நைல் நதியையும் காவிரியையும் ஒப்பிட்டு, சில கருத்துகள ;காவிரியின் நீளம் 765 கிலோமீட்டர்கள்தாம். நைல் நதியின் நீளம் 6853 கிலோமீட்டர்கள். நைல் நதிதான் உலகின் மிக நீளமான ஆறு. உலகில் 1000 கிலோமீட்டர்களுக்கும் மேல் நீளமுள்ள ஆறுகள் என்று பட்டியலிட்டால் அதில் மட்டுமே 180 ஆறுகள் இடம்பிடிக்கின்றன. காவிரியின் இடம் அதற்கும் கீழேதான்.
தென்னிந்தியாவின் மிக நீளமான பேராறான கோதாவரியின் நீளமே 1465 கிலோமீட்டர்கள்தாம். அவ்வளவு ஏன், காஷ்மீரத்தின் ஸ்ரீநகருக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட சாலைத் தொலைவே 3652 கிலோ மீட்டர்கள்தாம். நைல் நதியின் நீளமோ அதைவிட இருமடங்கு. அதாவது நைல்நதி என்பது இந்தியாவைப்போல் இருமடங்கு தொலைவு வடக்கு தெற்காகப் பாய்வது.
நைல்நதியின் பாய்நில/வடிநிலப்பரப்பே முப்பத்து நான்கு இலட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவின் பரப்பளவே 3287263 சதுர கிலோமீட்டர்கள்தாம். அதனால் நைல் நதியின் கணக்கே வேறு.
நைல் நதி தன்போக்கில் பகாசுர ஏரிகளை உருவாக்கி உருவாக்கி நகர்கிறது. அதன் இருமருங்கும் பெரும்பாலை நிலங்களே செக்கச் செவேலென்று இருக்கின்றன. அந்தப் பாலைகளில் மக்களே இருக்க மாட்டார்கள். அல்லது மக்கள் நெரிசல் இல்லை. அந்தத் தண்ணீரை எதிர்பார்க்கும் வேளாண்மை வாழ்க்கையும் அங்கே இல்லை.
எகிப்திலுள்ள கழிமுகப் பகுதிகளில்தான் வேளாண்மைக்குரிய பச்சைப் பசேல் அறிகுறிகள் காணப்படுகின்றன. பிற பகுதிகளில் அந்நதி யார்க்குமே தேவைப்படவில்லை.
நைல் போன்ற பேராறுகளில் வெள்ளப்பெருக்கம்தான் தலைவலியாக ஆகுமேயன்றி, நீரின் போதாமையன்று. இத்தகைய வெள்ளப்பெருக்கால்தான் யாங்க்ட்சி ஆற்றைச் “சீனாவின் துயரம்” என்றே அழைத்தார்கள்.
காவிரியைப் போன்று நைல் நதிக்குள் மனிதர்கள் எளிதில் இறங்கிவிட முடியாது. ஆயிரக்கணக்கான முதலைகள் நைல் நதியில் வாழ்கின்றன. நைல் நதிபோன்ற நீர்ப்பெருக்கு எனில் அங்கே வேளாண்மைக்கே தேவையில்லை, அந்நதியின் மீன்வளமே போதும்.
நைல் நதி பத்துக்கும் மேற்பட்ட நாடுகளோடு கலந்து வழிகிறது. நம் காவிரிக்குப் பத்து மாவட்டங்கள் சொந்தம் கொண்டாடுமா ? அதுபோலவே, ஐரோப்பியக் கண்டத்தில் பத்து நாடுகள் வழியாகப் பாயும் டான்யூப் நதியோடும் ஒப்பீடுகளைக் காண்கிறேன். பனிநிலப் பரப்பான ஐரோப்பாவில் டான்யூப் நதி என்பது நீர்வழித்தடமே அன்றி, காவிரியைப்போல் ஒரு வெப்ப மண்டல வேளாண்மைக் குடிகளின் நீர்த்தேவையை எதிர்கொள்வதில்லை.
இணைப்பில் உள்ள படங்கள் பல செய்திகளைச் சொல்லும். அதனால் ஒப்பீடுகளை முறையாகச் செய்யுங்கள். பல்வேறு சாக்குபோக்குகளை முன்வைப்பதன்மூலம் உண்மைகளைப் பின்னுக்குத் தள்ள வேண்டா.
No comments:
Post a Comment