கோனார் தமிழ் உரை
-------------------------
கோனார் தமிழ் உரை என்பது அனைவருக்கும் நீண்டகால அறிமுகமான தமிழ் உரை நூலாகும் (கோனார் நோட்ஸ்). தற்போது பள்ளிகள் திறந்து துணை நூல்களை வாங்கும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு துணிப்பையோடு மாணவர்களுக்கு வழங்கப்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும். கோனார் உரை நூல் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நடைமுறை வழக்கத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கோனார் தமிழ் உரை என்பது மாணவர்களுக்கு எளிதான வழிகாட்டியாகும். தமிழுக்கான செய்யுள், அதனுடைய விளக்கம், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை என தனித்தனியாக இருக்கும். உரைநடை பகுதியில் கேள்விக்கு பதில் இருக்கும். பழனியப்பா பிரதர்ஸ் இதை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ஐய்யம்பெருமாள் கோனார் இதனுடைய உரையாசிரியர். இவர் கோனார் தமிழ் அகராதி என்ற பெயரில் ஒரு தமிழ் அகராதியை வெளியிட்டுள்ளார். இந்த துணை நூலின் பின்பக்கம் தமிழகத்தில் உள்ள நகரங்களில் எந்தெந்த நகரங்களில் இந்த உரை கிடைக்கும் என்ற ஒரு நீண்ட பட்டியல் அமைந்திருக்கும். முதலில் சென்னை பாரிமுனையில் உள்ள பி.டி.பெல் புத்தகக் கடையிலிருந்து நாகர்கோவிலில் உள்ள புத்தகக் கடையின் முகவரி இருக்கும். கார்த்திகேயா பதிப்பகம் என்ற பெயரில் வெளியிடப்படும்.
அப்போது கோனார் தமிழ் உரை ஐந்தாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை தவிர்க்க முடியாத மாணவர்களுடைய துணை ஏடாக இருந்தது. தற்போதும் இருந்து வருகிறது. ஆங்கிலப் பாடத்திற்கு மினர்வா, மதுரை பேராசிரியர். சுப்பிரமணியத்தின் துணை நூல், திருச்சியிலிருந்து டியூட்டர் என்ற துணை நூல்கள் 1950 – 60களில் பார்த்த நினைவு. சென்னை மினர்வா தனிப்பயிற்சி கல்லூரியின் (டுட்டோரியல் கல்லூரி) முதல்வர் பரசுராமன் ஆங்கிலம், அறிவியல், வரலாறு, புவியியல் என பல துணைநூல்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பினார். பரசுராமருடைய மினர்வா டுட்டோரியலும் அதன் ஆங்கில துணை நூலும் சற்று கடினமாக இருந்தாலும், பல மாணவர்கள் அதை விரும்பி வாங்குவது உண்டு. மினர்வா சேக்ஸ்பியருக்கு வழங்கும் துணைப்பாடம் அருமையாக இருக்கும். மினர்வா டுட்டோரியல் எழும்பூர் ஹால்ஸ் ரோடில் அமைந்திருந்தது. இப்படி பல மாணவர்களுக்கு துணைக் கையேடுகள் இருந்தாலும் கோனார் தமிழ் துணைஏடு மட்டும் இன்றைக்கும் சிரஞ்சீவியாக அன்று போல் இன்றும் வழக்கத்திலிருப்பது பாராட்டுக்குரிய செயல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-07-2019
No comments:
Post a Comment