இன்றைய (31-7-2019)தினமணியில் எனது பத்தி..........
தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு
வழக்கறிஞர். கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
————————————————
தமிழகத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1960இல் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வடாற்காடு மாவட்டம், தென்னாற்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என 13 மாவட்டங்கள் இருந்தது. அதன்பின், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியாக பிரிந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டை, ஈரோடு என பிரிந்தது. இதுதான், தமிழகத்தின் மாவட்டங்கள் பிரிந்த காலகட்டம்.
பழைய சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி ஆண்டபோது, வடாற்காடு மாவட்டத்திலிருந்து திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, பல்லவநேரி போன்ற தமிழ் பகுதிகளும், கடப்பாவிலிருந்து மதனப்பள்ளி, வாயல்வாடி என்ற இரு பகுதிகளையும் சேர்த்து சித்தூர் மாவட்டம் உதயமானது.
1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2019: விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் உருவாக்கப்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது. முதன் முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்ஜிஆர். நெல்லை மாவட்டத்தை பிரித்து, தூத்துக்குடியை தலைநகராகக்கொண்டு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டத்துக்கு, கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். ஆனாலும் நெல்லை மீது பற்றுகொண்ட அந்த ஊர் மக்கள், நெல்லை என்ற பெயரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, “நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்” என்று அழைக்கப்படும் என்று எம்ஜிஆர் அறிவித்தார். விருதுநகர் மாவட்டத்தை காமராஜர் மாவட்டம் என்று அறிவித்தார். சிவகங்கை மாவட்டத்தை பசும்பொன் தேவன் திருமகனார் மாவட்டம் என்று அறிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினார். அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குதான் அண்ணா பெயர் சூட்ட வேண்டுமென்று கலைஞர் கோரிக்கை வைத்தார். பின்னர் 1989ல் கலைஞர் முதல்வரானதும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று இருந்ததை நீக்கினார். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் என்று அண்ணா பெயரை சூட்டினார். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. பின் சம்புவராயர் பெயரில் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது.
இப்படி பல பெயர்களோடு தமிழக மாவட்டங்கள் இருந்தது. 1996 காலக்கட்டத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்களால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி இந்த பெயர்கள் நீக்கப்பட்டன.
தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி இன்றுமுதல் தென்காசி மாவட்டம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்காசி , செங்கோட்டை, கடையநல்லூர் , சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர் , சிவகிரி , ஆலங்குளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய புதிய மாவட்டமாக உருவாகியுள்ளது. திருவேங்கடம் பகுதி மட்டும் வானம் பார்த்த கரிசல் பூமி ஆகும்.
மேற்காணும் தாலுக்காக்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள். என்னுடைய விவசாய நிலங்கள் இந்த மாவட்டத்தில் இருப்பதால் இந்த மாவட்டமும், தொலைவில் சென்று விட்ட திருநெல்வேலி மாவட்டமும் அதன் மீதான நேசமும் உரிமையும் ஒருத்துளிக்கூட குறைத்துக் கொள்ள முடியாது. அதே போல் விருதுநகர் மாவட்டமும் என் விருப்பத்திற்குரிய மாவட்டம் என சொல்வேன்.
என்னதான் இருந்தாலும் 60, 70களில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் *தெற்கு சீமை* என்ற புவியியல் கம்பீரம் இழந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது. 1986ல் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தபோது எனது ஆதங்கத்தை மனதில் ஏற்பட்ட ஒருவித தாக்கத்தை அன்று தினமணியில் பதிவு செய்தேன். அந்த மண்நேசம் இன்றும் மாறாதது.
நெல்லை மாவட்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் திருவில்லிபுத்தூர், விருதுநகர்(விருதுபட்டி), சாத்தூர், ராஜாபாளையம் ஆகிய வட்டாரங்கள் ஒருங்கிணைத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது . எத்தனை மாவட்டங்களாக பிரிந்தாலும் திருநெல்வேலியின் தனித்துவம் மட்டும் நிலைத்து நிற்கும்.
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என திருஞானசம்பந்தரும்
"தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும்,
"பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய வரிகள் இந்த மாவட்ட பிரிவுகளால் பொய்த்துப் போகுமா என்ன?
சரி, என்னசெய்வது? ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தனி வாழ்வு என்ற காரணமாக இடப்பெயர்ச்சி செய்து தனிக்குடும்பமாக பிரிவதில்லையா? அவ்வாறாக கருதி இப்பிரிவை ஏற்று எல்லாத்துறைகளிலும் வளர்ச்சிக் கண்டு தென்காசி மாவட்டம் முன்னேற்றம் காண வேண்டும்.
நாடு விடுதலைக்குப் பின் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பிரிவு தலைமை இடமாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை செயல்பட்டது. 1967-ம் ஆண்டு அண்ணா முதலமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த இந்த தலைமை இடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாகத்திற்கு காஞ்சிபுரமும், வழக்கு மன்றத்திற்கு செங்கல்பட்டு என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை இருந்தது. தற்போது உதயமாகவுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகிய நகரங்கள் இடம் பெறுகின்றன. மேலும் கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, பெருங்குளத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், திருநீர்மலை, மேடவாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளும் சேர்க்கப்படுகிறது.
குன்றத்தூர் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் இடம்பெறுகிறது. ஊராட்சி ஒன்றியங்களில் காட்டாங்கொளத்தூர், புனித தோமையர்மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகியவை இடம் பெறுகிறது.
