Tuesday, July 10, 2018

விருதுநகர் தெப்பக்குளம் - 150

விருதுநகர் தெப்பக்குளம் - 150
--------------------------
விருதுநகரின் மையப் பகுதியில் என்றும் வற்றாத தெப்பக்குளம் வெட்டப்பட்டு சரியாக 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. விருதுவெட்டி என்று ஆதியில் அழைத்து 1875 முதல் 1923 வரை விருதுபட்டியாக இருந்த ஊர், பல்வேறு தொழில், வணிக வாய்ப்பு பெருக்கத்தினால் விருதுநகரானது. அப்போது திருநெல்வேலி மாவட்டம், விருதுநகர் எல்லை வரை பரவியிருந்தது. விருதுநகர் ரயில்வே நிலையம் தான் அதற்கு ஆரம்ப அடையாளம். 

இன்றைக்கு விருதுநகர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் தமிழருடைய ஐவகை நிலங்களும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகளும், சதுரகிரி மலையும், செண்பகத்தோப்பு சாம்பல் அணில் சரணாலயம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில், தமிழ் இலக்கியத்தையும், தொழிலையும் வளர்த்த ராஜபாளையம், பட்டாசு, அச்சு மற்றும் காலண்டர், தீப்பெட்டித் போன்ற தொழில்களில் முன்னோடியாக திகழ்ந்த சிவகாசி, மிளகாய் பருத்தியை கமிசனில் விற்கும் விவசாயிகளின் கேந்திர நகரம் சாத்தூர், கிராமமும், நகரமும் இணைந்த அருப்புக்கோட்டை, அய்யனார் அருவி, முதலியார் ஊற்று, சஞ்சீவி மலை, பிளவுக்கல் அணை என்ற பல அடையாளங்களோடு ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து, பின் இராமநாதபுர மாவட்டத்தில் இணைந்து விருதுநகர் மாவட்டமாக இன்றைக்கு இருக்கின்றது. 
அமைதியாகவும், ஆர்ப்பாட்டமில்லாமலும் இங்குள்ள தொழில்கள் மற்றும் குறு, சிறு தொழில்களால் நாடு வளர்ச்சியடைகிறது என்று சொன்னால் மிகையாகாது. விவசாயம், தொழில் என நிறைந்த இந்த மண்ணினுடைய மைந்தர்கள் வெள்ளந்தியான மக்கள். 150 வருடத்திற்கு முன்பே சாதாரண மக்களால் திட்டமிடப்பட்டு வெட்டப்பட்ட இந்த குளம், அந்தக் காலத்தில் யதார்த்தமாக நினைத்து அறிவியல் பூர்வமாக சாதித்தது சாதாரண விசயமல்ல. 

#விருதுநகர்_மாவட்டம்
#விருதுநகர்_தெப்பக்குளம்
#Virudhunagar
#Virudhunagar_Pond
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-07-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...