Sunday, July 1, 2018

இந்திரா காந்தியும் ஈழ போராளிகளுக்கு பயிற்சியும்



————————————————
இந்த வாரம் (03/07/2018) குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘ தீவில் கிடைத்த ஆயுதக் குவியல்’என்ற தலைப்பில் ராமேஸ்வரம் - தங்கச்சி மடத்தில் பூமியைத் தோண்டும் போது துப்பாக்கித் தோட்டாக்கள் கிடைத்தன என்ற செய்தியையொட்டி, கடந்த கால ஈழ போராளிகள் குறித்து என்னிடம் பேட்டியை கேட்டனர்.அந்தப்பேட்டி வெளியாகியுள்ளது. நான் முழுமையாக சொன்னகருத்துகள்
இடப்பற்றாக்குறையால் பிரசுரமாகாமல் இருக்கலாம். எனது முழுமையான பேட்டியை அடியில் கண்டவாறு பதிவு செய்கிறேன். 

ஒரு காலத்தில் செல்வநாயகம், அமிர்தலிங்கம் தான் ஈழத்தமிழர் பிரச்சனைகளை தலைமையெடுத்து போராட்டங்களை நடத்தினர் என்று வெளியே தெரியும். பிரபாகரன் என்னோடு 39, சாலைத் தெருவில் மயிலாப்பூரில் தங்கியிருந்த போது பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு நடந்தது. பிரபாகரன் - முகுந்தன் சுட்டுக் கொண்டனர். அதன் வழக்குகளை எல்லாம் அடியேன் தான் நடத்தினேன். பாண்டி பஜார் சம்பவம் 1982இல் நடந்தது. அதற்கு முன்பு பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பற்றிய தகவல் தமிழகம் அறிந்திருக்கவில்லை.

சென்னை பாண்டி பஜாரில் உள்ள கீதா கபே ஹோட்டல் அருகில் 19-5-1982அன்று பட்டப்பகலில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுகொண்டதாக தகவல் பரவியது. அந்த சம்பவத்திற்கு பிறகு தான் ஈழப் பிரச்சனைக்காக ஆயுதம் தாங்கிய போராளிக் குழு இருப்பதை மக்கள் அறிந்தனர். அந்த காலக்கட்டத்தில் தொலைக்காட்சி, ஊடகங்கள் எதுவும் கிடையாது. தூர்தர்சனில் செய்திகள் வரும். தமிழ் நாளேடுகளான தினமணி, தினத் தந்தி, தினமலர், தினகரன், மாலை மலர், மாலை முரசு மற்றும் ஆங்கில நாளேடுகளான தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை தான் இருந்தது. ஈழப் போராளிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்தனர். குறிப்பாக எல்.டி.டி.ஈ (LTTE), டி.யு.எல்.எப் (TULF), பிளாட் (PLOTE), ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF), ப்ரோடெக் (ProTEC), ஈரோஸ் (EROS), டி.ஈ.எல்.எப் (TELF), டெலோ (TELO), TIRU,ENDLF போன்ற பல்வேறு ஈழ அமைப்புகள் செயல்பட்டு வந்தன. 
அப்போது இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அப்போது ஈழத் தமிழர்கள் மீது பரிவு காட்டியது. அவர்களுக்கு இந்தியாவிற்குள் பயிற்சி முகாம் அமைக்கவும், உதவிகளையும் மத்திய அரசு செய்தது. அப்போது தமிழகத்தில் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். 

இந்த செய்திகள் எல்லாம் அன்றை ஆங்கில இந்தியா டுடேவில் அருமை நண்பர் வெங்கட்டரமணி வரைபடத்துடன் விரிவான செய்தி கட்டுரையை எழுதினார். வெங்கட்ரமணி ,எங்களைப் போன்றோருடன் பேசி தகவல்களை சேகரித்த தமிழக வரைபடத்தில் பயிற்சி நடந்த இடங்களை குறியீட்டுடன் வெளியிட்டது. தமிழகத்தில் மொத்தம் 17 இடங்கள் என்று எனது நினைவு. இந்த கட்டுரை இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்திரா காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியுடன் நவீன ஆயுதங்களையும், துப்பாக்கி ரவைகளை வழங்கியதெல்லாம் அன்றைக்கு செய்திகளாகவும் வந்தது. மேலும் அவர்களுக்கு பயிற்சி மட்டுமல்லாமல் ராமேஸ்வரம் - தங்கச்சி மடம், ஆற்றங்கரை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு சென்றுவர போராளிகளுக்கு தடையில்லாமல் இருந்து வந்தது. இந்திரா காந்தி அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையும், அமைதியும் கிடைக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில் இத்தகைய உதவிகளை செய்தார். அந்த காலக்கட்டத்தில் நெடுமாறன், பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்ற முன்னணித் தலைவர்களுடன் பயிற்சி முகாமிற்காக மத்திய அரசினுடைய நெறிகாட்டுதலின் பேரில் இடம் தேடி தமிழகமெங்கும் தேடினோம். 

முதலாவதாக நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட சொறிய அய்யனார் கோவில் பக்கம், பாபநாசம் பக்கத்தில் இடங்களை பார்த்தோம். அங்கு பொருத்தமாக அமையவில்லை. அதற்கடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் பிளவுக்கல் அணையை திறந்து வைப்பதற்காக அப்போது எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அதே நாளில் திருவில்லிப்புத்தூர் - வத்திராயிருப்பு பகுதியின் அருகேயுள்ள தானிப்பாறை மலைப்பகுதிக்கு சென்று பார்த்தோம். அந்த இடமும் சரியாக அமையவில்லை. எம்.ஜி.ஆரை சந்தித்து கருத்துக்களை கூறினோம். பரவாயில்லை வேறு இடம் பார்க்கலாம் என்றார். அப்போது அமைச்சர் காளிமுத்து உடனிருந்தார்., பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், பழக்கடை பாண்டி, தாமரைக்கனி, சிவகாசி பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர். அதன்பிறகு, நெடுமாறனுடைய தோழரும், காமராஜர், அண்ணாவிற்கு நெருக்கமாக இருந்த திண்டுக்கல் அழகிரிசாமியின் எஸ்டேட் திண்டுக்கல் சிறுமலையில் இருந்தது.நெடுமாறனின் முயற்சியில் அந்த இடத்தை பொருத்தமாக அமைந்திட ஏற்பாடு செய்து பயிற்சி நடந்தது. தர்மபுரி மாவட்டம் போன்ற
பகுதிகளுக்கு சென்று முன்னாள் ராணுவத்தினரையும் பயிற்சின் உதவிக்கு
அழைத்து வந்தோம்.

அதன் பின், மேட்டூர் அருகே கொளத்தூர் மணி உதவியால் பயிற்சி முகாம் நடந்தது. கிட்டத்தட்ட அந்த பயிற்சி முகாம்கள் யாவும் இந்திரா காந்தியின் கொடுமையான படுகொலைக்கு பிறகு நிறுத்தப்பட்டது என்று என்னுடைய நினைவு. இவையெல்லாம் நடந்தது 1982-83 காலகட்டம்.இதுகுறித்தான விரிவான பதிவை எனது நினைவுகள்லில் தொகுக்கலாம் என்று நினைக்கிறேன்.

#விடுதலைப்_புலிகள்
#ஈழத்_தமிழர்
#LTTE
#Tamil_Eelam
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-06-2018.

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...