Monday, September 26, 2016

மணல் குவாரியில் விதிகள் மீறல்

மணல்  குவாரியில் விதிகள் மீறல்:
-----------------------------------
மணல்  குவாரியில் விதிகள் மீறப்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது . மணல் குவாரியில்  அரசு பொதுப்பணிதுறை  நடத்துவதாக பெயர் பலகையில் (BOARD) உள்ளதே தவிர,  மணல் குவாரியில் அரசு அதிகாரிகள் யாரும்  இருப்பதும் இல்லை. விதி 1 - காலை 7 முதல் மாலை 5 மணி  வரைதான் 
மணல் எடுக்க வேண்டும்.

விதிமீறல் :  ஆற்றில் 24 மணி நேரமும் (இரவு -பகல்) மணல் அள்ளப்பட்டுக் கொண்டு உள்ளது. மக்கள் போராட்டத்தால் இது நிறுத்தப்படுவதும்,  சில வாரங்களில் மீண்டும் தொடர்வதும் என்ற   நிலையே  உள்ளது.

விதி 2 -நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

விதிமீறல் :  சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டாலும் கூட மணல்குவாரி இயங்கும் பகுதியில் எவ்வித வெளிப்படையான நிர்வாக  தன்மையும் இருப்பது இல்லை.

விதி 3 - ஆற்றுப் படுகையில் மூன்று அடி ஆழம்(ஒரு மீட்டர்) வரை மட்டுமே தோண்டி   மணலை அள்ள வேண்டும்;

விதிமீறல் :  ஆறு முழுக்கவே  10 அடி முதல் 20 அடி ஆழம் வரை(களிமண் மற்றும் பாறை தெரியும்வரை) மணல் சுரண்டி எடுக்கப்பட்டு உள்ளது.

விதி 4 -மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற  அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது.

விதிமீறல் :  ஆறு முழுக்க  நிரந்தரமான  15 க்கும் மேற்பட்ட சாலைகள்,    மணலை எடுத்துச் செல்வதற்காக குறுக்கு வெட்டாக அமைக்கப்பட்டு உள்ளது.

விதி 5 - ஆற்றுக்குள் அமைக்கப்படும்  சாலை,  மக்கி போகும் பொருட்களைக் கொண்டு மட்டும் ஏற்படுத்த வேண்டும்..

விதிமீறல் :  ஆற்றுக்குள் அமைக்கப்படும்  சாலையில்  பெரிய, பெரிய பாறை கற்களை போட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

விதி 6- மணலை அள்ளுவதற்கு மனித சக்தியைத் தவிர,  வேறு இயந்திரங்களைப்  பயன்படுத்தக்  கூடாது.  தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்தவேண்டும். அதுவும் 2 பொக்கலைன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விதிமீறல் :  மணல்குவாரி பகுதியில் ஆற்றில் 8 முதல் 12 வரை  ஜே.சி.பி & பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுதான்  இந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டுக் கொண்டு உள்ளது.

விதி 7 -ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி  தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும்  நட்டு,   எல்லையை வரையறுத்து பிரித்துக் காட்ட வேண்டும். அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு  இருக்க வேண்டும்.

விதிமீறல் :  ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும் நட்டு (800 மீ * 300 மீ) எல்லையை வரையறுத்து எங்கும்  பிரித்துக் காட்டவில்லை. மணல்குவாரி ஒரு ஊரில் அமைகிறது என்றாலே  அதன் கிழக்கு மற்றும் மேற்கில் ஆறு முழுக்கவே  அடுத்தகுவாரி அமையும்  ஊர் வரை  மணல் அள்ளுவது என்பதுதான்  நடைமுறையாக  உள்ளது.

விதி 8 -மணலை அள்ளும்பொழுது, ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளுக்கு  எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது.

விதிமீறல் :  மணலை அள்ளும்பொழுது கரையாவது, மேடாவது என  மணல் இருக்கும் பகுதி எங்கும் நீக்கமற அள்ளி, கரைகளுக்கும்    பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விதி 9 - வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று மணல்குவாரி இயங்க கூடாது . அரசு விடுமுறை நாட்களில் இயங்கக் கூடாது

விதிமீறல் :  ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும்   மணல்குவாரி இயங்குகிறது. மக்களின்   தொடர்ந்த போராட்டத்தால் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சில வாரங்கள்  நிறுத்துவது, மீண்டும் தொடங்குவது என்ற நிலையே உள்ளது.

