனையோ முக்கியமான விழாக்கள் இந்த கட்டடத்தில் நடைபெற்றன. மக்கள் இதைப் பெருமளவு பயன்படுத்தியதால், 1875இல் தொடங்கி இந்த ஹால் அடிக்கடி புனரமைக்கப்பட்டும், விஸ்தரிக்கப்பட்டும் வந்தது. 1857இல் இருந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் இந்த பிரம்மாண்ட ஹாலில்தான் நடைபெற்றது. 1879இல் செனட் இல்லம் கட்டப்படும் வரை மெட்ராஸ் பட்டதாரிகள் இங்குதான் தங்களின் பட்டங்களை பெற்றுச் சென்றனர்.

1938 ஜனவரி 27 - 1939 அக்டோபர் 26 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானியின் சட்டப்பேரவை இங்குதான் செயல்பட்டது. பின்னர் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததும், முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலச்சாரியின் நினைவாக, இந்த கட்டடம் 1948இல் ராஜாஜி ஹால் எனப் பெயர் மாற்றப்பட்டது.

120 அடி நீளமும், 65 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்ட இந்த விசாலமான கட்டடம், வெறும் கூட்டங்கள் மட்டுமின்றி சரித்திரப் புகழ்மிக்க பல நிகழ்வுகளுக்கு சாட்சியமாய் இருந்திருக்கிறது. 1961ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது பிறந்தநாள் கேக்கை இந்த ஹாலில்தான் வெட்டினார். அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே காமராஜர் இறந்தபோது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இதே ராஜாஜி ஹாலில்தான் அவரின் உடல் வைக்கப்பட்டது. இவரைத் தவிர பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற முன்னாள் முதலமைச்சர்களின் உடல்களுக்கு தமிழகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதையும் இந்த ஹால் கனத்த இதயத்தோடு பார்த்திருக்கிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஒரு காலத்தில் அழகிய வனம்  போல இருந்தது. கொளுத்தும வெயிலிலும் குளிர்ச்சியான நிழல் பரப்பும் நிறைய ஆலமரங்கள் இங்கிருந்தன. ஆனால் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இதில் பல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அரசினர் இல்லம், காந்தி இல்லம் உட்பட இங்கிருந்த சில பழைய கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. ஆனால் இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்து, 200 ஆண்டுகளைக் கடந்து நின்று கொண்டிருக்கிறது ராஜாஜி ஹால்.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...