Thursday, September 8, 2016

முல்லைப்பெரியாற்றில் கைவைத்தால் பாரதப்புழயில் தண்ணீர் வராது ....

முல்லைப்பெரியாற்றில் கைவைத்தால் பாரதப்புழயில் தண்ணீர் வராது ....

உலகத்தின் அனைத்து நாகரிங்களும் ஆறுகளின் கரைகளிலேயே இருந்ததாக படித்து வந்திருக்கிறோம். சிந்து சமவெளி நாகரீகம் துவங்கி சமீபத்திய வைகை கரை கீழடி வரை. பழமையான நகரங்கள் அனைத்தும் ஆறுகளின் கரைகள் அல்லது ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்துவாரங்களிலேயே அமைந்துள்ளன. ஆக ஒவ்வொரு முக்கியமான ஊருக்கும் அதன் அருகே பாயும் ஆறுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

கேரளத்தில் பாயும் ஆறுகள் அனைத்தும் வற்றாத ஆறுகள். ஆண்டு முழுவதும் அங்கு பாயும் ஆறுகளில் நீர் இருக்கும். காரணம் உலகிலேயே மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் மழைக்காடுகள். ஆண்டின் இரண்டு பருவ காலங்களிலும் இந்த காடுகள் மழை பெறும். ஆக இந்த காடுகளில் இருந்து உருவாகி மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் எப்போதும் நீருடனே இருக்கும். அந்த வகையில் நீர்வளம் மிக்க கேரளத்தில் ஓடும் பெரிய ஆறுகளில் இரண்டாவது பெரிய ஆறு பாரதப்புழா. முதலாவது பெரிய ஆறு முல்லைப் பெரியாறாக துவங்கி பெரியாறாக கேரளத்தில் பயணிக்கும் பெரியாறு. 

#பெரியாறு பெரிய ஆறாக இருந்தாலும் #பாரதப்புழா அளவிற்கு பண்டைய காலத்தில் முக்கியத்துவம் அடையவில்லை. பெரியாற்றின் பாதை பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளே மற்றும் அத்தனை அகலமில்லாததும் கூட. ஆனால் பாரதப்புழா பல இடங்களில் அகலமானது. பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பாரதப்புழயின் கரையில் தான் அமைந்துள்ளது.

கேரளத்தின் வளம் மிக்க பகுதிகள் இந்தப் பாரதபுழாவின் கரைகளிலேயே அமைந்துள்ள. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள முக்கியமான கணவாய்ப் பகுதிகளில் ஒன்றான பாலக்காட்டு கணவாய்ப் பகுதியில் தான் இந்த ஆறு பாய்கிறது. பலக்காடு துவங்கி பொன்னானியில் கடலில் கலக்கும் வரை வளமிக்க விவசாய நிலங்களை பாரதப்புழா உருவாக்கி வைத்துள்ளது. 

ஒரு ஆறு வளமிக்க நிலப்பகுதிகளை உருவாக்கும் போது அங்கே மனிதர்களின் குடியமர்வு இருக்கும்மல்லவா, முற்றிலும் சமவெளிப் பகுதிகளில் ஓடும் இவ்வாற்றின் கரைகளை தங்கள் கட்டுக்குள் வைக்க பல நூறு ஆண்டுகளாக போர்கள் நடந்து வந்துள்ளன. அப்போர்கள் அனைத்தும் மலையாள இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு இன்றும் கரையோரம் இருக்கும் கோவில் திருவிழாக்களின் போது அவைகள் நிகழ்த்தப்படுகின்றன. 

மலையாளத்தின் மிக முக்கிய இலக்கியங்கள் பாரப்புழயின் முக்கியத்துவத்தை குறிப்பிடத் தவறியதில்லை. இலக்கியங்களில் பாரதப்புழா ஒரு கதாப்பாத்திரமாகவே இடம் பெற்று வந்துள்ளது. 

கேரளத்தில் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாரதப்புழா எங்கிருந்து தோன்றுகிறது தெரியுமா ?

தமிழ்நாட்டில்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள #திருமூர்த்திஅணையில் தேக்கி வைக்கப்படும் நீர் தான் பாரதப்புழா ஆற்றில் விடப்படுகிறது. தன்னுடைய மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாட்டிலும் மீதியை கேரளத்திலுமாக பயணிக்கிறது. 

திருமூர்த்தி அணையை தவிர்த்து தமிழகப்பகுதியில் வேறு தடுப்பணைகளே இல்லை எனலாம். 

முல்லைப்பெரியாற்றில் கைவைத்தால் பாரதப்புழயில் தண்ணீர் வராது என்று ஏன் எந்த தமிழக அரசியல்வாதியும் இதுவரை சொல்லவில்லை ? 

கூடுதலாக ஒரு விஷயம் காவிரியின் முக்கிய கிளை நதியான கபினி ஆறு கேரளத்தின் வயநாடுப் பகுதியில் தான் பாய்கிறது.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...