விதி 10 - ஆற்றின் குறுக்கே பைப்புகள் போட்டு பாலம் போல் எதுவும் அமைக்க கூடாது!

விதிமீறல் :  ஆற்றில் குறுக்கே  12 பைப்  வரை  எல்லாம் போட்டு, நிரந்தர  பாலம் அமைத்து மணல்குவாரி இயங்கி வருகிறது.

விதி 11 - ஆற்றின் இருபுறமும், கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது.   ஆற்றின் கரைக்கு அருகில்தான் மணல் அள்ள வேண்டும்.

விதிமீறல் :  கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது.   ஆற்றின் கரைக்கு அருகில்தான் மணல் அள்ள வேண்டும் என்பது  எல்லாம் எழுத்தில் மட்டும்தான் . இக்கரை முதல் அக்கரை வரை ஆற்றில் 2 கிலோ மீட்டர் நீளம்- 2 கிலோ மீட்டர் அகலத்தில் ஆற்றில் மணல் முழுக்கவே அள்ளப்பட்டு உள்ளது.  ஆற்றில்  எங்குமே மணல் சிறிதளவு கூட இல்லை.

விதி 12 - மணல்குவாரியால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

விதிமீறல் :  மணல்குவாரி அமைந்துள்ள அனைத்து பகுதியிலும்  நிலத்தடி நீர் குறைந்து மரங்கள் கூட காய்ந்து வருகிறது. மணல் லாரிகளில் அதிக பாரம்(3 யூனிட்க்கு பதில் 7யூனிட் வரை )   ஏற்றி வருவதால்  கிராம  சாலைகள்  அனைத்தும்  விரைவில் பழுதடைதல், விவசாயம் அழிவது என்பது இங்கு இயல்பானதாகவே உள்ளது.

விதி 13 -குவாரி மணல் கொட்டி வைக்கப்படும் இடத்திற்க்கு,  ஊராட்சி மன்றத்திற்கு வரி செழுத்த வேண்டும்.

விதிமீறல் :  இது எல்லாம் வெறும் பெயரளவில் மட்டுமே. 100 இல்  ஒரு பங்கு மட்டுமே வரியாக ஊராட்சிக்கு  கிடைக்கும். மணல் குவாரி இயங்கும் இடம் - மணல் கொட்டி வைக்கப்படும் இடம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பாலும்  மணல்கொள்ளையர்களின் அறிவிக்கப்படாத பங்குதாரராகவே உள்ளனர். இங்கு விதிவிலக்காக கூட  ஊராட்சி தலைவர் ஒருவர் கூட மணல்குவாரியின் முறைகேட்டை எதிர்பவர்களாக இல்லை.

விதி 14 -குவாரி மணல், கொட்டி வைக்கப்பட்டு எடுக்கப்படுவதால் அதற்க்கு வருமானவரி   துறையிடம் செகண்ட் சேல் (second sals) வரி செழுத்த வேண்டும்.

விதிமீறல் :  இதுவும்   வெறும் பெயரளவில் மட்டுமே. எங்கு கொட்டி எடுக்கப்படும் மணலுக்கு முறையான கணக்கு கட்டப்படாததால் 100 இல்  ஒரு பங்கு மட்டுமே செகண்ட் சேல் (second sals)  வரியாக அரசுக்கு  கிடைக்கும். 99 பங்கு அதிகாரிகள் உட்பட பலராலும் முறைகேடாக அபகரிக்கப்படுகிறது.

விதி 15 -  குடிநீர் வடிகால் வாரியத்திடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.

விதிமீறல் :  சான்று எல்லாம்  குடிநீர் வடிகால் வாரியத்திடம் தடையில்லா  சான்று  வாங்கப்பட்டு இருக்கும். ஆனால்  குடிநீர் வடிகால் வாரியத்தால் மணல் முறைகேடாக அள்ளும் பகுதியில் எவ்வித  புகாரும் இருக்காது.

விதி 16 - குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறுப்பில் கூட்டுக குடிநீர் திட்டத்திற்காக.   ஆறுகளில் உள்ள  நீர் உறிஞ்சும்  கிணறுகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மணல் எடுக்க கூடாது.

விதிமீறல் :  இது எல்லாம் காகிதத்திற்கு மட்டுமே. ஆறுகளில் உள்ள  நீர் உறிஞ்சும்  கிணறுகளில்  அருகேயே மணல் அள்ளியதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் இங்கு உள்ளது.