அன்றைய சென்னை மாநிலத்தில் 13 மாவட்டங்களாக இருந்து இன்றைக்கு 35 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வட்டாரங்களில் இருந்து தங்களுக்கு தனி மாவட்டம் வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டம் மட்டும் தான் இதுவரை பிரிக்கப்படாத மாவட்டங்களாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் தனி மாவட்டமாக வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முசிறி தனிமாவட்டமாக வேண்டுமென்றும், வேலூரிலிருந்து திருப்பத்தூர்,அரக்கோணம் தனிமாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், சேலம் மாவட்டத்திலிருந்து மேச்சேரி தனிமாவட்டமாக வேண்டுமென்றும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
எங்கள் வட்டாரத்தை சேர்ந்த சிலர் திருவேங்கடம், எட்டையபுரம் பகுதிகளை கோவில்பட்டியுடன் இணைத்து கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கி தனிமாவட்டமாக அமைய வேண்டுமென்ற கோரிக்கையும் உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பிரிக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் கூட சரியாக பிரிக்கப்படவில்லை என்றும் பலருக்கு குறைகள் உண்டு. இதற்கு காலமும், அரசியல் சூழ்நிலையும் தான் பதில் சொல்ல வேண்டும். வேறென்ன சொல்ல?
மாவட்டங்கள் பிரிப்பு என்பது விரைவான நிர்வாக பலாப்பலன்கள் பெறுவதற்கும், திட்டங்களுடைய பயன்கள் உடனே மக்களிடம் செல்ல வேண்டும். தாமதங்கள், தடைகள் இருக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே. ஆனால், அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் ஒரு கோப்பு எடுத்தால் உடனே முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி தான் பிரச்சனையை சரிசெய்ய வேண்டியுள்ளது. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் பசுபதி என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் 1960களில் இருந்தார். குளம் பராமரிப்பு, ஆயக்காட்டு பணிகள் குறித்து ஏதாவது மனு கொடுத்தால் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிப்பார். கீழ் அதிகாரிகளுக்கு சொல்லாமலேயே அவரே தலத்திற்கு வந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா என்று கவனிப்பார்.
அன்றைக்கு கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திருவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற பெரிய தாலுக்காக்கள் இருந்தன. அதன் பின்னர் தான் விளாத்திகுளம், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சிவகிரி, கடையநல்லூர், திருவேங்கடம் என பல தாலுக்காக்கள் பிரிந்தன. இவ்வளவு பரந்து விரிந்த மாவட்டத்தில் சாதாரண அம்பாசிடர் காரில் ஒரு ஆட்சித் தலைவர் வடக்கே சாத்தூரிலிருந்து தெற்கே தோவாளை வரை, மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை முதல் கிழக்கே வங்கக் கடல் வரை தன்னலம் கருதாமல் அன்றைக்கு பணியாற்றினார். இன்றைக்கு அம்மாதிரியான அதிகாரிகளையும், அந்த நிலைகளையும் நினைத்துப் பார்க்க முடியுமா.
அன்றைக்கு பரந்து விரிந்த நெல்லை மாவட்டத்தில் அப்போது வடமேற்கே இராஜபாளையம் எல்லை, வடகிழக்கே அருப்புக்கோட்டை, சாயல்குடி எல்லை, தெற்கே முப்பந்தல் வரை எல்லை இருக்கும். அன்றைக்கு இதுமாதிரி சாலை வசதிகள் இருக்காது. பல இடங்களுக்கு மண் சாலையில் தான் பயணிக்க வேண்டும். இருப்பினும் அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் பசுபதி அவர்கள் 10 நாளைக்கு ஒரு முறையாவது ஒரு தாலுக்காவிற்கு வந்து செல்வார். பணிகள் நடக்கின்றனவா என்று தானே மேற்பார்வையிடுவார். இன்று மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு குறைவான பகுதிகளில் வசதிகள் நிறைந்திருந்தும் கூட மக்கள் நல பணிகளில் நேரடியாக கண்காணிக்க செல்வதில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தயக்கங்கள் உள்ளது. அன்றைக்கு பசுபதி முதலமைச்சர் காமராஜரிடமே ஏதாவது திட்டம் சரியில்லை என்றால் அதை நடைமுறைப்படத்த முடியாது என்று தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லக்கூடிய தைரியம் அன்றைக்கு இருந்தது.
மாவட்டங்கள் அமையும்போது நிர்வாக வசதி, மக்கள் நலன், புவியியல் ரீதியாக ஒருங்கிணைந்த பகுதிகளின் அடிப்படையில் பிரிக்க வேண்டும். மாவட்டத்தில் 15 முதல் 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒரு மாவட்டமாக பிரித்தால் நல்லது.
சிறியதே அழகு என்று மானிடம் முன்னிறுத்தும் கருத்து. மாவட்டங்கள் பிரித்து அதிகாரிகளுக்கு ஆளுமையை எளிமைப்படுத்துவது அவசியம் தான். அதேபோல, அதிகாரிகளும் கடமையை உணர்ந்து தங்களுடைய பணிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று சிந்தித்து மக்கள் நல அரசுக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கம்பீரமான மாவட்டங்கள் என்று ஒரு காலத்தில் சொன்னது தாலுக்கா தலைநகரங்கள் போல தற்போது மாவட்டத் தலைநகரங்கள் ஆகிவிட்டது என்று ஒரு நண்பர் சொன்னார்.
நான், “காலங்கள் மாறிவிட்டன. மாற்றத்திற்கேற்றார் போல நம்மையே மாற்றிக் கொண்டால் தான் ஜீவிக்க முடியும் என்றேன்”.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2019
-செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com.
No comments:
Post a Comment