Saturday, September 3, 2016

காஷ்மீர்

இந்த மாத உயிர்மை  ( செப்டம்பர் 2016) இதழில் , காஷ்மீர் குறித்த என் பத்தி

கண்ணீரும் கம்பளையுமான காஷ்மீர்

- கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பர்வதங்கள் அடங்கிய சொர்க்க பூமியாம் காஷ்மீர் எரிகின்றது. அங்குள்ள மக்கள் வேதனையில் கண்ணீரும் கம்பளையுமாக துடிக்கின்றனர். காஷ்மீரின் நுழைவில் சொர்க்கபூமி துவங்குகிறது. இந்தப் பள்ளத்தாக்கு மகிழ்ச்சியாக வரவேற்கிறது என்று அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேல் காஷ்மீரில் பதட்டம்தான் நிலவுகின்றதே ஒழிய மகிழ்ச்சி இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப்படைகளால் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர். பலர் தங்களுடைய பெற்றோர்களை இழந்து ஆனாதைகளாக ஆக்கப்பட்டனர். தமிழ் ஈழத்தில் நடந்த துயரம் இங்கும் நடந்தேறியது. பலப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி தற்கொலையும் செய்துகொண்டனர். இப்படிப்பட்ட நிலையில் காஷ்மீர் எப்படி மகிழ்ச்சிக்குரிய சொர்க்கபூமியாக திகழும்? தொடர்ந்து காஷ்மீரில் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. 

1846 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ரூ. 75 இலட்சத்துக்கு காஷ்மீர் சமஸ்தானத்தை குலாப் சிங்குக்கு விற்றனர். அவருடைய மகன் ஹரிசிங் 1920ல் மன்னர் பொறுப்புக்கு வந்தார். மன்னாராட்சியில் நடந்த கொடுமைகளை எதிர்த்து ஷேக் அப்துல்லா போராடினார். இதற்காகவே காஷ்மீர் முஸ்லீம் மாநாடு கட்சியைத் துவக்கினார். 

1931ம் ஆண்டு ஜூலை மாதம் ஷேக் அப்துல்லா நடத்திய போராட்டத்தில் மன்னரின் ஆயுதப் படையினர் 22 பேரை சுட்டுக் கொன்றனர். மன்னருக்கு எதிராக பேராட்டங்கள் அப்போது தீவிரமாகத் தொடங்கின.  1938 ஆம் ஆண்டு பண்டித நேரு ஷேக் அப்துல்லாவுடன் நட்பு கொண்டார். நேருவும் தனது பூர்வீக  பூமி என்பதால் காஷ்மீர் பிரச்சினையில் ஆர்வம் செலுத்தினார். பிற்காலத்தில் ஷேக் அப்துல்லா தன்னுடைய கட்சியின் பெயரை காஷ்மீர் தேசிய மாநாடு என்று மாற்றி சோசலிஸ கொள்கைகளை வலியுறுத்துவோம் என்று நயா காஷ்மீர் என்ற கோஷத்தை முன்வைத்தார். இந்துக்களும் தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்ற நிலையில் இந்த முடிவை மேற்கொண்டார்.  

மன்னரை எதிர்த்து கடுமையான போராட்டத்தின் விளைவாக ஷேக் அப்துல்லா 1945 மே 25ம் தேதி கைது செய்யப்பட்டு  3 ஆண்டு சிறை தண்டனையும் அனுபவித்தார்.  இதைக் கண்டித்து நேரு காஷ்மீருக்கு சென்றபொழுது மன்னராட்சி நேருவை தடுத்து நிறுத்தியது. காஷ்மீர் குறித்தான போராட்டங்கள், இந்தியா முழுவதும் நடந்தன.  காஷ்மீர் சமஸ்தானத்தில் முஸ்லீம்களும், பண்டிட்களும் இருந்தனர். இப்படித் தொடர்ந்து சிக்கல்கள் நடந்தவண்ணம் பள்ளத்தாக்கில் நிலைமைகள் இருந்தன. 

