Sunday, July 29, 2018

#கலைஞர்!!

வாழ்வில் நியூட்டன், டார்வின் கோட்பாடுகளையும் தாண்டி 95 வயது சாதாரணமானது இல்லை ! அனயாசமாக கடந்துள்ளார் #கலைஞர்!! 
மனித நேயத்திற்கு சவக்குழி தோண்டாதீர்.....,,
————————————————
தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலம் குன்றிய நாள் முதல் இந்த நிமிடம் வரையிலும் அவரது மரணத்தை வரவேற்றும் கொண்டாடியும்  பல்வேறு பதிவுகள் பார்க்க முடிந்தது. 

வசவாளர்களே! நீங்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு சவக்குழி தோண்டவில்லை, மாறாக மனித நேயத்திற்கும் அரசியல்  அறத்திற்கும் சவக்குழி தோண்டுகின்றீர். திமுக ஆயிரக்கணக்கான விழுதுகளை ஈன்ற ஆலமரம். அதன் வேர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு இம்மண்ணில் பிணைந்து இருக்கும். அது வெட்டி சாய்த்து எளிதில் அழித்து விடக் கூடிய வாழைமரம் அல்ல..

உலகில் மரண தண்டனக் கூடாது என போராடிய ஒருவருக்கு , ஒரு இயக்கத்தின் தலைவர் அறிக்கை வெளியிட்டு தடுக்கும் அளவுக்கு நீங்கள் மரண தண்டனை  கொடுத்து இருக்கின்றீர்கள். அனுபவிப்பது  சிற்றின்பம். அந்த இயக்கத்தின் தலைமை அளித்த அறிக்கை என்பது நீங்கள் செய்த பெரும்பிழைக்கு ஆதார ஆவணம். 

இந்திய அரசியலை வாசிக்க 50 ஆண்டுகளிருந்து முனைந்தால் அதில்  30%  கலைஞர் அவர்கள் காலதடம் இருக்கும். தமிழக அரசியலை வாசிக்க முனைந்தால் 75%கலைஞரின் கால்தடம் இருக்கும். அவர் கால்தடம் தொடாமல் வரலாற்றை வாசிக்க முடியாது என்பது நிதர்சனம். 

ஈழ அரசியல் வரலாற்றை தமிழகத்தில் இருந்து வாசிப்பது பெரும் பிழை. அதிலும் 2009ல் இருந்து தான் வாசிப்பேன் என்பது அராஜாகம்.  1985க்கு பின்னர் பிறந்த உங்களில் பலருக்கு சொல்கின்றேன், 1980 களில் கலைஞர் என்ற ஒற்றை மனிதர் இல்லையெனில் 2009 கண்ட  முடிவை 1980களிலேயே  கண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். பிரபாரனை தமிழக செய்தி தாட்களில முன்னால் முதலில் நிறுத்தியவர்களில் நானும் ஒருவன்.எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தது வேறு. ஆனால் துவக்கத்தில் பிரபாகரன் சந்திக்க விரும்பியது கலைஞரை தான் என்பது எனக்கு மட்டுமே  தெரிந்த உண்மை.  தமிழகத்தில் உள்ள ஈழக் குழுக்களின் தலைவர்களை மத்திய அரசு எம்.ஜி.ஆர் ஆட்சியில் நாடுகடத்திய போது அதனை கலைஞரும் திமுகவும் திரண்டு வந்து தடுத்தது. 

ஈழப்போர் வரலாறு 35ஆண்டுகாலம் பின்னும், இனிமேலும் நீட்டிக்கப்படாமல்  15ஆண்டுகால ஆயுளுடன் மெளனித்து இருக்கும். இவற்றை எல்லாம் புரிய வைக்க சூழலற்ற, சீரற்ற பொருந்தாத காலமிது.  

விமர்சனத்திற்கு உட்படாத அரசியல்வாதிகள், தலைவர்கள் இருக்க முடியாது. அதற்காக அரசியல் எதிரிகள் சாகவேண்டும் என்பது பாசிசம்.  பாசிசம் கடைபிடித்த தலைவர்கள் வரலாற்றில் நிலைபெற்றதாக இல்லை. லெனின் போற்றப்படும் அளவிற்கு ரஷ்யாவின் ஜோசப்ஸ்டாலின் போற்றப்படவில்லை.  

எதிர்கட்சியை அரசியல் களத்தில் எதிர்கொள்வது தான் வீரத்தின் அடையாளம். கொள்கையை காத்து உரிமையை அறுவடை செய்ய வேண்டுமே தவிர உயிரை மாய்ப்பது அரசியல் அல்ல. 

*கடமா தொலைச்சிய கானுறை வேங்கை 
   இடம் வீழ்ந்தென்ன உண்ணாது இறக்கும்*
- நாலடியார் பாடல்- 

அதாவது கானகத்தில் கடமானை வேட்டையாடும் புலி, தான் வேட்டையாடி வீழ்த்தும் மானானது இடப் பக்கமாக வீழ்ந்து விட்டால் அதை உண்ணாது விடுத்து விடும் . இங்கு தான் அய்ந்தறிவு  ஆறறிவை  வெல்கின்றது. 

என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

உங்களால் கலைஞருக்கு சவக்குழி தோண்ட முடியாது. அவரது சவக்குழி வாழ்க்கையின் முடிவு என்றாலும் நீண்ட வரலாற்றின் தொடக்கம். 

இயழ்வான வாழ்வில் நியூட்டன், டார்வின் கோட்பாடுகளையும் தாண்டி 95 வயது சாதாரணமானது இல்லை ! அனயாசமாக கடந்துள்ளார் #கலைஞர்!!

#சவக்குழிதோண்டாதீர்
#அரசியலறம்
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ் இராதாகிருஷ்ணன்*
29-07-2018




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...