————————————————
சந்திரவிலாஸ் ஹோட்டலும், சாலைக்குமரன் கோவிலும் அன்றாடம் நெல்லை மக்களிடமிருந்து பிரிக்க முடியாதது. 90 ஆண்டுகள் மேல் பழமை ஆனது.அக்கால மேஜை, நாற்காலிகளும், பரிமாறுவதற்கு தட்டுகள் இல்லாமல் வாழை இலையில் தான் உணவு.
ஐந்தாறு பேர் திருப்தியாக சாப்பிட்டால் கூட மொத்த பில் ரூபாய் 200 முதல் 250 தான் வரும். அங்கு கிடைக்கும் காபியின் சுவையும், மணமும் அலாதி. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு எப்படி தாமிரபரணி நீர் சுவையை கூட்டுகிறதோ, அதே போல சந்திர விலாஸ் ஹோட்டலின் சாம்பார், ரசம், மிளகாய் சட்டினி என வித்தியாசமாக, நல்ல சுவையாக எப்போதும் வழங்கப்படுகிறது. நாடு விடுதலைக்கு முன் தொடங்கப்பட்ட இந்த உணவகம் சுத்த சைவம். விடுதலைப் போராட்ட வீரர்களைச் சந்திக்கும் ஒரு கேந்திரமாகவும் சந்திர விலாஸ் ஹோட்டல் 1947க்கு முன் அமைந்தது.
ஜங்சன்,தாமிரபரணியின் படித்துறையில் குளிப்பு, சாலைக்குமரன் கோவிலில் தரிசனம், காலை உணவு அருகேயுள்ள சந்திர விலாஸ் ஹோட்டல் என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்தனர் நெல்லைவாசிகள். அப்போதெல்லாம், திருநெல்வேலி ஜங்சனுக்கு வேலை நிமித்தமாக, வியாபாரத்திற்காக, பொருட்கள் வாங்குவதற்காக, சினிமா பார்த்து விட்டு அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு இந்த சந்திர விலாஸில் சாப்பிட்டுவிட்டு தான் தங்களது ஊர்களுக்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். எந்த இரவுக் காட்சியை பார்த்து விட்டு வந்தாலும் சந்திர விலாஸ் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவது இயல்பான நெல்லைவாசியின் அடையாளமாகும்.
சமீபத்தில் திருநெல்வேலிக்கு சென்றபோது ஜங்சன் சாலை வழியாக செல்ல நேர்ந்தது. அங்கே சந்திர விலாஸ் உணவகத்தை பார்த்தவுடன் எனது மனதில் பல்வேறு நினைவலைகள் ஆடுகிறது. ஒரு காலத்தில் நெல்லை மேம்பாலம் கட்டுவதற்கு முன்னால் நெல்லையப்பர் நெடுஞ்சாலையின் அடையாளமாக திகழ்ந்தது. பழமை மாறாமல் இன்றும் தரம் குறைவில்லாமல் இயங்கும் இந்த உணவகத்தினுடைய வரலாறும் சுவாரசியங்களும் ஏராளம்.
திருநெல்வேலி ஒன்றுபட்ட மாவட்ட நீதிபதியாக 1964இல் இருந்த நரசிம்மபாரதி என்பவர் தனது நீதிமன்றத்தில் மதியம் 1.30 மணிக்கு மதிய உணவுக்காக இறங்கும் போது திருநெல்வேலிக்கு வந்து சாப்பிடாமல் இருக்கிறீர்களா என்று தன்னுடைய பணிகளுக்கு மீறியும் கேட்பார். அப்படி இல்லையெனில் சந்திர விலாஸ் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள். சுவையாக இருக்கும் என்று கூறுவார். அப்படி பிரசித்தி பெற்ற உணவகம்.
தாமிரபரணி ஆற்று மணலில் கூட்டம் .
சந்திர விலாஸ் ஓட்டல் சாப்பாடு ,
என்று நாவலர் நெடுஞ்செழியன் நெல்லையில் குறிப்பிட்டு பேசியது
நினைவு வருகிறது .
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் பேரனை சந்திர விலாஸ் விடுதியின் நிர்வாகப் பொறுப்பிலும் பணியில் அமர்த்தப்பட்டார்.
திருநெல்வேலி வட்டாரத்தின் மண்வாசனையுடன் கூடிய சமையலையும் சுவையையும் அனுபவிக்க நினைத்தால் நிச்சயாய் இந்த உணவகம் ஒரு சிறந்த இடம். மாறாமல் இருப்பது இருக்கைகளும் சுவர்களும் மட்டுமல்ல இட்லிகளும் சுவைகளும் அப்படியே 80 வருடத்திற்கு பின்னோக்கிய திருநெல்வேலி மணத்துடனே இருக்கின்றது.
#திருநெல்வேலி_ஜங்சன்
#சந்திர_விலாஸ்_ஹோட்டல்
#SalaiKumaran_Kovil
#Chandira_Vilas_Hotel
#Tirunelveli_Junction
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-07-2018
No comments:
Post a Comment