1947ல் நாடு விடுதலைப் பெற்றபோது இந்தியா-பாகிஸ்தான் உருவானபொழுது காஷ்மீரை பாகிஸ்தானோடு இணைக்க வேண்டும் என்று ஜின்னா விரும்பினார். ஆனால் ஷேக் அப்துல்லா அதை ஏற்கவில்லை. இந்தியாவுடனே இருக்க விரும்பினார். இந்நிலையில் பாகிஸ்தான் மலைவாசிகள் ராணுவத் துணையுடன் காஷ்மீர் பள்ளதாக்கில் படையெடுத்தனர். நிலைமை சிக்கலாகிவிட்டது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே தனது சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைப்பதாக தெரிவித்தார்.  இந்திய அரசு உடனே ராணுவத்தை அனுப்பி பாகிஸ்தான் ஊடுருவலைத் தடுத்தது.  இந்தியப் படைக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் உஸ்மான் உயிர்த்தியா முயற்சியால் பாகிஸ்தானுடைய முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தோடு ஷேக் அப்துல்லாவின் ஆதரவாளர்களும் இணைந்து இந்த முற்சியில் வெற்றிகண்டனர்.  

இந்நிலையில் 1947 டிசம்பரில் இந்திய அரசு பாகிஸ்தான் அத்துமீறல் படையெடுப்புக் குறித்து ஐ.நா.வில் முறையிட்டது.  ஐ.நா. பாதுகாப்புக் குழுவிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு 1948 ஏப்ரல் 21ம் தேதி அன்று காஷ்மீர் பிரச்சினைக்கு பாதுகாப்பு குழு அமைத்து போர் நிறுத்த எல்லைக் கோட்டையும் வகுத்து தந்தது.  இந்நிலையில் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் காஷ்மீர் பிரச்சினையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்தன.  நேருவோ, ஐ.நா. மத்தியஸ்தம் என்ற நிலைப்பாடு கொண்டார்.  சர்தார் படேல் ஐ.நா. மத்தியஸ்தம் வேண்டாம். வேறு விதத்தில் இதைத் தீர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் உள்துறை அமைச்சரான பட்டேலிடம் ஆலோசிக்காமலேயே தன்னுடைய வானொலி பேச்சு மூலமாக பிரதமர் நேரு, காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மத்தியஸ்தத்திற்கு விட்டுவிட்டோம் என்று அப்போது அறிவித்துவிட்டார்.  இது பெரிய சர்ச்சையாக டெல்லி ராஜபாட்டையில் கிளம்பியது.  

ஐ.நா. பாதுகாப்புக் குழுவும், காஷ்மீர் மக்களுடைய கருத்தறிய சர்வஜன பொதுவாக்கெடுப்பு (Referrendum) நடத்தவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்தது. ஆனால் இந்திய அரசு அதை ஏற்க மறுத்தது. இது குறித்து ஐ. நா. மன்றத்தில் 1948லிருந்து 1957 வரை காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் இந்தியா அதை மறுத்துவிட்டது.  

இந்நிலையில் காஷ்மீர் பிரதமர் (அன்றைக்கு பிரதமர் என்றுதான் அழைக்கப்படுவார். எப்படி சென்னை ராஜதானி முதல்வர் ஓமந்தூராரை பிரதமர் என்று அழைத்தார்களோ....) ஷேக் அப்துல்லாவும் பிரதமர் நேருவும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, உரிமைகள், தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்பதெல்லாம் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.  இதன் விளைவாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ஐ காஷ்மீரைக் குறித்து சேர்க்கப்பட்டது. அங்கு சொத்துக்கள் போன்ற வளங்களை பிற மாநிலத்தினர் உரிமை கொண்டாட முடியாது  என்ற பல சிறப்பு உரிமைகள் காஷ்மீர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டன.  1956ஆம் அண்டு நவம்பர் 17 அன்று காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஏற்கொள்ளப்பட்டு, வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் நடைமுறைக்கு வந்தன.  

இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளிறவுக் கொள்கை, செய்தி மற்றும் தொலைத் தொடர்பு குறித்தான விடயங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்படும். மற்ற துறைகள், பிரச்சினைகள் எல்லாம் காஷ்மீர் மாநில சட்டமன்றமே முடிவு செய்ய வேண்டும்.  காஷ்மீர் மாநிலத்தின் சொத்துக்கள், குடியிருப்புகள் யாவும் அம்மாநில மக்களுக்கே உரிமையாகும். அவசரகாலச் சட்டத்தையும் காஷ்மீர் மாநிலத்தைக் குறித்து அந்த மாநில சட்டமன்றமே முடிவெடுக்க வேண்டும்.  முக்கியமான நிர்வாக இன்னும் சொல்லப்போனால் அந்த மாநில ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட காஷ்மீர் மாநில சட்டமன்றத்திற்குத்தான் உண்டு.  இப்படியான ஒரு இணக்கமான நிலை ஏற்பட்டிருந்தாலும் காஷ்மீர் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லா மீது ஒரு சந்தேகப் பார்வை டெல்லிக்கு ஏற்பட்டுவிட்டது.  பிரதமர் நேருவும் இதைக் கடுமையாக எடுத்துக்கொண்டு 1953 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை தேச விரோதக் குற்றத்தில் கைது செய்து 12 ஆண்டுகள் சிறை வைத்தார். அதன்பின் மத்திய அரசினுடைய அணுகுமுறையால் காஷ்மீரினுடைய சில அதிகாரங்களும், உரிமைகளும் நீர்த்துப் போயின. 

#ஷேக்அப்துல்லா 1964ல் விடுதலையாகி காஷ்மீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நிர்வாகத்தில் இருந்தபொழுது, நேரு மறைந்து சாஸ்திரி பிரதமராக இருந்தபொழுதும் ஷேக் அப்துல்லா திரும்பவும் கைது செய்யப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில்தான் ஷேக் அப்துல்லா கொடைக்கானல் கோஹினூர் இல்லத்தில் சிறைக் கைதியாக இருந்தார்.  ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1967ம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யவேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை வைத்தபோதும், அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. ஷேக் அப்துல்லாவின் வயதை மனதில் வைத்துக்கொண்டு விடுதலை செய்யப்பட்டார்.

காஷ்மீர் மக்களிடம் இந்தியாவோடு மனப்பூர்வமாக இணைந்தோம். அதை ஒருங்கிணைத்த ஷேக் அப்துல்லாவை வேதனைப்படுத்திவிட்டார்கள் என்கின்ற ஆதங்கம் காஷ்மீர் மக்களிடம் இன்றைக்கும் வேதனையாக உள்ளது.  அதே போல அவருடைய புதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சியையும் இந்திரா காந்தி திட்டமிட்டு கலைத்ததையும் காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  நம்பி இந்தியாவோடு இணைந்தோம். கொடுத்த உரிமைகளும், சட்டங்களும் சிறிது சிறிதாக இழந்துவிட்டோம் என்ற வேதனைதான் பெரிய போராட்டங்களாக பிற்காலத்தில் எழுந்தன.  காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசு சற்று முரட்டுத்தனமாக இல்லாமல் மென்மையோடு லாவகமாக அணுகியிருக்கவேண்டும்.  பாகிஸ்தான் கிழக்கு வங்கத்தில் நடந்துகொண்டு, பங்களாதேஷ் உதயமானது போல, காஷ்மீர் பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்பதுதான் அனைவருடைய நோக்கம். ஒரு காலத்தில் உருதுமொழி திணிக்கப்பட்டபோது, வங்கத்திலிருந்த முஸ்லீம்கள் போராடி வெற்றி கண்டனர். பாகிஸ்தானில் உள்ள பக்ரூன் முஸ்லீம்கள் பக்ரூனிஸ்தான் கேட்டு போராடுவதையும், காஷ்மீர் மக்கள் அறியாதவர்கள் அல்லர். எனவே பாகிஸ்தானுடன் காஷ்மீர் மக்கள் ஒருபோதும் சேர விரும்ப மாட்டார்கள்.

