இன்றைய (08/07/2018)
தினமலர் சென்னை, மதுரை, கோவை பதிப்பில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைக் குறித்தான எனது
கருத்து பதிவாகியுள்ளது. அந்த கருத்து சற்று முழுமையாக வெளிவந்திருக்க வேண்டும். தினமலரில்
வந்த எனது கருத்துச் செய்தி கீழ்வருமாறு,
திமுக., செய்தித்
தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கூறியதாவது,
“பல இனங்கள், மொழிகள்,
கலாச்சாரம், அரசியல் அக, புற வேறுபாடுகளை உடைய நாடு இந்தியா. நம் நாட்டில், ஒரே தேர்தல்
என்ற நிலைப்பாடு சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி தான். பல மாநிலங்களில், மாநிலக்
கட்சிகள் மற்றும் வட்டாரப் பிரச்சனைகள் இருக்கின்றன.
இந்திய துணை கண்டத்தில்,
ஒரே தேர்தல் என்ற நோக்கம், நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. அரசியல் சட்டத்தின், 356வது
பிரிவு இருக்கும் வரை, மத்திய அரசு விருப்பம் போல மாநில அரசுகளை கலைக்கும் நிலை இருக்கும்
போது ஒரே தேர்தல் என்பது எப்படி முடியும்.”
மேலும், ஒரே நாடு,
ஒரே தேர்தல் என்பது 2024இல் இருந்து நடைமுறைக்கு வர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு
வருகிறது. தேர்தல் செலவுகள் குறைவது மட்டுமல்லாமல், மக்களவை, சட்டசபைக்களின் தேர்தல்
தனித்தனியாக நடத்துவதால் அரசின் நிர்வாக இயந்திரங்கள் ஐந்தாண்டிற்கு இருமுறை தேவையில்லாமல்
தங்களுடைய பணிகளை விடுத்து தேர்தல் வேலையில் ஈடுபடுகிறது. அரசியல் கட்சிகளுக்கும்,
இரண்டு தேர்தல்களை ஐந்தாண்டுகளில் சந்திப்பது சுமை தான். இந்த ஒரே காரணத்திற்காகவே
ஐந்தாண்டுகளுக்கு ஒரே முறை தேர்தல் என்று சொல்கிறார்கள். இது போலவே, வாக்காளர் பட்டியலை
ஐந்தாண்டுகளுக்கு இரு முறை சரிபார்ப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடுகளையும்
இரு முறை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆளும் கட்சிகள் தங்களுடைய அதிகாரத்தினை தவறாக தேர்தல்
காலத்தில் பயன்படுத்தும் வாய்ப்புகளை தடுக்கப்படலாம். தேர்தல் காலத்தில் நாடு முழுவதும்
ஒருமித்த கருத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் பல நன்மைகள் உண்டு என்று
வாதாடுகின்றனர்.
அது சரி தான். ஆனால்,
இந்தியாவில் பல
மாநிலங்களை மாநிலக் கட்சிகள் தான் ஆட்சி செய்கின்றன. சில மாநிலங்களில் பெரும்பான்மை
கிடைக்கவில்லை என்றாலும், ஆட்சிகள் கவிழ்ந்தாலும் உடனடியாக அந்த மாநிலங்களில் தேர்தல்
நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நோக்கத்திற்கே அர்த்தம்
இல்லாமல் போய்விடும். கடந்த 29 ஆண்டுகளாக மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இடம்
பெறுகின்றன. ஏன், 1977இல் ஜனதா, மொரார்ஜி ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்த நிலை நிலவுகின்றது.
இப்படியான நிலையில் சில மாநிலக் கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் போது,
ஆட்சிக்கே ஆபத்து வரும். அப்போது, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்படும்
போது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா?
அது மட்டுமல்லாமல்,
இது நடைமுறைக்கு வந்தால் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மாநிலக் கட்சிகளை கட்டுப்படுத்தும்
நிலைக்குத் தள்ளிவிடும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்யேகமான பிரச்சனைகளை வாதாடிப்
பெறவேண்டிய நிலையில் உள்ளோம். மாநிலங்களின் அபிலாஷைகளை தீர்க்க மாநிலக் கட்சிகள் ஒரு
தேசியக் கட்சியின் கொடையின் கீழ் போய்விட்டால், நியாயமான போர்க் குணம் இல்லாமல் போய்விடும்.
