Thursday, July 5, 2018

காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ…… என்ற அச்சம் தலைதூக்குகிறது. #தகுதியே_தடை

காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ…… 
என்ற அச்சம் தலைதூக்குகிறது. #தகுதியே_தடை
------------------------------------------------------------------------------------------------------------
கடந்த வாரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் (OUP) வெளியிட்டுள்ள “Cost of Democracy – Political Finance in India”, Edited by Devesh Kapur, Milan Vaishnav எனும் நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த புத்தகத்தை படித்தபோது பணம் படைத்தவன் தான் தேர்தலில் நிற்க முடியும். காசு செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும். இது தான் இன்றைக்கு தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் தகுதிகள். இது தான் தேர்தலின் சூத்திரமாக உள்ளது. இன்றைக்குத் தேர்தலில் நடப்பது தனி மனிதனின் ஆதாய - வியாபார (Trait Politics) அரசியல் களம் தான்.


பொது வாழ்வில் மக்கள் நலப் பணிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இப்படித் தான் தேர்தல் அரசியலின் போக்கு செல்கின்றனது என்ற வகையில் ஆதாரங்கள், தரவுகள், நிகழ்வுகள், புள்ளி விவரங்களோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நூலின் முதல் அட்டைப் படத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களோடு, விலைப்பட்டியல் போன்று அவர்கள் வாக்குக்கு கொடுக்கும் பணத்தையும், அவர்களின் சின்னத்தையும் படமாக  போடப்பட்டுள்ளதைப் பார்க்கவே அவமானமாக உள்ளது. அதில் அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு ரூ. 8,000/- என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்தலில் பணம் முக்கியக் காரணியாக இருந்து ஜனநாயகத்தை அழிக்கிறது என்பதன் நோக்கத்தை இந்த நூலில் சொல்ல நினைத்தாலும், அந்த நோக்கத்தை விட நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது மணல் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகள் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று இந்த நூலில் இலைமறைவு காயாக கூறுகின்றது.

பண பலம், ஜாதி, புஜ பலம், ஆள் பலம், தகுதியற்ற தன்மை போன்ற நிலைப்பாடுகள் தான் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கிறது என்ற இந்த நூல் சம்பவங்களோடு சொல்கின்றது. இந்த நூலை சாதாரணமான பதிப்பகங்கள் வெளியிடவில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூல்கள் வெளியிடும் குழுவிற்கு தொடர்புள்ள அறிஞர்கள், அனைத்தையும் ஆய்வுச் செய்து களப்பணிகள் செய்து எடுக்கப்பட்ட தரவுகள் பொய்யாகுமா? இதைப் படிக்க படிக்க நாமும் அரசியலில் இருக்கின்றோமா என்று வேதனைப்படத் தோன்றுகிறது.

ஐந்தாண்டுகள் தன்னுடைய சொந்தத் தொழிலைப் பார்த்துவிட்டு எந்த மக்கள் பணியிலும் ஈடுபடாமல் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம், சட்டமன்றம் ஏன் அமைச்சர் கூட ஆகிவிடலாம் என்ற நிலைப்பாடுகள் ஏற்புடையதுதானா? பொது வாழ்வில் எந்த தியாகமும் இல்லாமல், அரசியலைப் பற்றி தெரியாத, செய்தித்தாள் படிக்காதவர்கள் கூட அமைச்சர்கள் ஆகிவிடலாம் என்றால், அப்படிப்பட்ட ஜனநாயகம் தேவைதானா?

சமீபத்தில் யேல் பல்கலைக்கழகம், தகுதியற்றவர்களை எல்லாம் பெரும்பான்மையோடு ஆதரித்துவிட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக, ஜனநாயகக் காவலர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை ஒரு ஆய்வரங்கத்தில் வெளியிட்டது. 
தகுதியே தடை என்ற நிலையிலும் தியாகத்தையும், பொது வாழ்வுப் பணிகளையும், மக்கள் நல களப்பணியாற்றிய ஆளுமைகளை எல்லாம் மறுதலித்துவிட்டு, தகுதியற்ற தறுதலைகளை மக்கள் ஆதரித்தால் இன்றைக்கு நடக்கின்ற மக்கள் விரோத அரசுகளைப் போன்று தான் அமையும்.

புதிய பொருளாதாரக் கொள்கையினால், தாராளமயமாக்கல் என்ற நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் மக்களை ஒரு பக்கம் சுரண்டுகிறது, இன்னொரு பக்கம் இப்படித் தகுதியல்லாதவர்கள் தான் ஆட்சியிலும் பொறுப்பிலும் அமர்ந்து மறுபக்கம் மக்களை வாட்டுகிறார்கள். இதற்கு காரணம் மக்கள் தானே. தகுதியானவர்கள் தேர்தலில் நிற்பதற்கே இன்றைய சூழ்நிலையில் யோசிக்கின்றார்கள். நமக்கென்ன வந்தது, நம்மால் முடிந்த பணிகளை செய்துவிட்டு போவோம் என்று நல்லவர்கள் எல்லாம் நினைக்கத் தொடங்கி விட்டனர். பிறகெப்படி ஆரோக்கியமான மக்கள் நல அரசியல் நிலைத்து நிற்கும். 
ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு “Elections for Sale, Edited by, Fredrice Charles Scaffer” நூலில் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தது. அப்போதே எனது வலைத்தளத்தில் இந்த நூலைக் குறித்தும் விரிவான பதிவைச் செய்திருந்தேன். 


#தேர்தல்
#ஓட்டுக்கு_துட்டு
#விற்பனையில்_தேர்தல்
#வியாபார_அரசியல்
#Elections_for_Sale
#Vote for_Money
#Cost_of_Democracy 
#தகுதியே_தடை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-07-2018

No comments:

Post a Comment

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...