இவ்வாறான சிக்கலில் காஷ்மீர் கொதிநிலையில் உள்ளது. இது ஒன்றும் முதல் முறையல்ல. பல ஆண்டுகளாக கொந்தளிப்போடு மக்கள் போராடி வருகின்றனர். 1990ல் ஏற்பட்ட சூழல் 25 ஆண்டுகளுக்குப் பின்னும் ஒரு நம்பிக்கையின்மை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளது.  காஷ்மீர் பிரச்சினை தொடர்ச்சியான புறக்கணிப்பு, அதை தீர்த்து சரியான அணுகுமுறையில் செல்லக்கூடிய இயல்பான முறைகளை டெல்லி தர்பார் வழிவகுக்கவில்லை. 

1990 ஆரம்பத்தில் அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்கள் கொண்ட சுயாட்சி என்று சொல்லி வானமே எல்லை என்று குறிப்பிட்டார். ஆனால் சொன்னபடி மத்திய அரசு கடமைகள் ஆற்றவில்லை. அதன்பின் வந்த தேவகவுடா, குறைந்தபட்சம் தனது பொதுசெயல் திட்டத்தில் காஷ்மீருக்கு அதிகபட்ச சுயாட்சி என்ற உறுதிமொழியும் காற்றில் பறந்தது.  அதன்பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் முறையாக ஏற்கப்பட்டும் நாடாளுமன்றத்தில் இது குறித்தான மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. 

இதற்கிடையில் ஃபரூக் அப்துல்லா அரசு காஷ்மீர்-மத்திய அரசு உறவுகள் குறித்து ஒரு குழு அமைத்து அறிக்கையும் பெற்றது. 2010ம் ஆண்டு ஏற்பட்ட கொந்தளிப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் #காஷ்மீர் பிரச்சினை எழும்பொழுது அதை தீர்ப்பதாக ஒரு பாவ்லா காட்டிவிட்டு, அது குறித்து மேல் நடவடிக்கை இல்லாமல் டெல்லி பாதுஷாக்கள் விட்டுவிடுகின்றனர்.  

பேந்த் குழு, ஓராக் குழு, பட்கோன்கர் குழு என பலக் குழுக்கள் காஷ்மீரைக் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகள் வழங்கியும் அவை நாடாளுமன்றத்தில் கூட வைக்கப்படவில்லை.

இன்றைக்கு இந்த பூமியின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் புதிய இளைஞர்கள் சுதந்திர காஷ்மீர், அஸாதி என்ற முழக்கங்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர். மற்றொருப் புறத்தில் பாகிஸ்தானுடைய ஊடுருவலும், தலையீடும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. தீவிரவாதமும் காஷ்மீரில் வலுத்து வருகின்றது.  புர்கான் வானி படுகொலை காஷ்மீரை கொந்தளிக்க வைத்துவிட்டது.  அனைத்துத் தரப்பினரும் வீதியில் வந்து முழக்கங்கள் இடுவதும், கல்லெறிவதும் வாடிக்கையாகிவிட்டன.  இப்படியான நிலைமைகள் முற்றிக்கொண்டு போனால் தீர்வு எட்ட முடியுமா என்ற சூழல்தான் நிகழும். புறையோடியபின் எந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றிபெறாது.  புர்கான் வானி மரணத்துக்குப்பின் எழுந்த மக்கள் கிளர்ச்சியின் மீது ஏவப்பட்ட அரசாங்கத்தின் அடக்குமுறை மேலும் காஷ்மீர் மக்களை கோவப்படுத்தும்.  10 நாட்களாக மத்திய பாதுகாப்புப்படை கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு பள்ளத்தாக்கு மக்களையே கண்ணீரிலும், துயரத்திலும் ஆழ்த்தியது. இந்நிலையில் காஷ்மீர் மாநில அரசு இது குறித்து எந்த முடிவும் மேற்கொள்ள முடியாது. அதன் கட்டுப்பாட்டில் நிலைமைகள் இல்லை. அம்மாநில முதல்வர் மெகபூபா முக்தி இது குறித்து அமைதி காக்க அழைப்பு விடுவதற்குக் கூட 5 நாட்கள் பிடித்தன.  பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டன.  என்ன நடக்கின்றது என்றே வெளி உலகத்துக்கு தெரியவில்லை.  பிஜூபொக்ராவில் நடந்த போராட்டத்தில் ஆயுதப்படைகள் நடந்துகொண்ட முறைகள், வன்முறை கலவரங்களாக வெடித்தன.