சமீபத்தில் தான்,
குஜராத் கர்நாடகாவின் மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இந்த தேர்தல்களோடு,
2019 அல்லது 2024இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடத்துவதற்கான வாய்ப்புகள் சாத்தியமா?
காங்கிரஸ் என்ற ஒரே கட்சி இந்தியா முழுவதும் ஆட்சியில் இருந்த ஒரே காரணத்தினால் கிட்டத்தட்ட
1960 வரை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல்கள் இணைந்தே நடந்தன. அரசியல்
சாசனப் பிரிவு 356 ஐ வைத்துக் கொண்டு, ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று நடத்துவதற்கான
வாய்ப்புகள் அடிப்படையில் சாத்தியமில்லை என்று தான் கருதவேண்டியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில்,
எஸ். ஆர். பொம்மை வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அரசியல் சாசனப் பிரிவு 356ஐ மத்தியில்
ஆண்ட அரசுகள் தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு தவறாக பயன்படுத்தினர்.
குடியரசுத் தலைவர் விடுதலைப் பெற்ற 70 ஆண்டுகளில் 128
முறை 356யை பிரயோகப்படுத்தி மாநில அரசுகளை கலைத்தார். முதன் முதலாக
பஞ்சாப்பில் டாக்டர் கோபி சண்ட் தலைமையிலான காங்கிரஸ் அரசு 16.06.1951-ல் கலைக்கப்பட்டது. பெப்சு மாநில அரசு 1953-லும், ஆந்திர அரசு 15.11.1954லும்,
திருவாங்கூர்
கொச்சின் அரசு 1956-லும், காங்கிரஸ் இல்லாத நம்பூதிரிபாத் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியை 1959-ல் கலைக்கப்பட்டது.
ஆனால், பலர்நம்பூதிரிபாத் அரசு தான் முதன் முதலாக 356க்கு பழிவாங்கப்பட்ட
அரசாங்கம் என்று கருதுகின்றனர். 1960களின் இறுதியிலேயே காங்கிரஸ் மேல் அதிருப்தி ஏற்பட்டு
இந்தியாவில் எட்டுத் திக்கும் காங்கிரஸ் இல்லா மாநில அரசுகள் உருவாகின. 1967-ல் தமிழகத்தில்
காங்கிரஸ் இல்லா அரசை அண்ணா அமைத்தார். மேற்கு வங்காளத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. வங்காள
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜாய் குமார் முகர்ஜி முதலமைச்சரானார். பஞ்சாப் மாநிலத்தில்
பஞ்சாப் ஐக்கிய முன்னணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. அகாலிதளத்தைச் சேர்ந்த சர்தார் குர்னாம் சிங் முதல்வரானார். பீகார் மாநிலத்தில்
ஜனகிராந்தி தள கட்சியை சேர்ந்த திரு. மகாமாயா பிரசாத் சின்ஹா முதலமைச்சரானார். 1959-ல் கேரள மாநிலத்தில்
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத்
முதலமைச்சரானார். ஒரிசா மாநிலத்தில் சுதந்திராக் கட்சியைச் சார்ந்த ஆர். என். சிங்தேவ்
முதலமைச்சரானார். ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டது. உத்திரப்பிரதேச
மாநிலத்தில், 1967-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்டு சி.பி. குப்தா முதலமைச்சரானார்.
ஆனால் 18 நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்து கூட்டணிக் கட்சிகளின்
ஆட்சி ஏற்பட்டு சரண்சிங் முதலமைச்சரானார்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில்லாமல் வேறு கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின்
ஆட்சி உருவாகிய மாநிலங்களில் தொடர்ந்து அந்தந்தக் கட்சிகளின் ஆட்சிகள் நீடிக்க
முடியவில்லை. இடையிலே சில கவிழ்ந்தன. சில அன்றைய காங்கிரஸ்
திட்டமிட்டு கவிழ்க்கப்பட்டன.
பாஜகவும், குறையில்லாமல் தங்களுடைய பங்குக்கு
பயன்படுத்தியது. இப்படியான மனப்போக்கில் மத்திய அரசு இருக்கும் போது, மத்திய அரசு விரும்பும்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியம்?
#ஒரே_நாடு_ஒரே_தேர்தல்
#one_nation_one_election
#article_356
#central_state_relations
#மத்திய_மாநில_உறவுகள்
#அரசியல்_சாசனப்_பிரிவு_356
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-07-2018
No comments:
Post a Comment