விதி 17 -     ஆற்றின்  இரு கரையோரம் தான் மணல் அள்ள  வேண்டும்,. ஆற்றின் நடுவில் அள்ளக்கூடாது.  ஆற்றின் நீரோட்டப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.

விதிமீறல் :  இதுவும்  காகிதத்திற்கு மட்டுமே இருக்கும் விதி ஆகும் . நடைமுறையில் ஆற்றின் நடுவிலும் - ஆறு முழுக்க   அள்ளுவதும், ஆற்றின் நீரோட்டப் பகுதியில் அள்ளுவதும் என்பதே உண்மை.

விதி 18 -  மணலை அள்ளும்பொழுது நீர் ஊறினால்,  அந்தப் பகுதியில் மணல்  அள்ளக் கூடாது.

விதிமீறல் :  சட்டத்திற்கு புறம்பாக  மணலை அள்ளும்பொழுது நீர் ஊறும் பகுதியில்(நீரோட்டப் பகுதியில்) மணல் அள்ளப்பட்டு கொண்டுதான்   உள்ளது.

விதி 19 - மணல் அள்ளும் போக்கில், ஆற்றுக்குள் குளம் போன்ற பள்ளங்களை  ஏற்படுத்தக் கூடாது

விதிமீறல் :  மணல் அள்ளும் போக்கில், ஆறு முழுக்கவே   குளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

விதி 20 -- ஆற்றின்  இரு  கரைகளிலும்,  கரைகளை ஒட்டியுள்ள    பகுதிகளிலும்    காணப்படும்   நீர்தாவரங்களைச்    சேதப்படுத்தக்    கூடாது.

விதிமீறல் :  ஆற்றின் இரு கரைகளிலும், கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் காணப்படும் நீர்தாவரங்களைச் அழித்தே விட்டனர், மணல்குவாரி இயங்கும் பகுதியில்  ஆற்றின் கரைகளில் எங்கும் எந்த நீர் தாவரங்களும் இல்லை. களிமண் தெரியும் வரை அள்ளப்பட்டு வருவதால் ஆறு முழுக்கவே  மணல் அள்ளப்பட்டதால்    சீமை கருவேலமரம்(வேலிக்கருவை) மரமாகவே உள்ளது.

விதி 21 --  கழிவுமணலை  ஆற்றில்  கொட்டக் கூடாது.

விதிமீறல் :  ஆற்றில் கழிவுமணலை கொட்டுவது என்பதுதான் நடைமுறையாக உள்ளது.  மேலும் ஆற்றில்   மணலை தடுத்து வைக்கும் கல்லரைகளை கூட விட்டு வைக்காமல் அள்ளி சென்று உள்ளனர்.

விதி 22 --  மணல் அள்ளுவதற்க்காகவே ஆற்றின் போக்கை திசை திருப்பி விடக் கூடாது

விதிமீறல் :   சட்டப் புறம்பாக   மணல்குவாரி இயங்க ஆற்றின் நீரோட்டப் பாதையில்  ஆறு மறிக்கப்பட்டு, திசை திருப்பி விடப்பட்டு மணல் அள்ளப்பட்டு உள்ளது.

விதி 23 --  சுற்று சூழல் ஆணைய விதிப்படி,  மணல் குவாரி நடத்த   பொதுமக்களிடம்  கருத்து கேட்புக் கூட்டம்  நடத்த வேண்டும்

விதிமீறல் :  பொதுமக்களிடம்  கருத்து கேட்புக் கூட்டம் கூட  நடத்தாமலேயேதான்,  நஞ்சை  புகழூர் - தவுட்டுப்பாளையம், நஞ்சை  தோட்டக்குறிச்சி,  நஞ்சை கடமங்குறிச்சி,   கோம்புபாளையம்- நடையனுர்   புதிய மணல் குவாரிக்கான  அனுமதி சட்ட விரோதமாக     கொடுக்கப்பட்டுள்ளது.

விதி 24 :சுற்றுசூழல் அனைய விதிப்படி  மணல் குவாரி முறைகேடு பற்றி புகார்களை  உதவி பொறியாளர் பொ.ப.து(நீ.ஆ.து, ஆ.பா.பிரிவு,கரூர்)  அவர்களின் தொலைபேசி எண்,  மண்மங்கலம் வட்டாட்ச்சியர்  தொலைபேசி எண்க்களுக்கு  புகார் அளிக்கலாம் என அவர்களது தொலைபேசி எண்களை   மணல்குவாரி  அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்த வேண்டும்.

