பாட்ரிஸ் லுமும்பாவின் கடைசிக்கடிதம்
------------------------------------------------
1961ல் தனது 39வது வயதில் சிறையிலடைக்கப்பட்ட பாட்ரிஸ் லுமும்பாவை, பெல்ஜிய ஆட்சியாளர்கள் போராட்டத்தைக் கைவிடக்கோரி சித்ரவதை செய்கிறார்கள். அதை மறுத்ததால், தான் எந்நேரமும் கொல்லப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுக்கு வரும் லுமும்பா, தன் மனைவி பவுலின்னுக்கு கடைசியாக எழுதிய கடிதம் இது. இக்கடிதம் எழுதிய மறுநாள் பெல்ஜியம் மற்றும் சிஐஏ கூலிப்படை அவரை சுட்டுக்கொன்றது.
தைஸ்வில்லே சிறை,
கட்டங்கா மாகாணம்,
காங்கோ ஜனநாயகக் குடியரசு
என் நெஞ்சம் நிறைந்த பவுலின்,
நான் உனக்கு எழுதும் கடைசிக் கடிதமாக இக்கடிதம் இருக்க வாய்ப்புகள் அதிகம். இக்கடிதம் உன் கைக்குக் கிடைக்கும் நேரத்தில் நான் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம்.
காங்கோவின் விடுதலைப் போராட்டத்தில் நானும், என் தோழர்களும் உயிர்த்தியாகம் செய்யத் தயாராகிவிட்டோம்.
எதிரிகள் என்னை சித்ரவதை செய்து பணியவைக்க முயற்சி செய்தார்கள். அவர்களால் முடியவில்லை. இதோ, நம் நாட்டுக்காக நெஞ்சை நிமிர்த்தி உயிரைவிடத் தீர்மானித்துவிட்டேன்.
எந்த ஐ.நா. சபை மீது நாம் அத்தனை நம்பிக்கை வைத்தோமோ, அதே ஐ.நா. சபையின் எஜமானர்களான பெல்ஜிய ஆட்சியாளர்களுக்கோ, அவர்களது மேற்கத்திய நண்பர்களுக்கோ நமது அடிமைத்தனத்தின் வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் எனக்கு வாழ்வும், மரணமும் ஒன்றுதான். வீடும், சிறையும் ஒன்றுதான்.
ஆனால் என் நம்பிக்கை அழியாது. இன்று வானம் மறுக்கப்பட்ட பறவைகளாய்த் திரியும் என் மக்கள், எதிரிகளை முறியடித்து வெற்றி பெறுவார்கள். அடிமைத்தனத்தின் முதுகெலும்பை முறிப்பார்கள்.
நாம் தனிமைப்படவில்லை. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் நமக்காகக் குரல் கொடுப்பார்கள்.
ஐ.நா. அவையும், பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும் சேர்ந்து காங்கோவின் வரலாற்றை எப்படி மாற்றி எழுதுவார்களோ தெரியாது. ஆனால், ஆப்பிரிக்கா தனது சொந்த விடுதலை வரலாற்றைத் தானே தீர்மானிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அடுத்ததாக எதிரிகள் உன்னையும் நெருங்கலாம். உன்னையும், நம் பிள்ளைகளையும் இனி என்னால் காண இயலாது. ஆனாலும் நான் உன்னோடும், நம் மக்களோடும் இருப்பேன்.
எனக்காக அழாதே... நம் மக்களுக்காக அழு. அவர்களுக்காகப் போராடு. நம் இரு மகன்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள். அடிமைப்பட்ட நம் தேசம் வெற்றி பெற பங்களிப்புச் செய். காலனிய ஆட்சியாளர்களை ஓடஓட விரட்டி அடி. நான் என்றும் இந்த காங்கோ மண்ணில் வாழ்வேன்.
வாழ்க காங்கோ... வாழ்க ஆப்ரிக்கா....
No comments:
Post a Comment