Sunday, September 4, 2016

நதிநீர் இணைப்புத் திட்டம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நதிநீர் இணைப்புகள் மும்முரமாக நடக்கின்றன. தெலுங்கானாவில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 56,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறக்கூடிய வகையில் காளீஸ்வர நதிநீர் இணைப்புத் திட்டம் என்ற பெயரில் அம்பேத்கர் பேரிலும் கால்வாய் அமைத்து நீர்ப் பாசன வசதியைப் பெருக்கியுள்ளார்.  அடிலாபாத், கரீம் நகர், வாரங்கல், ரங்காரெட்டி, நிசாமாபாத், மேடக், நலகொண்டா, போன்ற மாவட்டங்கள் இத்திட்டத்தால் பயன்பெறப் போகின்றன.


அதேபோல கோதாவரி நதியில் இருந்து கடலில் வீணாகக் கலக்கும் நீரை கிருஷ்ணா நதியுடன் இணைக்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஆந்திராவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கிருஷ்ணா மாவட்டம் இப்ரஹிம் பட்டினத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் தாடிபூடி அணைக்கட்டில் உள்ள கோதாவரி நீர் போலாவரம் வலது குடிநீர் திட்ட கால்வாய்க்கு பம்பிங் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த நீர், வெலுகலேரு கிராமம் அருகே உள்ள பலே ராவ் ஏரியில் கலக்கிறது. பின்னர் இந்த நீர் புடிமேரு குடிநீர் திட்ட கால்வாய்க்கு அனுப்பப்படுகிறது.

அதன் பின்னர் இந்த நீர், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள இப்ரஹிம் பட்டினம் பகுதியில் கிருஷ்ணா நதியில் சங்கமிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது கட்டப்பட்டு வரும் பட்டிசீமா அணைக்கட்டு வழியாக ராயலசீமா மாவட்டங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும். இதனால் ராயலசீமாவில் தண்ணீர் பஞ்சம் குறையும் என்று கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாயும் கென் மற்றும் பெட்வா ஆறுகளை இணைக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தின் மாதிரி திட்டமாக விளங்கும்.

இதுபோல பார்-தபி-நர்மதா, தமன்கங்கா-பிஞ்சால், சாப்ட்-கோசி, கோசி-காக்ரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் தமிழகத்தில்

1. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்
2. தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம்
3. காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்

பவானி ,நொய்யலை இணைக்கும் இயற்கை நீர்வழிப்பதை திட்டமான கௌசிகாநதி  திட்டத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .

என்ற இணைப்புத் திட்டங்கள் என்றைக்கு செயலுக்கு வரப்போகிறதோ? வெறும் கனவுத் திட்டங்கள் ஆகிவிடுமா? மனமிருந்தால்தானே மார்க்கம்.

1980லிருந்து நீதிமன்றங்ளின் படிகளை வழக்கறிஞராக இருந்தும் நதிநீரை இணைக்கவேண்டும் என்று அடியேன் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 2012ல் தீர்ப்பை பெற்றப் பிறகும் ஆமை வேகத்தில் நதிநீர் இணைப்புகள் நடப்பதை பொறுக்க முடியவில்லை.

#கோதாவரிகிருஷ்ணாநதிநீர்இணைப்பு #கென்பெட்வாநதிநீர்இணைப்பு #நதிநீர்இணைப்பு #காளிஸ்வரநதிநீர்இணைப்பு #ksrposting #ksradhakrishnanposting #riverlinking

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...