விதிமீறல் :   தற்போது மணல் அள்ளும் இடம் [நஞ்சை தோட்டக்குறிச்சி புல எண்:சர்வே எண் 915(பகுதி) படி]  அரசின்  அனுமதி பெற்ற இடமா எனக் கூட யாருக்கும் தெரியவில்லை. இது பற்றி விபரம் கேட்க  மணல்குவாரி  அறிவிப்பு பலகையில் உள்ள  உதவி பொறியாளர் பொ.ப.து(நீ.ஆ.து, ஆ.பா.பிரிவு,கரூர்  )  அவர்களின் தொலைபேசி எண்-  234713, மண்மங்கலம் வட்டாட்ச்சியர்  தொலைபேசி எண்-  288334 ஆகியோருக்கு நாங்கள்  கடந்த  பல நாட்களாக தொலைபேசி செய்தும்,  ரிங்க் அடிக்கின்றதே ஒழிய  யாரும் எடுத்து கூட எதுவும் பேசவில்லை. அதிகாரிகள் செயல்பாடு இப்படித்தான் உள்ளது.

உண்மையாக புகார்களை பெற்று மணல்குவாரி முறைகேடுகளை    தடுக்க வேண்டுமானால், பல உயர் நீதிமன்ற நீதிபதிகளால்  முறைகேடு நடக்கிறது என குற்றம் சாட்டப்பட்ட மணல் குவாரிகளுக்கு, பொறுப்பான  அரசு அதிகாரிகளிடம் உள்ள   அலைபேசி எண்களை  மக்களுக்கு தெரியப்படுத்தி  வெளிப்படையாக இயங்கி இருக்க வேண்டும்.

விதி 25 : மணல் முறைகேடாக அள்ளுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

விதிமீறல் :  கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு  மணல் முறைகேடாக அள்ளபபட்டுக் கொண்டு உள்ளது. ஆனாலும் மணல் கொள்ளை நடத்துபவர்கள் யாரின் மீதும்  இதுவரை  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்து கைது  செய்யவில்லை என்பது  மட்டும் அல்ல.   அவர்களுக்கு காவல்துறையும், பெரும்பாலான   அனைத்துதுறை  அதிகாரிகளும் துணை நின்று வருகின்றனர்.  மணல்கொள்ளை நடத்துபவர்களை கண்டு நேர்மையான  அதிகாரிகளும் பயந்துள்ளனர்  என்பதே எதார்த்தம்.

விதி 26 : மணல் எடுத்து செல்லும் லாரிகள் அனைத்தும் தார்பாய் போட்டு, மணல் எதுவும் பறந்து செல்லாமல்   மூடி மட்டுமே எடுத்து   செல்ல வேண்டும்

விதிமீறல் :  மணல்குவாரியில் இருந்து ஸ்டாக் யார்டுக்கு மணல்  எடுத்து செல்லும் லாரிகள்  பெரும் பாலும்  தார்பாய் போட்டு  மூடி செல்வதில்லை.

விதி 27 -    மேலும், மணல் அள்ளிய விபரங்கள் அடங்கிய பதிவேடு, புகார் பதிவேடு,  தாசில்தார் அடங்கிய ஆய்வுக்குழு வாரம் ஒரு முறை ஆய்வு செய்த  விபரப்  பதிவேடு  அனைத்தும் மணல் அள்ளும் ஆற்றின்  கரையில்  வைத்திருக்க  வேண்டும்

விதிமீறல் :  இது எங்கும் நடைமுறையில் இல்லை

விதி 28  - மணல் குவாரி கண்காணிப்பதற்காக 2006 -இல் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி,   அரசாணை எண் 135-ன் படி  மாவட்டம் மற்றும் வட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் வட்ட அளவில் சிறப்புக் குழு எனஅமைத்து இயங்க வேண்டும் எனவும், மாதம் ஒருமுறை இக்குழு  கூடி கனிமவள முறைகேடு பற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும், எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது.

விதிமீறல் :  இது எங்கும் இதுவரை  உண்மையாக நடக்காமலேயே உள்ளது .  போலியாக -பொய்யாக 
கணக்கு காட்டுவதற்காக மட்டும் இருக்கிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...