Tuesday, July 10, 2018

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018 - சில செய்திகள்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018 - சில செய்திகள்.
--------------------------------------------

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின்படி (மைய அரசின் சட்டம் 1/2014 பிரிவு 63ன் படி) ஒவ்வொரு மாநிலமும் ஊழலுக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்று கோரப்பட்டது. ஆனால் பல மாநிலங்கள் இந்த அமைப்பை அமைக்காமல் இருந்ததன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய், ஆர். பானுமதி விசாரித்து இந்த அமைப்பில்லாத தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், திரிபுரா, காஷ்மீர், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, சிக்கிம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசமான புதுவையில் இந்த வருடம் ஜூலை 10ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டுமென்ற உத்தரவினால் தான் இந்த மசோதா கூட தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் 11 அத்தியாயங்கள் உள்ளன.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில், லோக் ஆயுக்தாவின் தலைவராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர், அரசுப் பொது நிர்வாகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவராக இருப்பவர்கள் நியமிக்கப்பட்டு, நீதித்துறையைச் சேர்ந்த இருவரும், அரசுப் பதவியால் ஆதாயம் பெறாதவர்களாக இருக்க வேண்டும். இதற்குரிய ஆணையை மாநில ஆளுநர் வெளியிடுவார். இதன் தேர்வுக்குழு தலைவராக முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்த குழுவிற்கு உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்க தேடுதல் குழு என்று மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

இந்த அமைப்பில் முதலமைச்சரில் இருந்து மாநில அரசின் அலுவலர்கள் வரை மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும். மத்திய அரசின் ஊழியர்கள் என்றால் மத்திய அரசின் அனுமதியையும் பெற வேண்டும்.

லோக் ஆயுக்தா புகாரைப் பெற்றுக் கொண்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதைக் குறித்தான தன்மையை நன்கு விசாரித்து 60 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். இது வெளிப்படையாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். தமிழக சட்டத்தை பொறுத்தவரையில் என்ன பிரச்சனை என்றால் பொய்ப் புகார் கொடுத்தால் ஓராண்டு சிறை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விசயம்.

இந்த சட்டத்தின் படி 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறு செய்யும் பொது ஊழியர்கள் மீது புகார் அளிக்கலாம். லோக் ஆயுக்தா அமைப்பு புகார் உறுதி செய்யப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்புகளை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திற்குட்பட்டு இந்தியா தழுவிய பொதுவான சட்டத்தினைக் கொண்டு வந்தால் இன்னும் வலுவாக இருக்கும். அது மட்டுமல்ல, உயரதிகாரிகள் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் குறித்து இந்த சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்த அமைப்பு சுதந்திரமான தன்னாட்சி அமைப்பாக இயங்கினால் தான் நோக்கம் நிறைவேறும். கர்நாடகத்தில் அன்றைய முதல்வரான எடியூரப்பா இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தீர்ப்பின்படி தனது முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இது போல மத்தியில் லோக் பாலும் தாமதமாகிக் கொண்டு வருகிறது.

#Tamil_Nadu_Lok_Ayuktha_Act
#தமிழ்நாடு_லோக்_ஆயுக்தா_சட்டம்
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-07-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...