எனது கிராமத்தினைப் பற்றிய சிறு பதிவு – II
---------------------
கடந்த 23/06/2018 அன்று என்னுடைய சொந்த கிராமமான குருஞ்சாக்குளம் பற்றிய பதிவினை (https://goo.gl/HwUNgC) சமூக வலைத்தளங்களில் செய்திருந்தேன். சில நண்பர்கள் இன்னும் சில செய்திகளை சொல்லுங்கள், பதிவு செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டனர். முழுமையாக சொல்லவில்லை என்றாலும், சில செய்திகளை புகைப்படங்களோடு சொல்ல விரும்புகிறேன்.
படம் 1 – எனது கிராமம்.
1960களில் ஓட்டு வீடுகள், கூறை வீடுகளெல்லாம் மாறி மாடி வீடானது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். பல இளைஞர்கள் வெளிநாடுகளில் பணியிலிருப்பதும், கிராமத்திற்கு வருமானங்கள் வருவதும் நல்லது தானே.
---------------
படம் 2 – ஊர்க்கதை பேசும் ஆலமர, இச்சு மரமேடை.
---------------
படம் 3 – நினைவு ஸ்தூபி
கடந்த 31/12/1980இல், அதாவது 1981 வருடப்பிறப்புக்கு முதல் நாள், தமிழகமெங்கும் விவசாயச் சங்கம் சி.நாராயணசாமி நாயுடு தலைமையில் நடத்திய பந்த்தில் காவல் துறையினரால் 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அதில் 5 பேர் பலியாகி இறந்தனர். அவர்களுடைய தியாகத்தின் நினைவாக அமைக்கப்பட்ட ஸ்தூபி.
---------------
படம் 4 – இளவட்டக்கல்.
இந்த கற்களை இளவட்டக்கல் என்று அழைப்பார்கள். இப்போது எல்லாம் ஜிம்மில் போய் பயிற்சி செய்வதைப் போல காலை, மாலை வேளைகளில் இளைஞர்கள் இந்த கல்லைத் தூக்கி உடற்பயிற்சி செய்வது 1960களில் வாடிக்கையாக இருந்தது. திருமணம் செய்து வரும் அயலூர் மணமகன் விருந்தை முடித்துக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் போது இந்த இளவட்டக்கல்லை எடுத்தால் தான் மணமகள் வீட்டார் விருந்தை நன்முறையில் மணமகனுக்கு படைத்துள்ளார்கள் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு.
---------------
படம் 5 – நீர்ப்பாசனத்திற்கு பயன்படும் கண்மாய்.
இந்த கண்மாயில் செப்டம்பர் முதல் ஜனவரி பொங்கல் வரை தண்ணீர் இருப்பது வாடிக்கையாக கடந்த காலங்களில் பார்ப்பதுண்டு. இப்போது இந்த குளம் வற்றி சீரமைக்கப்படாமல், மரங்கள் வளர்ந்து பார்ப்பதற்கே வேதனையாக உள்ளது.
---------------
படம் 6 – குளத்திலுள்ள மதகு
குளத்திலுள்ள மதகுகள் சரியாக பராமரிக்க முடியாத நிலையில், அது போல குளம் நிறைந்தால் தண்ணீர் திறந்துவிடப்படும் களிங்கல்லில் இரும்புத் தடுப்புகள் இல்லாமல் கற்கள் மட்டும் நிற்கின்ற அவலமான நிலை.
---------------
படம் 7 – சுண்ணாம்புச் சாந்து
அந்த காலத்தில், வீடுகள் கட்ட சிமெண்ட் கிடையாது. கற்களால் தான் கட்டுவார்கள். சுண்ணாம்புக் கல்லை காலவாசலில் இருந்து எடுத்துக்கொண்டு வட்டவடிவமான வாய்க்காலுக்குள் போட்டு மாடுகளை வைத்து கல் சக்கரத்தால் அரைத்து அதை சாந்தாக்கி கற்களுக்கு இடையில் இன்றைக்கு சிமெண்டைப் பயன்படுத்துவதைப் போல சுண்ணாம்புச் சாந்தை பயன்படுத்துவார்கள்.
வீட்டின் சுவர்களை சமன்படுத்தி இன்றைக்கு சிமெண்டைக் கொண்டு மேற்பூச்சு செய்து வண்ணக் கலர்களை அடிப்பது இன்றைக்கு நடைமுறையாக உள்ளது. அன்றைக்கு 4க்கு 2.5 அடி அளவுள்ள அம்மியில் பெரிய அம்மிக்கல்லால் சுண்ணாம்பை அரைத்து அதை நைசாக்கி இன்றைக்கு சிமெண்டைப் பயன்படுத்துவதைப் போல மேற்பூச்சுகளை செய்வார்கள். பின்னர் வெள்ளையடிப்பார்கள். அன்றைக்கு பெயிண்ட் பயன்பாட்டில் இல்லை. ஜன்னல்களும் வீட்டின் கூறைக்கு மேல்தான் சிறியளவில் அமைக்கப்பட்டிருக்கும்.