சரி. மற்றொருப் பக்கத்தில் இந்துக்களான காஷ்மீர் பண்டிட்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்று கேட்டால் அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இப்படியான நெருக்கடியிலிருந்து மீள ஒரு அமைதியான பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் சென்று முறையான வழியில் காஷ்மீரில் உள்ள ஆயுதப்படைகளை திரும்பப் பெற்று அங்கு நடக்கும் மனித உரிமைகள் மீறலையும் அறவே ஒழித்து காஷ்மீர் மக்களுடைய அபிலாஷைகளை நடைமுறைப்படுத்தும் சூழல்களை உருவாக்க வேண்டும்.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் வந்தது.  காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர், நீதிபதிகள் கான் வில்கர், சந்திரசூட், அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்தன. கடந்த 29.7.2016 அன்று வழக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் பள்ளத்தாக்கில் நடக்கும் கலவரங்களைத் தடுத்து அங்கு அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவாதத்தை தருவதோடு இல்லாமல் அதை நடைமுறையும் படுத்தவேண்டும் என்று தங்களது கருத்தக்களைத் தெரிவித்தனர். மேலும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமையவேண்டும் என்றும் வழக்கில் கேட்டப்போது அது குறித்து நீதிபதிகள் அரசியல் ரீதியான பிரச்சினைகளை நாங்கள் கையாள முடியாது என்றும் அங்கு அமைதி நிலவ உரிய அறிக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறுவோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  இந்த வழக்கில் மருத்துவமனைகள், பள்ளிகள், கடைகள், அதுமட்டுமல்லாமல் அத்தியாவசியப் பொருட்களே கிடைக்கவில்லை என்று மனுதாரர் பீம்சிங் குறிப்பிட்டதை கவனத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் பிரிவு 21ன் படி மக்களுக்குத் தேவையான அனைத்து உரிமைகளும், தேவைகளும் போய் சேர்ந்ததா என்று மத்திய அரசு கண்காணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது.  

இப்படியான கலவர பூமியான காஷ்மீரமும், அங்கு வாழும் மக்களுக்கு புனர்வாழ்வு ஏற்பட வேண்டாமா?  அமைதியும் நிம்மதியான வாழ்க்கையும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஏற்பட ஒரு சில தீர்வுகளை மத்திய அரசு தீர்க்கமாக செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். அவசரம், அவசியமான நடவடிக்கைகளை காஷ்மீரில் தள்ளிப் போடாமல் தீவிர நடவடிக்கைகளில் இறங்கவேண்டியது டெல்லி நார்த் பிளாக்கின் கடமையாகும். இதில் கவனமில்லாமல் மாற்றான்தாய் மனப்போக்கில் இருந்தால், இந்தியாவின் இறையாண்மையே கேள்விக்குறியாகிவிடும் என்கிற அச்சம் ஏற்படுகின்றது.#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...