---------------
படம் 8 – காலவாசல்
இந்த காலவாசலில் தான் வீடுகள் கட்டும் சுண்ணாம்புக் கற்கள் தயாரிக்கப்படும். மூன்று, நான்கு நாட்கள் நெருப்பில் கற்கள் எரிந்து சுண்ணாம்புக் கல்லாகும். இவை 1970 வரை பயன்பாட்டில் இருந்தது. சுண்ணாம்புக் காலவாசல் அப்போது எல்லா ஊர்களிலும் பரவலாக இன்றைக்குள்ள செங்கல் சூளை போல அமைந்திருந்தது. இன்றைக்கும் மதுரை, தேனி சாலையில் அரசரடி அருகே காலவாசல் என்ற பெயரில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அன்றைக்கு மதுரையில் காலவாசல் இருந்த பகுதியாகும். எனக்குத் தெரிந்தவரை கழுகுமலை, திருவேங்கடத்தில் காலவாசல் இருந்து எங்கள் பகுதிக்கு பயனளித்தது.
---------------
படம் 9 – நெல் அவித்தல்
அந்த காலத்தில் நெல்லை வீட்டிலேயே அவித்து 2, 3 நாட்கள் காயப் போட்டு பக்குவமாக்கி, திருவேங்கடம் நாலுவாசன்கோட்டை அரிசி அரவை ஆலையில் கொண்டு சென்று அரைத்து வரவேண்டும். அது போல, கழுகுமலைக்குச் சென்று நல்லெண்ணை, கடலெண்ணை ஆகியவற்றை மாட்டுச் செக்கில் அரைத்து வருவது வாடிக்கையாகும்.
---------------
படம் 10 – பனை ஓலைக் கூடைகள்
சகல பணிகளுக்கும் பயன்படும் பனைவோலை கூடை, கடகம்.
---------------
படம் 11 – அடியேன் நுழைந்த முதல் கல்விக் கூடம் திண்ணைப் பள்ளிக் கூடம் தான்.
இதனுடைய ஆணிவேர்தான் சென்னை, டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகம் வரை 40 ஆண்டுகளுக்கு முன்பே வழிநடத்தியது.
---------------
படம் 12 – நிலக்கடலை பயிரிடல்
நிலக்கடலை விதையை செவல் காட்டில் மழைப் பெய்யும் காலங்களில் ஊன்றுவதுண்டு. கரிசல் காட்டில் சில பகுதிகளில் செம்மண் நிறைந்த செவல் காடுகள் ஆங்காங்கு இருக்கும். மானாவாரியாக பயிர் செய்வது வாடிக்கை.
---------------
படம் 13 – பருத்தி விளைச்சல்
பருத்தி விளைந்தால் இப்படி சாக்குகளில் போட்டு பாதுகாப்பது வாடிக்கை.
---------------
படம் 14 – காரச்சேவு
எங்கள் கிராமத்தில் சேவகப் பெருமாள் செட்டியார் வேவுக்கடை வைத்து பக்கத்து கிராமக் கடைகளுக்கு கொண்டு சென்று விற்று வருவார். இதில் கடலை மாவு, கல் உப்பு, அரைத்த மிளகாய், சற்று பூன்டு, இஞ்சி போன்றவற்றைக் கலந்து கடலெண்ணையில் தயாரிப்பது உண்டு.
இது போல, ரிப்பன் பக்கோடா என்று சொல்வதை வருவல் என்ற திண்பண்டத்தையும் தயாரிப்பார். சுவையாக இருக்கும். அதை சூட்டோடு சாப்பிட்டால் அதன் ருசியே அலாதி. இந்த சேவு செய்ய தனி அடுப்பும், அதற்காக பிரத்யேகமாக இரும்புச் சட்டி, நீண்ட கரண்டி, அடுப்பெரிய முந்திரிக் கொட்டையில் கருப்புத் தொலிகள் பயன்படுத்தப்படும். இப்போது அத்தகைய ருசி காரச் சேவுகளில் இருப்பதில்லை. காரச் சேவு என்றால் சாத்தூர் கோவில்பட்டியை விட செவல்பட்டி, திருவேங்கடம், கழுகுமலை ஆகிய இடங்களில் இன்னும் ருசியாக இருக்கும். மிக்சர் என்றால் செய்துங்கநல்லூர், சங்கரன்கோவில். ஓமப்பொடி என்றால் அருப்புக்கோட்டை என்பது நினைவுக்கு வரும்.
---------------
படம் 15 - சர்வ நிம்மதி தரும் என்னுடைய கிராமத்து வீடு.
இதை பராமரிப்பது தான் பெருங்கடமையாக உள்ளது.
இப்படியான நினைவுகளும் கடந்துவந்த சுவடுகளை ஒரே பதிவில் செய்துவிட முடியாது. மேலும் இதை தொடர்வேன்.
#சொந்த_கிராமத்து_வீடு
#native_home
#vintage_villages
#அன்றைய_கிராமங்கள்
#villages
#கிராமங்கள்
#ஒன்றுபட்ட_நெல்லை_மாவட்டம்
#Integrated_Nellai_District
#Tirunelveli
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-07-2018
Every feel happy while reading it and remember Thier home town..keep writing..it's interesting...
ReplyDeleteNo place in the world is better than our native place.
ReplyDeleteSuper sir feeling sad
ReplyDelete